தன்னறம் என்னும் நடைமுறை நுட்பம்: சாங்கிய யோகம் . 4 [நிறைவுப்பகுதி]
ஜெயமோகன்.இன் ல் இருந்து
[கும்பமேளா பயணத்தின்போது]
சாங்கிய-வேதாந்த இணைப்பு
இப்பகுதியில் உள்ள 28 ஆவது பாடலை சில பதிப்புகளில் சற்று எளிமையாக மொழியாக்கம் செய்திருப்பார்கள். அவியக்தாதீனி என்பதை ‘மாயையில் இருந்து உருவாவது’ என்றே நாம் வாசிக்க நேரும். ஆனால் ‘அவியக்தம்’ என்பது சாங்கிய சிந்தனையின் அடிப்படையான கோட்பாடாகும். நாம் காணும் இப்பிரபஞ்சமானது முழுமுதல் இயற்கை (ஆதிப்பிரகிருதி)யில் இருந்து உருவாகி வந்தது என்று சாங்கியம் கூறுகிறது. இந்த பிரபஞ்சமானது மூன்று அடிப்படைக் குணங்கள் உடையது. தமோகுணம், ரஜோ குணம், சத்வ குணம். இவற்றை முறையே நிலைக்கும் தன்மை, செயலூக்கத்தன்மை, சமநிலைத்தன்மை என்று விளக்கலாம். இக்குணங்களின் கோடானு கோடி இணைவுகள் மூலமே பிரபஞ்சத்தின் எண்ணற்ற வடிவங்கள் முடிவின்மை வரை உருவாகி விரிந்துள்ளன என்பது சாங்கியங்களில் கூற்றாகும்.
இந்த முக்குணங்களும் முழுமுதல் இயற்கையில் முற்றிலும் சமநிலையில் உள்ளன. ஆகவே அது செயல் வடிவமே இல்லாத தூய இயற்கையாக உள்ளது. அந்நிலையில் அது அறியப்பட முடியாததாக, கிட்டத்தட்ட இன்மையாக உள்ளது. இதுவே பிரகிருதியின் அவியக்த (தெளிவற்ற, வெளிப்படாத) நிலை. அதன்பின் ஒரு தளத்தில் முக்குணங்களின் சமநிலை சீர்குலைந்தமையால் மூலஇயற்கை செயல்வடிவமாக ஆகியது. இன்றைய பிரபஞ்சநிகழ்வு உருவானது. அவியக்தாதீனி என்று கிருஷ்ணன் சொல்வது சாங்கியர்களின் இந்த கோட்பாட்டையே.
இந்த சிந்தனை நீரீஸ்வர சாங்கியம் எனப்பட்டது. இதுவே சாங்கியத்தின் தொடக்க கால வடிவம். இக்காலத்தில் சாங்கியர்கள் பிரபஞ்சத்தை முற்றிலும் பருப்பொருளின் செயல்பாடுகளைக் கொண்டே விளக்க முயன்றனர். புறத்தேயுள்ள எந்த கருத்தியல் சக்தியின் தூண்டுதலும், காரணமும் பிரபஞ்ச உருவாக்கம் மற்றும் இயக்கத்திற்கு தேவையில்லை என்றனர்.
அடுத்தகட்டத்தில் சாங்கியம் முக்கியமான வினாவை சந்தித்தது. குணங்கள் ஒருவரால் உணரப்படுபவை. இயற்கையின் குணங்களை உணர்வது யார்? உணர்ந்தால்தானே குணங்கள் இருக்க இயலும்? இதற்கு விடையாக சாங்கியர்கள் ‘புருஷன்’ என்ற கருத்தை உருவாக்கினர். இயற்கை எப்படி ஆதியிலிருந்தே இருக்கிறதோ அதே போலவே இயற்கையை ‘பார்த்து’ அதன் குணங்களை ‘அறியும்’ (அல்லது உருவாக்கியறியும்) ஒரு இருப்புதான் புருஷன். ஒவ்வொரு மனிதனிலும் ஒவ்வொரு உயிரிலும் உறையும் அந்தப் பார்வையாளன் புருஷனின் ஒரு துளியே. இந்த ஆதிபுருஷனை பரம புருஷன் என்று வகுத்துக்கொண்டு பிற்காலத்தைய சாங்கியர்கள் சாங்கியத்தை இறைவன் உள்ள சாங்கிய ஆக மாற்றினார். இதுவே ‘சேஸ்வர சாங்கியம்’ என்று கூறப்படுகிறது.
சாங்கிய கோட்பாட்டின்படி பிரபஞ்சம் படைக்கப்பட்டது அல்ல. ஆகவே படைத்தது யயார் படைத்தது எவ்வாறு என்னும் வினாக்களுக்கு இடமில்லை. பிரபஞ்சம் என்றும் உள்ளது. அழிவற்றது. அது முன்பு அவியக்தமாக, அறியப்படாததாக, இருந்தது. பிறகு முக்குணங்களின் சமநிலை தவறி செயல் வடிவம் கொண்டபோது அறியப்பட்டது. இன்றைய வடிவத்தை அடைந்தது. சமநிலை மீளும் போது மீண்டும் அவியக்த-அறியப்படாத-வடிவத்தை அது அடையும். புருஷனும் இவ்வாறுதான்.
இதையே இங்கு கிருஷ்ணன் கூறுகிறார். சாங்கியம் பிற்பாடு முதிர்ந்து ஒரு முழுமையான தரிசனமாக மாறுவதற்கு முன்பிருந்த ஒரு கருத்து நிலையாக இங்கு கீதையில் அது முன்வைக்கப்படுகிறது. ‘நடைமுறை ரீதியாகப் பார்த்தால் கூட…’ என்று பேசத் தொடங்கும் போது கிருஷ்ணன் சாங்கியத்தை உள்ளே கொண்டுவருகிறார். ஏனென்றால் அவரது காலத்தில் மிகச்சிறந்த நடைமுறை தத்துவஞானமாக கபிலரின் சாங்கியதரிசனம் இருந்திருக்கிறது.
30வது பாடலிலும் இந்த சாங்கியக் கருத்து தொடர்கிறது. இங்கு ‘தேஹி’ என்ற சொல் கீதையில் கையாளப்பட்டுள்ளது. பல நூல்களில் ‘ஆத்மா’ என்றே அது மொழியாக்கம் செய்யப்படிருக்கும். ஆனால் இங்கு பண்டைய சாங்கியம் பேசப்பட்டிருப்பதனால் அதைவிட நுன்மையான பொருள் தரும் தேஹி பயன்படுத்தப்படுகிறது. அதாவது, தேகத்தில் உள்ளவன், தேகம் ஆக உள்ளவன், தேகமாக தன்னை உணர்பவன் தான் தேஹி. ஆகவே ‘உடல் ஆனவன்’
சாங்கிய கோட்பாட்டின்படி எதற்கும் தொடக்கம் இல்லை. எல்லாமே எப்போதும் உள்ளன. ஆகவே உடலுள் வாழும் புருஷன் (இது ஆத்மா என்ற கருதுகோளில் இருந்து நுட்பமான வேறுபாடு உடைய கருத்து. ஆத்மா உடலின் சாரம் ஆக உள்ளது. தேஹி உடலில் இருந்தபடி அனைத்துக்கும் சாட்சியாக விளங்கி புறம்பொருளின் குணங்களை அறிகிறது.) அழியாதவன். இந்தக் கருத்தை இப்பகுதியில் கிருஷ்ணன் கூறும் விதமே இந்திய தத்துவ ஆய்வாளர்களில் ஒரு சாராருக்கு கடும் சினத்தை உருவாக்கி கிருஷ்ணனை ஒரு கருத்துத் திருடர் என்றும் கீதையை ஒரு பெரும் கருத்தியல் மோசடி என்றும் கூறவைத்திருக்கிறது. முக்கியமாக இதைச் சொன்னவர் மார்க்சியரான டி.டி.கோசாம்பி.
12 வது பாடல் முதல் கிருஷ்ணன் கூறும் அழியாத ஆத்மா குறித்த கருத்துக்கள் சாங்கியத்திற்கும் ஏற்புடையவை. அதாவது புருஷனும் பிரகிருதியும் பிறப்பிறப்பு இல்லாமல் எப்போதுமிருப்பவர்கள் என்ற அளவில் சாங்கியம் இந்த நிரந்தரத்தன்மையைப் பற்றிப் பேசுகிறது. கிருஷ்ணன் அதை அழியாத என்றுமுள்ள எங்குமுள்ள ஆத்மா என்ற உபநிடதக் கருத்துடன் இங்கே இணைக்கிறார். இந்த இணைப்பு இயல்பாக 12வது பாடலில் நடக்கிறது. அங்கு அது வேதாந்தக் கருத்தாகவே உள்ளது. 16வது பாடலில் சட்டென்று சாங்கிய கருத்தாக மாறிவிடுகிறது. 17, 18 வது பாடல்களில் சாங்கியமாகவே உறுதி செய்யப்பட்டு முப்பதாவது பாடலில் வலியுறுத்தப்படுகிறது. இப்பாடல்களை மட்டும் தனியாகப் படித்துப் பார்த்து இவ்விணைப்பை கீதை நிகழ்த்துவதை வாசகர் ஆராயலாம்.
கோஸாம்பி முதலிய மார்க்ஸிய ஆய்வாளர்கள் கூறுவது போல சாங்கியத்தை மழுப்பி ஆத்மவாதத்தின் அருகே கொண்டுவரவில்லை கிருஷ்ணன். இரு தத்துவ தரிசனங்களுக்கும் பொதுவாக உள்ள ஒரு தளத்தைக் கண்டடைந்து அதை தர்க்கபூர்வமாகவும், கவித்துவமாகவும் இணைத்து ஒரு ‘யோகத்தை’ உருவாக்குகிறார். கீதையின் தத்துவப் பங்களிப்பே இதுதான். கீதையின் காலகட்டத்தில் சாங்கியம் பிரம்மத்தின் பங்களிப்பு உள்ள ஸேஸ்வர சாங்கிய வடிவத்தை எடுக்கவில்லை. புருஷன் என்ற கோட்பாட்டை அது ஓரளவு ஏற்றுக்கொண்டிருக்கிறது. கீதை பிரம்மத்தை சாங்கியத்துடன் இணைப்பதற்கான வழியை தெளிவாக அமைத்துவிடுகிறது. இதற்காகவே முரணியக்க நோக்கை கீதை கையாள்கிறது.
சாங்கியதரிசனத்தை கீதை மழுப்புகிறது, கீதை அதை திரிக்கிறது என்றெல்லாம் கூறப்படும் குற்றச் சாட்டுகளை எப்படி எதிர்கொள்வது என்பது வாசகர்களின் விருப்பம். பொதுவாக தத்துவத்தரப்புகள் பிரபஞ்சம் மற்றும் மனிதவாழ்க்கை சார்ந்த தரிசனங்களை தர்க்கபூர்வமாக விளக்க முயலும் முயற்சிகளே. அத்தரிசனங்கள் முக்கியம் என்று கொண்டால் அத்தரிசனங்கள் வேறுவகையில் வேறு தர்க்கங்களுடன் வெளிப்படும் தத்துவத் தரப்புகளும் முக்கியமானவையே. அவற்றுக்கு இடையேயான பொதுவான இடங்களை ஆராய்வதும் இணைத்துப் பார்க்க முயல்வதும்தான் உண்மையான சிந்தனையாக அமைய இயலும்.
கீதையின் இவ்விணைப்பைப்பற்றி ஆராய்வோம். சாங்கியம் பருப்பொருளின் அழிவின்மை, முடிவின்மை, தொடக்கமின்மை பற்றி பேசுகிறது. அதன் குணங்களும் அப்படிப்பட்டவை. ஆகவே குணங்களைக் காணும் புருஷனும் தொடக்கமும் முடிவும் அற்றவன். மறுபக்கம் வேதாந்தம் ஆத்மா அழிவற்றது எங்கும் பரவியுள்ளது எப்போதுமுள்ளது என்கிறது. இருதரப்பிலும் உள்ளது ஒரு நிரந்தரத் தன்மையைப்பற்றிய தரிசனமேயாகும். நாம் காணும் பிரபஞ்சம் கடல் போல அலையலையாக நம்மை வந்து தாக்கும் ஓயாத நிகழ்வாக உள்ளது. அலைகளை கடலாகக் காண்போமெனில் அது ஒரு நிலைத்த பேரிருப்பாகத் தோன்றவும் செய்கிறது. சாங்கியம், வேதாந்தம் இரண்டுக்கும் பொதுவான நிரந்தரத்தன்மை என்ற தரிசனத்தையே இங்கு இணைப்புக்கான தளமாக கிருஷ்னன் எடுத்தாள்கிறார்.
கீதை ஒரு யோகநூல். யோகம் என்றால் முரணியக்கம் சார்ந்த இணைவு. இங்கே கீதை தன் வேதாந்த நோக்கில் சாங்கிய தரிசனத்தை கவித்துவமாக இணைத்துக்கொள்கிறது என்பதே எனது நோக்கு.