நாராயணகுருவின் தத்துவம்
ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது
[Copyright:Thinnai.com ]
[நாராயணகுரு]
தமிழ்ச் சூழலில் நாராயணகுருவின் செய்தியை புரிந்துகொள்ள சிரமங்கள் உள்ளன. இங்கே ஓர் எதிர்மறையான சிந்தனைப்போக்கு மிக வலுவாக வேரூன்றியுள்ளது. மரபையே நிராகரிக்கும் போக்காக அது மாறியுள்ளது . மேலும் மிக எளிமைப்படுத்தபட்ட ஒரு இரட்டைஎதிர்மை [binary opposition] கற்பிதம் செய்யப்பட்டுள்ளது . ஆரிய X திராவிட வாதம் , உயர் சாதி X கீழ்சாதி வாதம் , ஆதிக்கப்போக்கு X அடிமைப்படுத்தப்பட்ட போக்கு என்றெல்லாம் அப்பிரிவினை தொடர்ந்து செய்யப்படுகிறது . அந்த இரட்டைஎதிர்மைத்தன்மை தமிழ்ப்பண்பாட்டாய்வில் வெள்ளையர்களால் [உதாரணமாக கால்டுவெல்] அக்கால மேற்கத்திய சிந்தனைக்கு ஏற்ப உருவாக்கப்பட்டது . அது அன்றைய மேற்கத்திய சிந்தனையின் சாரமாக காணப்பட்டமையால் அவ்வாறு உருவாக்கப்பட்டமை இயல்பானதேயாகும் . அப்போக்கு மார்க்ஸியத்துடனும் ஒத்துப்போனதனால் அது வலுவாக நம் சிந்தனையில் வேரூன்றி அதுவே ஒரே சிந்தனைமுறை என கருதப் படுகிறது .நாராயணகுருவை புரிந்துகொள்ள மிகுந்த தடையாக அமைவது அதுவே. உண்மையில் நாராயண குருவின் பிரதான சீடர்கள் சிலர் கூட அவ்வடிப்படையில் நாராயணகுருவை மறுத்தனர் . முக்கியமாக சகோதரன் அய்யப்பன்.
நாராயணகுருவின் சிந்தனைகளில் முற்றாக இல்லாதது இரட்டைஎதிர்மைப் பார்வை என்பதைக் காணலாம். அவர் எதிர்நிலை , எதிர்ப்புச் செயல்பாடு முதலியவற்றில் நம்பிக்கையில்லாதவர் . அமைதியான ஆக்கச் செயல்பாடுகளை மட்டுமே நம்பியவர். அவரது நெருங்கிய நண்பரும் ன்மீகத் துணைவருமான சட்டம்பி ஸ்வாமிகளுடன் ஒப்பிட்டு இதைப் பார்க்கலாம். சட்டம்பி ஸ்வாமிகள் நாயர் சாதியைச்சேர்ந்தவர். ஆனால் அவரது அணுகுமுறை சாதிமுறை , மதமூடநம்பிக்கைகள், பிராமணத்திரிபுகள் மற்றும் மோசடித்தனமான மதமாற்ற முயற்சிகள் ஆகியவற்றை கடுமையாகத் தாக்கிப் புடைப்பதாக இருந்தது. கேரளச்சூழலில் பிராமணர் X பிராமணரல்லாதார் என்ற இரட்டை எதிர்மையை உருவாக்கியவர் அவரே. ஆனால் நாராயணகுரு அந்த தீவிரப் போக்குகள் எதையுமே கைக்கொள்ளவில்லை. அவரது அணுகுமுறை முற்றிலும் நேர்நிலை கொண்டதாக, முழுக்க முழுக்க சாத்விகமானதாக இருந்தது. சத்யாக்ரகம் போன்ற அகிம்சைப் போராட்டங்களைக்கூட நாராயணகுரு ஏற்கவில்லை. காரணம் அவை எதிர்நிலை எடுக்கின்றன, எதிர்தரப்புடன் மோதி அதை தார்மீகக் கட்டாயத்துக்கு உள்ளாக்குகின்றன என்று அவர் எண்ணினார்.
நம்மை நாம் மேம்படுத்திக் கொள்வதே ஒரே செயல்பாடாக இருக்க முடியும் என்பதே அவரது எண்ணமாக இருந்தது. ஓர் அமைப்பை அல்லது கோட்பாட்டை எதிர்ப்பது என்பது அதற்கு மாற்றாக நம்மை நாம் உருவாக்கிக் கொள்வதன் மூலமே நிகழமுடியும் என்று குரு எண்ணினார். நாம் எதிர்க்கும் அமைப்பில் அல்லது கோட்பாட்டில் உள்ள சிறப்பம்சங்கள் அனைத்தையும் நாம் உள்வாங்கிக் கொண்டு அதைத் தாண்டிச்செல்வதன் வழியாகவே அவ்வளர்ச்சி சாத்தியமாகும். இதுவே நாராயணகுருவின் வழிமுறை. ஆகவே நாராயணகுரு முன்வைத்ததை ‘ உள்வாங்கல் கோட்பாடு ‘ அல்லது ‘ஒருங்கிணைப்புக் கோட்பாடு ‘ என்று சொல்லலாம். அதை அவர் அரசியல் சமூகச்செயல்பாடுகளுக்காக நடைமுறைவிவேகமாக மாற்றி முன்வைத்தார். கூடவே உயர்தத்துவ விவாதத்துக்கான முன்வரைவாகவும் சுட்டிக் காட்டினார். இவ்விரு தளங்களிலும் நாராயணகுருவை நாம் அறியவேண்டியுள்ளது.
நம்மிடையேயுள்ள தாழ்த்தப்பட்ட , பிற்படுத்தப்பட்ட மக்கள் இந்துஞான அமைப்பின் அடிப்படைக் கொள்கைகளினாலேயே நிராகரிக்கப்பட்டவர்கள் , வரலாறு துவங்கும் காலம் முதலே அவர்கள் முழுமையாக ஒடுக்கப்பட்டிருந்தார்கள் என்ற சித்திரத்தை கிறித்தவப் போதகர்களும் வரலாற்றாசிரியர்களும் தொடர்ந்து உருவாக்கி வந்தார்கள். அவர்களால் மதமாற்றம் செய்யப்பட்ட எந்த மக்களும் எவ்வகையிலும் சாதிக் கொடுமையில் இருந்து விடுபடவில்லை என்ற அப்பட்டமான உண்மை கண்முன் உள்ளபோதிலும் கூட அவர்கள் இதை இன்றும் உருவாக்கி வருகிறார்கள். அவர்களுக்கு சாதி அல்ல இலக்கு , இந்து மத அமைப்பு தான். பாரத மரபு முழுமையாகவே அந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரானதுதான் என்று காட்டுவதில் அவர்களுக்கு உள்நோக்கம் இருந்தது .அதை ஏற்றுக்கொண்டவர் அல்ல நாராயணகுரு .
புலையர், ஈழவர் போன்ற சாதியினரை குரு ‘ தோற்கடிக்கப்பட்ட ‘ மக்களாகவே கண்டார் . பழைய காலத்தில் அவர்களுக்கு சிறப்பான கடந்தகாலம் ஒன்றிருந்தமைக்கான தடையங்கள் அப்போதும் எஞ்சியிருந்தன. நித்ய சைதன்ய யதியின் குடும்பம் மற்றும் மூர்க்கோத்து குடும்பம் முதலிய வரலாற்றுக்கு தப்பி பிழைத்த ஈழவ பிரபு குலங்கள் அதற்கு சான்றுகள். அக்குடும்பங்களில் பெளத்த மதம் ,பாலி மொழி முதலியவற்றை சார்ந்த புராதனமான செப்பேடுகள் மற்றும் குல அடையாளங்கள்இருந்தன. கேரள சாதியமைப்பில் பெளத்த மதம் வீழ்ந்த பிறகு ஒரு மறு அடுக்கு உருவானதாகவும் அதில்இன்றைய ஈழவ புலைய சாதியினர் பின்னுக்கு தள்ளப்பட்டதாகவும் ஆய்வாளர் இன்று விரிவான ஆதாரங்களின் அடிப்படையில் நிறுவியுள்ளார்கள்.
தமிழக தலித் சிந்தனையாளராகிய அயோத்தி தாச பண்டிதரும் நாராயண குருவின் கருத்தையே
அப்படியே பிரதிபலிக்கிறார் என்பதைக் காணலாம். பெளத்த மதம் ஒழிக்கப்பட்டபோதுதான் பறையர்
தாழ்த்தப்பட்ட மக்களாக ஆனார்கள் என்பது அவரது கருத்து. பறையர்களுக்கு உயர்ந்த கல்வி கலாச்சார மரபு ஒன்று இருந்தது . அதன் தடையங்கள் அயோத்தி தாசர் காலத்தில் கூட மிக வலுவாகவே இருந்தன. மார்க்கலிங்க பண்டாரம் போன்ற பல முக்கிய பறையர் குலப் பேரறிஞர்களை
அயோத்திதாசர் குறிப்பிடுகிறார் . அவர்களிடம் பண்டைய தமிழ் பேரிலக்கியங்களின் சுவடிகள்
பல பேணப்பட்டிருந்தன. திருக்குறளை எல்லிஸ் துரைக்கு அச்சுக்கு கொடுத்ததே பண்டிதரின் தந்தை கந்தப்பர் தான். தாழ்த்தப்பட்டவர்கள் சூழ்நிலையால் தாழ்த்தப்பட்டவர்களல்ல, எப்போதுமே அப்படி இருந்தவர்கள் தான் என்று இன்று வாதிடுபவர்கள் பெரும்பாலும் கிறித்த போதகர்களின் குரலை சுயநல நோக்குடன் எதிரொலிப்பவர்களாக உள்ளனர். அசலான தலித் சிந்தனையாளர்கள் தங்கள் குலத்தின் பழைய வரலாற்று பின்புலம் குறித்த தெளிவான புரிதல்களும் தாரங்களும் கொண்டவர்களாக உள்ளனர். பிறிதொரு ஆதாரம் சமீபகாலமாக குருசாமி சித்தர் மள்ளர் களைப்பற்றி எழுதும் நூல்கள். விரிவான மேலும் விவாதத்துக்கு உரிய தலைப்பிது.
எக்காரணத்தால் சமூக அமைப்பில் தோற்கடிக்கப்பட்டு பின்னுக்கு தள்ளப்பட்டார்களோ அக்காரணங்களை வென்று தோற்கடித்தவர்களுக்கு மேலாக ஆவதே நாராயணகுரு அளித்த செய்தி. வேதம் உனக்கு மறுக்கப்பட்டால் வேதத்தை பிராமணர்களுக்கு கற்றுக் கொடுக்கும் வேத விற்பன்னராக நீ ஆகு என்றார் அவர் . நமது மரபுசெல்வங்கள் குறிப்பாக உபநிடதங்கள் எவருடைய தனிச்சொத்துமல்ல என்பது அவருடைய கருத்து. அவை விளக்கங்கள் மூலம் அவ்வாறு கையகப்படுத்தப்பட்டன. அவற்றை அனைவரும் சொந்தமாக்கிக் கொள்ளவேண்டியுள்ளது . கறாரான விமரிசனங்கள் கொண்ட விரிவான ஆழமான உரைகள் மூலம் நடராஜ குருவும் நித்ய சைதன்ய யதியும் அப்பேரிலக்கியங்களை ‘விடுவிப்பதை ‘ காணலாம். மத அடையாளத்திலிருந்து முக்கிய நூல்களை அகற்றி அவற்றை தத்துவ , செவ்விலக்கிய ஆக்கங்களாக காண்பது இந்த குரு மரபின் பாணியாகும். இந்துஞானமரபின் அனைத்து சிறப்புக் கூறுகளையும் உள்வாங்கி செரித்துக் கொண்டு அதன் எதிர்மறை அம்சங்களை முற்றாக விலக்கி முன்செல்லும் ஒரு முறையை அவர் வகுத்தளித்தார். இதுவே குரு முன்வைத்த நடைமுறைத்தளமாகும்.
நாராயண குரு தூய அத்துவிதி . இவ்வாறு சொல்லும்போது ஏற்படும் சிக்கல்கள் பல உண்டு.
முக்கியமாக தமிழ்ச்சூழலில் இவற்றைப் பற்றி மிகக் கவனமாகவே பேசவேண்டியுள்ளது. இங்கே
இந்துஞான மரபின் எந்த ஒரு கூறைப்பற்றியும் ஒருவரியாவது பேசுவதுகூட அப்பட்டமான பிற்போக்கு அல்லது மதநோக்கு என்று காட்டும்விதமாக பொதுவான சிந்தனைத்தளம் மோசமாகத் திருகப்பட்டுள்ளது.ஆகவே பெரும்பாலானவர்களுக்கு எதுவும் தெரியாது, தெரியாதவை குறித்த வெறுப்போ மிக அதிகம்.அத்துவிதம் என்றதுமே சரசரவென முடிவுகளை நோக்கி பாய ரம்பித்துவிடுவார்கள். இந்தியச் சூழலில் வேதாந்தம் , அத்துவிதம் , பத்தொன்பதாம் நூற்றாண்டில் புதுப்பிறவி எடுத்த அத்துவிதம் ஆகியவற்றை தெளிவாகப் பிரித்துக் கொள்ளவேண்டியுள்ளது.
ரிக்வேதத்தின் பத்தாம் மண்டிலத்தில் உள்ள பிரம்மதரிசனங்களில் இருந்து தொடங்கி உபநிடதங்களில் வளர்ச்சி பெற்றி பாதராயணரால் பிரம்மசூத்திரம் மூலம் தொகுக்கப்பட்டதே வேதாந்தமாகும் . இது பிரம்மத்தின் முதல்முழுமைத்தன்மையை முன்வைத்து பிரபஞ்சத்தை பிரம்மத்தின்அலகிலா ஆட்டமாகக் காண்கிறது. பிறகு பெளத்த தரிசனங்களுடன் வேதாந்தம் உரையாடியதன் மூலம் யோகாசார பெளத்ததில் வெறுவெளிவாதம் [ சூன்யவாதம்] அறிவகவாதம் [விக்ஞானவாத] போன்ற கோட்பாடுகள் உருவாயின. இவற்றை உள்ளிழுத்துக் கொண்டு வேதாந்தம் மறுபிறப்பு கொண்டதே சங்கரரின் அத்துவிதமாகும் . வேதாந்தத்தில் இல்லாததும் சங்கரரில் இருப்பதுமான முக்கியமான கூறு முழுமையான மாயாவதம் எனலாம். இதைத் தொடர்ந்து உருவான ராமானுஜரின் விசிட்டாத்வைதம், மத்வரின் துவிதம் போன்றவை பிற்கால வேதாந்தங்கள் எனப்படுகின்றன.
பத்தொன்பதாம் நூற்றாண்டு தொடங்கியபோது இந்துஞானமரபை மறு ஆக்கம் செய்ய எழுந்த ஞானிகள் பலரும் அத்துவிதத்தையே முக்கியமான கோட்பாடாகக் கொண்டார்கள். ராமகிருஷ்ண பரமஹம்சர் , விவேகானந்தர் , நாராயணகுரு ஆகியோர் நேரடியாகவே அத்துவிதக் கோட்பாடாக தங்கள் ஞானத்தை அறிவித்துக் கொண்டவர்கள். ராஜாராம் மோகன் ராய், அரவிந்தர் ஆகியோரிடம்
மேலோங்கியிருப்பது அத்துவிதமே. தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்காக போராடிய அய்யாவைகுண்டர், சுபானந்தகுரு, பிரம்மானந்த சிவயோகி, சுவாமி சகஜானந்தா போன்றவர்கள் அத்துவிதத்தையே தங்கள் கோட்பாடாகக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.. சங்கரரின் அத்துவிதம் பெளத்தத்தின் மேம்படுத்தப்பட்ட வடிவம் என்பது இதற்கு சமூகவியல் ரீதியான ஒரு காரணத்தை அளிக்கிறது. இவ்வாறு மறுமலர்ச்சி அடைந்த அத்துவிதம் சங்கரரின் அத்துவிதத்திலிருந்து பலவகையான முக்கியமான மாற்றங்கள் கொண்டது . இந்த அத்துவிதங்களை பொதுவாக புதிய அத்துவிதம் எனலாம்.
நாராயணகுரு முன்வைப்பது புதிய அத்துவிதமாகும். உபநிடதங்களை உள்ளடக்கிக் கொண்ட பெளத்தமாகவே நாராயண குருவின் அத்துவிதம் அமைந்தது . அத்துவிதத்தை வைதிகச்சடங்குகள் பக்கமாக நகர்த்தி அதன் சாராம்சமான ஒருமைத்தரிசனத்தை அழித்த சங்கர மடங்களுடன் நாமிதை பிணைத்துக் கொள்ளக்கூடாது .ஏற்கனவே காஞ்சி சங்கராச்சாரியாரும் நாராயண குருவும் எடுத்த நிலைபாடுகளில் உள்ள வித்தியாசத்தை கண்டோம். அவ்விருவருமே சங்கரர் பெயரையே சொல்கிறார்கள் . நாராயண குரு தன்னை பெளத்தர் என்று சொல்லிக் கொள்ள தயங்கியதுமில்லை. தூய அறிவே நாராயணகுரு முன்வைத்த அத்துவிதம் . எளிய மக்களுக்கு கடவுள் தேவை என்று கருதிய நாராயணகுரு தன் சீடர்களுக்கு அறிவார்த்தம் ஒன்றையே உபதேசித்தார் .நடராஜ குருவும் நித்ய சைதன்ய யதியும் கோவில்களுக்குச் சென்றவர்களோ ஏதேனும் இறைவழிபாட்டை எப்போதாவது நடத்தியவர்களும் அல்லர் .
நாராயணகுருவின் அத்துவித நோக்கு குறித்து மிகவிரிவான அளவில் பேசவேண்டியுள்ளது. அதற்கும்
சங்கர அத்துவிதத்துக்கும் இடையே உள்ள முக்கியமான வேறுபாட்டை மட்டும் குறிப்பிடலாம். சங்கரரின் மாயாவாதத்தை நாராயணகுரு உயர்தளத்து தரிசனமாக மட்டுமே ஏற்கிறார். அதாவது பத்துவகையான மெய்மைத்தரிசனநிலைகளில் ஒன்றாக . நடைமுறையில் உலகியல் வாழ்க்கையை மாயை என்று அவர் நிராகரிக்கவில்லை. பரமார்த்திகம் போலவே அதுவும் முக்கியமே என்று எண்ணினார். மேலான ஆன்மீகம் சிறந்த உலகவாழ்க்கைக்கு அடிப்படையாக அமைகிறதோ அதைப்போலவே பரமார்த்திக வாழ்வுக்கு மேலான உலகியல் வாழ்வு வழியாக அமைகிறது என்று எண்ணியவர் அவர்.
சங்கரரின் கோட்பாடுகளிலிருந்து நாராயணகுரு பெற்றுக் கொண்டது இரண்டு அடிப்படைகளை. காண்பதும் அறிவதும் எல்லாம் ஒன்றே என்ற மகத்தான ஒருமைத்தரிசனம் . இதை அவர் சமத்துவதரிசனமாக , பேதமின்மைநோக்காக விரித்துக் கொண்டார். இரண்டு அறிவதெல்லாம் அறிவையே , தூய அறிவொன்றே பிரம்மமும் பிரம்மத்தை நோக்கிய பாதையுமாகும் என்ற மெய்ஞானம். தூய அறிவு என்பது வாழ்க்கையை விலக்கி அடையும் மர்மமான ஒன்றல்ல என்றும் வாழ்வின் அனைத்துக் கூறுகளிலும் ஈடுபட்டு கடந்துசென்று அறிதலே என்றும் அவர் அதை விளக்கிக் கொண்டார். இதுவே நாராயண குருவின் தரிசனமாகும். அவர் கூறிய அத்துவிதம் தர்க்கபுத்தியை ,பேதமின்மையை, பிரபஞ்சத்துடன் முழுமையான லயத்தை , கருணை நிரம்பிய சமத்துவத்தை வலியுறுத்திய பெரும் தரிசனம் என்று மட்டும் சொல்லலாம்.
நாராயணகுருவின் தத்துவ ஆய்வுமுறையை குறிப்பாகச் சொல்லவேண்டியுள்ளது. தத்துவம் என்பது உலகை ஒரு குறிப்பிட்ட வகையாக விளக்கும் முறைமை. ஆகவே மாற்று விளக்கங்களுடன் அது மோதுவதை நாம் தவிர்க்க இயலாது. தத்துவம் என்பது வேர்ப்பரப்பு , அதிலிருந்தே அரசியல் சமூகவியல் அறவியல் ஒழுக்கவியல் அடிப்படைகள் உருவாகி வருகின்றன. ஆகவே தத்துவ மோதல் மிக்க விசையுடன் பலவிதமான உள்ளோட்டங்களுடன் நடப்பதையும் தவிர்க்கமுடியாது. ஆனால் தத்துவ விவாதங்களை நடத்துவதில் நாராயண குரு காட்டிய வழி மாறுபட்டது. தத்துவத்தை முழுமுற்றான உண்மை ஒன்றுக்கான ஒருங்கிணைந்த தேடலாக அவர் காண்கிறார். ஆகவே தத்துவத்தின் மாறுபட்ட தரப்புகளை ஒன்றையொன்று நிரப்பும்தன்மை கொண்டவையாக அணுகுகிறார். ஒவ்வொரு தத்துவமும் அதுவரையான ஒட்டு மொத்த தத்துவ அமைப்பில் உள்ள ஒரு குறையை ஈடுகட்டும்பொருட்டு உருவானது என்ற நோக்கு அவருடையது . இதை அவர் ஒருங்கிணைப்பு நோக்கு [சமன்வயம்] என்ற சொல்லால் சுட்டினார். ஆதலால்தான் வாழ்ந்த காலகட்டத்தில் நாராயணகுரு எந்த தத்துவ மோதல்களிலும் ஈடுபடவில்லை . ஆனால் அதுவரையிலான தத்துவநோக்குகளை கூர்ந்து அவதானித்த பேரறிஞர் அவர். தமிழ் மலையாலம் சம்ஸ்கிருதம் ஆகிய மூன்று மொழிகளிலும் ஆழ்ந்த புலமையுடையவர். அன்று வரையிலான தத்துவ அமைப்பில் அவர் அவதானித்த போதாமைகளை நிரப்பும்பொருட்டு மட்டுமே அவர் தன் நூல்களை எழுதினார்.
இந்த ஒருங்கிணைப்புப் பார்வையை இன்று நாம் சாதாரணமாக தவறாகவோ குறைத்தோ மதிப்பிட்டுவிடுவோம். இன்று மத அரசியல் சார்ந்து எல்லா தரப்புகளையும் ஒற்றை அமைப்பாக மாற்றும் நோக்குடன் செய்யப்படும் சமரசம் போன்றதுதான் அது என்று சிலர் எண்ணக்கூடும். அப்படியல்ல, நாராயண குரு தத்துவ வேறுபாடுகளை மிக மிக முக்கியமாக கருதியவர். ‘அரியும் அரனும் ஒன்று ‘என்பதுபோன்ற எளிய சமரசநோக்கு அல்ல அவருடையது . நவீன தத்துவ மொழியில் சொல்லவெண்டுமானால் நாராயணகுரு தத்துவத்தை ஒரு பெரும் உரையாடலாக , நவீனக் கலைச்சொல்லால் சுட்டவேண்டுமென்றால் சொற்களனாகக் [Discourse ] கண்டார். உரையாடலின் எல்லா தரப்புமே முக்கியம்தான். உரையாடலின் இயக்கசக்தி அத்தரப்புகளின் மோதல் மூலம் உருவாவது. ஒவ்வொரு தத்துவமும் விரிவான சொற்களனில் எந்த இடத்தை நிரப்புகிறது என்று அவர் பார்த்தார். அது தத்துவ மொழியாடல் முறை எனலாம். [ Dialogic Philosophy ]
கேரள அறிவியக்கத்தில் நாராயணகுருவின் பங்களிப்பு மிக விரிவானது . அவரது மாணவர்கள்
வரலாறு தத்துவம் போன்ற பல தளங்களில் முக்கியமான பங்களிப்பை ஆற்றினார்கள். நாராயண குருவின் முக்கிய மாணவரான நாராயணகுருவின் வழிமுறை எதையும் நிராகரிப்பது அல்ல. அவர் அனைத்தையும் கற்று உள்ளடக்கி தனக்கென ஒரு நோக்கை உருவாக்கிக் கொள்வதை வலியுறுத்தியவர். பொதுவாக நிராகரிப்பது மிக எளிது. வெறுப்பு என்ற ஆயுதம் மட்டுமே அதற்குப் போதும். ஆனால் ஏற்பு மிக கடுமையான உழைப்பைக் கோரிநிற்பது. நாராயண குரு அனைத்தையுமே அறியும்படி அறைகூவினார். அனைத்தையும் சொந்தமாக்கிக் கொள்ள சொன்னார். சுரண்டப்பட்ட மக்களுக்கு சுரண்டுபவர்களின் ஞானம் எதற்கு என்ற வினா அன்றும் சிலரால் எழுப்பபட்டது . ஞானம் மானுடகுலத்துக்கு உரியது என்றும் அதை நிராகரிப்பதன் மூலமல்ல வென்று மேலெடுப்பதன்மூலமே முன்னேற்றம் சாத்தியம் என்றும் நாராயண குரு சொன்னார் . ஒரு சமூகத்தின் அறிவார்ந்த வெற்றியே அதன் சமூக அதிகாரம் என்றார். ‘அறிவுக்கு குறுக்குவழிகள் இல்லை ‘ என்ற அவரது உபதேசம் முக்கியமானது. தன்னை பின்பற்றியவர்களிடம் வேதங்கள் உபநிடதங்கள் இந்திய தத்துவங்கள் சம்ஸ்கிருத மலையாள காவியங்கள் தமிழிலக்கிய மரபு அனைத்துமே அவர்கள் பாரம்பரியம் என்றுதான் நாராயனகுரு சொன்னார் .அவற்றை கற்று தெரிவு செய்து மறு ஆக்கம் செய்து முன்னெடுத்துச்செல்லும் சவாலை விடுத்தார். அதை அவர்கள் வெற்றிகரமாக நடத்திக் காட்டினர் . அவ்வகையில் பார்த்தால் நாராயணகுருவின் இயக்கம் நிரூபிக்கப்பட்ட வழிமுறை ஒன்றை இந்தியாவுக்கு அளிக்கிறது.
====
====
முக்கிய நூல்கள்
1. சாதியமைப்பும் கேரள வரலாறும். பி கெ பாலகிருஷ்ணன். சுருக்கமான தமிழாக்கம் ஜெயமோகன்
. காலச்சுவடு 13
2. கேரள தலித்போராளி அய்யன்காளி . நிர்மால்யா. தமிழினி சென்னை.
3. தென்குமரியின் கதை. டாக்டர் அ.கா.பெருமாள். தமிழினி சென்னை
4. கேரளம் மலையாளிகளின் மாத்ருபூமி – இ எம் எஸ் நம்பூதிரிப்பாட் . [மலையாளம்]
5. ‘நாராயணகுரு தொகைநூல் ‘ -பி.கெ.பாலகிருஷ்ணன் [மலையாளம்]
6. பாரதியார் கட்டுரைகள். தொகைநூல். தேசிய புத்தக நிறுவன வெளியீடு
7. இந்திய தத்துவ ஞானம் . டாக்டர் ராதாகிருஷ்ணன். அண்ணமலைப் பல்கலைகழக வெளியீடு
8. மந்திரம் இசை மெளனம். நித்ய சைதன்ய யதியுடன் ஓர் உரையாடல். காலச்சுவடு 17
[Presented at Refresher Training Course for Teachers at Tanjore
Tamil University On 13-3 -04]