கீதையை எப்படிப் படிப்பது? ஏன்? – 2
ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது
[கோதை]
மூலநூல் இன்றியமையாத ஒன்றா? எதற்காக மூலநூல்கள் தேவைப்படுகின்றன?
உலகில் வாழ்பவர்களில் மிகச்சிலர் தவிர வாழ முயல்பவர்களே ஒழிய வாழ்வை அறிய முயல்பவர்களல்ல என்பதை நாம் அறிவோம். பெரும்பாலானவர்களுக்கு தங்கள் வாழ்க்கையை ஏற்கனவே உருவாகி திடம் கொண்டுள்ள பாதையில் நடத்திச்செல்லவே விருப்பம். அதுதான் அவர்களால் முடியும். தங்கள் செயல்களைப் பற்றி சிந்திப்பதோ அதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்வதோ அவர்களால் இயலாது. அத்தகையோருக்கு திட்டவட்டமான பாதையைக் காட்டும் மூலநூல்கள் தேவையே. இது சரி -இது பிழை, இப்படிச்செய்க என்ற ஆணைகள் மட்டுமே அவர்களுக்கு குழப்பமில்லாமல் வழிகாட்டும். சொற்கமும் நரகமும் பாவபுண்ணியங்களும் சேர்ந்துதான் அவர்களை நடத்த இயலும்.
நான் பலவருடங்கள் தேடலுடனும், கண்ணீருடனும் நான்கு மதங்களின் மூலநூல்களை கற்றுள்ளேன். இன்றும் அவை என் மேஜைமீது உள்ளன. என் கருத்தில் அவை அனைத்துமே பெருங்கருணை, உலகைத்தழுவ முனையும் நீதியுணர்வு ஆகியவற்றின் மகத்தான வெளிப்பாடுகளே. பைபிளையோ,குர் ஆனையோ, தம்ம பதத்தையோ, கிரந்த் சாகிப்பையோ ஆழமான மனநெகிழ்வும் கனிவும் இன்றி என்னால் வாசிக்க இயன்றதில்லை. வாழ்க்கையின் பல தருணங்களில் அவை எனக்கு பலவகைகளில் தேவைப்பட்டிருக்கின்றன. குறிப்பாக பைபிள் என் நெஞ்சில் ஓர் அணையா ஒளியாக உள்ள நூல்.
ஆனால் ஞானத்தேடல் கொண்ட ஒருவனை ஒருபோதும் ஒரு மூல நூலும் திருப்தி செய்யாது. அவனது ஞானம் அவனே அறிந்துகொண்ட ஒன்றாகவே இருக்கும். நூல்கள் அவனது பாதை ஒளிகளே ஒழிய அவன் சென்று சேரும் இறுதி வெளிச்சம் அல்ல. ஏனெனில் மண்ணில் இதுவரை உருவான எந்த நூலும் இறுதி நூல் அல்ல. ஒரு நூல் பிரபஞ்ச இயக்கத்தை விளக்குமளவு பிரபஞ்சம் சிறியதோ எளியதோ அல்ல. ஒரு மனிதனுக்கு தன் ரகசியத்தை முற்றாகச் சொல்லிவிடுமளவுக்கு அப்பிரபஞ்சத்தின் மனம் சிறுமைகொண்டதுமல்ல. ஒரு நூலை இறைவனின் சொற்களாகக் காண்பதும், அதை எக்காலத்துக்கும் எல்லாருக்கும் உரியதாக நம்புவதும்தான் மூடநம்பிக்கைகளில் தலையாயது என ஒரு ஞானத்தேடல்கொண்ட மனிதன் ஆழமாக அறிவான் என்றே நான் நினைக்கிறேன். அது எந்நூலாக இருப்பினும் சரி. கீதையோ, குர் ஆனோ, பைபிளோ அல்லது மூலதனமோ.
ஒரு வைணவ ஞானியிடம் ஒரு முமுட்சு [ஞானத்தேடல்கொண்டவன்] வந்து தனக்கு வழிகாட்டும்படிக் கோருகிறான் என்று கொள்வோம். அவர் முதலில் அவனுக்கு நெறிமுறைகள், கைங்கரியம் [சேவை] ஆலய வழிபாடு ஆகியவற்றையே உபதேசிப்பார். அவன் மீண்டும் வந்து அவற்றில் தான் நிறைவடையவில்லை, தனக்கு வினாக்கள் உள்ளன என்றால் அவனுக்கு பக்தி இலக்கியங்களை காட்டுவார். அதிலும் தன் தேடல் நிறைவுகொள்ளவில்லை என்று சொன்னால் மட்டுமே அவனை கீதைக்குள் கொண்டுவருவார். அதன் வழியாக வேதாந்தத்தின் வெளியைக் காட்டி இனி உன்பாதையை நீயே உருவாக்கு என்பார். [’மேலான உண்மை எதுவென நாமிருவரும் சேர்ந்து தேடுவோம் வா ‘ என்பதே குரு சீடனுடன் சேர்ந்து சொல்லும் பிரார்த்தனை என்கிறது கடோபநிடதத்தின் புகழ்பெற்ற முதல்வாக்கியம்.] இதுவே இந்துஞானமரபின் முறைமையாக உள்ளது.
முதலிரு தளத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே மூலநூல்களின் தேவை உண்டு. மூலநூல்மதங்கள் முதலிரு தளத்துடன் நின்றுவிடுபவை. இந்து ஞான மரபும், பெளத்த ஞான மரபும்,கன்பூஷிய ஞான மரபும், தாவோ மரபும் மட்டுமே அடுத்த தளங்களுக்கு வாசல் திறந்து தருபவை என்பதே என் இருபதாண்டுகால தேடலின் விளைவாக நான் கற்றது.
ஒரு நம்பிக்கையாளனிடம் ஞானத்தேடல்கொண்டவன் விவாதிக்க இயலாது. அவர்கள் இயங்கும் தளங்கள் வேறு. அவர்கள் உரையாட எதுவுமே இல்லை. அதிகபட்சம் ஒரு புன்னகையுடன் தேடல் கொண்டவன் நம்பிக்கையாளனிடமிருந்து விலகி நகர்ந்துவிடவேண்டும் என்றே சொல்லப்பட்டிருக்கிறது.
அதேசமயம் நம்பிக்கையாளன் ஞானத்தேடல்கொண்டவனைவிட கீழானவன் இல்லை. அவ்வெண்ணம் விவேகானந்தருக்கு வந்தபோது ராமகிருஷ்ண பரமஹம்சர் ‘சைதன்ய மகாபிரபு பக்தர்தானே ? ‘ என்று கேட்டு அவரைக் கடுமையாகக் கண்டித்ததை எம் எழுதிய ராமகிருஷ்ணர் வரலாற்றில் காண்கிறோம். பொதுவாக பக்திமரபு ஞானத்தைவிடவும் அதிகமான முக்கியத்துவத்தை பக்திக்கு அளிக்கிறது.
எல்லா வழிகளும் இலக்காக்குவது ஒன்றையே. ஒருவன் எதில் நிறைவுகொள்கிறான் என்பது அவனது இயல்பைச் சார்ந்தது. குருவி தாழப்பறக்கலாம். வல்லூறு மேலே பறக்கலாம். இரண்டும் பறப்பது வானிலெயெ. வானம் இரண்டிலிருந்தும் சமதூரத்தில்தான் உள்ளது.
கீதையை எப்படி அணுகவேண்டும்?
நித்ய சைதன்ய யதி அவரது பேட்டியில் சொன்ன ஓர் அனுபவம். அவர் கொல்லத்தில் தத்துவ ஆசிரியராக வேலைபார்த்தபோது ஒரு பேருரைக்காக அங்கு நடராஜகுரு வந்திருந்தார். நித்யா அவருக்கு உதவிக்காக நியமிக்கப்பட்டிந்தார். நித்யா கையில் வைத்திருந்த டாக்டர் ராதாகிருஷ்ணனின் ஆங்கில கீதை உரையை வாங்கி முதல்வரியைப்படித்துவிட்டு நடராஜகுரு அதை கார் ஜன்னல்வழியாக தூக்கிவீசினார். காரை நிறுத்தி ஓடிப்போய் அதை எடுத்து மீண்ட நித்யா கடுமையாகக் கோபித்துக் கொண்டார். நடராஜ குரு அதன் முதல் வரியை வாசிக்கச் சொன்னார். “கீதை இந்து மதத்தின் முக்கிய நூல் ” என்றிருந்தது. “மூன்று தத்துவம் என்றால் எவை ? ” என்றார் நடராஜகுரு. நித்யா சொன்னார். “தத்துவம் என்றால் என்ன ? ” என்றார் நடராஜகுரு மீண்டும். ” உண்மையை விவாதம் மூலம் வகுத்துகொள்வதற்கான முயற்சி “. “அப்படியானால் எப்படி கீதையை இவர் மதநூல் என்கிறார் ? ‘ அக்கேள்விக்கான பதிலை நித்யா பிறகு டாக்டர் ராகாதிருஷ்ணனிடம் கேட்டதாகவும் அவரால் பதில் சொல்ல இயலவில்லை என்றும் அப்பேட்டியில் சொல்கிறார். அது ஒரு தொடக்கமாக அமைந்து நித்யா தன் ஆய்வுகளை முன்னெடுத்துச் சென்றார்.
இதற்குப் பின்னால் ஒரு கலாச்சாரக் காரணம் உள்ளது. பதினெட்டாம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிறித்தவ மதம் அமைப்புசார்ந்து நோக்கினால் மிக நவீனமான ஒரு மதமாக இருந்தது. அது பைபிள் என்ற மூலநூல் சார்ந்து திட்டவட்டமான தத்துவ ஒருங்கமைவு கொண்டிருந்தது. சர்ச் என்ற மையமும் கிளைகளுமாக விரியும் நிறுவன அமைப்பு மேலும் உறுதியை அதற்கு அளித்தது. அதனுடன் ஒப்பிடும்போது அன்று இந்துஞானமரபு சிதைவுற்று சிதறிப்பரந்து கிடந்தது. பொதுவாக நம்பிக்கைகளே ஞானமாகவும் சடங்குகளே மதமாகவும் இருந்தன. அச்சூழலில் இந்து மத மறுமலர்ச்சிக்கு வழியமைத்த முன்னோடிகளான ராஜா ராம் மோகன் ராய், [பிரம்ம சமாஜம்] சுவாமி தயானந்த சரஸ்வதி [ஆரிய சமாஜம்] போன்றவர்கள் கிறித்தவ மதம்போல இந்துமரபையும் திட்டவட்டமான ஒன்றாக வரையறைசெய்ய விரும்பினர். இதன் விளைவாக இந்து ஞானமரபுக்குப் பொதுவானதாக மூலநூல்கள் தேவை என்ற எண்ணம் ஏற்பட்டது. வேதங்கள், உபநிடதங்கள் முதலியவை அவ்வாறு விளக்கமளிக்கப்பட்டு முன்னிறுத்தப்பட்ட போதிலும் கீதை காலப்போக்கில் அவ்விடத்தை பெற்றது. அதற்கான காரணத்தை பிறகு சொல்கிறேன். இவ்வாறுதான் கீதையை மதமூலநூலாகக் கொள்ளும் போக்கு தோன்றியது.
கீதையை மதநூலாகக் கொள்ளுவது அதை விவாத தளத்திலிருந்து நம்பிக்கையின் தளத்துக்கு நகர்த்தும் முயற்சி என்ரு கருதியே நடராஜ குரு அதை கடுமையாக எதிர்க்கிறார். கீதை ஒரு தத்துவ நூல். கற்பதற்கும் விவாதிப்பதற்கும் உரியது. கீதை முத்தத்துவ அமைப்பின் இறுதிநூல் என்பதைக் கண்டோம். அது ஒரு தத்துவநூல் என்பதற்கான உறுதியான ஆதாரம் அந்நூலே. அதன் முதல் அத்யாயம் சாங்க்ய யோகம் எனப்படுகிறது. இங்கு சாங்கியம் என்ற சொல் தத்துவ சிந்தனை என்றே பொருள்படுகிரது. [சங்கிய : எண்ணிக்கை.]அதாவது அது தத்துவத்திலிருந்து தொடங்கி மேலே செல்கிறது.
கீதை இறைவடிவமாகச் சொல்லப்படும் கிருஷ்ணன் புராணகதாநாயகனாகிய அர்ச்சுனனுக்குச் சொல்லும் வடிவில் உள்ளது. அதாவது அதன் கூற்றுகள் இறைவனின் கூற்றுகளாகவே முன்வைக்கப் படுகின்றன. ஆனால் அந்நூல் பிற மதநூல்களைப்போல எதையுமே ஆணையிடவில்லை. தன்னை அப்படியே நம்பும்படி அது கோரவில்லை. அது வாதிடுகிறது. மீண்டும் மீண்டும் ‘நான் சொல்வதை யோசித்துபார் ‘ என்கிறது. ஆராயும் நோக்குடன் தன் அனுபவதளத்தையும் தன் கல்வியையும் கருவியாகக் கொண்டு ஒருவன் கற்க வேண்டியநூல் கீதை.
தொடரும்..