துவைதம்

துவைதம்

ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது

[நண்பர் வேல்முருகன் இல்லம். பாஸ்டன்]

அன்புள்ள ஜெ,

உங்கள் கீதை உரைகளில் சங்கரர் ராமானுஜர் மத்வர் ஆகிய மூவருடைய உரைகளையும் குறிப்பிடுகிறீர்கள். நீங்கள் அளிக்கும் முக்கியத்துவமும் அவ்வரிசையிலேயே உள்ளது. சொல்லப்போனால் மத்வாச்சாரியாரைப்பற்றி கொஞ்சம் மேம்போக்காக சொல்லிச் செல்வதாகவே தெரிகிறது. என் அலுவலகத்தில் இருநண்பர்கள் உடுப்பியைச் சேர்ந்த மாத்வ பிராமணர்கள். அவர்களுடன் நான் உடுப்பி மடங்களுக்கும் சென்றிருக்கிறேன். அவர்கள் மத்வர் ஆத்மாவும் பிரம்மமும் வேறுவேறுதான் என்பதை நிலைநாட்டுவதற்காக உருவாக்கிய தத்துவக்கருவிகள் மற்ற வேதாந்தங்களில் இல்லை என்றும் மத்வர் வெறும் பக்திப்பிரச்சாரகர் அல்ல அவர் மாபெரும் தத்துவ ஞானி என்றும் சொல்கிறார்கள். பிற இரு தரிசனங்களைப்பற்றியும் நீங்கள் எழுதிய கடிதங்களை அவர்களுக்கு வாசித்துக்காட்டினேன். அதனடிப்படையில் இந்த பேச்சு நிகழ்ந்தது. மத்வ வேதாந்தத்தை எப்படி சுருக்குவீர்கள் என்று அறிய ஆசைப்படுகிறேன் [ஆங்கிலக் கடிதத்துக்கு மன்னிப்பு கோருகிறேன்]

ஆர்.வெள்ளியங்கிரி

அன்புள்ள வெள்ளியங்கிரி,

நம்மிடையே நடக்கும் இந்த விவாதம் எனக்கே கச்சிதமாகச் சுருக்கிக் கொள்ள பெரிதும் உதவியாக இருக்கிறது. ஏற்கனவே எழுதி வைத்திருந்த குறிப்புகளை ஒட்டியே நான் இந்த பதில்களை உருவாக்குகிறேன்.

துவைதம்

பிரம்மம் பிரபஞ்சம் ஆத்மா ஆகியவை எந்நிலையிலும் இணையாத முற்றிலும் வேறுபட்ட இருப்புகள் என்று சொல்லும் தத்துவ கோட்பாடுதான் துவைதம். பிரம்மமே பிற அனைத்தும் என்ற சங்கரவேதாந்தத்தை துவைதம் முற்றாக மறுக்கிறது . இறுதிநிலையில் அனைத்தும் பிரம்மத்தில் ஒடுங்குகின்றன என்ற விசிஷ்டாத்வைதித கொள்கையையும் அது ஏற்பது இல்லை . பிரம்மம் நாம் காணும் அறியும் அனைத்துக்கும் அப்பாற்பட்ட நமக்கு முற்றிலும் மேலான ஒரு பேரிரிருப்பு என்பது துவைதத்தின் கொள்கை.

துவைத மதத்தின் நிறுவனர் மத்வாச்சாரியார். இவர் பதிமூன்றாம் நூற்றாண்டில் கர்நாடக மாநிலத்தில் உடுப்பி அருகே பிறந்தார். மத்வர் பிரம்மசூத்திரத்துக்கு எழுதிய மத்வ பாஷ்யம் முக்கியமான நூலாகும். கீதாபாஷ்யம், பாகவத தால்பரிய நிர்ணயம், பாரத தால்பரிய நிர்ணயம் ஆகியவை முக்கிய நூல்கள். ஜய தீர்த்தர், வியாசதீர்த்தர் ஆகிய சீடர்கள் மத்வ தத்துவத்தை விளக்கியுள்ளார்கள். மத்வரும் அத்வைதம் மீது கடுமையான தாக்குதலை தொடுத்து தன் தத்துவத்தை அமைத்துள்ளார்.

மத்வரின் கோட்பாடுகள் இவை.

1] பிரம்மமும் ஆத்மாவும் ஒன்றல்ல. பிரம்மம் அறிபடுபொருள், ஆத்மா அறிவது. அவை இரண்டாக இருப்பதனாலேயெ ஞானம் உருவாகிறது .

2] பிரம்மம் அனைத்தையும் படைத்து காத்து அழிக்கும் சக்தி. ஆகவே அது அனைத்துமறிந்தது, அனைத்து வல்லமையும் கொண்டது. ஆனால் அது பிரபஞ்சத்தை கடந்த பெரும் சக்தி

3] ஞானம் பிரம்மத்தை அறியும் வழியாக உள்ளது .புறவுலகு புலன்களில் பதிவதனால்மட்டுமே ஞானம் உருவாகும். ஞானம் உண்மையாக இருக்கவேண்டுமென்றால் புறவுலகும் புலன்களும் உண்மையாக இருந்தாகவேண்டும்.

4] புறவுலகு என்பது மூலஇயற்கையின் வளர்ச்சி நிலையாக உருவாகியுள்ள உண்மைவடிவமே.

5] புறவுலகு உருவாக ஆதிஇயற்கையே வேர்நிலைக் காரணம், பிரம்மம் தூண்டுகை காரணம்.

6] ஆகவே பிரம்மம் தன்னை மூலப்பொருளாக அல்லது மூலக்காரணமாக ஆக்கி பிரபஞ்சத்தை உருவாக்கவில்லை. பிரபஞ்சத்தில் மூன்று குணங்கள் உள்ளன. அக்குணங்கள் பிரம்மத்தில் இருக்க நியாயமில்லை.

7] எல்லா உயிர்களும் சமமல்ல . ஆத்மாகளின் படிநிலைகள் வேறுபட்டவை. ஆத்மாக்கள் படிப்படியாக தங்களை மேம்படுத்திக் கொண்டு முத்தி நோக்கி செல்கின்றன

8] முத்தி என்பது இயற்கை உருவாக்கும் அலைகள் அடங்கி பிரம்மத்தை உணர்ந்து அதற்கு முழுமையாக ஆட்பட்டு நிற்கும் நிலையேயாகும்.

மத்வ தரிசனத்தின் அடிப்படை இதுவே. ஒருமையால் அல்ல பிரிவுகளால் தான் பிரபஞ்சம் இயங்குகிறது. ஞானம், கருமம் , முத்தி ஆகியவை அப்பிரிவிலிருந்து உருவாகின்றவை. ஒருமையே உண்மையென்றால் இவை தேவையே இல்லை. மத்வர் ஐவகை பிளவுகளை முன்வைத்து பிரபஞ்ச இயக்கத்தை விªக்குகிறார். முக்தி என்பது அப்பிளவு இல்லாமலாகும்நிலையல்ல, அவற்றை தாண்டி பிரம்மத்தை அறியும்நிலையே. அதற்கு மத்வ மதம் முன்வைக்கும் வழி உணர்ச்சிகரமான தூய பக்தியேயாகும்


ஐம்பெரும்பிளவு [பஞ்சபேதம்]

மத்வரின் வேதாந்தத்தின்படி பிரம்மத்துக்கும் ஆத்மா மற்றும் இயற்கைக்கும் இடையே ஐந்து முக்கிய வேறுபாடுகள் உள்ளன.

1]பிரம்மமும் ஆத்மாவுக்கும் கொள்ளும் வேறுபாடு. ஆத்மாவுக்கு காமகுரோதமோகங்கள் உள்ளன. அது மும்மலங்களால் மூடப்பட்டுள்ளது. அது குறைவும் முழுமையும் கொண்டது. ஆத்மாவும் பிரம்மமும் ஒன்றே என்றால் அந்த் இயல்புகள் பிரம்மத்துக்கும் உரியன என்றகிறது. அப்படி அல்ல, பிரம்மம் தூயது, எந்நிலையிலும் முழுமை குறையாதது.

2] பிரம்மமும் பருப்பிரபஞ்சமும் கொள்ளும் வேறுபாடு. பருப்பிரபஞ்சத்துக்கு குணம்,கருமம்,தர்மம் ஆகியவை உள்ளன. அவ்வியல்புகளுக்கு அது கட்டுப்பட்டது. பிரம்மம் அத்தகைய அறியப்படும் இயல்புகள் கொண்ட ஒன்று அல்ல. அது நிர்ணயிக்க முடியாதது.

3] ஆத்மாவும் பருப்பிரபஞ்சமும் கொள்ளும் வேறுபாடு. பருப்பிரபஞ்சத்தின் இயல்புகளான குணம்,கருமம் ஆகியவற்றுடன் ஆத்மா இணைவதில்லை. ஆத்மா அதன் சாட்சியாகவே உள்ளது, அதன் பகுதியாக அல்ல. ஆகவே பருப்பொருள் ஆத்மாவுக்கு தொடர்பில்லாமல் வெளியே தனித்தியங்குகிறது.

4] ஒரு ஆத்மாவுக்கும் பிறிதுக்கும் உள்ள வேறுபாடு. ஆத்மாக்கள் அனைத்தும் ஒன்றல்ல. அப்படி ஒன்று என்றால் நன்மை தீமை என்பதற்கு வேறுபாடே இல்லாமலாகிவிடும்

5] ஒரு பருப்பொருளும் பிறபருப்பொருளும் கொள்ளும் வேறுபாடு. எல்லா பருப்பொருட்களும் ஒன்றல்ல. அப்படி ஒன்று என்றால் எல்லாவற்றுக்கும் பொதுவாக ஒரே குணம்-கருமம் ஆகியவைதானே இருக்கும்? ஆனால் இங்கே ஒவ்வொரு பருப்பொருளுக்கும் அதற்கான குணமும் செயலும் உள்ளது.

இந்த ஒட்டுமொத்த விவாதமும் ஆயிரம் வருடம் பழமையான கலைச்சொற்களுடனும் கருத்துருவங்களுடனும் அமைந்துள்ளது. அவற்றை இன்றைய விவாதங்களை நோக்கி எளிதில் விரித்துக்கொள்ள முடியும். ஆத்மா என்பதை இன்றைய நவீன உளவியல் மற்றும் மொழியியல் பேசும் தன்னிலை [sujectivity] அல்லது சுயம் [self] அல்லது தன்னுணர்வு [Ego] என்று பொருள்கொள்ளலாம். பருப்பிரபஞ்சம் என்பது புற யதார்த்தம் [ External relaity] அல்லது பொருள் [Matter]. பிரம்மம் என்பது பிரபஞ்ச ஒழுங்கு [cosmic order ]அல்லது பிரபஞ்சமையக்கருத்து [cosmic idea ] அல்லது பிரபஞ்ச மனம் [cosmic mind]

இவ்வாறு பார்த்தால் இன்றும் நவீன அறிவுத்துறைகள் அனைத்திலும் சாரத்தில் முடிவிலாது விவாதிக்கப்படும் வினாக்களையே மத்வர் எதிர்கொள்கிறார் என்பது புரியும். அந்த தளத்தில் அத்வைதம் ஒருபதிலை அல்லது விளக்கத்தை முன்வைத்து அதற்கான கருவிகளை உருவாக்குகிரதென்றால் துவைதம் அதற்கு நேர் எதிரான விளக்கத்தை முன்வைத்து நிகரான கருவிகளை உருவாக்குகிறது. ஆகவே தத்துவார்த்தமாக பார்த்தால் துவைதம் அத்வைதத்தின் எதிர்இயக்குவிசை. இது அன்றி அது இல்லை என்பதைப்போல அவை இணைந்தவை.

மத்வர் சில தொன்மையான கருத்துருவங்களை தன்நுடைய விவாதத்துக்காக மறு ஆக்கம் செய்து விரிவாக்கினார். மத்வரின் கேள்வி பெரும்பாலும் இவையனைத்துக்கும் காரணமாக உள்ள அந்த ‘அது’ தான் இதுவாக நம்முன் நிற்கிறதா அல்லது அது இதில் இருந்து விலகி வேறெங்கோ நுண் வடிவில் இருக்கிறதா என்பதே

இப்படிக் கேட்டுக்கொள்ளலாம். உங்கள் கையில் ஒரு கனி. அதற்கு இனிப்பு மணம் நிறம் போன்ற குணங்கள் உள்ளன. பசியாற்றுதல் முதலிய செயல்களை அது செய்கிறது. இந்தக் கனியின் காரணமாக அமைவது எது? அத்வைதத்தின்படி அப்படி காரணமாக அமைவது எதுவோ அதுதான் இப்போது கனியாக உங்கள் கையில் உள்ளது. இனிக்கும் பழத்தில் இனிப்பதுதான் பழத்தை இனிப்பாக்கிய சக்தி. காயிலே புளிப்பதென்ன கண்ணபெருமானே நீ கனியிலே இனிப்பதென்ன கண்ணபெருமானே என பாரதி அதை பாடினார்.

மத்வரைப் பொறுத்தவரை அந்தக்கனியை இயற்றிய அது கனிக்கு அப்பால் எங்கோ இருக்கிறது. அதை ஒரு கருத்துநிலையாக அல்லது உணர்வுநிலையாக அல்லது ஆற்றலாக நாம் உய்த்துணரவே முடியும். இந்தக்கனி என்பதற்கு உள்ள சுவை முதலிய குணங்களும் பசியாற்றுதல் முதலிய செயல்களும் அந்த மூலகாரணத்துடன் நேரடித் தொடர்புடையனவே அல்ல. இவை நம்முடைய அனுபவம்சார்ந்தவை. இதற்கெல்லாம் முற்றிலும் அப்பாற்பட்டதாக அது இருக்கலாம்

இந்த கனியின் இப்போதைய குணம் இனிய சுவையாக இருக்கலாம். இப்போதைய நோக்கம் பசியாற்றுதலாக இருக்கலாம். ஆனால் ஒரு பத்தாயிரம் வருடம் என எடுத்துக்கொண்டால் இதன் குணம் விஷமாக இருக்கலாம். இது மானுட மரபணுவில் ஆழமான விஷக்கூறு ஒன்றை புகுத்துவதாக இருக்கலாம். இதன் நோக்கம் மனித இனத்தின் எலும்புகளை பலவீனப்படுத்தி ஒட்டுமொத்தமாக அழியவைத்து அப்போது பிறக்கவிருக்கும் ஒரு புது உயிரினத்தை மேலே கொண்டுவருவதாக இருக்கலாம். எப்படி நாம் சொல்ல முடியும்? நாம் இடம் காலம் ஆகியவற்றுக்குக் கட்டுப்பட்டவர்கள். பிரபஞ்ச இயக்கத்தையும் அதன் காரணத்தையும் நாம் எப்படி அறிந்து சொல்ல முடியும்?

ஆக, குணம், கருமம் [இயல்பு,செயல்பாடு] என்பதெல்லாம் முழுமுதலாக அனைத்துக்கும் பின்னாலிருக்கும் அந்த காரணத்தை சுட்டுவதல்ல என்கிறார் மத்வர். குணம் கருமம் என்பதெல்லாம் நம்முடையவை மட்டுமே. இவற்றை ஆக்கும் அந்த காரணத்தின் ஒரு கருவியே நாமும் நாம் இவ்வாறு காரணம் கண்டறியத்துடிப்பதும் எல்லாமே. மேலும் உதாரணத்தை விரித்துக்கொள்ள விரும்பினால் ·ப்ரிஜோ காப்ராவின் உயிரின் வலை[The web of Life ] என்ற நூலை வாசிக்க பரிந்துரைக்கிறேன்.

துவைதம் முன்வைக்கும் வாதகதிகள் எவராலும் ஒதுக்க முடியாதவை. இன்றைய நவீன அறிவியலில்கூட ஆழமாக செயல்படுபவை. இந்த பெருவெளியின் சாரமான நோக்கம் என்ன என்பதற்கு முழு முற்றான பதிலை இதன் துளியிலும் துளியாக உள்ள நாம் சொல்லிவிட முடியாது. அவ்வாறு சொல்லாதவரை அதைச் சார்ந்த ஆழமான தரிசனங்கள் அவற்றை முன்வைக்கும் தர்க்கங்கள் அனைத்துமே முக்கியத்துவம் கொண்டவையே. அத்வைதம் அவற்றில் ஒன்று துவைதம் நேர்மாறான இன்னொன்று. எல்லாமே சரி எல்லாமே தவறும்கூட.

மத்வர் உள்ளிட்ட வேதாந்திகள் அடிப்படைக் கருவியாக பயன்படுத்தும் சில கருதுகோள்களை சுருக்கமாகச் சொல்கிறேன். இவை ஒவ்வொன்றையும் தன் கொள்கையை நிலைநாட்ட மத்வர் விரிவாக விளக்கி முன்னெடுத்திருக்கிறார்.

முதலில் பிரம்மத்தின் மீது உருமயக்கவாதம் , வளர்ச்சிநிலை வாதம் இரண்டையுமே துவைதர்கள் போடுவது இல்லை.பிரம்மம் இவையனைத்துக்குமே அப்பாற்பட்டது என்பதே துவைதத்தின் சாரம்.


உருமயக்கவாதம் [விவர்த்த வாதம்]

பிரம்மம் எந்நிலையிலும் இன்னொன்றாக மாறுவதில்லை அதன் பிற தோற்றங்களெல்லாம் மாயையே என்று வாதிடும் கொள்கை. அத்வைதத்தின் முக்கியமான கொள்கைகளில் ஒன்று இது. பிரம்மம் கடல். அலைகள், துளிகள், துமிகள் என பிற. அலைகளையே நாம் பார்க்க முடிகிறது, ஆனால் அதுதான் கடல் என்பது சங்கரரின் உவமை.

இன்றைய சொற்களில் சொல்லப்போனால் நாம் காணும்,நாம் பகுதியா உள்ள இப்பிரபஞ்ச வெளியை உருவாக்கிய ஆற்றல் எதுவோ அதுவேதான் இப்பிரபஞ்சமாகவும் உள்ளதா அல்லது அது இப்பிரபஞ்சத்தை உருவாக்கியபின் இதற்கு அப்பாற்பட்டதாக உள்ளதா என்ற கேள்வி. உருமயக்க வாதத்தைப்பொறுத்தவரை பிரபஞ்ச சாரம் எப்போதும் அதுவாகவே உள்ளது நாம்தான் அதை இப்பிரபஞ்சத்தின் விரிவான தோற்றமாக எண்ணிக்கொள்கிறோம்

உருமயக்கவாதத்தின் நவீன உதாரணமாக இப்படிச் சொல்லலாம். பிரபஞ்சத்தில் உள்ளது ஆற்றல் மட்டுமே. அதையே நாம் துகள்களாக அணுக்களாக மூலக்கூறுகளாக பொருட்களாக கோள்களாக விண்மீன்களாக பால்வழிகளாக பர்க்கிறோம். அது ஆற்றல் என்ற வடிவிலேயே உள்ளது, அதை பொருண்மையாக பார்ப்பது நாம்தான்.


வளர்ச்சிநிலை வாதம் [பரிணாமவாதம்]

பிரம்மம் தன்னை பிரபஞ்சமாக ஆக்கிக் கொள்கிறது என்று வாதிடும் கொள்கை. பண்டையவேதாந்தத்தின் கொள்கை இது . சிலந்தி தன் உடலில் இருந்து வலையை பின்னுவதுபோல பிரபஞ்சம் பிரம்மத்தால் உருவாக்கப்படுகிறது என்பது இக்கொள்கை. அதாவது பிரபஞ்சத்தின் மூலமாக இருப்பது தன்னை இப்பிரபஞ்சமாக மாற்றிக்காட்டுகிறது. ஒரு நடிகன் கதாபாத்திரமாக ஆவதுபோல , விதை மரமாக ஆவது போல.

உதாரணமாக இப்பிரபஞ்சத்தின் சாரம் ஆற்றல் என்றால் ஆற்றல்தான் பருப்பொருளாக மாற்றம் அடைந்து இந்தப்பிரபஞ்சத்தை ஆக்கியிருக்கிறது என்ற வாதம் வளர்ச்சிநிலை வாதம் எனலாம்.

இந்தபிரபஞ்சம் ஒரு காரியம், அதாவது விளைவு. நாம் காணும் இயற்கையும் ஒரு விளைவே. இவற்றை விளைவித்தது முதற்பொருள். அதை காரணம் என்கிறார்கள் வேதாந்திகள். அந்த காரணம் முதன்மையாக இருவகை

வேர்நிலைக் காரணம் [உபதான காரணம்]

ஒன்றை உருவாக்க அடிப்படையான பொருட்களை, கருத்துக்களை அளிக்கும் முதற்பொருள் வேர்நிலைக் காரணம். மோருக்கு பால் வேர்நிலைக் காரணம். சாங்கிய மரபுப்படி ஆதி இயற்கையே பிரபஞ்சத்துக்கு வேர்நிலைக் காரணம். ஆதிப்பேரியற்கையில் இருந்து நாம் காணும் இந்த இயற்கை உருவாகி வந்தது. மத்வவேதாந்தமும் அதை ஏற்கிறது


தூண்டுகைக்காரணம் [நிமித்திக காரணம்]

ஒன்றை உருவாக்குவதற்கான விதியாகவோ, முகாந்தரமாகவோ, முன்னோடியாகவோ, தீர்மானிக்கும் வல்லமையாகவோ உள்ள இன்னொரு பொருள் அல்லது கருத்து தூண்டுகைக் காரணம். புயல் என்ற நிகழ்வுக்கு காற்றழுத்தத்தில் உள்ள ஏற்றதாழ்வு தூண்டுகைக்காரணம் எனலாம். புயலை நிகழ்த்தும் பருண்மையான அனைத்தும் வேறாக உள்ளன. ஆனால் காற்றழுத்தம் அதிகமான இடத்தில் இருந்து காற்றழுத்தம் குறைவான இடம் நோக்கி காற்று சென்றாகவேண்டும் என்று இயற்கையில் உள்ள விதியே புயலுக்கான காரணம்.

ஆதிஇயற்கை குணங்கள் ஏதும் அற்ற ஒரு பருப்பொருள் வெளி. அதில் மூன்று குணங்களும் அந்த குணங்கள் கொண்ட தனித்தனிப் பொருட்களும் உருவாக புருஷன் காரணமாக அமைகிறான். மத்வவேதாந்தம் அந்த ஆதிஇயற்கை உருவாக தூண்டுகைக் காரணம் பிரம்மமே என்கிறது

இன்றைய சொற்களில் சொல்வதாக இருந்தால் மத்வர் சொல்வது இதுவே. இந்த பிரபஞ்சவெளியை உருவாக்கிய மூலகாரணமானது தன்னை இதுவாக நமக்கு காட்டவில்லை. தன்னை உருமாற்றிக்கொள்ளவும் இல்லை. இந்தபிரபஞ்சம் வேறு அது வேறு. அது இப்பிரபஞ்சம் உருவாவதற்கான ஒரு தூண்டுதல்தான். அதாவது இப்பிரபஞ்சத்தை ஒரு நாற்காலி என்று வைத்துக்கொள்வோம். நாற்காலி என்ற கருத்தை உருவாக்கிய மனமே அதற்கான மூலகாரணமாகிய பிரம்மம்.

பிரபஞ்சம் என்பது ஒரு மாயத்தோற்றம் அல்ல, உண்மை. அந்த உண்மை உருவாவதற்கான கருத்தாகவும் விதிகளாகவும் உள்ளதே பிரபஞ்ச சாரமான பிரம்மம். அது எந்தவகையிலும் மானுடனின் தர்க்கத்தால் அறிந்துவிடக்கூடிய ஒன்றல்ல. ஆனால் அப்படி ஒன்று உள்ளது என்பதற்கு இந்தபிரபஞ்சத்தின் செயல்முறையே சான்றாகும் – இதுவே மத்வரின் வாதம். இது இன்றும்கூட பிரபஞ்சவியலில் ஒரு முக்கியமான தரப்புதான்.

பின்னூட்டம்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s