கீதை: மகத்தான மனத் தடுமாற்றம் – 2
ஜெயமோகன்.இன் ல் இருந்து
[திருச்செந்தூர் கோயில் ஓவியம்]
இரண்டாவதாக இப்புனைவில் நாம் கவனிக்கவேண்டியது துரியோதனனை. ‘களத்தில் என்ன நடக்கிறது?’ என்ற வினாவுக்கு பதிலாக சஞ்சயன் முதலில் துரியோதனனைப் பற்றி கூறியது இயல்பே. காரணம் கேட்டது துரியோதனனின் தந்தை. அதைவிட முக்கியமானது இந்த சுருக்கமான விவரணையில் வெளியாகும் துரியோதனனின் ஆளுமை.
தன் ஆசிரியரை நெருங்கி பேச ஆரம்பிக்கும் துரியோதனன் முதலில் காண்பது எதிரிப்படையைத்தான். அங்குள்ள வீரர்களை அவன் பட்டியலிடுகிறான். அவர்கள் வலிமையை எடுத்துரைத்தபின் தன் தரப்புக்கு வருகிறான். மிகச் சுருக்கமாக அதைக் கூறிவிட்டு பாண்டவப்படை போதுமானது, நமது படை போதுமானதல்ல என்று தன் அச்சத்தைக் குறிப்பிடுகிறான்.
தெளிவாகவே அர்ஜுனனுக்கு நேர்மாறான ஒரு குணாதிசயத்தைக் காட்டும் பொருட்டு இக்காட்சி அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். கிட்டத்தட்ட அர்ஜுனன் கண்ட அதே காட்சிதான் இதுவும். ஆனால் முற்றிலும் வேறுவித மன ஓட்டங்களினால் ஆனதாக உள்ளது துரியோதனனின் அகம். நமது படை எதிரிப்படை என்று பிரித்து பார்த்து ஒப்பிட்டு நோக்குதல், போரின் முடிவு குறித்த அச்சம். அந்தப் போர்க்களத்தில் அப்போது ஆயுதங்களுடன் வந்து நின்ற ஒவ்வொருவரும் அதே மனநிலையில்தான் இருந்திருப்பார்கள். அதுவே இயல்பு. அம்மனநிலைக்கு அப்பால் சென்று ஓர் அபூர்வமான விவேகத்தை அடைந்தவன், அதன் மூலம் ஆழமான உள நெருக்கடிக்கு ஆளானவன், அர்ஜுனன் ஒருவனே. ஆகவேதான் அவனுக்கு கீதை கூறப்பட்டது.
மூன்றாவதாக நுட்பமான கவனிப்பைக் கோரும் இடம், இருபடைகளும் சந்திக்கும் விளிம்புக்கு தன்னைக் கொண்டு செல்லும்படி அர்ஜுனன் கிருஷ்ணனிடம் கோருவதாகும். ஏற்கனவே துரியோதனின் கூற்று வருகிறது. அவனும் இருபடைகளையும் பார்க்கிறான். ஆனால் தன்படைகளின் நடுவேநின்று பார்க்கிறான். அதுவே இயல்பாக ஒரு படைத்தலைவனின் பார்வை. தன்படையை விட்டு விலகி எதிரிப்படைக்குள்ளும் புகாமல் இரு படைகளும் சந்திக்கும் கோட்டில் தன்னுடைய தேரை நிறுத்தி அர்ஜுனன் பார்வையிடுகிறான் என்று கீதை கூறுகிறது.
வியூக அடிப்படையில் இது முட்டாள்தனமானது என்பதை மகாபாரதப் போரைக் கூர்ந்து கவனிப்பவர்கள் அறியலாம். ஒரு வியூகத்தில் பொருத்தமான இடத்தில்தான் அதன் தலைவனாகிய வீரன் நிலை கொள்வது வழக்கம் ‘ஆயுதங்கள் எழக்கண்ட பின்’ போருக்கான எக்காளங்கள் ஒலித்தபின் போர் வெடிக்கும் சந்திப்பு முனைக்கு செல்லும் அர்ஜுனன் அந்தக் குறியீட்டுத் தருணத்தை அமைப்பதற்காகவே அவ்வாறு காட்டப்பட்டுள்ளான். இவ்வாறாக இருபக்கமும் காமமும் குரோதமும் மோகமும் கொண்டு பொங்கிப் பெருகி எக்கணத்திலும் வெடிக்கக் காத்திருக்கும் ஒரு பேரழிவின் நுனியில் நின்றவாறு கீதை பேசப்படுவதற்கு களம் அமைகிறது.
அர்ஜுனன் விஷாத யோகத்திற்கு உரையளிக்கும் நித்ய சைதன்ய யதி, ஒரு தத்துவ மாணவன் இப்பகுதியை ஆழமாகக் கற்க வேண்டும் என்பதற்கு முதன்மையாகக் குறிப்பிடும் காரணம் ஒன்று உண்டு. பகவத்கீதை ஒரு புராணமோ மதநூலோ அல்ல. அது ஒரு தத்துவநூல். அதன் வழிமுறை யோகமீமாம்சை. ஒற்றைப்படையாக நேர்கோட்டில் தன் தத்துவத்தை முன் வைப்பதல்ல அதன் கூறுமுறை. அது யோகாத்ம முறையில் உரையாடுகிறது. ஒவ்வொரு கணத்திலும் அது முரண்பாட்டை முன் வைத்து அம்முரண்பாட்டியக்கம் மூலம் முன்னகர்கிறது.
இவ்வாறு முரணியக்கம் மூலம் உரையாடும் தத்துவநூலில் சுபக்கம் பரபக்கம் என்று இரு பிரிவுகள் உண்டு. (ஸ்வ+பக்ஷம் தன்தரப்பு. பர+பக்ஷம் எதிர்த்தரப்பு) பெரும்பாலான இந்திய, கிரேக்க தத்துவ நூல்களில் இந்த அமைப்பைக் காணலாம். பகவத் கீதையின் உரையாடலில் அர்ஜுனன் பேசுவது எண்பத்தைந்து ஈரடிச் செய்யுள்களை. கிருஷ்ணன் நூற்றி எழுபத்து நான்கு செய்யுள்களைக் கூறுகிறார். (திருதராஷ்ட்ரர் ஒரு செய்யுள். சஞ்சயன் நாற்பது செய்யுள்.)
இந்த எண்பத்தி ஐந்து செய்யுள்கள் வழியாக முப்பதியெட்டு வினாக்ககளைக் கேட்கிறான். அர்ஜுனன். அவற்றில் பெரும்பாலானவை இந்த முதல் அத்தியாயத்திலேயே வந்துவிடுகின்றன.அதாவது கீதை என்ற விவாக நூலின் சுபக்கம் இந்த ஒரு அத்தியாயமே. பிறிதெல்லாம் பரபக்கம். தராசின் ஒரு தட்டு இது. மிகச்சிறிதாக இருந்தாலும் அதேயளவு எடை கொண்டது.
பெரும்பாலான பக்திப் பிரசங்கங்களில் அர்ஜுனன் ‘மனமயக்கத்தில்’ பேசுவதாகவும் கிருஷ்ணன் அதைத் தெளிய வைப்பதாகவும் எளிமையாகக் கூறப்படுவதை நடராஜகுரு முதலிய தத்துவ ஞானிகள் கடுமையாக மறுப்பதைக் காணலாம். அர்ஜுனன் கூறுவது ‘தவறோ’ ‘பிழையோ’ அல்ல. அது ஒரு மாபெரும் விவேகமேயாகும். அந்தப் பெரும் போர்க்கள்த்தில் அவனுக்கு மட்டுமே அந்த விவேகம் உதித்தது. அந்த விவேகம் அவனறிந்த வாழ்வின் சிறிய தளத்தைச் சார்ந்தது. அதற்குப் பதிலாக அவன் அறியாத ஒட்டுமொத்தப் பிரபஞ்ச நோக்கு ஒன்றின் தளத்தில் நின்றபடி முன்வைக்கப்படும் ஒரு மாபெரும் விவேகம் கிருஷ்ணனால் முன் வைக்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக கீதையின் முரணியக்கத்தின் கருத்தும் எதிர்க்கருத்தும் இதுவே.
ஆகவே இந்த அத்தியாயத்தில் அர்ஜுனன் கூறும் வரிகளை மொத்த கீதைக்கும் மறுபக்கமாக மீண்டும் மீண்டும் வாசித்தாக வேண்டியுள்ளது. கீதை கூறும் மொத்த தரிசனமும் இப்பகுதியில் அர்ஜுனன் முன்வைக்கும் தரிசனத்தின் மறுபக்கமாகும். நூலுக்குள் சென்று அதன் வரிகளை ஆய்வு செய்யும் போது இதைத் தொடர்ந்து கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த வரிகளில் அர்ஜுனன் முன்வைக்கும் தரிசனத்தை இவ்வாறு வரையறை செய்யலாம். உலகியல் தளத்தின் வழியாக ஒருவன் அடையக்கூடிய உச்சகட்ட விவேகம் இதுவே. ஒருவன் அவன் வாழும் சூழலில் முற்றாக ஈடுபட்டு, உறவுகளில் கரைந்து, வாழ்வின் அலைகளில் பயணித்து சென்றடையும் இறுதிப்புள்ளி இது. ‘என்னுடைய வெற்றியும் புகழும் செல்வமும் எனக்கு முக்கியமில்லை. என்னுடைய உயிரும்கூட எனக்குப் பொருட்டல்ல. என்னைச் சார்ந்தவர்களின் நலனும் வெற்றியுமே முக்கியமானது’ என்றுதான் அர்ஜுனன் கூறுகிறான். ஒரு பழங்குடிச் சமூகத்தில் அது அடையக்கூடிய உச்சகட்ட மெய்ஞானமாக இதுவே இருக்க இயலும். ஒரு செயல்படும் சமூகம் தன் உறுப்பினனிடம் வளர்த்தெடுக்கும் ஆகச்சிறந்த கருத்து நிலையும் இதுவாகவே இருக்கும். இன்றும் நம்மைச் சுற்றியுள்ள கோடானுகோடி மக்கள் அன்னையராக, தந்தையராக, தனயர்களாக மட்டுமே வாழும் மக்கள் அடையும் மிகச்சிறந்த மன உச்சமும் இதுவே.
சொல்லப்போனால் உலக மதங்களில் மிகப் பெரும்பாலானவை இத்தகைய ஒரு மன உச்சத்தையே இறுதி நிலையாக முன்வைக்கின்றன. மிகச்சிறந்த ‘சமூக உறுப்பு’ ஒன்றை உருவாக்குவதே அவற்றின் இலக்காக உள்ளது. இந்து மதத்தை அதன் அன்றாட தளத்தில் வைத்துப் பார்த்தால் அது உருவாக்கும் விவேகமும் இதுதான். ‘என்னை விட என்னவர்களே எனக்கு முக்கியம்’ என்ற விவேகத்தை எந்த ஒரு வாழும் சமூகமும் நிராகரித்து விட முடியாது. ஆகவேதான் நடராஜ குரு கீதை வாசிப்பில் இந்த அம்சத்தை மிகமிக வலியுறுத்திக் கூறுகிறார். அர்ஜுனன் ஒரு தவறை, ஒரு மனமயக்கத்தை, ஒரு தத்துவப்பிழையைக் கூறவில்லை. அவன் கூறுவது விவேகத்தின் ஒர் உயர்ந்த நிலையை.
இதுவரை கீதையைப் பற்றிக் கூறிவந்த பல விஷயங்களை இங்கு நினைவில் கொள்ள வேண்டும். கீதை ‘அனைவருக்குதம் உரிய’ நூல் அல்ல. தத்துவத் தேடல் கொண்டவனுக்குரிய தனிச்சிறப்பு நூல் அது. ஆகவேதான் ஒரு சாதாரண மனிதனுக்கு சாத்தியமான விவேகத்தின் உச்சியில் இருந்து அது தொடங்கி மேலே செல்கிறது. ஒரு சாதாரண மனிதன் அடையக்கூடிய ஆகச்சிறந்த மெய்ஞானம்கூடப் போதாமல் ஆகக்கூடிய ஒரு புனைவுத்தருணத்தை அது முன்வைக்கிறது. அங்கே எழும் வினாக்கள் வழியாக தத்துவத்தின் தனிச்சிறப்புப் பகுதிக்குள் நுழைகிறது.
இந்திய ஞானமரபில் உள்ள ஒரு குறிப்பிட்ட வரையறையைப் பற்றி இங்கு கூறியாக வேண்டும். ஞானம் இங்கே ஸாமான்யம், விசேஷம் என்று இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. எல்லாம் மாயை என்பது ஒர் உண்மை. ஆகவே எதிரே வரும் யானை மாயை, அதை அஞ்ச வேண்டியதில்லை என்று எடுத்துக்கொள்ளலாமா? இல்லை. யானை மாயை என்பது விசேஷ தளத்தில் உள்ள உண்மை. அருகே போனால் என்னை அது கொல்லும் என்பது சாமானியத்தளத்தைச் சேர்ந்த உண்மை. இரண்டும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள். இரண்டுக்கும் இடையே எந்த நடைமுறை முரண்பாடும் இல்லை. ஒன்று தத்துவ உண்மை. இன்னொன்று செயல்முறை உண்மை அல்லது யதார்த்தம்.
ராமகிருஷ்ணர் கூறிய குட்டிக்கதையில் வரும் இந்த உதாரணத்திற்கு, இணையான ஒன்றை ‘இயற்பியலின் தாவோ’ (Tao of Physics) என்ற நூலில் ·பிரிஜோ காப்ரா குறிப்பிடுகிறார். பொருட்கள் அனைத்தும் அணுக்களால் ஆனவை. அணு என்பதோ துகள்களின் தொகை மட்டும்தான். துகள்கள் என்பவை பொருட்கள் அல்ல, சக்திக் குவியங்கள் அல்லது மின்னூட்ட நிலைகள் மட்டுமே. அப்படியானால் பொருள் என்று ஏதும் இல்லை, சக்தியே உள்ளது. இது உயர் பெளதிகம் கூறும் உண்மை. ஆகவே நான் இந்தச் சுவர் வழியாக அந்தப் பக்கம் போய்விட முடியுமா என்ன? முடியாது என்பது இன்னொரு உண்மை. இதுவும் பெளதிக உண்மையே.
இந்து, பெளத்த ஞானமரபுகளில் உயர்நிலை தத்துவம் விசேஷ தளத்தைச் சார்ந்தது என்று தெளிவாகவே பிரிக்கப்பட்டுள்ளது. அதன் உண்மைகளை சாமானிய தளத்தில் அப்படியே போட்டுப்பார்ப்பது அபத்தம் என்பதை இந்த விஷயங்களுடன் நேரடிப்புரிதல் இல்லாத எளிய மக்கள் கூட அறிந்திருக்கிறார்கள். ஆனால் தொடர்ந்து நமது இடதுசாரி அறிவுஜீவிகள் இத்தகைய தவறைச் செய்து விதண்டாவாதங்களை செய்துவருகிறார்கள்.
ஓர் உதாரணம், டி.டி.கோஸாம்பி கீதையைப் பற்றி எழுதியதில் இருந்து காட்டலாம். கீதை பிராமணர்களால் அரசர்களுக்குப் போதிக்கப்பட்டது என்று கூறும் கோஸாம்பி இது ஈவு இரக்கமற்ற சகோதரப் படுகொலையையும் மூதாதையர் கொலைகளையும் இந்திய சமூகத்தில் தூண்டியது என்று வாதிடுகிறார். ஆனால் ஏறத்தாழ இரண்டாயிரம் வருடத்து இந்திய வரலாற்றிலிருந்து அவரால் அப்படி எடுத்துக்காட்ட முடிந்த ஒரே உதாரணம் மகத மன்னன் பிம்பிசாரனை அவன் மகன் அஜாத சத்ரு கொன்றான் என்ற ஐதீகம் மட்டுமே. அதுவும் அஜாதசத்ருவும் பிம்பிசாரனும் பெளத்தம் மேலோங்கிய காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை மறைத்து அந்த உதாரணத்தைக் கூறுகிறார்.
கோஸாம்பி ஒரளவுக்கு அறிவியல் நோக்கு உடையவர். இன்றைய நவீன இடதுசாரி ஆய்வாளர்கள் என்றால் ஒளரங்கசீப் செய்த படுகொலைகளுக்குக் காரணமே கீதைதான் என்று நிறுவியிருப்பார்கள். கீதை வேரூன்றிய இம்மண்ணில் இன்றுவரை சகோதரப்படுகொலைகள் மாபெரும் பாவமாகவே உள்ளன. அதிகார அரசியலில்கூட அப்படித்தான். தத்துவத்தில் விசேஷதளம் குறித்த பிரக்ஞையே இதற்குக் காரணம்.
அர்ஜுனன் முன்வைக்கும் தரிசனம் சாமானியதளத்தின், அதாவது நடைமுறை ஞானத்தின் உச்சம் என்று கண்டோம். அதில் இருந்து தொடங்கும் கீதையின் தரிசனம் விசேஷ தளத்தின் முதல்படியில் இருந்து தன் விவாதத்தைத் தொடங்குகிறது. இதுவே ‘சாங்கிய யோகம்’ அதாவது நவீன மொழ்யில் சொல்வதானால் ”நடைமுறைத்தத்துவ இயங்கியல்.’
கீதைக்கு உரையளிக்கும் நித்ய சைதன்ய யதி இரு விஷயங்களை வாசகர் கவனத்திற்கு கொண்டு வருகிறார். சிறிய விஷயங்களாக அவை தோன்றலாம், ஆயினும் கீதையின் ஒட்டுமொத்த தத்துவ விவாதத்தின் பின்புலத்தில் அவை முக்கியத்துவம் உடையவை.
ஒன்று, கீதையின் முதல் சொல்லே ‘தர்மஷேத்ரே’ என்று இருக்கிறது. ”அறநிலமாம் குருநிலத்தில்” என்று தொடங்கும் கீதை குருஷேத்ர களத்தை அறம் திகழ் மண்ணாகக் குறிப்பிடுகிறது. அது உண்மையா என்ன? அது அறத்திற்கும் அதற்கு எதிரான சக்திகளுக்கும் இடையேயான போர் என்று கூறுவதுகூட சற்று மிகைதான். பாண்டவர் தரப்பிலும் அறமீறல்கள் பல உள்ளன. அப்படி யோசிக்கும்போது இங்கு கூறப்படும் அறம் என்பது சாமானிய தளத்தில், நீதி என்ற பொருளில், நாம் குறிப்பிடும் மானுட அறம் அல்ல என்றே கொள்ள வேண்டும். பிரபஞ்சப் பேரியக்கத்தின் நியதியாக உள்ள ‘மகாதர்மம்’தான் இங்கே அறம் என்று கூறப்பட்டது. அதை மானுடம் சார்ந்த நன்மை தீமைகள், சரிதவறுகள் மூலம் அளக்க இயலாது. அது எளிய தர்க்க நியாயங்களுக்கு அப்பாற்பட்டது. ‘பிரபஞ்ச நியதியின் களமேயான குருஷேத்ர ரணபூமியில்’ என்று கீதை தொடங்குகிறது என்று வாசிக்கலாம்.
இன்னொரு விஷயம், கீதையின் இவ்விவரணையில் முதலில் போர்ச்சங்கத்தை ஊதி போருக்குப் பாண்டவர்களை அறைகூவுபவராக பீஷ்மர் கூறப்படுகிறார் என்பது. அதாவது இது அர்ஜுனன் தொடுத்த போர் அல்ல. ஒரு வீரன் என்ற முறையில் அறைகூவப்பட்ட போரை அவன் ஏற்றேயாக வேண்டும். இல்லையேல் தன்னை நம்பியவர்களை அழிவுக்கு தள்ளியவனாக அவன் மாறுவான். மேலும் அவனைப் போருக்கு அழைப்பவர் அவனுடைய குலத்தின் மிக மூத்த பிதாமகனாகிய பீஷ்மர். அதைவிட முக்கியமாக, மொத்த மகாபாரதத்திலும் வீரம் விவேகம் இரண்டுக்கும் அடையாளமாக விளங்கும் மகாபுருஷர் அவர். அர்ஜுனன் எதிர்கொள்ளும் சூழலின் உண்மையான சிக்கலை உணர இது மிக முக்கியமானது. அவரது அறைகூவலை தன் சங்கை முழக்கியபடி அர்ஜுனன் எதிர்கொள்கிறான்.
இப்பகுதியில் சொல்லாட்சிகளைப் பற்றி கீதை உரையாசிரியர்கள் பலர் விரிவாகப் பேசியுள்ளனர். இதில் இருவகை. கீதையை அறிவதைவிட தன் பாண்டியத்தியத்தைக் காட்டுவதே முக்கியம் என்று முயல்பவர்கள் பலர் உண்டு. பெரும்பான்மையினர் இவர்களே. நீ தடுக்கில் பாய்ந்தால் நான் கோலத்தில் பாய்வேன் என்ற மனநிலை இது. இத்தகைய அதீத தாவல்களை நாம் உடனேயே கண்டுபிடித்து நிறுத்தாவிட்டால் கீதை வாசிப்பு அபத்தமான பஞ்சாங்க விவாதமாக மாறிவிடும். அதை அளவிட்டு அறிவது மிக எளிது. ”பகவான் உண்மையில் கூறியது இது” என்று சொல்லி சமஸ்கிருத சொல்லாராய்ச்சிக்கும் இலக்கண, புராண ஆராய்ச்சிகளுக்கும் நுழைபவர்களை நாம் உடனடியாக நிராகரித்து விடலாம். அவ்வாறு ஒரு நுண்வாசிப்பை நிகழ்த்துபவர் அளிக்கும் வாழ்வனுபவம் சார்ந்த, விவேகம் சார்ந்த, மெய்ஞானம் சார்ந்த விளக்கம்தான் நம்மால் கணக்கில் கொள்ளப்பட வேண்டும்.
இரண்டாம் வகை சொல்லாராய்ச்சி எப்போதுமே கீதையை மேலும் நுட்பமாக அறிய உதவுவது. அதை நம் அனுபவம் சார்ந்தும் கற்பனை சார்ந்தும் நாமே செய்வது உகந்தது. இரு உதாரண்ங்களை மட்டுமே குறிப்பிடலாம். துரியோதனன் தன் தரப்பு வீரர்களைக் கூறும்போது அளிக்கும் தரவரிசையை நித்ய சைதன்ய யதி எடுத்துக்காட்டுகிறார். துரோணர் (முதல் குரு), பீஷ்மர் (பிதாமகர்), கர்ணன் (உயிர்த்தோழன்), கிருபர் (ஆயுதப்பயிற்சியாளர்), அஸ்வத்தாமா (தோழர்), விகர்னன் (தோழன்), கடைசியாக ஜயத்தன் (மைத்துனன்) என இவ்வரிசை அன்றிருந்த படிநிலையைக் காட்டுகிறது என்கிறார்.
அதேசமயம் சில விவாதங்கள் நம்மை அர்த்தமிலாத சொல்லாடலுக்கு இட்டுச் செல்பவை. தன் உறவினரை எதிரில் கண்ட அர்ஜுனன் ‘பரயா க்ருபயா’ (பெரும் கருணையுடன்) (கீதை 28) கிருஷ்ணனிடம் பேச ஆரம்பிக்கிறான் என்கிறது கீதை. தன் எதிரிகளிடம் பெருங்கருணை காட்டுவது முட்டாள்தனம் என்றெல்லாம் விவாதிக்கும் அபத்தமான உரைகள் உண்டு. ‘பரயா’ என்பதே ‘தேவைக்கு அதிகமான’ என்று விளக்குபவர்களும் உண்டு. இது ஒர் இலக்கியத் தருணம். கற்பனை மூலம் நல்ல வாசகன் மிக இயல்பாக அர்ஜுனனின் அம்மனநிலையை உணரமுடியும். அப்படி உணரமுடியாத தர்க்க மனங்கள்தான் வெட்டி விவாதங்களில் ஈடுபடுகின்றன.
அதே போன்று கூர்ந்த வாசிப்பு இல்லாமலேயே கற்பனை மூலம் தொடக்கூடிய ஒரு சொல் ‘அததாயின:’ (கீதை 36) என்று கீதை குறிப்பிடுவது. அததாயி என்றால் லாப வெறி கொண்டவர்கள் உலகியல் பித்தர்கள் என்று சொற்பொருள். உலகியல் வெறிகொண்டவர்களிடம் உலகியலுக்காக போர் புரிந்தால் நாமும் பாவிகளாகிவிடுவோம் என்று அர்ஜுனன் கூறுகிறான். லெளகீகதளத்தில் அனுபவம் மூலம் புரிந்துகொள்ளத்தக்க உண்மைதான் இது. எதன் பொருட்டு செயலில் ஈடுபடுகிறோமோ அது நம் செயல்களின் இயல்பையும் தீர்மானிக்கிறது. உயர்ந்த விழுமியங்களுக்காகச் செய்யப்படும் செயலின் மேன்மை எளிய விஷயங்களுக்காக ஆற்றப்படும் செயலில் இல்லை. இலக்கு மெல்ல மெல்ல வழிமுறைகளையும் தீர்மானிக்க ஆரம்பிக்கிறது. உலகியல் பொருட்டு நடத்தப்படும் ஒரு செயலில் ஆன்மிகமான உயர்ந்த விஷயங்கள் இடம் பெற வாய்ப்பில்லை என்று அர்ஜுனன் கூறுகிறான். பல உரைகளில் இச்சொல்லைப்பற்றி மிதமிஞ்சிய தர்க்க விவாதங்களைக் காணலாம்.
அர்ஜுனன் அடையும் ‘மனத்தடுமாற்றம்’ உண்மையில் தடுமாற்றம் தானா? ஒரு வாசகன் கூர்ந்து நோக்க வேண்டியது அர்ஜுனனின் உடல்சார்ந்த எதிர்வினைகளையாகும். அச்சம், மனத்தளர்ச்சி ஆகியவற்றின் வெளிப்பாடாக அவை இல்லை. ‘என் கைகள் சோர்கின்றன. வாய் உலர்கிறது. உடல் நடுங்கி மயிற்கூச்செறிகிறது’ (29) என்ற வரி ஒரு தீவிரமான மன எழுச்சியையே காட்டுகிறது. ஒரு தரிசனத்தை அடைந்தவன், ஒரு மகத்தான உண்மையின் முன் நின்றவன் அடையும் மெய்ப்பாடு அல்லவா அது! ‘என்னைக் கொல்ல வந்தவர்களாயினும் இவர்களை மூவுலகையும் ஆளும் பதவி கிடைத்தாலும் கொல்லத் துணியமாட்டேன்’ (35) என்றும் ‘திருதராஷ்ட்ரன் மைந்தர் ஆயுதங்களைக் கைவிட்டு எதிர்ப்பில்லாது நிற்கும் என்னைக் கொன்றால் அதுவும் நன்மைக்கே’ (46) என்றும் கூறுகையில் அர்ஜுனன் அடைந்த அந்த தரிசனம் வெளிப்படையாகவே தெரிகிறது.
‘உங்கள் எதிரிகளை மன்னியுங்கள். இடது கன்னத்தில் அடிக்கப்பட்டால் வலது கன்னத்தை அவர்களுக்குக் காட்டுங்கள்’ என்று பைபிளில் ஏசு கூறும் அழியா வரிகளுக்கு நிகரான தரிசனம்தான் இது. ‘உங்கள் எதிரிகள் உங்கள் நண்பர்கள்’ என்ற பெளத்த விவேகத்திற்கு நிகரானது இது. பெளதீக தளத்தில் நின்றபடி ஒரு மனம் அடையக்கூடிய மகத்தான தரிசனம் இதுவாகவே இருக்க இயலும் என்று இதைக் குறித்து ஏற்கனவே கூறினோம். இவ்விவேகத்தின் அடிப்படை என்ன? ஒரு பொது நலனுக்காக தன் நலனை விட்டுக் கொடுத்தல். சமூகம், மானுடகுலம் என்ற பொதுமையின் பொருட்டுத் தன்னை தியாகம் செய்தல். தியாகமே மானுட லெளகீக விவேகத்தின் உச்சம். இன்றுவரை, உலக இலக்கியங்கள் மீள மீளச் சித்தரிக்கும் மாபெரும் மானுடத்தருணமும் அதுவே.
அர்ஜுனன் கூறும் இத்தரிசனத்தை ‘மறுத்து’தானே கிருஷ்ணன் கீதையை முன்வைக்கிறார். ஆகவே கீதை இந்த மகத்தான மானுட விவேகத்திற்கு எதிரானதா? அதை கீதை நிராகரிக்கிறதா? இல்லை, இதை சாமானிய தளத்தில் நிறுத்திவிட்டு விசேஷ தளத்திற்குப் போய் மேலும் நுண்ணிய உண்மைகளைத்தேடிச் செல்கிறது கீதை. இந்த நடைமுறை உண்மையில் இருந்து முரண்பட்டு தத்துவார்த்த உண்மை நோக்கிச் செல்கிறது. கீதையின் இயங்குமுறை முரணியக்கமே என்பதை இங்கு மீண்டும் நினைவு கூறலாம்.
எளிய முறையில் கூறுவதானால் எல்லா நடைமுறை உண்மைகளும் மானுடம் சார்ந்தவை. ஆகவே வரையறுக்கப்பட்ட எல்லைக்கு உட்பட்டவை. தத்துவ உண்மை எல்லையற்ற தளத்தில் எப்போதைக்குமான உண்மை என்று யோசிக்கிறது. அது பிரபஞ்சமளாவ நின்று தன்னை விவரிக்க முயல்கிறது. ஒரு கன்னத்தில் சகமனிதன் அறைந்தால் மறுகன்னம் காட்டச் சொன்ன கிறிஸ்துவே சக உயிரைக் கொன்று தின்பதை ஆதரிப்பதை நாம் பைபிளில் காணலாம். சகமனிதன் மீது விரியும் கருணை சக உயிர் மீது விரியவில்லை. அங்கு கருணை என்பது எல்லை வகுக்கப்பட்டுள்ளது. தன்னைத் தாக்கும் நோய்கிருமியைக் கொல்லலாமா என்று கேட்டு கிறிஸ்துவை மடக்குவது எளிது. ஆனால் அங்கு நாம் விசேஷ உண்மையை நோக்கி சாமானிய தள கேள்வியைத் தொடுக்கும் லெளகீகவாதியின் அதே தவறைச் செய்கிறோம் – தலைகீழாக. லெளகீக உண்மையை நோக்கி விசேஷ தள வினாவை தொடுக்கிறோம்!
தொடரும்..