தன்னறம் என்னும் நடைமுறை நுட்பம்: சாங்கிய யோகம் . 2
ஜெயமோகன்.இன் ல் இருந்து
[ கும்பமேளா பயணத்தின் போது]
தன்னறமும் பிறப்பும்
இதில் 31ஆவது பாடலில் வரும் வார்த்தையான ‘ஸ்வதர்ம’ என்பதை ‘தன்னறம்’ என்று நேரடியாக தமிழாக்கம் செய்துள்ளேன். பல மொழிபெயர்ப்புகளில் குலதர்மம், குலநெறி என்ற மொழிபெயர்ப்பு உள்ளது. ‘ஸ்வ’ அதாவது ‘சுய’ என்றால் அது குலத்தைக்குறிக்கக்கூடியதல்ல. அறம் என்ற சொல்லுக்கு ‘வாழ்க்கை நெறி’ என்ற பொருள் உண்டு. துறவறம் இல்லறம் ஆகியவற்றில் பின்னொட்டாக உள்ள அறம் இது.
தன் உள்ளார்ந்த இயல்பால் ஒருவன் தெரிவு செய்யும் செயலே தன்னறம் என்று கூறலாம். சுயதர்மம் என்றும் இதை தமிழாக்கம் செய்யலாம். தன்னுடைய ஆளுமைக்கும் தன் அடிப்படை இச்சைகளுக்கும் ஏற்பவே ஒருவனின் மனநிலைகளும் செயல்பாடுகளும் அமைகின்றன. இதை எளிய உளவியல் தளத்தில் நின்று புரிந்து கொள்வதே போதும். எச்செயலில் தன் உள்ளார்ந்த ஆற்றல் முழுமையாக வெளிப்படுகிறது என்று ஒருவன் எண்ணுகிறானோ அதுவே அவனுடைய தன்னறம் ஆகும். அதில் ஈடுபட்டு, அதை வென்று, அதைக் கடந்து சென்றுதான் ஒருவன் தன் விடுதலையை அடைய இயலும். ஒருவன் போரை, பிறிதொருவன் வணிகத்தை, பிறிதொருவன் கல்வியை, பிறிதொருவன் தொழிலை, பிறிதொருவன் சேவையை தன்னறமாகக் கருதலாம்.
தன்னறம் எதுவென்று அறியாத ஒருவன் இருக்க இயலாது. மிக மிக இளம் வயதிலேயே ஒருவனின் ருசிகள் அதில் சென்று படிகின்றன. சூழலாலும் குலத்தாலும் கல்வியாலும் உருவாவது அல்ல இது. ஆனால் சூழலும் குலமும் கல்வியும் அதில்பெரும்பங்கு வகிக்கின்றன. நம் உள்ளார்ந்த ஒரு விரல்நுனி பல திசைகளிலும் துழாவித்துழாவித் தேடி தனக்குரியதை சுட்டிக்காட்டி விடுகிறது. என் அனுபவத்தில் எனக்கு எப்போது சுயநினைவு தொடங்குகிறதோ அன்றுமுதல் மொழியில், புனைவுலகில் மட்டுமே என் தன்னறத்தை நான் கண்டிருக்கிறேன்.வேறு எந்தச்செயலையும் நான் என் செயலாக எண்ணியதேயில்லை. வேறு எத்துறையிலும் வெற்றியும் புகழும் செல்வமும் இருக்குமென்ற சஞ்சலத்தையும் அடைந்ததில்லை.
விளைவாக என் வாழ்வில் இன்றுவரை எந்நிலையிலும் அலுப்பும் சலுப்பும் உருவாவதில்லை. நான் ஓய்ந்து இருப்பதே இல்லை. ஆகவே எனக்கு வாழ்வு ஒரு தொடர்ந்த களியாட்டமாக உள்ளது. என் வாழ்வு குறித்து எனக்கு ஒரு நிறைவு உணர்வு உள்ளது. என் தன்னறத்தின் மையத்தில் என் அக ஆற்றலை முழுக்கக் குவிக்கிறேன். திசைத் தடுமாற்றங்கள் இல்லை. ஆகவே இழப்புகள் இல்லை. இந்தத் தெளிவுக்கு தடுமாற்றம் நிறைந்து அலைந்து திரிந்த நாட்களில் நான் மீண்டும் மீண்டும் வாசித்த கீதையே முதற்காரணம். இந்நூலை எழுதுவது முதன்மையாக இத்தகுதியினால்தான்.
கீதை குறிப்பிடும் இந்த ‘ஸ்வதர்மம்’ (தன்னறம்) என்ற சொல் இந்தியக் கருத்துலக வரலாற்றில் மீண்டும் மீண்டும் திரித்தும் மழுப்பியும் பொருள் தரப்பட்ட ஒன்று என்று நித்ய சைதன்ய யதி தன் உரையில் குறிப்பிடுகிறார். சாதியவாதிகளின் மிகப் பெரிய ஆயுதமாக இது இருந்து வந்துள்ளது. கீதையின் ஒட்டுமொத்த வேதாந்த நோக்கு இவர்கள் கூறும் அர்த்தத்தை இவ்வார்த்தைக்கு அளிப்பதற்கு முற்றிலும் எதிரானதாக இருந்த போதிலும்கூட இன்று வரை இந்த அர்த்தப்படுத்தல் அளிக்கப்படுகிறது. மூலநூல்கள் மீது செலுத்தப்பட்ட இந்த வன்முறை கடந்த காலத்தில் நம் சமூகத்தில் உள்ள உயர்நிலை சக்திகள் பிறர் மீது செலுத்திய கடும் வன்முறைக்கும் சுரண்டலுக்கும் களம் அமைத்துத் தந்தது.
அதேபோல இன்று கீதையையே ஒட்டு மொத்தமாக நிராகரிக்கும் இடத்திற்கு இது பிறரைக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. தெளிவான தர்க்கப்பூர்வமான வாசிப்பு என்பது இன்று ஒரு மாபெரும் பாரம்பரியத்தை அது புதைந்து கொண்டிருக்கும் வகுப்புவாதச் சேற்றிலிருந்து மீட்டெக்கும் பெரும் பணியாகவே பொருள்படும்.
நித்ய சைதன்ய யதி இதை விரிவாக ஆராய்கிறார். ஒரு மாமரத்தில் மாங்காயும் பலாமரத்தில் பலாப்பழமும் உருவாவது போல ஒருவனின் ஆளுமையில் இருந்தே அவனது சாதனைகளும் வேதனைகளும் விளைகின்றன. அவற்றை பிரித்துப் பார்ப்பது சாத்தியமல்ல என்று கூறுகிறார் நித்யா. தன் இயல்பு மூலம் ஒருவன் நாடும் செயலை அவன் செய்யும்போதே அவன் நிறைவடைகிறான், சமூகத்துக்கு உதவிகரமாகவும் அமைகிறான். ஸ்பானரை சுத்தியலாக பயன்படுத்தினால் ஸ்பானருக்கும் கேடு, வேலையும் நடக்காது.
மாமரத்தில் எதன் வேரிலும் இலையிலும் பூவிலும் எல்லாம் மாம்பழத்தில் உள்ள அதே ‘ரசம்’ (சாறு)தான் உள்ளது. மாம்பழத்தில் அது கனிந்திருக்கிறது. ஒருவனின் தன்னறம் அவனடைய சிந்தனையில் மட்டுமல்ல எல்லா இயல்பிலுமே இரண்டறக்கலந்திருக்கும். அவனுடைய அன்,பு காதல், அவன் தேடும் முக்தி அனைத்துமே அந்த அக இயல்பால் தீர்மானிக்கப்பட்டிருக்கும். உப்பிலிருந்து உப்புச்சுவையை எடுத்தால் எஞ்சுவது என்ன? அர்ஜுனனிடமிருந்து வீரத்தை விலக்கினாலும் அதுவே எஞ்சும். அவன் வீரன். ஆகவே ஞானமும் முக்தியும் கூட வீரம் மூலமே அவனுக்கு திறந்து கிடைக்கும் என்கிறார் கிருஷ்ணன்.
உலகமெங்கும் மனிதர்களை அவர்களில் இயல்புகளையொட்டி வகைவபிரிக்கும் ஒரு சிந்தனைப்போக்கு இருந்தபடியேதான் உள்ளது. மனிதனின் ஆதார இயல்புகள் பிறப்பிலேயே உருவாகி வருபவை என்ற புரிதல் எல்லா சமூகத்திலும் உள்ளது. இதை முற்றாக மறுப்பவர்கள் கூட இது ஒரு முக்கியமான கருத்துத்தரப்பு என்பதை மறுக்க மாட்டார்கள். நவீன கால பழக்கவியல் நிபுணர்கள் (Behaviourists) இக்கோட்பாட்டை மறுக்கக் கூடும். ஆனால் இன்றுவரை அவர்கள் விவாதித்து வருவது பிறவிப் பண்புகளை வலியுறுத்தும் நிபுணர்களிடம்தான். புகழ் பெற்ற ‘நாம்சாம்ஸ்கி-பியாகெட்’ விவாதத்தை இங்கே நினைவுகூரும்படி கோருகிறேன். மூளையியல் மற்றும் மொழியியல் நிபுணரான நாம் சோம்ஸ்கி சிந்தனையும் திறனும் பிறப்பிலேயே மூளையமைப்பில் உருவாகிவிடுகின்றன என்பதற்கு அழுத்தம் அளிக்கையில் பியாகெட் அதைமறுத்து சூழலும் பழக்கமும்தான் அனைத்தையும் தீர்மானிக்கிறது என்று வாதிடுகிறார்.
தன்னறம் என்பதை குடிப்பிறப்பு அளிக்கும் தொழில் என்றோ, பிறப்பின் அடிபப்டையில் சமூகம் கட்டாயப்படுத்தும் கடமைகள் என்றோ பொருள்தரவேண்டியதில்லை. கீதை என்னும் உயர்தத்துவ நூல் அந்த தளத்தைச் சார்ந்ததே அல்ல. தத்துவ ஆசிரியரான நித்ய சைத்தன்ய யதி மேலைச் சிந்தனையில் அறவியல் குறித்துச் சிந்தித்த இருவரை இங்கு குறிப்பிடுகிறார். ஒருவர் ஏறத்தாழ கீதையின் காலகட்டத்தைச் சேர்ந்தவரான அரிஸ்டாடில். இன்னொருவர் ஐரோப்பிய மறுமலர்ச்சியின் சிந்தனையாளரான இமானுவேல் கன்ட். இவ்விருவரடைய இரு கருதுகோள்களுடன் ஒப்பிட்டு இந்த விஷயம் குறித்து வாசகர்கள் விரிவாக சிந்திக்கலாம். இங்கு எளிய குறிப்பாக மட்டும் அதைக் கூறலாம்.
தொடரும்.