செயலே விடுதலை:சாங்கிய யோகம் – 2

செயலே விடுதலை:சாங்கிய யோகம் – 2

ஜெயமோகன்.இன் ல் இருந்து

[அருகர்களின் பாதை – டோலாவீரா , நண்பர்களுடன் ]

நிரந்தரத்தன்மையின் தரிசனம்

அலைகள் கடலை மாற்றியமைப்பதில்லை. அலை கடல் என்றும் நிரந்தரத்தின் உள்ளே நிகழுபவை மட்டுமே உயிர்கள் ஆற்றும் அத்தனைச் செயல்களும், அவை ஆக்கமானாலும் சரி அழிவானாலும் சரி, பிரபஞ்சம் என்ற நிரந்தரத்தின் உள்ளே நிகழும் அலைகள் மட்டுமே. பிரபஞ்சம் என்பதை ஒரு ஒற்றைப் பெருநிகழ்வாகக் கொண்டால் இவையெல்லாம் அப்பெருநிகழ்வின் சிறு சிறு துளியே.

இதோ இதை எழுதிக்கொண்டிருக்கும் எனக்குள் கோடானுகோடி செயல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. என் செல்கள் உண்டு உயிர்த்து இயங்குகின்றன. என் மூளை நியூரான்கள் மின்னூட்டம் பெற்றும் அணைந்தும் செயல்படுகின்றன. எனக்குள் கோடானு கோடி வைரஸ்கள் பிறந்திருக்கின்றன. கோடானுகோடி பாக்டீரியாக்களுடன் வெள்ளை அணுக்கள் சமர்புரிகின்றன. அவையெல்லாம் என் இயக்கத்தில் துளியிலும் துளியினும் துளிகள்.

அப்படியானா¡ல் அவை ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம்? அவை ஒவ்வொன்றும் தங்கள் பிறப்பின் நோக்கத்தையும் செயலின் விளைவுகளையும் புரிந்து கொள்ள முடியுமா ? என் ‘செயல்’ அவற்றுக்கு விடப்பட்டுள்ள  நியதியின் ஆணை. அதை அவை ஆற்றுகின்றன. பாக்டீரியாக்களை சூழ்ந்து அழித்து தானுமழியும் ஒரு வெள்ளை அணு கொல்வதையும் கொல்லப்படுவதையும் பற்றி சிந்திக்க முடியுமா? அது எதையாவது தீர்மானிக்க முடியுமா?  நியதியின் அனுமதி உண்டா அதற்கு? பிரபஞ்சப் பெருவிரிவின் முன் வைத்துப் பார்த்தால் ஒரு மனித உயிருக்கும் ஒரு வெள்ளை அணுவின் உயிருக்கும் என்ன வேறுபாடு? ஒரு வைரஸ¤க்கும் நமக்கும் அப்படி என்னதான் தூரம்?

எப்போது ஒர் நிரந்தரத்தன்மையை நாம் நம் உள்ளும் புறமும் உணர்கிறோமோ அப்போதே நம்முடைய செயல்களில் நாம் கொள்ளும் மீத மிஞ்சிய ஈடுபாடு அழிகிறது. நான் இதை ஆற்றுகிறேன் என்றும் தன் முனைப்பு சுருங்கிச் சுருங்கி இல்லாமலாகிறது. சாங்கியஞானம் என்று கீதை வலியுறுத்துவது இந்த நிரந்தரத்தன்மையையே. இந்த நிரந்தன்மையை விளக்கும் முகமாகவே ஆத்மாவின் அழிவின்மையை கீதை எடுத்துரைக்கிறது.

இன்னொரு கோணத்தில் பார்த்தால் சாங்கிய யோகம் பிறப்பு இறப்பு என்ற ஓயா அலையையும், அதில் பிறவிச்சுழற்சி மூலம் ஆத்மா அழியாதிருக்கிறது என்ற நம்பிக்கையையும் தொட்டுக் காட்டுகிறது. ஒரு நவீன வாசகன் கருத்தில் கொள்ள வேண்டிய மையம் இது. அவனால் ஒருவேளை பிறவிச் சுழற்சியையும், அழிவிலா ஆத்மாவையும் ஏற்க முடியாது போகலாம். என்னைப் பொருத்தவரை இவற்றை உறுதியாக நம்புவதற்கு ஏற்ற தர்க்கங்களும் ஆதாரங்களும் எனக்கு இதுவரை இல்லை. அவை இல்லாதது வரை கிருஷ்ணனே சொன்னாலும் ஏற்க முடியாது என்று கூறும் உரிமை இந்துவாகிய எனக்கு கிருஷ்ணனால் அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே அவற்றை ஏற்றுக்கொண்டு நான் மேலே சிந்திக்கவில்லை. மாறாக இங்கு பேசப்படுவது ஒரு நிரந்தரத்தன்மையைப் பற்றி மட்டுமே என்று எடுத்துக்கொண்டு மேலேசிந்திக்க முற்படுகிறேன். வாசகர்கள் தங்கள் வாழ்வை முன்வைத்து இதைப்பற்றி யோசிக்கலாம்.

மனிதனின் சிந்தனை இரு எல்லைகளைத் தொட்டு ஆடிக்கொண்டிருக்கிறது என்று தனிப்பட்ட முறையிலும் இலக்கியவாதியாகவும் நான் உணர்வதுண்டு. ஒன்று நிதரிசனத்தின் தளம். அத்தனை பேரும் அறிந்தவற்றினால் ஆவது இது. இங்கிருந்து தன் உள்ளுணர்வால், கற்பனையால் தர்க்கத்தால் பறந்தெழும் மானுட மனம் சென்று தொடும் ஆழ்தளம் ஒன்று உள்ளது. இது மிக மிக அந்தரங்கமானது. இலக்கியப் படைப்பு என்பது அந்த ஆழ்தளத்தில் கண்ட உண்மையை மீண்டும் நிதரிசன தளத்திற்கு வந்து அங்குள்ள விஷயங்கைளை வைத்து சொல்ல முயல்கிறது. ஒரு புனைகதையின் புனைத்தளம் நிதரிசனம் சார்ந்தது. அதன் தரிசனதளம் அந்தரங்கமானது. தரிசனம் புனைவு மூலம் வெளிப்படுவதே இலக்கியம்.

நிதரிசன தளத்தில் நாம் காண்பது பிறப்பிறப்பு நிலையின்மை, பன்மை. நம்மைச் சுற்றி ஒவ்வொரு கணமும் உயிர்கள் தோன்றுகின்றன மறைகின்றன. பொருட்கள் உருவாகி உருவழிகின்றன. எதுவுமே நிலையில் இல்லை. பெளத்த சிந்தனை இந்த நிலையின்மை என்ற தரிசனத்தை ‘பிரதீத சமுத்பாதம்’ என்ற பேரில் பெரியதோர் தர்க்கக் கட்டுமானமாக வளர்த்தெடுத்து அதன் அடிப்படையில் பிரபஞ்ச இயக்கத்தையே விளக்க முற்பட்டது. நிலையின்மையின் இன்னொரு தோற்றமே பன்மை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு கணமும் பிறிதிலிருந்து பிரிந்து கொண்டே உள்ளன. ஒவ்வொரு கூறிலும் உட்கூறுகள் பிரிந்து சென்றபடியே உள்ளன. பிரபஞ்ச நிகழ்வு என்பதே முடிவிலாது பன்மைத் தோற்றம் கொள்வதுதான்.

இந்த நிதரிசனத்திலிருந்து பறந்தெழும் மனம் பிறப்பிறப்பின் ஆழத்தில் அமுதநிலையை (அமிர்தம் = அ+ம்ருதம். இறப்பின்மை அல்லது அழிவின்மை) கண்டடைகிறது. நிலையின்மையின் சாரமாக மாறுதலின்மையை கண்டடைகிறது. பன்மையின் உள்ளே ஒருமையை கண்டடைகிறது. ஆடும் அலைகளில் நிலையன பெருங்கடலைக் காண்பது போல!

நடராஜ குரு பல்வேறு உரையாடல்களில் வேடிக்கையாகவும் தீவிரமாகவும் இந்த விஷயத்தை பற்றிப் பெசியிருக்கிறார். ‘குருவும் சீடனும், ஞானத்தேடலின் கதை’ என்ற நூலில் வரும் நிகழ்ச்சி இது. தனித்த மலர் ஒன்றின் அழகில் மயங்கி நின்றபின் குரு சொல்கிறார். ”தனித்த மலரைப்பற்றி யார் எழுதினாலும் அக்கவிதை நம் நெஞ்சத்தைத் தொடாமல் போகாது. காரணம் அது  அழிவின்மையைப் பற்றிய கவிதையாகவே இருக்கும்.”

நாம் நினைவு கூர்ந்து பார்க்கலாம், ஒவ்வொரு நாளும் பிறந்து உதிரும் மலர்களைப் பற்றிய பாடும்போதுதான் மாபெரும் கவிஞர்கள் பிரபஞ்சத்தில் நிறைந்துள்ள அழியாத இன்பத்தையும் அழகையும் கண்டுணர்ந்துள்ளனர். மலர்கள் மாலையில் வாடிவிழும் என்பது எவ்வளவு உண்மையோ அதைவிட மகத்தானது அம்மலர்களின் அழகும் மணமும் அவை உருவாக்கும் ஆனந்தமும் கருத்தளவில் நிரந்தரமானவை என்பது. மீண்டும் அம்மலர்கள் விரியும். ரோஜா மலர்கள் தினம்தோறும் வாடி உதிரலாம், ரோஜா என்னும் மலர் அழியாது. ஆகவேதான் ‘ரோஜா என்பது ரோஜாவேதான்!’ என்றான் கவிஞன்.
‘போரும் அமைதியும்’ (லியோ தல்ஸ்தோய்) போன்ற மாபெரும் படைப்புகளைப் படிக்கையில் நாம் இவ்விரு எல்லைகள் நடுவே பறந்தலைகிறோம். இந்நாவல்கள் அளிக்கும் பேரனுபவம் என்பது இதுவே. நிகழ்ச்சிகள் பெருகிச் செல்கின்றன. ஆக்கமும் அழிவும் இடைவிடாது நிகழ்கின்றன. ஆனால் அந்நிகழ்வுகளின் சாரமாகத் திரண்டு வரும் உண்மைகள் சில மாற்றமில்லாது நின்று கொண்டிருப்பதையும் நாம் காண்கிறோம். இந்த ஆக்கமும் அழிவும் அலையடிப்பது அந்த அசைவிலாத பேராழியிலேயே என்று உணர்கிறோம். இதைக் கண்டால் நம் மனம் அதை உணர்கிறது. அதை உணரும்போது இதை நாம் மறப்பதில்லை.

மானுடனின் அடிப்படையான பிரபஞ்ச தரிசனம் என்பது இந்த மாபெரும் ஒருமையறிதலேயாகும் ரிக்வேதம் முதல் நவீன இயற்பியல் வரை அது தன்னை பற்பல விதங்களில் பற்பல வரிகளில் வெளிக்காட்டிக் கொள்கிறது. கீதையில் சாங்கிய ஞானம் என்று கிருஷ்ணன் குறிப்பிடுவது இந்த ஒருமை ஞானத்தையே. அந்த ஒருமையை நம்மைச் சுற்றி பிரபஞ்ச இயக்கமாகவும் பல்லாயிரம் கோடி உட்பிரிவுகளாகவும் பரந்து. ஓயாது பிறந்திறந்து கொண்டிருக்கும் அனைத்திலும் பார்ப்பதற்கே கிருஷ்ணன் அறைகூவுகிறார்.

அவ்வகையில் பார்க்கும்போது சாங்கிய ஞானத்தின் மையமான வரி என்பது 16வது பாடலே. இவ்வரியில் உள்ள முரணியக்கத்தை நடராஜகுரு விரிவாகச் சுட்டி எழுதியிருக்கிறார். ‘இல்லாததற்கு இருப்பு இல்லை. இருப்பதற்கு இல்லாமை இல்லை’ என்ற வரியானது பிரபஞ்சத்தில் நாம் உணரும் நிரந்தரத்தன்மையின் இரு முகங்களைக் காட்டுகிறது. நாம் நம்மைச் சுற்றி கண்டு அறியும் இவையெல்லாம் இருப்புகள் என்றால் (உள்ளவை என்றால்) இவை எந்நிலையிலும் இல்லாமல் ஆவதில்லை. இவை என்றுமிருக்கும். ஆகவே இவற்றின் அழிவு என்பது உருமாற்றம் மட்டுமே.

அப்படியானால் உருமாறி உருமாறி தன்னை நிகழ்த்திக் கொண்டிருக்கும் நிரந்தரமான எதுவோ ஒன்றுதான் இது. இல்லாத ஒன்று இந்த இருப்புகளாக மாறியிருக்கவும் வாய்ப்பில்லை. நமக்கு இரு சாத்தியங்களே உள்ளன. நாம் காணும் இவற்றுக்கு அப்பால் ஏதுமில்லை என்று  நாம் பொருள் கொள்ளலாம். அது ஒரு எளிய நிலை. அல்லது நாம் அறியும் இதுவே நம்மால் ஊகித்து மட்டுமே அறியக் கூடிய அது என்று பொருள் கொள்ளலாம்.

கடல் மீன் எப்படி கடலை அறிய இயலும்? தன்னால் தன் செவிள்களால் அள்ளி உமிழ முடியக்கூடிய நீரை ‘இதுவே அது’ என்றுதான் உணரமுடியும்.

இந்த நிரந்தரத்தன்மையை அகத்தே உணரும் ஒருவன் புறச்செயல்களை திறனுடன் ஆற்றுவது எப்படி என்பதே சாங்கியயோகத்தில் கிருஷ்ணன் கூறுவது. பொருளியல் பயின்ற ஒருவன் பணம் என்பது ஒரு பொருள் அல்ல என்று அறிவான். அது ஒரு சமூகத்தின் பொருளியல் தேவைக்கு ஏற்ப பொதுவாக ஏற்கப்பட்டுள்ள சில விதிமுறைகளின் குறியீடுதான். ‘இதைக் கொண்டு வருபவனுக்கு நூறுரூபாய் மதிப்புள்ள பொருளை நான் அளிக்கிறேன்’ என்ற ரிசர்வ் வங்கி ஆளுநரின் வாக்குறுதிதான் ரூபாய் என்பது. அதில் கூறப்படும் நூறு ரூபாய் என்ற மதிப்போ இந்தியாவின் பல கோடி மக்களின் பொருளியல் கூட்டு ஒப்பந்தம் மூலம் உருவகிக்கப்படுவது. மூன்றரை கிலோ துவரம் பருப்பு அல்லது ‘குருவும் சீடனும்- ஞானத்தேடலின் கதை’ நூலின் ஒரு பிரதி அல்லது ஒரு மீட்டர் சட்டைத்துணிதான் நூறு ரூபாய்.

பணம் என்ற ஒன்று இல்லை, அது ஒரு குறியீடுதான், ஒரு சமூக உருவகம் மட்டும்தான், அது உருவம் கொண்ட நோட்டு அல்ல அருவமான ஒரு மதிப்பு மட்டுமே என்றெல்லாம் அறிந்த ஒரு பொருளியல் பட்டதாரி வங்கியில் பணிபுரிய முடியாதா என்ன? நாளெல்லாம் பணத்தை பொருளாகவே எண்ணி புழங்க முடியாதா? முடியும். பொருளியல் அறியாத ஒருவரைவிட மேலாகவே புழங்க முடியும். இதையே யோகம் பகுதியில் கிருஷ்ணர் கூறுகிறார்.

மூன்று தளங்களிலாக யோகம் கிருஷ்ணனால் வகுக்கப்படுகிறது. தன்னைச் சூழ்ந்துள்ள பன்மை வெளியில் சாரமான ஒருமையை கண்டுணர்ந்து- சாங்கிய ஞானம் பெற்று- செயல்களில் ஈடுபடும்போது ஒருவன் யோகத்தை கடைப்பிடிக்கிறான். செயலாற்றியே ஆகவேண்டும் என்ற யதார்த்த உணர்வும்; செயலின் விளைவு பிரம்மாண்டான பிரபஞ்சவெளியின் கோடானுகோடி இயக்கங்களின் சமநிலைப்புள்ளிகளை சார்ந்தே உள்ளது என்ற தத்துவ உணர்வும் அவனுடைய இருபக்கங்களிலும் இருக்கவேண்டும். அவற்றுக்கு இடையேயான ‘சமநிலையே யோகம்’

இவ்வாறு சமநிலையில் செயலாற்றுபவனுக்கு மிதமிஞ்சிய உணர்ச்சி வேகங்கள் இல்லை. எதிர்பார்ப்பும் ஏமாற்றங்களும் இல்லை. ஆகவே அவன் நெஞ்சு அல்லல் கொள்வதில்லை. அலைபாயாத பிரக்ஞையுடன் அவன் ஆற்றும் செயலானது நேர்த்தியும் துல்லியமும் கொண்டிருக்கும். ஆகவே ‘செயல்திறனே யோகம்.’ சமநிலையில் நின்று திறம்படச் செயல்புரிபவன் இவ்வுலக வாழ்வில் அடையும் முழுமையே இறுதியான யோகம் ஆகும். இந்தக் கடைசி பாடல்களில் கிருஷ்ணன் தொகுத்துக் கூறுவது அதையே.

பின்னூட்டம்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s