சேட்டையும் பரிணாமமும்-கடிதம்

சேட்டையும் பரிணாமமும்-கடிதம்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

திரு ஜெமோ

நலமா ? சேட்டை படித்தேன் . நல்ல வலுவான பின்னணி கொண்ட கட்டுரை. இந்த சப்த மாதர் இன்னும் விரிவாக இருக்கும் என்று படுகிறது. கீதையில் பத்தாம் அத்தியாயத்தில் “கீர்திர் ஸ்ரீ வாக்ச நாரீனாம் ச்ம்ருதிர் மேதா த்ருதி க்ஷமா ” (பெண்களில் நான கீர்த்தி, வாக், ஸ்ரீ, ஸ்ம்ருதி, மேதா , த்ருதி , க்ஷமா ஆக ஆவேன் ” என்று கூறிக் கொள்கிறார். இன்னொரு கோணத்தில் அது பெண்களின் குணம் கூட. (புகழ், செல்வம், சொல் வன்மை, நினைவாற்றல், அறிவாற்றல், உறுதி, பொறுமை )

இன்னொன்று நான காயத்ரி பரிவார் (ரிஷி கேசம் ) அமைப்பின் எளிய காயத்ரி ஹோமம் என்ற கைப் புத்தகத்தில் கண்டது. அதில் தேவ ஆவாகனத்தில் சப்த மாதர் ஆவாஹனை (அழைப்பு) உண்டு. அதில் உள்ள ஸ்லோகம் இது
கீர்திர் லக்ஷ்மீர் தருதிர் மேதா சித்தி : ப்ரஜ்ஞாம் சரஸ்வதி |
மாங்கல்யேஷு ப்ரபுஜ்யாச்ச சப்தைதா திவ்ய மாதர: ||

இதில் பிரஜ்னையும், சித்தியும் ஸ்ம்ருதி க்கும் , பொறுமைக்கும் பதிலாக வந்துள்ளனர். (ஸ்ரீ – லக்ஷ்மி, வாக்- சரஸ்வதி ).

இந்த விஷயங்கள் வேத காலத்தில் இருந்தே வருவதாக ஸ்ரீ ராம் சர்மா கூறுகிறார்.

வேதக் கருத்துக்கள் வலுவிழந்த காலத்தில் இந்த ஏழு குணங்களும் ஏழு பெண்களாக வடிவம் கொண்டிருக்கலாம். தங்கள் கொள்கைப் படி நேர்மாறாகக் கீழிருந்து மேல் என்று தான் படிக்கிறேன். அதாவது பழங்குடித் தொன்மத்தில் இருந்து செம்மைப் படுத்தப் பட்ட வேதங்கள் வரை என்று .

இன்னொன்று தாங்கள் கூறுவது எனக்குப் புரியவில்லை. இக்கட்டுரையில் சாக்த மதத்தில் சிவன் நுழைந்தது பத்தாம் நூற்றாண்டுக்குப் பின் என்று எழுதியுள்ளீர்கள். சௌந்தர்ய லஹரி ஏழாம் நூற்றாண்டு சங்கரரால் இயற்றப் பட்டது . அதில் முதல் வார்த்தையே சிவ என்பது. மேலும் அதில் சிவன் எவ்வாறு சக்தியில்லாமல் அசையக் கூட முடியாதவர் என்று வருகிறது. சாக்த மதத்தில் சக்தி பரமாத்மா . சிவன் ஜீவன். சங்கரருக்கு முன்னாலேயே தேவி பாகவதம் இருந்தது.

இன்னொரு விஷயம் தந்திரங்களின் காலம் பத்தாம் நூற்றாண்டுக்கு முன்பு என்று தான் படித்த நினைவு. பக்திக் கால கட்டம் நாலு- ஐந்து நூற்றாண்டு காலகட்டத்தில் இருந்து ஆரம்பம் . (அப்பர் ஐந்தாம் நூற்றாண்டு). பக்திக் கால கட்டத்தை மிகவும் பின்பட்டதாக நீங்கள் உட்படப் பலரும் கூறுகிறீர்கள். இது குறித்து சரியான தகவல் உள்ளதா ?

வேங்கடசுப்ரமணியன்

அன்புள்ள வெங்கட சுப்ரமணியன்,

இந்திய வழிபாட்டு மரபில் நாட்டார் வழியிலும் சரி வைதிக வழியிலும் சரி அன்னைவழிபாடும், கன்னி வழிபாடும் மிக ஆரம்ப காலத்திலேயே இருந்தன என்று சிலைகளும் நூல்களும் காட்டுகின்றன. அவற்றிலிருது ஏழு அன்னை அல்லது ஏழு கன்னி என்ற தொகுப்பு எப்போது வந்தது என்பதே கேள்வி.

பழங்குடி மதத்தில் மூதாதை வழிபாட்டில் இருந்து அன்னையர் கன்னியர் உருவானார்கள். வைதிகமரபு விழுமியங்களைப் பெண்களாக உருவகிக்கும் போக்கு கொண்டதாகையால் அவ்வாறு நிறைய அன்னையரும் கன்னியரும் உருவாகியிருக்கலாம். இவ்விரு மரபுகளும் கொண்டும் கொடுத்தும் வளர்ந்திருக்கலாம். இந்தப் பெண்தெய்வங்களில் இருந்து ஏழு அன்னையர் என்ற கருத்து உருவாகியிருக்கலாம்.

கீதை சொல்லும் ஏழு கன்னிகள் ஏழு விழுமியங்களே.பல்வேறு மந்திரங்களில் வேறுவேறு ஏழு அன்னைகளையோ கன்னிகளையோ சொல்லும் வழக்கம் உண்டு. சமணர்களும் பௌத்தர்களும்கூடத்தான். இந்த ஏழு அன்னையரின் தோற்றம் சமணம் தோன்றும் காலம், அதாவது கிமு நான்கு, அல்லது அதற்கும் முன் என நான் ஊகிக்கிறேன்.

சாக்தமதத்தில் சிவன் நுழைந்தது பத்தாம் நூற்றாண்டுக்குப்பின் என நான் சொல்லவில்லை. சாக்தமும் சைவமும் ஒன்றே என ஆனது பத்தாம்நூற்றாண்டுக்குப் பின் என்றே சொல்கிறேன். அதற்கு நெடுங்காலம் முன்னரே சாக்தம் இருந்தது அதில் சக்திக்கு கட்டுப்பட்ட தெய்வமாக சிவன் இருந்தார். சைவம் இருந்தது அதில் சிவனின் துணையாக தேவியும் இருந்தாள். இரு மதங்களும் இணைந்தபின்னரே சிவசக்தி இணைப்புக்கு இன்றைய தத்துவ அழுத்தம் அளிக்கப்பட்டது.

பக்திக் காலகட்டத்தைப் பொதுவாக நம்மாழ்வாரில் இருந்து ஆரம்பிப்பது மரபு. ஆறாம் நூற்றாண்டு வாக்கில்.ஆனால் அது வலுவாக வேரூன்றியது பிற்கால சோழ பாண்டியர்களின் காலகட்டத்தில். அதாவது எட்டாம்நூற்றாண்டில் இருந்து பத்தாம் நூற்றாண்டு வரை. இக்காலகட்டத்திலேயே பக்தி இயக்கம் பௌத்த சமண மதங்களை வென்று தன்னை நிலைநாட்டிக்கொண்டது. பேராலயங்களும் திருவிழாக்களும் புராணங்களும் எல்லாம் உருவாக ஆரம்பித்தன

தெற்கில் இருந்து பக்திமார்க்கம் வடக்கே செல்ல ஆரம்பித்தது ராமானுஜரின் காலத்தை ஒட்டி. அதாவது பன்னிரண்டாம் நூற்றாண்டுக்குப்பின்னர். வட இந்தியாவில் பக்திமார்க்கத்தின் பொற்காலம் வல்லபர், கபீர் , குருநானக்,சைதன்யர் போன்றவர்களின் பதினைந்தாம் நூற்றாண்டுதான்.

ஜெ

மதிப்பிற்குரிய திரு ஜெயமோகன் அவர்களுக்கு

தங்கள் பதில் கண்டு மிக மகிழ்ச்சி அடைந்தேன். அதுவும் உடனே பதில் எழுதியதற்கு நன்றி. மிக விரிவாக விளக்கி உள்ளீர்கள். சில விளக்கங்கள் விஷ்ணு புரத்திலும் ஞான மரபின் ஆறு தரிசனங்கள் புத்தகங்களில் படித்தது நினைவுக்கு வருகிறது..

ஆன்ம வளர்ச்சியில் , நமது உடல்கள் வெறும் கூடுகள், ஆன்மா, உடல் அழியும் போது ஒரு கூட்டில் இருந்து இன்னொரு கூடுக்குள் நுழைகிறது என்ற நோக்கில் பார்க்கும் போது , டார்வின் கூடுகளின் பரிணாம வளர்ச்சி பற்றிக் கூறுகிறார் , இந்திய மதங்கள் அந்தக் கூடுகளில் நிறைந்து , மேலான ஒரு நிலையை அடைய விழையும் ஆன்ம வளர்ச்சி பற்றிக் கூறுகின்றன எனலாமா?

தங்களின் வாழ்வின் பொருள் பற்றிய பதிலில் வைசேஷிக மதத்தில் வரும் “ஒளியினால் கண் உண்டாயிற்று ” விளக்கத்தைப் பார்த்ததும் இதுவும் பரிணாம வளர்ச்சியை பற்றி தான் பேசுகிறதோ என்ற எண்ணம் ஏற்பட்டது !! அது மேலும் வளர்ந்து , மனிதனின் கண்கள் குறிப்பிட்ட ஒளி அலை வரிசை மட்டும் பார்க்க முடிவது கூட , மனிதன் (மனிதனின் மூதாதையர் ) தோன்றிய காலத்தில், இந்த அலைவரிசைகள் தான் பூமியின் மேல் அதிகமாக விழுந்திருக்குமோ ? என்ற எண்ணங்கள் தோன்றுகின்றன!!

பதில் எழுத நேரம் ஒதுக்கியதற்கு மீண்டும் நன்றி. பிறகு மீண்டும் எழுதுகிறேன்..

அன்புடன்
வெண்ணி

பின்னூட்டம்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s