உலகாற்றும் நெறி (ஸாங்கிய யோகம்) – 1
ஜெயமோகன்.இன் ல் இருந்து
[கோதை]
‘அர்ஜுன விஷாத யோகம்’ பகுதியில் வெளிப்பட்ட அர்ஜுனனின் ஆழமான மனத்தடுமாற்றத்திற்கான உடனடி பதிலாக கிருஷ்ணன் கூறும் பகுதி இது. கீதையின் தத்துவ விவாதத்தின் முகப்பு. அதாவது கீதையின் தரிசனத்தில் மிக அதிகமாக ‘மண்ணில்’ தொட்டபடி நிற்பது இதுவே. நடைமுறை யதார்த்தம் சார்ந்த தத்துவ விளக்கம் என்பதே ‘ஸாங்கிய’ என்ற சொல் மூலம் சுட்டப்படுகிறது. இப்பகுதியில் அர்ஜுனன் போர் புரிந்தாக வேண்டும் என்பதற்கான நடைமுறை நியாயங்கள் முதலில் கூறப்படுகின்றன.
இதில் அன்றாட வாழ்வின் கடமைகளை மிக வெற்றிகரமாக ஆற்றுவதற்கு இன்றியமையாத புலனடக்கம் மற்றும் மன ஒருமையை விவரித்த பிறகு கிருஷ்ணன் நம் அன்றாடச் செயலையே யோகமாக ஆக்குவதைப் பற்றிக் குறிப்பிடுகிறார். அதாவது லெளகீகத்திற்குள் வைத்து அர்ஜுனனின் பிரச்சினையை எதிர்கொள்ளும்போது ஒரு தத்துவ ஞானி என்ன கூறுவானோ அதுவே இப்பகுதியில் உள்ளது.
ஸாங்கிய என்ற சொல்லுக்கு அன்றாட வாழ்க்கை சார்ந்தது, திட்டவட்டமாக எண்ணிக்கைகொண்டது என்பன போன்ற பொருள் உண்டு என்பதை முன்னரே கண்டோம். நடைமுறை ஞானம் சார்ந்த யோகம் என்ற பொருளில் இச்சொல் இங்கே கையாளப்பட்டுள்ளது என்பதை இப்பகுதியை ஆராய்பவர் அறியலாம். நடைமுறைஞானங்களில் முக்கியமானதாக அன்றிருந்த கபிலரின் ஆதி இயற்கைவாதம் என்ற சாங்கியதரிசனத்தின் ஆரம்பகால வடிவம் இந்த அத்தியாயத்தில் ஓரளவு பேசபப்ட்டுள்ளது.
சாங்கிய யோகத்தைப் படித்துப் போகும் போது அத்தியாயத்தின் ஒரு பகுதியில் அது திடீரென்று தீவிரமான தத்துவ விவாதங்களில் புகுவதை, அதாவது அந்த நாடகசந்தர்ப்பத்திலிருந்து விடுபட்டு ஒரு பொதுவான பண்டைத்தத்துவ ஞான நூலாக மாறுவ¨,த நாம் காணமுடியும். இவ்விவாதத்தின் தொடக்கத்தில் குறிப்பிட்டது போல பண்டைய ஞான நூல் ஒன்று கீதையாக உருமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது என்பதற்கான தடையமும் இதுவே. இந்த உருமாற்ற இயல்பை பிறகும் தொடர்ந்து நாம் பல இடங்களில் காணலாம்.
1.சஞ்சயன் கூறினான்,
“கருணை உள்ளத்தால்
கண்ணீர் மல்கி
துயருற்றிருந்த அவனிடம்
மதசூதனன்
இவ்வாறு கூறினான்.
2.”அர்ஜுனா,
ஆரியரல்லாதவர் மட்டுமே
உகப்பதும்
விண்ணுலகை மறுப்பதும்
புகழ் மங்கச் செய்வதுமான
இந்த மனத்தடுமாற்றம்
இப்போது உன்னை
வந்தடைந்தது எப்படி?
3.பார்த்தா,
ஆண்மையின்மை கொள்ளாதே
உனக்கு இது உகந்ததல்ல.
எதிரியை அழிப்பவனே,
உளச் சோர்வை
உதறி எழுக!”
4.அர்ஜுனன் சொன்னான்,
“மதுசூதனனே
எதிரிகளை வெல்பவனே
வணங்கத்தக்க
பீஷ்மரையும் துரோணரையும்
போரில்
எப்படி அம்புகளால் எதிர்ப்பேன்?
5.மாமனிதர்களாகிய ஆசிரியர்களை
கொல்வதற்குப் பதில்
இவ்வுலகில்
இரந்துண்டு வாழ்வதே
மேன்மையானது.
உலகியல் விழைவு கொண்ட
இவ்வாசிரியர்களைக் கொன்றால்
உதிரம் படிந்த
இவ்வுலக இன்பங்களை
நுகரலாம்.
6.இவர்களை நாங்கள் வெல்லலாம்
அல்லது
திருதராஷ்ட்ரர் மைந்தர்
எம்மை வெல்லலாம்.
எது எங்களுக்கு நல்லது
என்று புரியவில்லை.
எவரைக் கொன்றபின்
உயிரோடிருக்க விரும்பமாட்டோமோ
அவர்கள் இதோ
எதிரே நிற்கிறார்கள்.
7.நிலையிலா நெஞ்சு கொண்ட நான்
அறத்தில் ஐயங்கள் நிறைந்தவனாக
உன்னிடம் வினவுகிறேன்
எனக்கு உண்மையிலேயே
நலம் சேர்ப்பது என்னவென்று
கூறுவாயாக.
நான் உன் மாணவன்
உன்னைச் சரணடைகிறேன்
கூறியருள்க.
8.இப்புவியில்
எதிரியிலாத
வளம் செழித்த
மண்ணையும்
விண்ணோர் இருக்கையையும்
அடைந்தாலும்
என் புலன்களை தளரச்செய்யும்
இந்தப் பெருந்துயரைப் போக்க
அவை உதவாது.”
9.சஞ்சயின் சொன்னான்,
”எதிரியை வாட்டும் வீரனாகிய
துயில் வென்றோன்
முனிவர்க் கிறைவனிடம்
இவ்வாறு கூறி
போரிட மறுத்து
அமைதியாக இருந்தான்.
இந்த ஒன்பது செய்யுள்களிலும் அர்ஜுன விஷாத யோகத்தின் நாடகக் காட்சியின் அடுத்த அங்கம் விரிகிறது. ஆழ்ந்த மனச்சோர்வும் அதற்கு அப்பால் செல்லும் ஒரு விவேகமும் கொண்டவனாக அர்ஜுனன் போரிட மறுக்கிறான். அவற்றை மறுத்து போரிடக் கூறிப் பேச ஆரம்பிக்கும் கிருஷ்ணன் தன்னுடைய தத்துவ தரிசனத்தை மிக அடிப்படையான உலகியல் படியிலிருந்து தொடங்குகிறார். அதாவது,
நடைமுறை விவேகம்
இரண்டு, மூன்று செய்யுள்களில் கிருஷ்ணன் கூறும் வரிகள் மிக எளிய நடைமுறை புத்தி சார்ந்தவை. கீதையின் மொத்த சாரமும் வெளிப்படும் வரிகளாக இவற்றை பிரித்துப் பார்த்தால் நாம் அடைவது மிக மிகத் தவறான ஒரு சித்திரத்தையே. ஏனெனில் மிக விரைவிலேயே இக்கூற்றுகள் கிருஷ்ணனால் மறுக்கப்படுகின்றன. அதாவது, இந்த லெளகீக ஞானத்திற்கு பொருளே இல்லாத நுண்தளங்களை நோக்கி விவாதம் வளர்ந்து செல்கிறது.
அதாவது அர்ஜுன விஷாத யோகத்தில் அர்ஜுனன் தன்னுடைய குலநீதி சார்ந்த தளத்தில் நின்றபடி கூறியவற்றுக்கு ‘சரி, அப்படியே பார்த்தால் கூட…’ என்று பதில் கூற முற்படுகிறார் கிருஷ்ணன். அர்ஜுனன் போரிட மறுத்தமைக்கும் கூறும் காரணங்கள் குலப்பெருமை மங்கும் என்பதும், பெருநரகம் சேர வேண்டியிருக்கும் என்பதும், தலைமுறைகள் தோறும் நீளும் அவப்பெயர் சூழும் என்பதுமாகும். அதற்குத்தான் இப்போது போர் புரிய மறுத்தாலும்கூட அதே விளைவுகள் ஏற்படும் என்று கிருஷ்ணன் கூறுகிறார். ஒரு ஷத்திரியனுக்கு ஏற்படும் மிகப் பெரிய அவப்பெயர், பழி, ஆண்மையில்லாதவன் என்பது அர்ஜுனனுக்கு உருவாகும் என்று வலியுறுத்துகிறார்.
ஆரியன் என்ற சொல் பற்றி
இங்கு ஆரியன் என்ற சொல்லைப்பற்றி சில சொற்கள். பலமுறை பற்பல ஆய்வாளர்களால் கூறப்பட்டவையாயினும் தொடர்ந்து அரசியல்மயப்படுத்தப்பட்டு வரும் சொல் என்பதனால் இவ்விளக்கம். இந்து நூல்கள் எதிலும் ‘ஆரிய’ என்ற சொல் ஓர் இனத்தைக் குறிப்பதாக வரவில்லை. சமஸ்கிருத மூலநூல்களை ஆராய்ந்தவர்களில் அம்பேத்கர் வரை பலரும் ஆவணப்படுத்திய ஒன்று இது. மகனை தந்தையும், கணவனை மனைவியும் ஆரியன் என்று கூறுவதைக் கேட்கலாம். அதைவிட மகாபாரதத்தில் ஆரியனே என்று அழைக்கப்படும் பலர் உயர் குடியினரும் அல்ல. உயர்ந்தவர், பெருமை உடையவன் என்ற பொதுப்பொருளிலேயே இச்சொல் எப்போதும் கையாளப்படுகிறது- அபூர்வமாக மன்னர் குடிப்பிறப்பை குறிக்கிறது. அர்ஜுனனின் குலப்பிறப்பு குறித்த பெருமிதத்தை சுட்டிக்காட்டவே கிருஷ்ணர் இச்சொல்லை இங்கு கையாள்கிறார்.
தொடரும்…