கீதை: மகத்தான மனத் தடுமாற்றம் – 1
ஜெயமோகன்.இன் ல் இருந்து
[திருச்செந்தூர் கோயில் ஓவியம்]
1. ‘அறநிலமாம் குருநிலத்தில்
போருக்கு முனைந்து
வந்துள்ள
என்னவரும் பாண்டவரும்
என்ன செய்கின்றனர் சஞ்சயா?’
2.என்று கேட்ட திருதராஷ்ட்ரனிடம்
சஞ்சயன் சொன்னான்,
‘அதோ மன்னனாகிய துரியோதனன்
அணிவகுத்து நிற்கும்
பாண்டவப் படையைக் கண்டு
துரோணரை நெருங்கி
பேசலுற்றான்.’
3.’ஆசிரியரே,
உங்கள் மாணவனும்
அறிஞனுமாகிய
துருபத இளவரசனால்
அணிவகுத்து நிறுத்தப்பட்ட
இந்த மாபெரும் படையை
பாருங்கள்!’
4.’இதோ
போர் மறவர்களாகிய
பீமனும் அர்ஜுனனும்
இணைந்து நிற்கின்றனர்.
வில்வீரர்களாகிய
சாத்யகியும் விராடனும்
தேர் வல்லோன் துருபதனும்
நிற்கின்றனர்.
5.திருஷ்டகேதுவும் சேகிதானனும்
வீரம்மிக்க காசிமன்னனும்
புருஜித்தும் குந்திபோஜனும்
மாமனுடனாகிய வைப்பயனும்
இதோ நிற்கின்றனர்.
6.ஆற்றல் மிக்க யூதான்யூவும்
வேகம் மிக்க உத்தமெளஜவும்
சுபத்திரை மகனும்
திரௌபதி மைந்தரும் உள்ளனர்.
அனைவருமே தேர்த்திறனுடையோர்.
7.இருபிறப்பாளரே,
நம் தரப்பில் சிறந்தவர்களை
என் படையின் தலைவர்களை
அனைவரையும் தாங்கள் அறிய
இதோ கூறுகிறேன்.
8.தாங்களும் பீஷ்மரும்
கர்ணனும்
போர் வெற்றி நாடும் கிருபரும்
அஸ்வத்தாமாவும் விகர்ணனும்
சோமதத்தன் மகனும்
ஜயத்ரதனும் பிறரும்
இதோ உள்ளனர்.
9.மேலும் பிறர்
எனக்காக உயிர்துறக்கத்
துணிந்து வந்த வீரர்கள்
பலவித ஆயுதங்கள் ஏந்தியவர்
போர்க்கலை சிறந்தோர்
இதோ உள்ளனர்.
10.பீஷ்மர் நடத்தும் படை
போதுமானதல்ல
பீமன் நடத்துவதோ
போதுமானது.
11.நீங்களெல்லாம்
எல்லா வழிகளிலும்
நிறைந்திருந்து
பீஷ்மரை காத்து கொள்க.’
12.பெருமையுடையோன்
குருகுல முதியோன்
மூதாதை
அவன் மகிழ
சிம்மக்குரல் எழுப்பி
தன் சங்கை ஊதினார்.
13.அதன்பின்
சங்கங்கள் பேரிகைகள்
பணவம் ஆனகம் கோமுகம்
சேர்ந்து ஒலித்தன
அவ்வொலிகள்
திசை நிறைத்தன.
14.அப்போது
வெண் குதிரைகள் பூட்டப்பட்ட
பெருந்தேரில் அமர்ந்த
கிருஷ்ணணும் அர்ஜுனனும்
தங்கள் தூயசங்கங்களை
உரத்து ஒலித்தனர்.
15.கிருஷ்ணன் பாஞ்சஜன்யம் முழக்க
அர்ஜுனன் தேவதத்தத்தை ஒலித்தான்
பெருஞ்செயல் வீரன் ஓநாய்வயிறன்
பெளண்டியமெனும் சங்கை ஒலித்தான்
16.குந்தி பெற்ற மன்னன் தருமன்
அனந்த விஜயத்தை ஊதினான்
நகுலனும் சகாதேவனும்
சுகோஷம் மணிபுஷ்பகம் எனும்
சங்குகளை ஒலித்தனர்
17.வில்வீரன் காசிமன்னன்,
தேர் வீரன் சிகண்டி,
திட்டதுயும்னன், விராடன்,
தோல்வி அறியா சாத்யகி
18.துருபதன்,திரெளபதி மைந்தர்கள்,
திண்தோள் அபிமன்யூ
ஆகியோரும் தனித்தனியாக
திசைநடுங்க சங்கொலியெழுப்பினர்.
19.புவிமன்னனே,
இங்ஙனம் விண்ணும் மண்ணும்
எதிரொளியெழுப்ப எழுந்த
அச்சங்கொலிகள்
தார்த்தராஷ்ட்ர குலத்தவரின்
நெஞ்சங்களைப் பிளந்தன.
20.உலகாளுபவனே,
ஆயுதங்கள் எழக்கண்ட
அனுமக் கொடியுடைய
அர்ஜுனன்
போருக்கு நின்ற
திருதாஷ்ட்ர மைந்தர்களைக் கண்டு
வில்லைத்தூக்கி
கிருஷ்ணனிடம் சொன்னான்.
21.’என் அச்சுதனே
இருபடைகள் நடுவே ரதத்தை நிறுத்துக.
22.இங்கு போர்புரிய விரும்பி
அணிவகுத்து நிற்பவர்கள்
அனைவரையும் நான் காணும்படி
ரதத்தை நிறுத்துவாய்.
என்னுடன் பொருத வருபவர்களை
நான் பார்க்கிறேன்.
23.தீய சிந்தனையுடைய
திருதராஷ்ட்ரன் மகனுக்கு
விருப்பமுள்ளதைச் செய்ய
இங்குவந்து கூடியவர்கள்
யார் யாரென்று பார்க்கிறேன்.’
24.பாரதனே,
துயிலை வென்றவன்
இவ்வண்ணம் கூற
முனிவர்க்கு இறைவன்
தன் தேரை
இரு படைகளுக்கு நடுவே
நிறுத்தினான்.’
25.பீஷ்மர் துரோணர்
மற்றும் மாமன்னர் முன்
தேரை நிறுத்தியபின்
‘பார்த்தனே
இணைந்திருக்கும் கெளரவரைப்
பார் நன்றாக’ என்றான்.
26.அங்கே
இருபக்கமும் நின்றிருந்த
தந்தையரையும் மூதாதையரையும்
ஆசிரியர்களையும் தாய்மாமன்களையும்
சகோதரர்களையும் மைந்தர்களையும்
பேரர்களையும் நண்பர்களையும்
மாதுவர்களையுமே கண்டான்!
27.குந்தியின் மைந்தன்
தன்முன் உறவினர் நண்பர்
அனைவரையும் கண்டான்.
28.பெருங்கருணையினால் மனமுருகி
இவ்வண்ணம் கூறலுற்றான்,
‘என்முன்
என் உறவினரே
போர்புரிய அணிவகுத்திருப்பதைக்
காண்கிறேன்.
29.என் கைகால் சோர்கின்றன.
வாய் உலர்கிறது.
உடல் நடுங்கி
மயிர் கூச்செறிகிறது.
30.என் கைகளில் இருந்து
காண்டீபம் நழுவுகிறது.
என் சருமம் பற்றி எரிகிறது.
என்னால் நிற்கவும் இயலவில்லை.
என் மனமோ
சுழன்று பறக்கிறது.
31.கேசவனே,
தீய அறிகுறிகளைக் காண்கிறேன்.
போரில் உறவினரைக் கொன்று
அடையும் நற்பலன் ஏதும்
எனக்குத் தெரியவுமில்லை.
32.வெற்றியையும் அரசையும்
விரும்பவில்லை.
இன்பங்களுக்கும் ஆசை கொள்ளவில்லை.
கோவிந்தனே,
அரசால் என்ன பயன்?
கேளிக்கைகளில்,
ஏன் இவ்வாழ்க்கையினால்தான்
எங்களுக்கு என்ன பயன்?
33.யாருக்காக
அரசை விழைகிறோமோ
யாருக்காக
இன்பங்களையும் களியாட்டங்களையும்
தேடுகிறோமோ
அவர்களெல்லாருமே
இதோ
உயிரையும் உடைமையையும் உதறிவிட்டு
போருக்கு வந்து நிற்கிறார்கள்.
34.ஆசிரியர்கள் தந்தையர்
மைந்தர்கள் மூதாதையர்
மாமன்கள் மாதுவர்கள்
பேரன்கள் மைத்துனர்கள்
இன்றும் பல உறவினர்கள்.
35.மதுசூதனனே,
என்னைக் கொல்லவந்தவர்களாயினும்
இவர்களை
மூவுலகை ஆளும் பதவி கிடைத்தாலும்
கொல்லத் துணிய மாட்டேன்.
மண்ணுக்காகவா கொல்வேன்?
36.ஜனார்த்தனா,
திருதராஷ்ட்ரன் மைந்தர்களைக்
கொன்றபின்
என்ன இன்பம் வரப்போகிறது
எங்களுக்கு?
கொள்ளையடிப்பவர்களாகிய
இவர்களைக் கொன்றால்
நாங்களும் பாவிகளாவோம்.
37.மாதவனே,
ஆகவே நாங்கள்
உறவினர்களாகிய திருதராஷ்ட்ரன் மைந்தரைக்
கொல்லலாகாது!
உறவினர்களைக் கொன்றபின்
எப்படி மகிழ்ந்திருப்போம்?
38.பதவிவெறியால்
விவேகமிழந்த இவர்கள்
குலத்தை அழிப்பதன் விளைவையும்
நெருங்கியவர்களைக் கொல்வதன்
பாவத்தையும்
அறிந்திலராயினும்,
39.ஜனார்த்தனா,
குலமழிவதன் பாதகங்களை
நன்கறிந்த நாங்களாவது
இந்தப் பெரும்பாவத்திலிருந்து
விலகத் தெரிந்திருக்க வேண்டாமா?
40.ஒரு குலம் அழிகையில்
அக்குலத்தின்
மரபான குலமுறைகள்
முற்றிலும் அழிகின்றன
குலநெறிகள் அழிந்தால்
அக்குலத்தையே
அதர்மம் சூழ்கிறது.
41.விருஷ்ணி குலத்தோன்றலே
அதர்மம் குலத்தைச் சூழும்போது
குலப்பெண்டிர்
நெறிவமுவுகின்றனர்.
அதன் மூலம்
வர்ணங்கள் கலக்கின்றன.
42.குலமழித்தவர்கள் மட்டுமில்லாது
அக்குலமே நரகம் செல்லநேர்கிறது
அக்குலத்து மூதாதையர்
ஈம உணவும் நீருமின்றி
விழ நேர்கிறது.
43.குலமழித்து
வர்ணக்கலப்பினை உருவாக்கும்
இந்த பாவங்களினால்
நிரந்தரமான பிறவி நெறிகளும்
குலமுறைகளும் அழிகின்றன.
44.ஜனார்த்தனா,
குலதர்மங்கள் அழிகையில்
அக்குலத்தோர்
நரகத்தில் வாழ்கிறார்கள்
என்று அறிந்துளோமே.
45.அரச பதவியில் விருப்பம் கொண்டு
உறவினர்களைக் கொல்ல
துணிந்திருக்கிறோம்.
என்ன வியப்பு!
எத்தனை இழிவு!
இந்தப் பெரும் பாவத்தைச்
செய்ய வந்திருக்கிறோம்.
46.ஆயுதங்கள் ஏந்திய
திருதராஷ்ட்ரன் மைந்தர்
ஆயுதங்கள் கைவிட்டு
எதிர்ப்பிலாது நிற்கும்
என்னைக் கொன்றால்
அதுவும் என் நன்மைக்கே.’
47.இங்ஙனம் கூறிய அர்ஜுனன்
துயரம் நிறைந்த மனத்துடன்
அம்புடன் வில்லை வீசிவிட்டு
அப்போர்களத்தில் அமர்ந்துவிட்டான்.
பகவத்கீதையில்
உபநிடதமும்
பிரம்ம வித்தையும்
யோக சாஸ்திரமும் ஆன
கிருஷ்ண அர்ஜுன உரையாடல்
எனும்
அர்ஜுன விஷாத யோகம்
முற்றும்.
*
கீதையின் நாடகத்தன்மை மிக்க இந்த நாற்பத்தேழு ஈரடிகளையும் ஒன்றுக்கு இருமுறை வாசிக்கும்போதே ஒரு நவீன வாசகனுக்கு சிறந்த புனைவுத்தருணம் ஒன்று மட்டுமே அளிக்கும் பலவகையான எண்ணத்திறப்புகளும் கற்பனைப் பாதைகளும் உருவாகியிருக்கும். இந்த அத்தியாத்தை முன்வைத்து சிந்திப்பதற்கு உதவியாக, பொதுவாகப் பேசப்படும் சில கருத்துக்களைப் பற்றி விவாதிக்கலாம்.
கீதையின் இப்பகுதிக்கு பிற்கால வேதாந்தத்தின் முதல் மூன்று ஆசிரியர்களும் உரை வகுக்கவில்லை. ராமானுஜர் மட்டுமே இறுதிவரிகளுக்கு ஒரு சிறு விளக்கக் குறிப்பு கொடுக்கிறார். இப்பகுதியை அவர்கள் நூலின் இன்றியமையாத உறுப்பாக எண்ணவில்லை என்று ஊகிக்கலாம். இந்த எண்ணம் அக்காலத்து குருகுல மரபுகளில் ஏற்கனவே இருந்திருப்பதனால்தான் மூவரும் ஒரே முடிவுக்கு வந்துள்ளனர். அவர்கள் முக்கியமாகக் கருதியது கீதையில் உள்ள வேதாந்த விவாதப் பகுதியை மட்டுமே.
ஆனால் பிற்காலத்து உரையாசிரியர்கள் அனைவரும் கீதையின் இப்பகுதியை மிகுந்த மன எழுச்சியுடன் அணுகியிருப்பதைக் காண முடிகிறது. முதல்குருநாதர் மூவரும் இப்பகுதியை விட்டுவிட்டது ஒரு பெரும் தவறு என்றே நடராஜகுரு தன் உரையில் குறிப்பிடுகிறார்.
கீதையை மகாபாரத்ததுடன் இணைப்பதற்காக உருவாக்கப்பட்ட இப்பகுதி மூலநூலின் உறுப்பல்ல என்பதானால் முக்கியமாக கருதப்படவில்லை என்று ஊகிக்கலாம். ஆனால் பிற்பாடு கீதையின் இப்பகுதியின் நாடகியமான கவித்துவம் பெரும் புகழ்பெற்று படிப்படியாக ஒரு மாபெரும் படிமமாக ஆனபோது மூலநூல் அளவுக்கு முக்கியமானதாக மாறியது. ஏன், மூலநூலை விடவும் முக்கியமானதாக, தனித்தியங்கக் கூடிய ஒரு படைப்பாக ஆயிற்று.
எந்த ஒரு கவித்துவ ஆக்கத்திற்கும் இருப்பதைப் போல பல்வேறுபட்ட வாசிப்புக்கான வாய்ப்புகள் உள்ள இப்பகுதியில் ஒவ்வொரு உரையாசிரியரும் ஒவ்வொருவிதமான நுட்பங்களை எடுத்துக்காட்டுவது இயல்பே. கவனத்திற்குரிய சில புள்ளிகளை மட்டுமே எடுத்துக் கொள்வோம்.
ஒன்று, திருதராஷ்ட்ரனின் மனநிலையாகும். அவரில் இருந்துதான் நூல் தொடங்குகிறது. இத்தகைய சிக்கலான ஒரு தத்துவநூல் ஏன் திருதராஷ்ட்ரனுக்குக் கூறப்படுகிறது? போர் புரிவதற்கு கூடியுள்ள படைகளில் இருதரப்புமே திருதராஷ்ட்ரனின் சொந்த ரத்தமே. பாண்டவர்களும் கெளரவர்களும் அவன் பிள்ளைகளே. ஆனால் தெளிவாக ‘என்னவரும் பாண்டவரும்’ என்றுப் பிரித்து ‘பார்ப்பவராக’ அந்த விழியிழந்த முதியமன்னர் இருக்கிறார்.
இத்தருணத்திலிருந்து பின்னால் சென்று திருதராஷ்டிரனின் குணச்சித்திரத்தை நாம் கவனிக்க வேண்டும். கிருஷ்ண துவைபாயனனைப் புணர்ந்து வாரிசை அடைவதற்கு வந்த அரசியான அம்பிகை, அவரது கோரமான தவக்கோலத்தைக் கண்டு அஞ்சி கண்களை மூடிக் கொண்டமையால் பிறவியிலேயே குருடாகப் பிறந்தான். அச்சத்தில் கருவுறப்பட்ட குழந்தை. பிறந்தபின் மணிமுடியில்லாத மூத்தவராக வாழ்ந்தார். மாபெரும் உடல் வலிமை கொண்டவர். மகாபாரதக் கதையின்படி அதில் வரும் அனைத்து கதாபாத்திரங்களிலும் உடல் வலிமை மிக்கவர் அவரே. ஆனால் போருக்கு போக முடியாது அவரால்.
இந்தச் செயலின்மை உருவாக்கிய விஷம் எப்போதும் திருதராஷ்ட்ரனில் உள்ளது. உண்மையில் மகாபாரதப் பெரும் போருக்கான விதைத்துளியே அதுதான். துரியோதனனில் அடக்க முடியாத மண்ணாசையாக முளைத்தது அதுவே. துரியோதனின் அனைத்துச் செயல்களுக்கும் மெளனமான ஆதரவாளராக இருந்தவர் அவர். கீதையை கேட்டும் அவரது குணச்சித்திரம் மாறவில்லை. கடைசிவரை அதே விஷம் அவரில் ஊறி நுரைத்தபடிதான் இருந்தது. போர் முடிந்த பிறகு மன்னிப்பும் ஆசியும் தேடி தன்னை அணுகும் பாண்டவர்களில் பீமனை நெரித்துக் கொல்ல முயல்கிறார். புதல்வர்கள் இறந்த பிறகு தாளா துயரத்துடன் நீர்க்கடன் செய்யப் போகும் போதுகூட அவர் எந்தவிதமான குற்ற உணர்வும் கொள்ளவில்லை.
மகாபாரதத்தில் திருதாராஷ்ட்ரனின் விழியிழந்த தன்மை ஒர் உடல் ஊனமாக மட்டும் காட்டப்படவில்லை. அது அவரது உள்ள ஊனத்தின் குறியீடுதான். அதிகார ஆசையால், தன்னகங்காரத்தால், பந்த பாசத்தால் குருடாகிப் போன மனிதர் அவர். விவேகம் குருடாகிப் போனதனால் பயனில்லாது உறையும் உடல் வலிமை கொண்டவர் அவர். அவருக்கு கீதை கூறப்படுகிறது என்பது ஒரு தற்செயல் அல்ல.
ஏனெனில் மகாபாரதத்தில் திருதராஷ்ட்ரர் ஒரு முதன்மைக் கதாபாத்திரமே அல்ல. திருதராஷ்ட்ரரின் அகம் அவ்வப்போது குறிப்புணர்த்தப்படுகிறதே ஒழிய அவருடைய உணர்வுகளும் தர்ம சங்கடங்களும் ஒருபோதும் விரித்துரைக்கப் படவில்லை. மேலும் எவ்வகையிலும் திருதராஷ்ட்ரர் வேதாந்த சிந்தனைகளிலோ தர்ம விவாதங்களிலோ ஆர்வம் உடையவராக காட்டப்படவில்லை. மகாபாரதம் முழுக்க வேறு எந்த முக்கியமான உரையாடலும் அவரிடம் கூறப்படவில்லை.
தத்துவார்த்தமான ஒரு தளத்தில் பார்த்தால் கீதையை சஞ்சயன் விதுரருக்குக் கூறியிருக்கலாம். ஏனெனில் விதுரனின் குணமும் சரி, சிந்தனைகளும் சரி ,பல வகையிலும் கீதையுடன் உரையாடுபவை. பிற்காலத்தில் விதுரநீதி என்ற நூல் இதன் அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டு மகாபாரதத்தில் இணைக்கப்பட்டது. புனைவின் தன்மையை வைத்துப் பார்த்தால் கீதை குந்திக்குச் சொல்லப்பட்டிருக்கலாம். அவள்தான் அனைத்தையும் அறிந்து கொள்ளமுடியக்கூடிய அனுபவக்கலஞ்சியம். அதைவிட முக்கியமாக பாஞ்சாலிக்குச் சொல்லப்பட்டிருக்கலாம்.
ஆகவே திருதராஷ்ட்ரர் தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு முற்றிலும் குறியீட்டு காரணங்கள்தான் இருக்கும் என்பது தெளிவு. அக்குறியீட்டுத்தளம் என்ன என்பதை ஒரு நவீன வாசகனுக்கு அதிகமாக விளக்க வேண்டியதில்லை என்று எண்ணுகிறேன். கீதையில் இந்தத் தொடக்கத்திற்குப் பிறகு திருதராஷ்ட்ரனின் குரலே ஒலிக்கவில்லை. பார்த்தனும் கிருஷ்ணனும் இணைந்தபிறகு வெற்றி உறுதி என்று சஞ்சயன் கூறி முடித்த பிறகும் அவர் பேசவில்லை. சொல்லப்போனால் மகாபாரதத்து திருதராஷ்ட்ரனுக்கு கீதையுடன் எவ்வித உறவும் இல்லை. அது காலமெல்லாம் பிறந்து வரும் கோடானு கோடி திருதராஷ்டிரர்களுக்காக கூறப்பட்டது.
தொடரும்..