உலகாற்றும் நெறி (ஸாங்கிய யோகம்) – 4 [நிறைவுப்பகுதி]
ஜெயமோகன்.இன் ல் இருந்து
[கோதை]
சங்கரரும் வைதிகமும்
தமிழ்ச்சூழல் சார்ந்து யோசிப்பவர்கள் சிலருக்கு சங்கரரின் இந்தத் தரப்பு ஒரளவுக்கு அதிர்ச்சியை அளிக்கக் கூடும் என்பதனால் ஒரு சிறு விளக்கம். கி.பி. எட்டாம் நூற்றாண்டில் பிறந்து வட இந்தியாவெங்கும் திக்விஜயம் (திசைவெற்றி) செய்து பெளத்தர்களை வாதத்தில் வென்று வேதாந்தத்தை நிறுவிய ஆதிசங்கரர் இந்து தத்துவமரபின் மறுமலர்ச்சிக்குக் காரணமானவர். சங்கரரின் வெற்றியை முரணியக்க அடிப்படையில் நாம் பார்க்க வேண்டும். சங்கரர் பெளத்த ஞானத்துடன் முரண்பாடு உரையாடி பெளத்த ஞானத்தின் தலைசிறந்த கூறுகளை உள்வாங்கிக் கொண்டு அத்வைத வேதாந்த மரபை தோற்றுவித்தார்.
சங்கர அத்வைதம் ‘பிரபஞ்சம் என்று நாம் அறிவது நம் அறிவையே’ என்கிறது. நம் அறிவுக்கு அப்பாற்பட்டது. நம்மைப் பொருத்தவரை இல்லை என்றாகிறது. அறியாமையும் நமக்கு ஒரு வகை அறிதலாகவே உள்ளது. நம்முடைய இந்த அறிதல் என்பது நமது புலன்களின் இயல்புக்கு கட்டுப்பட்டது. நமது எண்ணங்களுக்கும் இச்சைகளுக்கும் கட்டுப்பட்டது. ஆகவே இது மிகமிகத் திரிபுபட்டது. உண்மையான பிரபஞ்சம் நம் அறிதலுக்கு முற்றிலும் அப்பாற்பட்ட வேறு ஏதோ ஒன்று. நம் புலன்களுக்கும் அறிவுக்கும் சிக்கும் பிரபஞ்சம் நமக்கு அது அளிக்கும் ஒரு மாயத்தோற்றம். இதை உண்மை என்று நம்புவதே மானுடனின் இயல்பாக உள்ள அறியாமை. இவ்வறியாமை விலகுமென்றால் மனிதன் தான் என்றும் அது என்றும் பிளவுபடாத ஒன்றை பிரபஞ்சமாகக் காண்பான்.
அதுவே அத்வைதத்தின் படி முழுமை நிலை அல்லது வீடுபேறுநிலை. அப்போது அறிபவன், அறிபடு பொருள் அறிவு என்ற பேதங்களே இருக்காது. இவ்வாறு அறியப்படும் இரண்டின்மையே பிரம்மம். பிரம்மம் என்பது உலகியல் சார்ந்த சொற்களாலும் விளக்கங்காலும் கூறிவிட முடியாதது. அதுவே உண்மையான இருப்பு. பிற அனைத்துமே அதில் உருவாகும் மாயத்தோற்றங்கள். மாயத்தோற்றம் விலகி பிரம்மத்தின் தனியுருவை (பிரம்ம சொரூபத்தை) அறிதலே முக்தி. தூய ஞானம் மூலமே இது அடையப் பெறும். சுருக்கமாக, இதுவே சங்கர அத்வைதம்.
சங்கரர் தன்னுடைய தத்துவத்தை நிலைநாட்ட நான்கு மடங்களை இந்திய மண்ணின் நான்கு மூலைகளில் நிறுவியதாகக் கூறப்படுகிறது. பத்ரிநாத் (வடக்கு) சிருங்கேரி (தெற்கு) பூரி (கிழக்கு) துவாரகை (மேற்கு). (சிருங்கேரி மடத்தின் கிளையாக இயங்கிய கும்பகோணம் சங்கரமடம் பிறகு காஞ்சிக்கு மாறி காஞ்சிமடமாக தனித்து இயங்குகிறது.) இந்த மடங்களுக்கும் சங்கரரின் அத்வைத வேதாந்தத்துக்கும் கடந்த பல நூற்றாண்டுகளாகவே எவ்விதமான உறவும் இல்லை. இந்த மடங்கள் பிராமண சாதிகளுக்குரிய தலைமைக் குரு பீடங்களாக மட்டுமே இப்போது இயங்கி வருகின்றன. பிராமணர்களின் குலத்தொழிலான வேள்விகள், சடங்குகள் முதலியவற்றை வழிகாட்டி நடத்தும் அமைப்புகளாக இவை உள்ளன. வேத பாடசாலைகள் நடத்துவதும், வேள்விகள் நடத்துவதும், ஆலயங்கள் நிறுவி நடத்துவதும் இவர்களின் அன்றாடப் பணிகளாக உள்ளன.
சங்கரர் பதிவு பெறாக பழங்காலம் சார்ந்தவர். இந்திய வரலாற்றில் நூறு வருடங்களிலேயே ஒருவர் ஐதிகமாக மாறிவிடும் நிலையில் சங்கரர் ஒரு ஐதீகமாக, குறியீடாக மட்டும் மாறியது வியப்புக்குரியதல்ல. வேதாந்த நூல்களுடன் பல பக்தி நூல்களும் சங்கரர் பேரில் உள்ளன. அவற்றை சங்கரர் பாடியமைக்குக் காரணமாக கூறப்படும் புராணக்கதைகளும் உள்ளன. உதாரணம் செளந்தரிய லஹரி, கனகதாரா ஸ்தோத்ரம் முதலியவை. இக்கதைகள் சங்கரர் தன் ஞான மார்க்கம் போதாது என்று உணர்ந்து ‘மனம் திரும்பி’ பக்தி மார்க்கத்துக்கு வந்து இவற்றைப் பாடியதாகக் குறிப்பிடுகின்றன. அதாவது சங்கரரின் மாபெரும் ஆக்கங்களான, கீதை உரை, பிரம்ம சூத்ர உரை, விவேக சூடாமணி முதலியவற்றை நிராகரித்தால்தான் இந்த பக்தி நூல்களை நாம் ஏற்கமுடியும். சங்கரரின் தத்துவ நூல்களுக்கும் இந்த பக்தி நூல்களுக்கும் நடை மற்றும் வடிவங்களில் சிலப்பதிகாரத்திற்கும் பாரதியார் கவிதைகளுக்கும் இடையே உள்ள தொலைவு உள்ளதாக கூறப்படுகிறது.
சங்கரர் பலர் இருந்திருக்கலாம் என்றும் அவர்களின் படைப்புகள் ஒன்றாக மாறி ஆளுமைகளும் கலந்திருக்கலாம் என்றும் நாம் ஊகிக்க முடிகிறது. சான்றாக குறிப்பிடத்தக்கது ஒன்று உண்டு. கேரள நம்பூதிரிகள் கடைப்பிடிக்க வேண்டிய ஆசாரங்களைக் கூறும் ‘சங்கரஸ்மிருதி’ என்ற நூல் உள்ளது. இது கேரள நம்பூதிரிகள் பிற பிராமணர்கள் அனுசாரமாகக் கருதும் அறுபத்திநான்கு நடைமுறைகளை கடைப்பிடித்தாக வேண்டும் என்று கட்டளை இருக்கிறது. உதாரணமாக நீர்நிலைகளில் நிர்வாணமாகவே குளிக்க வேண்டும். வெறும் கையால் மட்டுமே பல் தேய்க்க வேண்டும் முதலியவை. இந்நூலை ஆக்கியவர் ஆதிசங்கரரே என்று நம்பூதிரிகள் உறுதியாக நம்புகிறார்கள். ஆதிசங்கரரின் தரிசனத்திற்கும் இந்த சாதிஆசாரமுறைகளுக்கும் இடையே உள்ள பெரும் தொலைவை இவர்கள் கண்டுகொள்வதில்லை.
தமிழகம் சங்கரரை இங்குள்ள சங்கரமடத்தின் செயல்பாடுகள் வழியாகவே அறிகிறது. ஆகவே தமிழ்நாட்டில் ஆதிசங்கரர் ஒரு வைதிகராக கருதப்படுகிறார். அதாவது இன்றைய வைதிக அமைப்பான சங்கர மடங்களின் நிறுவனராக. ஆனால் நூல்களில் நாம் காணும் சங்கரர் கர்மங்களுக்கு அதாவது வேள்வி, பூஜை, சடங்குகள் முதலியவற்றுக்கு அதிதீவிரமாக எதிர்ப்பு தெரிவிப்பவர். இவை மோட்சத்திற்கு வழிகோலாமல் கர்மத்திலேயே கட்டிப் போட்டுவிடும் என்று வாதிடுபவர். தூயஞானத்தை மட்டுமே முக்திக்கான வழி என்று மீண்டும் மீண்டும் முன்வைத்து வைதீகர்களுடன் திடமாக வாதிட்டவர். சங்கரரின் நூல்களில் எப்போதுமே வைதீகர்கள்தான் எதிர் தரப்பாக [பூர்வபக்ஷமாக] அமைகிறார்கள்.
சங்கரர் உரையில் உள்ள இரு தனித்தன்மைகளை வாசகர் கவனிக்க வேண்டும். ஒன்று சங்கரர் கீதையின் கதைமுகப்பு ஒரு கவித்துவ உருவகம் மட்டுமே என்று எடுத்துக்கொள்கிறார். ‘போர்புரி பார்த்தா!’ என்ற கிருஷ்ணனின் அறைகூவல் செயலுக்குள் இறங்குக என்ற அறிவுறுத்தல் அல்ல. அது ஞானத்தை விவாதிப்பதற்கான முகாந்திரம் மட்டுமே என்பது அவரது தரப்பு. ஆகவேதான் அர்ஜுன விஷாத யோகத்திற்கு அவர் உரை எழுதவும் இல்லை.
இரண்டாவதாக சங்கரர் கீதையின் தத்துவ அணுகுமுறையில் உள்ள முரணியக்கத்தை துல்லியமாகத் தொட்டுக்காட்டுகிறார். கர்மம் ஞானம் இரண்டைப்பற்றியும் பேசும் கிருஷ்ணர் அவற்றுக்கு இடையேயான ஒரு முரணியக்கத்தையே முன்வைக்கிறார். கர்மம் ஞானத்தை மறுப்பதாக இல்லை. சிறந்த கர்மத்தை ஆற்ற ஞானம் உதவுகிறது. ஞானம் மூலம் சிறப்பாக கர்மத்தை ஆற்ற முடியும். இந்த அத்தியாயத்தில் கர்மத்தை ஆற்றி ஞானத்திற்குள் செல்வதைப் பற்றிய கிருஷ்ணனின் நோக்கு வெளிப்படுவதை முரணியக்கம் மூலமே விளக்குகிறார் சங்கரர்.
சங்கரரின் உரையே கீதையை ஒரு தத்துவநூலாக அணுகக்கூடிய மையநூலாகும். சங்கரரே கீதை ஒற்றைபப்டையான உபதேச்மஞ்சரி அல்ல அது ஒரு விவாதம் என்று காட்டியவர். ஆகவே நாராயணகுரு சங்கரரை தன் முன்னோடியாகக் கொண்டார்.
செயல் ஞானமாக மாறுமா?
கடைசியாக எஞ்சும் ஒருவினா உண்டு. நம் அனைவருமே இந்த வினாவை வாழ்க்கையில் எதிர்கொண்டிருப்போம். செயலை பற்றுறுதி இல்லாமல், அதே சமயம் ஈடுபாட்டுடனும் அர்ப்பணிப்புடனும் செய்வதன் மூலம் மனிதன் விடுபட முடியுமா? நிறைவும் முழுமையும் பெறமுடியுமா? அதாவது ‘வையத்தில் வாழ்வாங்கு வாழ்வதற்குச்’ செயல் மட்டுமே போதுமா? ஞானம் இன்றியமையாததா?
சங்கரர் கூறுவதைக் கண்டோம். வாசகர்கள் தங்கள் தரப்பை தாங்களே, தங்கள் வாழ்வனுபவம் மூலமும் வாசித்த அறிவு மூலமும் உருவாகிக் கொள்ளலாம். என் தரப்பை மட்டுமே கூறிக் கொள்கிறேன்.
வைதிகர்கள் கர்மத்தை வேள்விகள் சடங்குகள் மற்றும் பக்தி என்று எடுத்துக் கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஏனெனில் இவ்வாறு எடுத்துக் கொள்வதன் மூலம் இன்ன வேள்விக்கு இன்ன பலன், இன்ன பூஜைக்கு இத்தனை நாளில் பலன் என்ற வைதிக நம்பிக்கைகளுக்குள் நாம் புகவேண்டியிருக்கும். தனிப்பட்ட முறையில் நான் எவ்விதமான சடங்குகளையும் நம்புபவனோ ஈடுபடுகிறவனோ அல்ல.
ஆனால் கர்மம் என்பதை செயல் என்று எடுத்துக்கொண்டு அன்றாட வாழ்விலும் இவ்வுலகிலும் நாம் ஆற்றும் செயல்கள் என்று விரிவான பொருள் கொண்டால் என் கருத்து மாறானது. விவசாயமோ, தொழிலோ, சேவையோ கர்மத்தை கர்மயோகமாகவே செய்யக் கூடியவர்களை நான் கண்டிருக்கிறேன். விளைவுகளில் கண் நாட்டாமல் அச்செயலின் முழுமையாக ஈடுபடுவதன் மூலமே அனைத்தையும் அடைபவர்கள் போல தங்கள் வாழ்நாளெல்லாம் பணியாற்றியவர்கள் அவர்கள்.
முக்தி என்று சங்கரர் எதைக்கூறுகிறாரோ அதை நோக்கி இயல்பாகவே அவர்கள் நகர்வதை நான் பல தருணங்களில் கண்டிருக்கிறேன். அவர்களில் விவசாயிகள் உண்டு. அன்னையர் உண்டு. மதிப்பிற்குரிய அரசியல் பணியாளர்கள், அதாவது கம்யூனிஸ்டு கட்சியின் தொடக்க கால ஊழியர்கள், காந்தியவாதிகள் போன்றவர்கள் உண்டு.பல்வேறு கிறித்தவச்சேவை அமைப்புகளையும் ராமகிருஷ்ண மிஷனையும் நாராயண குருகுலத்தையும் சேர்ந்த மதப்பணியாளர்கள் உண்டு. நாம் ஒவ்வொருவரும் அறிந்த உதாரணமாக காந்தியும் வினோபாவேயும் உள்ளனர்.
யோகமாக மாறும் செயலானது இயல்பாகவே ஞானத்தை அளிக்கிறது என்பது நடைமுறையில் ஒவ்வொருவரும் கண்டறியத்தக்க உண்மையாகும். ஞானமில்லாது கர்மம் செய்பவனுக்கு கர்மம் சுமையாக மாறி அழுத்தும் என்பது உண்மை. ஆனால் தன்னலமற்ற கர்மம் ஞானமாக மாறாமல் இருக்காது என்பதும் உண்மை. ஒன்றில் ஆழ்ந்து ஈடுபடுகிறவனுக்கு அது தன்னை திறந்து கொடுக்கிறது. பிரம்மம் எங்குமுள்ளதாகையால் எந்த வாசலை திறந்தாலும் பிரம்மத்திற்கே போகமுடியும். நாற்பதுவருடம் மனம் ஒன்றி பிள்ளைகளை வளர்த்த என் பெரியம்மா ஒரு ஞானியாகவெ இருந்தார்.
நேர்மாறாக கர்மம் இல்லாத ஞானமானது வெறும் தர்க்க விளையாட்டாகவும் அகங்கார வெளிப்பாடகவும் மாறிவிடுவதையும் நாம் நடைமுறையில் காணலாம். ‘பெரும்பாலான அத்வைத அறிஞர்கள் திண்ணை வேதாந்திகள்; சங்கரரின் மாபெரும் பங்களிப்பு இந்தியாவை திண்ணை வேதாந்தத்துக்கான நாற்றங்காலாக மாற்றியமையே’ என்று கேரள அறிஞர் பி.கெ.பாலகிருஷ்ணன் என்னிடம் கசப்புடன் கூறியதை நினைவுகூர்கிறேன். அதில் பெருமளவு உண்மை இருக்கவே செய்கிறது. இன்றும் நாம் புழங்கும் அறிவுத்தளங்களிலேயே கூட ஒன்றில் ஈடுபட்டு செயலாற்றாமல் அதைப்பற்றி பேசுபவர்கள் ஆழ்ந்து செல்லும் தோறும் அபத்தமாகப் பேச ஆரம்பிப்பதைக் காண்கிறோம். செயலாக மாறாத ஞானம்தான் உண்மையில் பெரும் சுமை. கீதாசாரியன் ‘சாங்கியயோகம்’ என்று பிரிக்காமலேயே ஒவ்வொரு முறையும் சேர்த்துக் கூறுவது இதனால்தான் போலும்.! யோகமில்லாத சாங்கியஞானம் ஒரு சடலம்.
சங்கர அத்வைதம் இந்தியச் சிந்தனையில் ஆழமான பாதிப்பை நிகழ்த்திய ஒன்று. சங்கரருக்குப் பின் வந்த இந்திய சிந்தனையின் எல்லாத் தளங்களிலும் சங்கரரின் பங்களிப்பு உண்டு. சங்கரரை மறுக்கும் தரப்புகள் கூட தங்கள் உருவாக்கத்தில் அவருக்குக் கடன்பட்டுள்ளன. ‘பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துமே பிரம்மம். அனைத்துமே ஒன்று’ என்பது ஒர் அறிவார்ந்த கொந்தளிப்பை உருவாக்கும் கருத்தாகும். நவீன யுகத்தில் ராமகிருஷ்ண பரமஹம்சரும், விவேகானந்தரும், சகஜானந்தரும், நாராயண குருவும் சங்கர மெய்ஞானத்தால் தூண்டப்பட்டு அதை மேலெடுத்துச் சென்றவர்களே. இத்தனை நூற்றாண்டுகளுக்குப் பிறகு பார்க்கும் போதும் சங்கரரின் அணுகுமுறையே அறிவார்ந்தாக என்னுள் உள்ள நவீன வாசகனுக்குப் படுகிறது.
சங்கரரின் ஞானவாதம் என்பது மேற்கே ‘இம்மானுவல் காண்ட்’ முன்வைத்த தூய கரணிய ஞானம் (Pure Reason) என்ற பிற்காலத்து தத்துவக் கோட்பாட்டுக்கு மிக நெருக்கமானது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். மார்க்ஸிய ஆய்வாளர்களான கெ.தாமோதரன் (இந்திய சிந்தனை) இ.எம்.எஸ். நம்பூதிரிபாடு போன்றவர்கள் கூட தூய அறிவின் பண்பாட்டு முக்கியத்துவத்தை நிறுவியவர், நம்பிக்கை சார்ந்த சடங்குகளுக்கு எதிராக தத்துவத்தின் வலிமையை நிலைநாட்டியவர் என்று சங்கரரின் இடத்தை அங்கீகரித்துள்ளனர்.
சங்கரரின் தத்துவ தரிசனத்தில் உள்ள தூயஞானம் என்ற கருத்து தர்க்கத்திற்கு பொருத்தமானதாக இருப்பினும் நடைமுறை அனுவத்தால் ஆதரிக்கப்படவில்லை என்றுதான் நான் அதை ஏற்க மறுக்கிறேன். செயலால் மனம் விளைந்து கனிந்தாலொழிய, செயல் யோகமாகி ஞானம் திரண்டாலொழிய, மெய்ஞானம் எவருக்கும் வாய்ப்பதில்லை என்றே நினைக்கிறேன். கற்றறிந்து ஞானம் கொண்ட எவரையும் நான் கண்டதில்லை. கற்றதனாலேயே அபத்தமான கர்விகளாகவோ சுயஏமாற்றுக்காரர்களாகவோ மாறியவர்களையே அதிகமும் கண்டிருக்கிறேன். கீதையில் கிருஷ்ணன் அழுத்தமாகக் கூறுவதும் இதையே.
சங்கரரின் தரப்பில் உள்ள இந்த முதன்மையான குறையைத் தொட்டுக்காட்டுவதன் மூலமே ராமானுஜாச்சாரியரின் விசிஷ்டாத்வைதம் முக்கியத்துவம் பெறுகிறது. சிறப்பு [விஸிஷ்ட] அத்வைதம் என்பதே ராமானுஜரின் தரிசனத்தின் பெயராகும். ராமானுஜர் பக்தியையும் அதையொட்டிய சடங்குகளையும் ஓர் எல்லைவரை ஏற்கிறார். அப்படி ஏற்பதற்குக் காரணம் அத்வைதத்தில் விடுபட்டுப் போன ஒரு முக்கியமான அம்சத்தை இணைப்பதற்காகவே. அதை ‘கைங்கரியம்’ (சேவை) என்று அவர் கூறுகிறார். ஆம், விசிஷ்டாத்வைதத்தில் விசிஷ்டமாக உளளது ‘சேவைதான்’.
இந்தக் கோணத்தில் யோசிக்கும் போது பெளத்தம் போல ஒரு தத்துவ மதமாக இல்லாமல் செயல்களையும் அதற்கேற்ற அழகியலையும் சேர்த்தே முன்வைக்கும் இந்து ஞானமரபே மேலும் முழுமையானது என்று எனக்குப்படுகிறது. நிர்குணப் பிரம்மம் நம் அறிவைச் சென்று அடைகிறது. சகுணப் பிரம்மமே நெஞ்சில் அழகனுபவமாக விரிகிறது. ஞானம் தர்க்கத்துக்கு உறைக்கிறது. கர்மமே கற்பனையை நிறைவு செய்கிறது. விண்ணகங்களை நிரப்பியிருக்கும் பெரு வெளியை அறிய ஞானம், கற்பனை, உள்ளுணர்வு என தனக்கு அளிக்கப்பட்டுள்ள அத்தனை கருவிகளையும் மனிதன் பயன்படுத்துவதே முறை.