கீதை: மகத்தான மனத் தடுமாற்றம் – 3 [நிறைவுப்பகுதி]

கீதை: மகத்தான மனத் தடுமாற்றம் – 3 [நிறைவுப்பகுதி]

ஜெயமோகன்.இன் ல் இருந்து

[திருச்செந்தூர் கோயில் ஓவியம்]

இந்தத் தளத்தில் நின்றபடித்தான் அர்ஜுனனின் அந்த உரையாடல் மொத்தத்தையும் நாம் பார்க்கவேண்டும். தன் நெருக்கமானவர்களைப் பட்டியலிடும் அர்ஜுனன் குருக்கள், பிதாமகர்கள் என்று அவற்றின் படிநிலையையே சொல்கிறான். அதாவது அவன் தெளிவாக வரையறை செய்யப்பட்ட ஒரு எல்லைக்குள் இருக்கிறான். மானுட நீதியின் எல்லை என்று விரிவாக அதைக் கூறலாம். இன்னும் குறிப்பாக குலநீதியின் எல்லை என்றும் கூறலாம். இதையொட்டியே ‘குலக்கலப்பு’ குறித்த அவனுடைய கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன என்பதை நாம் காணலாம்.

கீதையில் அர்ஜுனன் குலம் குறித்த நான்கு கருத்துக்களை கூறுகிறான்.

1.குலத்தை அழிப்பது பெரும் பாவம் (38).

2.குல நெறிகள் அழிகையில் அக்குலத்தை அதர்மம் சூழ்கிறது (40).

3.குலப்பெண்டிர் கற்பிழந்தால் வர்ணக் கலப்பு உருவாகிறது (41).

4.வர்ணக்கலப்பு உருவானால் குலமூதாதையர் முறைப்படி இறந்தவர்களுக்குரிய சடங்குகள் செய்யப்படாமல் கைவிடப்படுகின்றனர் (42).

இவ்வரிகளை வைத்து அர்ஜுனன் தன்னுடைய நியாயங்களை எல்லாம் பெருங்குல நீதி என்ற தளத்தில் நின்றபடியே முன்வைக்கிறான் என்று எளிதில் ஊகிக்கலாம். லெளகீக நீதி என்பதன் இயல்பே அதுதான். அது எல்லை வகுக்கப்பட்ட ஒரு வட்டத்திற்குள் நின்றபடி மட்டுமே பேச இயலும். கருணை, அறம், நீதி, அன்பு என அது பேசும் ஒவ்வொன்றுக்கும் இவ்வாறு தெளிவான நிபந்தனைகள் உண்டு. ஒரு சாதாரண மனிதனின் சிந்தனைகளும் தரிசனமும் இந்தத் தளத்தில் அமைந்திருப்பது இயல்பே.

கீதையின் இப்பகுதியானது, கீதையின் மைய நூல்பகுதி எப்போது கீதை நாடகமாக உள்ள பகுதியுடன் கலக்கப்பட்டு மகாபாரதத்துடன் இணைக்கப்பட்டதோ அப்போது உருவாக்கப்பட்டதாகும். ஆகவே அந்தக் காலகட்டத்தின் சிறந்த லெளகீக நீதி எதுவோ அது இங்கு பேசப்பட்டது. பிறப்பு அடிப்படையிலான குலப்பிரிவினை மிகவும் தீவிரமாக முன்வைக்கப்பட்ட காலம் இது. குலக்கலப்பு என்பது பெரும்பாவமாகவும் கருதப்பட்டது. காரணம் உறுதியான சமூக அமைப்புகள் உருவாகி அவ்வமைப்புகளின் மீது பெரும் பேரரசுகள் எழுப்பப்பட்டது இக்காலத்திலேயே. அந்தச் சமூக உறுதியைக் குலைக்கும் செயல் மாபெரும் பாதகமாகக் கருதப்பட்டது.

லெளகீக நிலையில் நின்று பேசும் அர்ஜுனன், குலக்கலப்பு எனும் பாதகம் இப்போர் மூலம் உருவாகுமே என்று கவலைப்படுவதை இப்பின்னணியில்தான் புரிந்து கொள்ள வேண்டும். பிறப்பு அடிப்படையிலான சமூகப்பிரிவினையும், குலவரைமுறையும் இக்காலத்தில் உலகமெங்கும் இருந்த விஷயம் என்பதை உலகப் பண்பாட்டை ஒரளவேனும் அறிந்த எவரும் உணர்ந்திருப்பர்.

இரும்புச்சுத்தியலால் அடித்தளம் தாக்கபப்டும் கட்டிடம்போல போரானது சமூகக் கட்டுமானத்தின் அமைப்பை ஆட்டமுறச்செய்கிறது என்பது போர்கள் மலிந்த அக்காலகட்டத்தின் அடிப்படை விவேகமாக இருந்திருக்கலாம். போர்ச்சூழலில் ஒரு குலம் அழியும்நிலையை எய்தும்போது அது இயல்பாகவே தன் தொன்மையான நெறிகளைக் கலைத்துக்கொண்டு தன்னை தக்கவைத்துக்கொள்ளும் பொருட்டு செய்ய முடிவதையெல்லாம் செய்ய ஆரம்பிக்கிறது.பிறப்பின் அடிப்படையிலான சமூகக் கட்டுமானம் அதற்கு பெண்களின் கற்பு என்ற விழுமியத்தையே நம்பியிருக்கிறது. போர்ச்சூழல் என்பது பெண்களின் கற்பிழப்புக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் காரணமாக அமைவது. இன்றுவரை உலகில் நடக்கும் எந்த போரையும் கவனித்தால் இது தெரியவரும். அர்ஜுனன் குறிப்பிடுவது இதையே.

ஆனால் இந்த நோக்குக்கும் மகாபாரதத்திற்கும் உள்ள முரண்பாட்டை மகாபாரதத்தை மேலோட்டமாக அறிந்திருப்பவர்களும் உணரலாம். பிரம்மாண்டமான மகாபாரத இதிகாசம் முழுக்க முழுக்க குலக்கலப்பின் கதையைக் கூறுகிறது என்றால் அது மிகையல்ல, அர்ஜுனனின் எல்லா மனைவிகளும் பிற குலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களிடம் அவனுக்குப் பிறந்த பிள்ளைகள் குருஷேத்திரப்போரில் கலந்து கொள்கிறார்கள். பீமனுக்கு அவ்வாறு பிற குலத்துப் பிள்ளைகள் பலர். அர்ஜுனனின் பட்டத்தரசி சுபத்திரைகூட க்ஷத்ரிய பெண் அல்ல, யாதவ குல இளவரசியே. ஏன் மொத்த குருகுலமே குலக்கலப்பின் மூலம் உருவானது. பாண்டுவும் திருதராஷ்ட்டிரனும் கிருஷ்ண துவைபாயன வியாசனுக்குப் பிறந்தவர்கள். அந்த வியாசன் ஒரு மீனவப் பெண் வயிற்றில் பிறந்தவன். அதாவது மிகவும் பிந்தைய காலத்தில் எழுதப்பட்ட அர்ஜுன விஷாத யோகம் அப்போது மேலோங்கி இருந்த நோக்கை அர்ஜுனன் வாயில் பொருத்துதுகிறது. ஆகவே அது மகாபாரதத்திற்கு முரணாகவே உள்ளது.

அர்ஜுனனின் இவ்வரிகளை கீதையில் இருந்து பிடுங்கி, ஒரு கீதைமேற்கோளாக முன்வைத்து, கீதையின் செய்தியாக திரித்துச்சொல்லி கீதையே குலக்கலப்பு பாவம் என்பதை கூறும் பொருட்டு இயற்றப்பட்ட ஒரு நூல் என்று கூறும் ஒர் அபத்தப் பிரச்சாரம் ஆரம்ப காலத்தில் முன்வைக்கப்பட்டு, இன்றும் தொடரப்படுகிறது. இதன் இன்னொரு பக்கமாக வைதீக, சாதி வெறியர்களும் இவ்வரிகளை ‘கீதா வாக்கியங்களாக’ எடுத்துக்கொண்டு, சாதிவெறி நோக்குக்கான ஆதாரமாக இதைக் கொள்கிறார்கள். கீதையில் இவ்வரிகள் எந்தத் தருணத்தில் என்பதை இரு தரப்பினருமே  கணக்கில் கொள்வதில்லை.

என் நோக்கில் கீதையில் நேரடியாகவே பல பாடல்களில் பிறப்பு அடிப்படையிலான சாதிப்பிரிவினையும் சமூகப் பாகுபாடும் நியாயப்படுத்தப்பட்டிருந்தால்கூட நான் அவ்வரிகளை வைத்து கீதையை நிராகரிக்க மாட்டேன். அப்படி நிராகரிக்கப் போனால் பிளேட்டோவின் ‘குடியரசு’ முதல் கார்ல் மார்க்ஸின் மூலதனம் வரை, ஹோமரின் காவியங்கள் ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் முதல் தல்ஸ்தோயின் மாபெரும் நாவல்கள் வரை, பைபிள் முதல் தம்மபதம் வரை எல்லா மூலநூல்களையும் நிராகரிக்க வேண்டியிருக்கும். தத்தம் காலகட்டத்தின் குரலும் சேர்ந்து ஒலிக்காத நூல் எதுவும் இல்லை. அவற்றையும் தாண்டி அக்காலக்கட்டத்தின், அந்தச் சூழலின் நிபந்தனைகளை மீறி ஒலிக்கும் மானுட ஞானத்தின் பெருங்குரல் ஒன்றும் அவற்றில் இருப்பதனால்தான் அவை மகத்தான மூல நூல்களாகின்றன.

என் நோக்கில் கீதை என்றும் நூல் தன் முரணியக்கம் சார்ந்த விவாதம் மூலம் ஒட்டு மொத்தமாக முன்வைக்கும் மெய்ஞானம் என்ன, அது என் வாழ்வுக்குப் பொருந்துவதா, இன்னும் பெறுமதி உடையதா, என்பது மட்டுமே முக்கியமான வினாவாக இருக்க இயலும். கீதையின் அடிப்படையான வினாவும் சரி, அது விவாதிக்கும் விடைகளும் சரி, இறுதியில் தொகுத்தளிக்கும் தரிசனமும் சரி, இந்த லெளகீக தளத்திற்கு முற்றிலும் அப்பாற்பட்டவை. இந்த லெளகீகதளம் எழுப்பும் மிகச்சிறந்த கேள்விக்கு அப்பாலிருந்து தன் கேள்வியை எழுப்பிக் கொண்டு மேலே செல்லும் தன்மை படைத்தவை.

அர்ஜுன விஷாத யோகத்தில் அர்ஜுனன் அடிப்படையான ஒரு வினாவையும் ஒரு தரிசனத்தையும் முன்வைக்கிறான் என்பதை அந்த நாற்பத்தேழு ஈரடிகளையும் சில முறை கூர்ந்து வாசித்து தெளிவுபடுத்திய பிறகு மேலே செல்வது புரிதலுக்கு உதவியானதாகும். அர்ஜுனனின் வினா இது. உலகியல் சார்ந்த நலன்களுக்காகவும் வாழ்வு உருவாக்கும் கட்டாயங்களுக்காகவும் நான் செயல்களில் ஈடுபட்டு அச்செயல் உருவாக்கும் சிக்கல்களிலும் துயரங்களிலும் ஈடுபடத்தான் வேண்டுமா? அர்ஜுனன் முன்வைக்கும் தரிசனம் இது. தனக்குப் புகழும் வெற்றியும் செல்வமும் தேவை என்று பொருதும் ஒருவனைவிட தன் சமூகத்தின் ஒட்டுமொத்த நலனுக்காக அனைத்தையும் கைவிடுபவன் அல்லவா மேலானவன்? இச்சையுடன் செயல்படுவதைவிட தியாகம் செய்வதுதானே உயர்ந்த அறம்? கிருஷ்ணனின் யோக மீமாம்சை சார்ந்த விவாதம் இவற்றுக்கான விளக்கமாகவே தொடர்கிறது.

நான் ஏன் போர் புரியவேண்டும் என்ற அர்ஜுனனின் வினாவை வாழ்வில் எதிர் கொள்ளாதவர்கள் மிகமிகக் குறைவே. இதை எழுதுவதற்கு முந்தைய நாள் இரவில் தமிழின் மிகச்சிறந்த கவிஞரும் இதழாசிரியருமான என் நண்பர் ‘நான் சோர்ந்து விட்டேன். இதெல்லாம் எதற்கு என்று தோன்றிவிடுகிறது’ என்று எனக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினார். நான் அவரிடம் பேசினேன். உடல் சார்ந்த குறைபாட்டை உள்ளார்ந்த ஊக்கம் மூலம் வென்று வந்தவர் அவர். தளராத முயற்சி மூலம் தமிழ்ப் பண்பாட்டில் தடம் பதித்தவர். ஆனால் அடுத்த இதழ் தயாரிக்கும் பெரும் பொறுப்பில் இருக்கையில் சட்டென்று ஆழ்ந்த மனச்சோர்வு அவரை பீடித்தது. அந்தச் செயலுக்கு ஏதேனும் பொருள் உண்டா? அதில் உள்ள விளைவுகள் என்பவை வெறும் கற்பனைகளும், வெற்றி என்பது வெறும் பிரமையும்தானா? பல்லாயிரம், பலகோடி செயல்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த மானுட வாழ்வின் பெருவெளியில் அவர் செய்து கொண்டிருக்கும் செயல்களுக்கு உண்மையில் என்ன மதிப்பு இருக்க இயலும்? ‘நீ செய்யும் சிறந்த செயல்களுக்கு மறுமையில் கூலி உண்டு’ என்ற எளிய பதிலையே அவரது மதம் அவருக்குக் கூறும். அதை நம்ப அவரது கூரிய கவிமனம் தயாராகாது. எனவே ‘நீங்கள் கூறுவது முழுக்க கீதையில் அர்ஜுனன் கூறியவை’ என்று சொல்லிச் சிரித்துவிட்டேன்.

வேலை என்பது இடைவிடாத கடும் உழைப்பும் துயரங்களும் நிறைந்தது என்று அறிந்தும் வேலைதேடிக் கொண்டு அலைகிறோம். குடும்ப வாழ்வு உளமோதல்களும், பொறுப்புகளும் நிறைந்தது என்று அறிந்தாலும் நாம் மணம் முடிக்காமல் இருப்பதும் இல்லை, பிறரை மணம் முடிக்காமல் இருக்க விடுவதும் இல்லை. ஒரு குறிப்பிட்ட வயதில் திரும்பிப் பார்க்கையில் மொத்த மானுட வாழ்க்கையே மீண்டும் மீண்டும் விதவிதமான ‘போர்க்களங்கள்’ நோக்கிப் பாய்ந்து செல்வது என்பாதாகவே உளளது- அனைத்திலிருந்தும் விடுபட்டு ‘நிம்மதியாக’ இருப்பது குறித்து நாம் மீண்டும் மீண்டும் கற்பனை செய்வோம். ஆனால் செய்வதற்கு ஏதுமின்றி சில நாட்கள் சில கணங்கள் கூட வாழ முடியாது. வாழ்க்கையே பொருளிழந்து வெறுமையாகி நம்முன் விரிந்து கிடக்கிறது. செயல்கள் மூலம் துயரமே விளைகிறது என்று அறிந்தும் செயலில்லாமல் இருப்பதன் வெறுமையை அஞ்சி செயலாற்றிக் கொண்டிருக்கிறோம் நாம்.

இச்செயல்களின் ஆட்டம், மறு ஆட்டம் என்றும் ஓயா அலைகளுக்குள் மூழ்கி அதையன்றி வேறு எதையும் அறியாது வாழ்வர்கள்தான் மானுட கோடிகள். மதத்தின் பிரபலமான முதல்தளம் முன்வைக்கும் பதில்களும் படிமங்களும் அவர்களுக்காகவே. ஒரு கணமேனும் அந்த அலைகளை விட்டு வெளியே வந்து, ‘என்ன இது? என்ன செய்கிறேன் நான்!’ என்று வியந்து பிரமிப்பவர்கள்  மிக மிகச் சிலரே. அவர்களுக்காகவே கீதை போன்ற உயர்தத்துவ நூல்கள் உள்ளன. கீதையின் விடை எளிய நம்பிக்கையாகவோ, விதிமுறையாகவோ இருக்க இயலாது.

கீதையில் அர்ஜுனன் முன்வைக்கும் சுயத்தியாகம் என்ற தரிசனத்தின் மீதான கிருஷ்ணனின் எதிர்வினை மேலும் சிக்கலானது. அதையும் நாம் நம் அன்றாட அனுபவத்தில் கொண்டுவந்து யோசிக்கலாம். பல வருடங்களுக்கு முன் கேரளத்தைச் சேர்ந்த மாபெரும் சமூகப் போராளி ஒருவருடன் நான் இருநாட்கள் சேர்ந்திருந்து உரையாட நேர்ந்தது. தன் வாழ்க்கையையும் தன் மொத்தக் குடும்பத்தையும் தான் நம்பி ஏற்று அர்ப்பணித்துக் கொண்ட அரசியல் சமூக இயக்கமொன்றுக்காக தியாகம் செய்த மனிதர் அவர். அறுபதுகளிலில் தொடங்கிய அந்த அரசியல் இயக்கம் எழுபதுகளில் ஒரு மாபெரும் அலையாக அடித்து ஓய்ந்து இப்போது முற்றிலும் பண்டை வரலாறாக ஆகிவிட்டது. அவ்வரலாற்றின் ஒரு பெயர் மட்டுமாக அவர் மாறிவிட்டார். அவரது குடும்பமோ அப்பெயராக ஆகும் தகுதியையும் பெறவில்லை.

நான் சந்திக்கும்போது இறந்தகாலத்தை நினைவுகூரவே விரும்பாதவராக அதன் தடங்களைத் தன் தலையிலிருந்து அழித்துவிட விரும்புவராக அவர் இருந்தார். படித்த பல்லாயிரம் நூல்கள், எழுதிய பலநூறு கட்டுரைகள் குறிப்புகள் எதுவும் அவர் வீட்டில் இல்லை. அப்போது அவருக்குப் பிரியமானது இசை. அதுவும் தூய கருவியிசை. திருவனந்தபுரத்தில் தன் சாய்வுநாற்காலியில் படுத்தபடி இரவும் பகலும் இசைகேட்டுக் கொண்டிருப்பார். ஜரிதா சேர்த்த பீடா மெல்லும் பழக்கம் இருந்தது. அது அவருக்கு பதற்றங்களை மழுங்கடித்து இசையில் முற்றிலும் பொருந்த உதவியது. விருந்தினரை அவர் ஒரே காரணத்துக்காகவே தாங்கிக் கொண்டார்-அவர்கள் கொண்டு வரும் ஒலி நாடாக்களுக்காக. நான் சிலநாள் அவரைக்காணச் செல்வதுண்டு. ஒருநாள் அவர் எதையுமே செய்யாமல் சாய்வுநாற்காலியில் ஒருசிலைபோல கிடப்பதைக் கண்டேன் .அப்பபோதுதான் திடீரென்று அம்மனிதர் அமர்நதிருக்கும் வெறுமையின் பீடம் என் கண்களில் பட்டது. எத்தனை உக்கிரமான எத்தனை மகத்தான தனிமை! தாங்க முடியாமல் நூலகத்தில் அமர்ந்து நான் கண்ணீர் சிந்தினேன்.

மகத்தான தியாகங்கள் உள்ளன. தியாகமே மகத்தானதுதான். ஆயினும் அது சாமான்ய தளம் சார்ந்தது. விசேஷ தளத்தில் அதற்குப் பொருளே இல்லை. மாபெரும் ரோமப் பேரரசை நிறுவ உயிர்துறந்தவர்கள் எத்தனை கோடி! மாபெரும் ருஷ்யப் புரட்சிக்காக இறந்தவர் எத்தனை லட்சம்! மானுட வரலாறு என்பதே தியாகங்களால் ஆனது. பல்லாயிரம் வருட வரலாற்றுக்கொந்தளிப்பில் என்ன அர்த்தம் அவற்றுக்கு?

விழுமியங்கள், நெறிகள், அறங்கள் அனைத்துமே நடைமுறை வாழ்வு சார்ந்தவை. இடம், சூழல் சார்ந்தவை. இன தேச வரையறைகள் உடையவை. சாமானியதளத்தைச் சேர்ந்தவை அவை. அனால் விசேஷ தளம் ‘ஈவு இரக்கம் இல்லாத’ உண்மையைச் சார்ந்தது. அங்கு பொருள்படும் விஷயங்கள் முற்றிலும் வேறு. அது கூரிய அறிவினால் மட்டுமே தொடப்படும் உலகம். சவரக்கத்தி முனையில் நடப்பதுபோல செல்ல வேண்டிய பாதை அது ‘க்ஷ¤ரஸ்யதாரா’ என்று உபநிடதம் அதைப் பற்றிக் கூறுகிறது. கீதை பேசுவது அதனைப் பற்றியே. அந்தத் தளம் நோக்கி தங்கள் உள்ளார்ந்த இயல்பினால் தேடிவருபவர்களுக்குக் கூறப்படுவது கீதை . ஏனெனில் அவர்கள் அதனால் மட்டுமே நிறைவு கொள்ளக்கூடியவர்கள்.

அப்படியானால் கீதை தியாகம் என்னும் மானுட விழுமியத்திற்கு எதிரானதா? இல்லை. அதை ஒர் உச்சகட்ட உண்மை என்று முன் நிறுத்தி அதற்கு எதிராக அதைவிட மேலான உண்மையை முன்னிறுத்துகிறது. ஆகவேதான் இந்த அத்தியாயம் ‘அர்ஜுன விஷாத யோகம்’ என்று கூறப்பட்டது. தொகுப்புரை தெளிவாகவே கூறுகிறது. ‘உபநிடதமும், பிரம்ம வித்தையும், யோக சாஸ்திரமும் ஆன’ பகுதி இது என. ஒரு சமூகத்தை உருவாக்கி நிலைநிறுத்தும் அடிப்படை லெளகீக விவேகத்தின் ஒட்டு மொத்தக் குரலாக நாம் அர்ஜுன விஷாத யோகத்தைக் கூறலாம். அக்குரலுக்கு அப்பாற்பட்ட தூய தத்துவத்தின் தளமே கீதையின் விவாதப் பொருள் .

One thought on “கீதை: மகத்தான மனத் தடுமாற்றம் – 3 [நிறைவுப்பகுதி]

  1. surya says:

    An analysis worth every letter to be scripted in Gold.
    subbu rathinam

பின்னூட்டம்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s