செயல்தரும் முழுமை:ஸாங்கிய யோகம்.1
ஜெயமோகன்.இன் ல் இருந்து
[போதிசத்வர் கோயில்முன் நண்பர் சிவா– பத்துநாள்தாடி களைப்புடன் ஆசிரியர்]
ஸாங்கிய யோகத்தில் நடைமுறை விவேகம் சார்ந்து செயலாற்றுவதற்கான காரணங்களை இவ்வரிகளில் தொடர்ந்து கண்ணன் சொல்கிறார். செயலாற்று உனக்கு புகழும் செல்வமும் வீரசொற்கமும் கிடைக்கும் என்கிறார். இந்த வரிகள் அனேகமாக எல்லாவகையான நீதிநூல்களும் சொல்வனவே. ஆனால் உன்செயல் ஒட்டுமொத்தமாக இப்பிரபஞ்சத்துக்கு எவ்வகையில் பொருட்டு என்ற கேள்வியை கீதை எழுப்புவதன் மூலம்தான் அது தத்துவத்தளத்தில் அவ்வினாவை எதிர்கொள்கிறது.
‘சின்னமீன் பெரியமீனிடம் கேட்டது, நியாயமா? பெரியமீன் சொன்னது: நியாயமில்லைதான், நீ என்னை விழுங்கு’ என்று ஒரு ஜென் கதை உண்டு. மீன்கள் ஒன்றையொன்று ஒவ்வொரு கணமும் உண்டுகொண்டிருந்தாலும் கடலில் மீன் அப்படியேதான் இருக்கும் என்று எண்ணி ஆழம் புன்னகைசெய்தது என்று என் நண்பர் கல்பற்றா நாராயணன் ஒருமுறை சொன்னார்.
10. “பாரதனே,
இரு படைகள் நடுவே
வருந்தியமர்ந்தனை நோக்கி
புன்னகையுடன்
முனிவர்க்கிறைவன் பேசலுற்றான்.
11. இறைவன் கூறினார்,
“துயருறத் தேவையற்றோருக்காக
துயருறுகிறாய்.
அறிவுடையோரின் சொற்களையும்
கூறுகிறாய்
இருப்போர்க்கோ இறந்தோர்க்கோ
துயருறுவதில்லை அறிஞர்.
12. நான் எக்காலத்திலும்
இல்லாதிருந்ததில்லை
நீயும் இல்லாதிருந்ததில்லை
இம்மன்னர்களும்
இல்லாதிருந்ததில்லை
எதிர்காலத்திலும்
நாம் இல்லாதிருப்பதில்லை
13. உடல் கொண்டோனுக்கு
உடலில்
குழந்தைமையும்
இளமையும்
மூப்பும்
எவ்வண்ணமோ
அப்படித்தான்
மறுவுடல் பூணுதலும்.
எனவே
துணிவுடையோன்
துயருறுவதில்லை.
14. குந்தி மைந்தனே
புலன்களுக்குப்
பொருட்களுடன் உள்ள உறவு மூலம்
குளிர் வெப்பம் இன்ப துன்பம்
ஆகியவை வந்து போகின்றன
அவற்றை ஏற்றுக் கொள்க.
15. மனிதரில் சிறந்தவனே
இத்தகைய இன்ப துன்பங்கள்
எவரை பாதிப்பதில்லையோ
அவன் இறவாமைக்கு
தகுதியுடையவனாகிறான்
16. இல்லாதது
இருப்பதாவதில்லை
இருப்பது
இல்லாமலாவதுமில்லை
இவ்விரண்டின் உண்மையை
தத்துவமறிந்தோர்
அறிவர்
17. இவையெல்லாம்
எதனால் ஆனதோ அது
அழிவுற்றது என்றறிக.
அழிவற்ற இதை அழிக்க
எவராலும் இயலாது.
18. பாரதனே,
என்றுமுளதாக
வகுத்துரைக்க இயலாததாக
உடல் கொண்டிருக்கும் அதன்
இவ்வுடல்கள் எல்லாம்
முடிவுள்ளவையை எனப்படுகிறது
ஆகவே
போர்புரிக!
19. இதைக் கொல்கிறேன்
என்று உணர்பவனும்
கொல்லப்படுகிறேன்
என்று உணர்பவனும்
உண்மையை அறிவதில்லை
இது கொல்வதில்லை
கொல்லப்படுவதும் இல்லை.
20. இது
உடல் கொல்லப்படுகையில்
பிறப்பதுமில்லை இறப்பதுமில்லை
இருந்து இங்கு வந்ததில்லை
ஏனெனில்
இது பிறப்பற்றது
என்றுமிருப்பது
மாற்றமற்றது
தொன்மையானது.
21. பார்த்தா,
யார் அதை
நிலையானதாக
அழிவற்றதாக
பிறப்பற்றதாக
இறப்பற்றமாக
அறிகிறானோ அவன்
யாரைக் கொல்கிறான்?
யாரைக் கொல்விக்கிறான்?
22. மனிதர்கள்
எவ்வண்ணம்
பழைய உடைகள் களைந்து
புத்தாடை அணிகிறார்களோ
அவ்வண்ணமே
உடல் கொண்ட ஆத்மா
மட்கிய உடல்களை உதறி
புதியவற்றைக் கொள்கிறது
23. ஆயுதங்கள் அதை வெட்டுவதில்லை
நெருப்பு எரிப்பதில்லை
நீர் நனைப்பதில்லை
காற்று கரைப்பதில்லை
24. இது பிளக்க முடியாதது
எரிக்கவோ
மட்கவோ இயலாதது.
அழியாதது
எங்கும் பரந்தது
என்றும் உள்ளது
அசைவற்றது
தொடக்கமேயற்றது.
25. அது
சிந்தைக் கெட்டாதது
உணரப்பட ஒண்ணாதது
என்று கூறப்படுகிறது
எனவே
இந்த ஆத்மாவை அறிந்தபின்
வருத்தம் கொள்ளலாகாது.”
இந்தச் செய்யுட்களில் கிருஷ்ணன் ஆத்மா என்ற அழிவற்றதும் பிறப்பற்றதும் ஆன ஒன்றைப் பற்றிக் குறிப்பிடுகிறார். உலகமெங்கும் உள்ள தொன்மையான சிந்தனைகளில் ஏதேனும் ஒரு வகையில் ஆத்மா என்ற கருத்தாக்கம் காணக்கிடைக்கிறது. சாதாரணமாக உயிரும் அதன் வெளிப்பாடுமான மூச்சும்தான். ஆத்மா என்ற எண்ணம் பழங்குடிச் சிந்தனைகளில் உள்ளது. அன்பிறகு பற்பல வளர்ச்சி நிலைகள்.
சொல்லப்போனால் பண்டைய சிந்தனைகளை மதிப்பிடுவதற்கு அவை ஆத்மா என்று கருதுகோளை எந்த அளவுக்கு விரிவுபடுத்திக் கொண்டுள்ளன என்று பார்ப்பதே மிகச் சிறந்த அளவுகோலாகும். ஆத்மா என்பது ஒரு மனிதனின் அறியும் பிரபஞ்சத்தின் அடிப்படை அலகு. அதாவது நான் என்று அவன் எதை நினைக்கிறானோ அதுவே ஆத்மா. அகவே ஆத்மாவைப்பற்றியே உருவகமே அவனுடைய பிரபஞ்ச உருவகமும் ஆகும்.
இன்றுவரை நவீன சிந்தனையில் தன்னிலை [subjectivity] என்பதை வகுத்துரைக்கும் புதுக்கோட்பாடுகள் வந்தபடியே இருக்கின்றன என்பதை நாம் கூர்ந்து நோக்க வேண்டும். சிந்தனையின் அடிப்படையாக ‘தான்’ என்றால் என்ன என்பதை வகுத்துக்கொள்ள வேண்டிய தேவை மனிதனுக்கு உள்ளது. இந்த கோணத்தில் நாம் பழங்காலம் முதல் இன்றுவரை ஆத்மா அல்லது தன்னிலை என்ற கருதுகோள் எவ்வாறு வளர்ந்து வந்துள்ளது என்பதைப் பார்க்க வேண்டும்.
தொடரும்..