கீதை,சம்ஸ்கிருதம்,ஸ்மிருதிகள்

கீதை,சம்ஸ்கிருதம்,ஸ்மிருதிகள்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

[ஊட்டி இலக்கிய சந்திப்பில் வாசக நண்பர்கள்]

அன்புள்ள ஜெ,

கீதை குறித்தக் கட்டுரையைப் படித்தேன். ஒரு புறம் மகிழ்ச்சியும், மறுபுறம் வேதனையும் வந்தது. என்னுடைய காலம் காலமான நம்பிக்கைகளை, மற்றும் புரிதல்களையும்,  தத்துவார்த்தமாக எல்லாரும் புரிந்து கொள்ளும் வகையில் எழுதியது மகிழ்ச்சி. ஆனால்,  மாபெரும் முதிர்வுத் தத்துவங்களுக்கு அரிச்சுவடி நிலையில் இருந்து ஆரம்பித்து மறுப்பு தெரிவிக்கும் எழுத்துக்களுக்கு எல்லாம் நீங்கள் விளக்கம் கொடுக்க நேர்ந்தது வேதனை.

எந்த ஒரு அதீதமான நுகர்ச்சியையும் நம் நாட்டில் ‘apologetic’  ஆகவே கருதுவதை நான் சிறு வயதில் இருந்தே பார்க்கிறேன். நவீன வாதம் என்பது இதற்கு எதிரானது- இந்த மாதிரி சுய அடக்கம் எல்லாம் தேவையில்லை என்று யாராவது வாதிட்டால், பதட்டத்தில் என் நாக்கு அடங்கி விடும். பதிலே வராது. சமீபத்தில் ந்யூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் ஞாயிறு மலரில் மன நல அறிவுரை (கவுன்சிலிங்)  ஒன்றில் ஒரு பெண் மருத்துவர், அடிக்கடி சுய இன்பம் அனுபவிக்க அந்த கேட்டப் பெண்ணுக்கு அறிவுரை கூறினார். தாழ்வு மனப்பான்மையை இது தகர்க்கும என்று வேறு சொன்னார்.

ஆசை ஒரு பெருந்தீனிக்காரன் என்று கண்ணன் சொன்னதை நாம் எந்த தளத்தில் இருந்து விளக்க முடியும்?  “இல்லையே ! அதோ பார் வெள்ளையர் சமுகத்தை. அவர்கள் தீனி, குடி, பெண் என்று அனைத்திலும் பெரும் நாட்டம் உடையவராக இருந்தும் அவர்கள் நிம்மதியாய்த் தானே உள்ளனர்?” என்று பதில் கேள்வி வந்தால் நம் பதில்கள் சப்பையாகவேப் போய் விடும்.

இந்த நிலையில் உங்களது கட்டுரை ஒரு கலங்கரை விளக்கம். தமிழில் இது போல நிறையத் தேவை.

வேங்கடசுப்ரமணியன்

அன்புள்ள வேங்கடசுப்ரமணியம்,

நம் சூழல், பல்லாயிரம் வருடம் தத்துவ விவாத மரபுள்ள சூழல் அல்ல. அது நடுவே அறுபட்டு விட்டது. இன்றுள்ளது வேறு. இது பத்தொன்பதாம் நூற்றாண்டு வெள்ளையர்களால் உருவாக்கப் பட்டது. இந்த மரபை நாம் இன்னும் முழுமையாக கற்றுக் கொள்ளவில்லை. விவாதத்திற்கு நமக்கு உள்ள மரபை [நியாயம், மீமாம்சம்] நாம் அறியோம். மேலை மரபை [கிரேக்க தர்க்கவியல்] நாம் கற்கவில்லை

ஆக எல்லாவற்றையும் ஆதியில் இருந்தே ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. இன்று விவாதம் மூலம் உண்மையை நெருங்குவ்தல்ல, விவாதக் களத்தை உருவாக்குவதே முதல் சவாலாக உள்ளது

ஜெ

*

அன்புள்ள ஜெ!

நலமா..! மிக சமீபத்தில் நீங்கள் எழுதிய தாய்மொழி, செம்மொழி வாசித்தேன். எனக்குச் சில சந்தேகங்கள். நீங்கள் கட்டுரையில் குறிப்பிட்ட விதிகளில் ஒன்றான “மொழி இன்னொரு மொழியில் இருந்து பிரிந்து, வளர்ந்து உருவானதாக இருக்கலாகாது. அதற்கான சொற்களஞ்சியம் மூலத் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும்” என்கிற விதி சம்ஸ்கிருதத்திற்கு முற்றாக பொருந்துமா..! பழைய பாலி, பிராகிருத மொழிகளின் சொற்களஞ்சியத்தில் இருந்து பெறப் பட்டதல்லவா சமஸ்கிருதத்தின் சொற்களஞ்சியம்? விளக்கவும்

அன்புடன்
சக்திவேல் சென்னை

அன்புள்ள சக்திவேல்,

நான் அறிந்தவரை சம்ஸ்கிருதம் மூல மொழியே. அதன் இலக்கியம், சொற்களஞ்சியம் இரண்டும் அசலானவை. சம்ஸ்கிருதம் இன்றைய முழு மொழியாவதற்கு முன்னால் ஒரு உரை வடிவம் [டைலக்ட்] மட்டுமாக இருந்த நிலையில் இயற்றப் பட்ட ரிக்வேதம் நமக்கு இன்று கிடைக்கிறது.  உலகச் செம்மொழிகளில் கிடைக்கும் மிகத் தொன்மையான மூலநூல்களில் ஒன்று ரிக்வேதம்.

சம்ஸ்கிருதத்தில் பின்னாளில் உருவான  இலக்கணங்களோ, சொற்களோ இல்லாத அதிபுராதனமான மொழி ரிக் வேதத்தில் உள்ளது. அதன் பழைய பாடல்களில் எழுவாய், பயனிலை அமைப்பு கூட உருவாகியிருக்கவில்லை என மோனியர் வில்லியம்ஸ் சொல்கிறார். அதில் ஒரே சொல் பல அர்த்தங்களில் பயன்படுத்தப் படுகிறது. பல சொற்களுக்கு வேர்ச் சொல் மட்டுமே உள்ளது. ஒரு மொழி குழந்தையாக இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி அது உள்ளது.

உதாரணமாக சங்க இலக்கிய காலகட்டத்து தமிழ் மொழியில் செய்வினை,செயப்பாட்டு வினை பிரிவினை இல்லை. கொன்ற, கொல்லப் பட்ட இரண்டுமே கொன்ற என்றே சொல்லப் படும். பின்னாளில் அது உருவாகி வந்தது. இவ்வாறு தமிழுக்கு மூன்று அடுக்குகள் உள்ளன. நவீனத் தமிழ், சங்க காலம் வரையிலான தமிழ், சங்க காலத் தமிழ் என பிரித்துச் சொல்லலாம். அதே போல சம்ஸ்கிருதத்திற்கு குறைந்தது ஐந்து அடுக்குகள் உள்ளன. ரிக் வேதம் ஆகக் கடைசியில் உள்ள ஐந்தாவது அடுக்கைச் சேர்ந்தது.

அந்த ஐந்தாவது அடித்தளத்தில் இருந்து பின்னாளைய சம்ஸ்கிருதம் உருவாகி வந்தது.  அந்த தொல்மொழியில் இருந்து எழுந்து பின்னர் முறைப் படுத்தப் பட்ட மொழியை இலக்கண ஆசிரியர்கள் செம்மையாகச் செய்யப் பட்டது என்ற பொருளில் சம்ஸ்கிருதம் என்று பெயர்ச் சூட்டிக் குறிப்பிட்டனர். அவ்வாறு செம்மை செய்யப் படாமல் அப்படியே பல இடங்களில் புழங்கிய மொழியே பிராகிருதம். பிராகிருதத்திற்கும் புராதன சித்தியன், முண்டா துணை மொழிகளுக்குமான ஊடாட்டத்தில் பிறந்தது பாலி. இம்மூன்று மொழிகளில் இருந்தும் கிளைத்த மொழிகள் அபப்பிரம்ஸ மொழிகள் எனப் பட்டன.

தமிழில் சம்ஸ்கிருதம் பற்றி நிறைய அரைவேக்காட்டுத்தனங்கள் வெறும் மொழிக் காழ்ப்பினால் எழுதப் பட்டுள்ளன. அவற்றில் ஒன்றே சம்ஸ்கிருதம் என்று பெயர் இருப்பதனால் அது பழைய மொழி இல்லை, பிற மொழிகளில் இருந்து பின்னாளில் உருவாக்கப் பட்டது என்பது. சமீபத்தி ல்கூட ஒருவர் எச்சில்தெறிக்க மக்கள் டிவியில் கத்திக் கொண்டிருந்தார்.   அவற்றை நம்பி வாசிக்கும் போது நாம், நம் வரலாற்றுணர்வை இழக்கிறோம். இந்த விஷயங்களெல்லாம் சாதாரணமாக எவரும் வாசிக்கக் கூடிய நூல்களில் கிடைப்பனவே.

ஜெ

*

அன்பிற்கினிய ஜெ,

“இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள்” படித்து கொண்டிருந்த போது சில கேள்விகள் எழுந்தன.

நம்மிடையே உள்ள கலாச்சார  ஒழுக்க விதிகளுக்கும் ஞானத்திற்கும் ஏதேனும் சம்பந்தம் உள்ளதா?  அப்படியென்றால் முக்காலத்திற்கும் சாஸ்வதமாக ஒழுக்க விதிகள் உள்ளதா? ஞானிகளுக்கு எல்லாம் ஒன்று என்று அறிந்துள்ளேன். அப்படி என்றால் விதி மீறல்கள் குற்றங்கள் என வகுக்கப் பட்டுள்ளவை அனைத்தும் ஒரு தரிசனத்தில் காணாமல் போய் விடுமா? கட்டுக் கோப்பான வாழ்க்கைக்கு அர்த்தம் கிடையாதா? விளக்கம் தேவை.

கண்ணன் கெ கெ

*

அன்புள்ள கண்ணன்,

இந்த விஷயத்தில் நான் என் ஆசிரியர்களின் கூற்றையே என் கூற்றாகக் கொள்கிறேன்

பெருமதங்கள் உறுதியான கட்டுப்பாட்டால் நிலை நிறுத்தப் படுபவை. ஆகவே அவை மத நம்பிக்கையின் ஒரு பகுதியாகவே ஒழுக்க நெறிகளையும் ஆக்கி விடுகின்றன. சைவம், வைணவம் ஆகியவை ஒழுக்கத்தை ஆன்மீகத்தின் ஒரு பிரிக்க முடியாத பகுதியாகவே காண்கின்றன. பௌத்தமும், சமணமும், கிறித்தவமும் அப்படியே. குர் ஆன் என்பது நான் அறிந்தவரை ’செய்-செய்யாதே’க்கள் அடங்கிய ஒரு நெறி நூல்.

ஆனால் இந்திய ஞான மரபை பார்த்தால் ஒரு பிரிவினை உள்ளது ஸ்மிருதிகள்- ஸ்ருதிகள்.  நெறிநூல்கள், ஞானநூல்கள் என தமிழாக்கம் செய்யலாம். ஸ்மிருதிகள் காலம் தோறும் மாறக் கூடியவை என்றும் அவற்றை மாறியாக வேண்டும் என்றும் அவை ஞானத்துக்கான வழிகாட்டுதல்களோ, நிபந்தனைகளோ அல்ல என்றும் நம் மரபு கூறுகிறது. சுருதிகள் என்றும் அழியா விவேகங்களையும், மெய்ஞானத்தையும் பேசக்கூடியவை. ஆகவே அவை மாற்றமில்லாதவை.

நம் மரபில் பல ஸ்மிருதிகள் உள்ளன. நாரத ஸ்மிருதி, யம ஸ்மிருதி, யாக்ஞவால்கிய ஸ்மிருதி, சங்கர ஸ்மிருதி என. அவற்றில் ஒன்றே மனு ஸ்மிருதி. எந்த ஸ்மிருதியும், ஒரு காலத்திலும் இந்து மரபு முழுமைக்கும், விதியாக இருந்ததில்லை.  இடத்துக்கு ஒரு ஸ்மிருதி இருந்துள்ளது. காலத்துக்கு ஒரு ஸ்மிருதி மாறியுள்ளது.

ஆகவே ஞான நூல்கள் செய்-செய்யாதே என்ற கட்டளைகளை இடுவதில்லை. அவை பிரபஞ்சம், மனிதன், பிரபஞ்ச காரணம் குறித்த அடிப்படை வினாக்களை எழுப்பி அவற்றை விவாதிக்கின்றன, வழி காட்டுகின்றன. கற்பனை, அறிவு, தியானம் மூலம் நாம் முழுமை நோக்கிச் செல்ல வழி காட்டுகின்றன.

இந்தப் பிரிவினையை பௌத்த மெய்ஞானத்திலும் காணலாம். சுத்த பிடகம், வினய பிடகம் என அது பௌத்த உபதேசங்களை பிரிக்கிறது. தூய கூடை, பண்வின் கூடை என தமிழாக்கம். தூய கூடை தூய மெய் ஞானம் பற்றியது.  பண்வின் கூடை நடத்தை நெறிகள் பற்றியது. வினய பிடகம் பௌத்தநெறிகளில் எப்போதும் இரண்டாம் தரத்திலேயே வைக்கப் பட்டது

ஆகவே இந்திய மெய்ஞான மரபை பொறுத்தவரை ஒழுக்க நெறிகள் மட்டும் அல்ல அறநெறிகளும் கூட கால-இட எல்லைக்கு உட்பட்டவை. நிரந்தரம் அற்றவை. மெய் ஞானம் கால, இட அடையாளம் அற்றது. அழிவற்றது, மாற்றமற்றது.

ஞானிகள் மெய்ஞானத்தின் முழுமை நிலையில் நின்று கீழே பார்க்கிறார்கள். நாம் பிள்ளைகள் விளையாடுவதை பார்க்கிறோம். அவர்கள் செய்யும் பிழைகள் எல்லாம் நமக்கு பிரியத்துக்குரியச் சின்ன விஷயங்களாகவேப் படுகின்றன. நம் வாழ்க்கையை ஞானிகள் பிள்ளை விளையாட்டாகவேப் பார்க்கிறார்கள். நம்முடைய பிழைகளும், மீறல்களும் எல்லாமே அவர்களுக்கு ஒரு பொருட்டாக படுவதில்லை

கட்டுக் கோப்பான வாழ்க்கை என்பது ஒரு சூழலில் நாம், நம் அகத் திறன் சிதறிப் போகாமல் திரளவும், நம் செய்கையால் பிறரது வாழ்க்கையில் தீங்கு விளையாமல் இருக்கவும், நாம் மேலான சமூகமாக ஒருங்கு திரண்டு வாழவும் தேவையான நெறிகளால் ஆனது. அது அவசியம். அதில் இருந்தே நாம் அடுத்த படிகளில் ஏற முடியும். ஆனால் ஏறும் படிகள் முழுக்க அதனால் ஆனது அல்ல.

பதஞ்சலி யோக சூத்திரத்தில் யோகம் செய்வதற்கான ஆரம்பக் கட்ட நிலைகளில் யமம்-நியமம் என்று சொல்லப் படுகிறது. அகம் சார் கட்டுப்பாடுகள், உடல் சார் கட்டுப்பாடுகள். அவை யோகத்துக்கான அகத் திறனையும் உடல்த் திறனையும் வளர்க்கும். ஆனால் யோகம் அறியத் தரும் ஞானம் என்பது அந்த ஒழுக்கத்தாலானதல்ல.

ஜெ

பின்னூட்டம்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s