சேட்டை

சேட்டை

ஜெயமோகன்.இன் ல் இருந்து

புதுமைப்பித்தனின் முடிவடையாத நாவலான சிற்றன்னையில் பேராசிரியர் சுந்தர மூர்த்தி மறுமணம் செய்துகொள்ளும்போது முதல் தாரத்துக் குழந்தை சிற்றன்னையை அக்கா என்று கூப்பிடுகிறது. ‘அக்கா என்று சொல்லக்கூடாது சித்தி என்று சொல்லவேண்டும்’ என்று கண்டிக்கிறார் பேராசிரியர். பின்னர் ஒருநாள் சித்திக்கும் குழந்தை குஞ்சுவுக்கும் பூசல் வருகிறது. பூனையை தூக்கி மேலே போட்டுவிடுவேன் என்று கடுமையாகப் பயமுறுத்துகிறாள் சித்தி. குஞ்சு கடும் துவேஷத்துடன் ”அக்கா” என்று சித்தியைச் சொல்கிறாள்

”சொல்லுவியா அப்டி சொல்லுவியா?” என்று கேட்டு கமலம் கடுமையாகப் பயமுறுத்த திரும்பத் திரும்ப அக்கா அக்கா என்றே சொல்லிக்கொண்டிருக்கிறது குழந்தை. அவள் உச்சகட்டமாக பயமுறுத்த, அஞ்சி அலறி விழுந்து காய்ச்சல் கண்டு படுத்துவிடுகிறது. சுந்தரமூர்த்தி குழந்தையை அவள் பாட்டியிடமே விட்டுவிடுவதற்காகக் கொண்டு செல்லும்போது நாவலை முடிக்காமல் விட்டுவிட்டு புதுமைப்பித்தன் இறந்துவிட்டார்.

கமலாவிடம் ”நீ ஏன் அப்படி கோபித்துக்கொண்டாய்?” என்கிறார் பேராசிரியர். ”அக்கா என்றால் மூதேவி இல்லையா? அப்படி என்னைச் சொல்லி அவள் திட்டினாள்”என்கிறாள் மனைவி. ”நீ ஏன் அப்படிச் சொன்னாய் ?”என்று குஞ்சுவிடம் கேட்டபோது ”நீ அன்னிக்குச் சொன்னியே அப்டி கூப்பிடப்படாதுன்னு … அதான்”என்கிறது குழந்தை. சொல்லக்கூடாது என்று விலக்கப்பட்ட சொல் வசையாகத்தானே இருக்க வேண்டும்?

முடிக்கப்படாத அந்நாவலில் மிக முக்கியமான திருப்புமுனைப்புள்ளி அது. ஒருபோதும் சரிசெய்ய முடியாத ஒரு பிளவு இருவருக்கு இடையே உருவாகி விட்டது.முற்றிலும் தற்செயலாக! வாழ்க்கையின் விளங்கிக்கொள்ள முடியாத நூல்கண்டுச் சிக்கலில் முதல் முடிச்சை வெற்றிகரமாக போட்ட புதுமைப்பித்தன், எழுதப்பட்டிருந்தால் தமிழின் மகத்தான நாவலாக ஆகியிருக்கக் கூடிய ஒரு படைப்பை நம் கற்பனைக்கே விட்டுச்சென்றார்.ஆனால் அக்கா என்று ஏன் மூதேவியைச் சொல்கிறார்கள்?

பின்னர் ‘வத்ஸலா’ எழுதிய ஒரு மலையாளநாவலில் ஒரு இடத்தைப் படித்தேன். இளம் நம்பூதிரிப்பெண்ணை முதிய நம்பூதிரி மணம்செய்துகொள்வார். முதலிரவில் அவளை தழுவித்தழுவிப்பார்ப்பார். தன்னால் முடியவில்லை என்ற எண்ணம் வந்ததும் எழுந்து அமர்ந்து அவளை நோக்கி ”சேட்ட” என்பார். அவள் பாய்ந்து எழுந்து ”யாரு நானா? நானா?”என்று ஆவேசமாகக் கேப்டாள். அவர் பேசாமல் விக்கித்து அமர்ந்திருக்க, அவள் எழுந்து உடைகளை போட்டுக்கொண்டு வெளியே சென்றுவிடுவாள். அதன் பின் அவர் கிட்டத்தட்ட அவளுக்கு அடிமையைப்போலவே இருப்பார்.

அவள் அப்படி என்னதான் சொன்னாள் என்று எனக்கு விளங்கவில்லை. மலையாளத்துப் பேச்சுவழக்கில் சேட்டன் என்று அண்ணனைச் சொல்வார்கள். தன்னைவிட மூத்த எவரையும் சேட்டன் என்றும் சேட்டத்தி என்றும் அழைக்கலாம். ஜ்யேஷ்ட என்றால் சம்ஸ்கிருதத்தில் மூத்த என்று பொருள். அதன் மருவிய வடிவம் அச்சொற்கள். சேட்ட என்று ஏன் முதுநம்பூதிரி அவளைக் கூப்பிட்டார். அது எப்படி ஒரு வசை ஆகியது?

அச்சொல்லைப் பின் தொடர்ந்து சென்றேன். வெட்டம் மாணி தொகுத்த ‘புராணிக் என்ஸைக்ளோபீடியா’ மலையாளத்தில் உள்ள ஒரு மாபெரும் தகவல் களஞ்சியம். அதில் சேட்ட என்ற சொல் இல்லை. அகராதிகளிலும் இல்லை. சரி என்று ஜ்யேஷ்ட என்ற சொல்லைப் பார்த்தேன். ஐயம் தெளிந்தது.

ஜேஷ்டை என்றால் ஒரு பெண் தெய்வம். அமங்கலங்களின் தெய்வம் இது. தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது அதில் திரண்டு வந்த முதல் தேவதை இவள்தான். மங்கலங்களின் தெய்வமாகிய லட்சுமிதேவி அல்லது ஸ்ரீதேவி அதன்பின்னர்தான் அமுதுடன் வந்தாள். ஆகவே இவளுக்கு மூத்தவள் என்ற பொருளில் ஜேஷ்டை என்றபெயர் வந்தது. மூத்த தேவி என்ற பொருளில் இவளுக்கு மூதேவி என்றும் பெயர் உண்டு.

சாக்த மத நூலான போதாயனஸ¥த்ரத்தில் இந்த தேவியை எப்படி பூசைசெய்ய வேண்டுமென்று சொல்லப்பட்டிருக்கிறது, இந்த தேவியின் பல சிற்பங்கள் கிடைத்துள்ளன என்று சொல்லும் வெட்டம் மாணி தொண்டரடிப்பொடியாழ்வார் ஒருபாடலில் மூதேவியை வழிபடுவது வீண் என்று சொல்லியிருக்கிறார் என்கிறார். பத்தாம் நூற்றாண்டுக்குப் பின் ஜேஷ்டை வழிபாடு அனேகமாக காணப்படுவதில்லை, சைவ புராணங்களில் ஜேஷ்டை பார்வதியின் ஒன்பது தோற்றங்களில் ஒன்றாகச் சொல்லப்படுகிறாள் என்கிறார் வெட்டம் மாணி.

தமிழில் நாம் சாதாரணமாகப் பயன்படுத்தும் ‘சேட்டை’ என்ற சொல்லின் வேர் எது என்று புரிந்தது. அபிதான சிந்தாமணியை பார்த்தேன். இவள் முதலில் ஆதிசக்தியில் அவளுடைய ஒரு தோற்றமாகப் பிறந்து பின்னர் திருப்பாற்கடலில் தோன்றியவள் என்கிறார் சிங்காரவேலு முதலியார். இவள் கன்னங்கரிய நிறமும், பாம்பு ஆயுதமும், கழுதை வாகனமும் கொண்டவள். இத்தகவலை சுப்ரபோதம் என்ற பழைய நூலில் இருந்து அவர் எடுத்திருக்கிறார்.

மூதேவி அரசு மற்றும் விளா மரத்து அடியில் இருப்பாள். மனிதர்களின் நிழல் வழியாக நடமாடுவாள். இரவு அவளுக்கான நேரம் ஆசாரமில்லாத வேதியரின் நிழல், உண்ட எச்சில் இலை, ஆடை கழுவிய தண்ணீர், விளக்குமாற்றின் புழுதி, மயிர்க்குப்பை, கழுதை, நாயின் புழுதி, வெந்த சாம்பல், ஆட்டுப்புழுதி போன்றவை இவள் இருக்கும் இடங்கள் என்று சிங்காரவேலு முதலியார் அண்ணாமலையார் சதகத்தை ஆதாரமாகக் காட்டிச் சொல்கிறார்.

இவளுக்கு மூத்தாள் என்றும் பெயருண்டு. அக்கா என்றும் இவளை பேச்சு வழக்கில் சொல்வதுண்டு. இவளுக்கு காகம் கொடியாக இருக்கிறது. இவள் தூக்கத்தையும் சோம்பலையும் வரவழைக்கும் தேவி. பதினான்கு வருடம் கண்துயிலா விரதம் எடுத்து ராமனுடன் காட்டுக்குச்செல்லும் லட்சுமணன் கங்கை கரையில் இருக்கையில் மூதேவி வந்து அவனை தழுவப்பார்க்கிறாள். நான் அயோத்தி திரும்பும்போது வா என்று சொல்லி அனுப்புகிறான் லட்சுமணன்.

பத்மநாபபுரம் அரண்மனை அருங்காட்சியகத்தைப் பார்த்துக்கொண்டு சென்றபோது ஜேஷ்டை என்று எழுதி வைக்கப்பட்ட சிற்பத்தைக் கண்டேன். சாமுத்ரிகா லட்சணம் என என்னென்ன சொல்லப்படுகின்றனவோ அவற்றுக்கு நேர் எதிரான சிலை. சப்பை மார்பு, பெருத்த இடுப்பு, சூம்பிய பிருஷ்டம், மழுங்கிய மூக்கு. அவலட்சணமே உருவமான ஓர் உருவம்.

ஆனால் அவள் சப்த மாதாக்களில் ஒருவராக வரிசையில் அமர்ந்திருந்தாள். ஜேஷ்டா, பிராம்மணி, மகேஸ்வரி, வைஷ்ணவி,கௌமாரி, வராஹி, சாமுண்டி ஆகியோர் சப்தமாதாக்கள். இந்த பட்டியல் சில இடங்களில் மாறுபடுகிறது. இந்திராணியும் இப்பட்டியலில் யாராவது ஒருத்திக்குப் பதில் சேர்க்கபப்டுகிறார். இவர்களில் வராஹி பன்றி முகம் உடைய தேவதை. சாமுண்டி பேய்வடிவம் கொண்டவள். மண்டையோடுகளை மாலையாக்கி சுடுகாட்டில் அமர்ந்திருப்பவள்.

சக்திபுராணத்தின்படி இந்த ஏழு அன்னையரும் பராசக்தியில் இருந்து உருவெடுத்தவர்களே. ஏழு அசுரர்களை அழிப்பதற்காக அன்னை இந்த ஏழு வடிவையும் அளித்தார். ஏழன்னை வழிபாடு என்ற பேரில் சாக்த மதத்தில் இவ்வேழு சிலைகளையும் வரிசையாக அமைத்து வழிபடும் வழக்கம் இருந்தது. சாக்தத்தின் தாய்நிலங்களில் ஒன்றான கேரள மண்ணில் இன்றுள்ள பகவதி கோயில்கள் பலவற்றில் ஏழன்னை சிலைகள் உள்ளன.

ஆனால் ஏழன்னை வழிபாடு சாக்த மதத்துக்கும் முந்தையது. பத்மநாபபுரம் கோட்டையும் அரண்மனையும் எட்டாம் நூற்றாண்டு முதல் உள்ளன. ஆனால் அங்குள்ள பெரிய குளமும் அதற்குப் பின்னால் உள்ள பெரிய பாறையும் அந்த ஊர் உருவாவதற்கும் முந்தையவை. அந்த பாறை குளத்துக்குள் மூழ்காமலிருக்கும்போது பார்த்தால் அதில் சிறிதாக ஏழன்னையர் சிலை இருப்பதைக் காணலாம். அவை மேலும் ஐந்தாறு நூற்றாண்டு பழக்கம் கொண்டவை என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

ஏழன்னையர் வழிபாடு என்ற பேரில் தொல்பழங்காலம் முதல் இந்தியாவெங்கும் இருந்த வழிபாட்டுமுறை மெல்ல சமணத்துக்குள் நுழைந்து சமண தத்துவ மையத்தின் அங்கீகாரம் இல்லாத ஒரு சிறுவழிபாடாக நீடித்தது. சமணம் அழிந்தபின் சாக்த மதத்துக்குள் நுழைந்தது. பின்னர் சக்திவழிபாட்டில் கரைந்து தன் தனித்தன்மையை இழந்தது. இருந்தாலும் கேரளத்தில் பல குடும்பங்களுக்கு குலதெய்வமாக ஏழன்னையர் உள்ளனர்.

அப்படியானால் ஏழன்னையரின் தொடக்கம் எது? மூதேவி எப்படி உருவானாள்? நன்மை, அழகு, மேன்மை ஆகியவற்றுக்கு இணையாகவே தீமை, கோரம், கீழ்மை ஆகியவற்றையும் வழிபடும் ஒரு வழக்கம் உலகமெங்கும் பழங்குடியினரிடம் உண்டு. பழங்குடி மனம் இயற்கையிலிருந்து நேரடியாகவே பெற்றுக்கொண்ட அடிப்படை மெய்ஞானம் அது. இயற்கை நன்மைதீமை இரண்டாலும் சமன்செய்யப்பட்டுள்ளது. கறுப்பு வெளுப்பு இரண்டையும் பிரிக்க முடியாது. இயற்கையின் உள்ளுறையாக உள்ள தெய்வீகம் என்பது இவ்விரண்டின் கலவையே.

மேலும் தெய்வங்களைப் பெண் வடிவில், அதிலும் அன்னை அவ்டிவில் உருவகிப்பதும் பழங்குடியினரின் ஆன்மீகதரிசனமே. ஆக்கும் வல்லமை கொண்ட இயற்கையின் பெரும் சக்தியை பெண்ணாகப் பார்ப்பதே அவர்களின் இயல்பாகும். அழகு, ஒளி, இரவு, பகல், அந்தி, அதிகாலை, பருவகாலங்கள் என இயற்கையை பெண்ணாக உருவகிப்பதை நாம் ரிக் வேதம் முதலே காணலாம். தொன்மையான தென்நிலத்து வழிபாடுகளில் அன்னையே பெருந்தெய்வம். குகைகளில் அவளை ஓவியமாக வரைந்து வைத்து வழிபட்டதே நம் ஆலய வழிபாட்டின் முதல் வடிவமாகும். ‘குடைவரை எழுதிய தொல்தமிழ்ப்பாவை’ என்று புறநாநூறு இதைக் குறிப்பிடுகிறது.

இவ்வாறு இருளும் ஒளியுமாக உருவகிக்கப்பட்ட ஏராளமான தேவியரில் இருந்து எடுத்துச் சேர்க்கப்பட்டவர்கள்தான் ஏழு கன்னியர் அல்லது ஏழு அன்னையர். ஏழு என்ற எண் தாந்த்ரீகர்களுக்கு முக்கியமானது. ஆகவே பழங்குடி வழிபாட்டில் இருந்து தொன்மையான தாந்த்ரீக வழிபாட்டு முறையால் உருவாக்கப்பட்ட வழிபாடே ஏழு கன்னியர் என்று சொல்லலாம்.ஏழு கன்னியரின் பட்டியலில் காலம்தோறும் ஊர் தோறும் மாறுதல் இருப்பது இதை உறுதி செய்கிறது. தாந்த்ரீகர்களுக்கு ஏழு என்ற எண்ணிக்கையும் அதற்குரிய குணங்களை கொண்ட தெய்வ வடிவங்களும் மட்டுமே முக்கியமாக இருந்துள்ளன.

சேட்டை அல்லது மூதேவியின் பிறப்பு வேளாண்மையுடன் தொடர்பு கொண்டதாக இருக்கலாமென்று படுகிறது. ஏனென்றால் ஏழுகன்னியரில் நால்வர் வேளாண்மையுடன் நேரடி தொடர்புகொண்டவர்கள். விவசாய நிலத்திலும் களஞ்சியத்திலும் பழையன போக்குதல் ஒரு பெரும் சடங்கு. குப்பைகளை எரித்து அழித்தலுக்குரிய தெய்வமாக சேட்டை இருந்திருக்கலாம். அதற்காக அவளை வயலோரமாக ஆலமரத்தடியில் நிறுவி வணங்கியிருக்கலாம். குமரிமாவட்டத்தில் சேட்டை சிலை எப்போதுமே வயலில்தான் கிடைத்துள்ளது.  சேட்டை குப்பைக்குரிய தேவதை என்பதை அவள் இருப்பிட வருணனைகள் காட்டுகின்றன. அவள் வருணனின் மனைவி. மழை பழையன கழிக்கும் சக்தி அல்லவா? காகமும் கழுதையும் குப்பைகளை நீக்கக் கூடியவை.

இயல்பான அக உந்துதலால் பழங்குடிகள் அடையும் ஞானத்தையே பின்னர் மதங்கள் தத்துவப்படுத்துகின்றன. தாந்த்ரீகர்களின் ஏழு எண்ணிக்கையில் தெளிவான தத்துவப்படுத்தல் உள்ளது. ஏழுவகை குணங்கள், ஏழுவகை அறிதல்கள், எழுவகை வெளிப்பாடுகள் என அவற்றைப் புரிந்துகொள்ளலாம். ஏழு வகையான குறியீடுகள் அவை. சிற்பங்களைக் காண்கையில் ஒன்று தெளிவாகத் தெரிகிறது. ஜேஷ்டை, வராஹி, சாமுண்டி ஆகிய தேவியர் எதிர்மறைப்பண்பு கொண்டவர்கள். பிற நால்வரும் நேர்நிலைப்பண்பு கொண்டவர்கள். அதாவது நன்மைக்கு தீமையைவிட ஒரு படி அதிகம், அவ்வளவுதான்.

பின்னர் இந்த அனைத்துப் பண்புகளுமே பராசக்தி என்ற ஒற்றைப் பெருந்தெய்வத்தின் குணங்களாக வகுக்கபப்ட்டன. சாக்தமதம் வலுவாக உருவாயிற்று. ஸ்ரீதேவியும் மூதேவியும் சக்தியே என்ற ஒருமைத்தரிசனமே சாக்தமதத்தின் மையம். பின்னர் சாக்த மதம் சைவத்துடன் இணைந்து கொண்டது. இவ்விணைவு சைவமும் வைணவமும் பேருருவம் கொண்டு எழுந்த பத்தாம் நூற்றாண்டுக்குப் பின்னர் நிகழ்ந்தது. சக்தி சைவ மதத்தில் சிவனின் துணைவியாக உருவம் கொண்டாள். இதையொட்டித்தான் சிவசக்தி மோதலைச் சொல்லக்கூடிய பல புராணக் கதைகள் உருவாயின.

தாந்திரீக மதங்கள் முன்வைத்த சடங்கு-தியானம் இணைந்த வழிபாட்டுமுறையை முழுமையாக நிராகரித்து சமர்ப்பணம் ஆராதனை ஆகியவை கொண்ட பக்தியை முன்வைத்தது பக்தி இயக்கம். இக்காலகட்டத்தில் தாந்திரீக வழிபாட்டு முறைகள் நிராகரிக்கபப்ட்டு மெல்லமெல்ல வழக்கொழிந்தன. சக்தி வழிபாடு பக்திமரபுக்குள் நீடித்து நின்றது, சக்தியின் பலநூறு ரூபங்களாக மட்டும் பிற அன்னையர் எஞ்சினார்கள். கௌமாரி மகேஸ்வரி போன்ற பெயர்களை நாம் சக்திதுதிகளில் மட்டுமே இன்று கேட்க முடியும். மூத்தாள் வழிபாடும் இவ்வாறாக மறைந்து மொழியில் மட்டும் வசைகளாக எஞ்சியது

இக்காலத்தில் பாலாழி கடைந்த கதைக்கு தியான மரபு சார்ந்து உபரி அர்த்தம் அளிக்கப்பட்டது. பெருமாள் பள்ளிகொண்டிருக்கும் பாற்கடல் மானுட அகமேதான். அசுர சக்திகளும் தேவ சக்திகளும் சேர்ந்து அதைக் கடையும்போது முதலில் வந்தது கடும் விஷம், வாசுகி கக்கிய விஷம். அதை பெருமானே உண்டு ஆலாலகண்டன் ஆனார். அடுத்துவந்தவள் மூதேவி. இருளின் துயிலின் சோம்பலின் தேவி. பின்னர்தான் அமுதத்துடன் ஸ்ரீதேவி வந்தாள்.

எல்லா தியான மரபுகளிலும் இக்கதை கற்பிக்கப்படுகிறது. தியானம் அதன் முதல் வாசலைத் திறக்கையில் எழுவது கடும் விஷமே. பின்னர் இருண்மை. அதன் பின்னர்தான் அமுதம். அழியாமையை அளிக்கும் உணவு. ஆகவே சேட்டைகளைப்பற்றி வருந்த வேண்டியதில்லை. தீதும் நன்மைக்கே.

பின்னூட்டம்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s