செயலெனும் யோகம் சாங்கிய யோகம்.1
ஜெயமோகன்.இன் ல் இருந்து
[மெல்பர்ன் அருகில் பலாரட் என்ற ஊரில். ஆஸ்திரேலியப்பயணத்தின் போது]
நந்தி சிலை நம் சிற்ப மரபின் முக்கியமான சாதனைகளில் ஒன்று. தமிழகத்தில் பிரம்மாண்டமான மாக்காளைகளை சுதைவடிவில்செய்து வைத்திருக்கிறார்கள். கல்லில் வடித்த அழகிய காளைகளும் உண்டு. சில ஆலயங்களில் வெண்கலச்சிலைகளையும் காணலாம். கர்நாடகத்தில் பல ஆலயங்களில் பிரம்மாண்டமான நந்தி சிலைகள் உண்டு. மைசூர் சாமுண்டி குன்றில் உள்ள நந்திதான் கர்நாடக மாநிலத்தின் இலச்சினையாக இருக்கிறது.
ஆனால் ஆந்திர மாநிலம்தான் நந்திகளின் நிலம். குறிப்பாக வட ஆந்திரத்தில் காகதீய பேரரசு ஆண்ட இடங்களில் உள்ள கோயில்களில் கண்ணிலிருந்து ஒருபோதும் அழியாத அற்புதமான நந்திச்சிலைகள் உள்ளன. பெரும்பாலும் கன்னங்கரிய சலவைக்கல்லில் செய்யபப்பட்டவை. இரும்பில் வடித்தவையா என்ற ஐயம் ஏற்படும் படியான வழவழப்பு.. நந்தியின் கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் மணிக்கயிற்றில் உள்ள முறுக்குகளின் ஒவ்வொரு நாரும் தெரியும்படியன சிற்ப நுட்பம். சட்டென்று எழுந்துவிடும் என பிரமையளிக்கும் உயிர்த்தோற்றம். என்னைப்போல வேளாண் பின்னணி கொண்ட ஒருவனுக்கு கால்நடைகளைக் கண்டாலே உள்ளம் நிறைந்துவிடும். எத்தனை பார்த்தாலும் கண்களின் தாகம் அடங்காது.
மாக்காளை உண்மையில் எதைக்குறிக்கிறது? காளையின் ஆற்றல் அளப்பரியது. ஆனால் அத்தனை ஆற்றலும் அழுந்திச் செறிந்து சாந்தமாக உருவான உருவம் அது. நிதானம் மிக்க அசைவுகள். வால் சுழற்றல் கொம்பு குலுக்குதல் தலை திருப்பி விலாவை நக்குதல் அசைபோடுதல் என ஒவ்வொரு சிறு அசைவிலும் நளினம். பெரும் வலிமை உள்ளுறையாக இருப்பதனாலேயே அதன் எல்லா அசைவிலும் ஏன் அசைவின்மையிலும்கூட ஆழ்ந்த கம்பீரம்.
பெரும்பாலும் நந்திகள் முன்காலை தூக்கி வைத்து மறு கணம் எழப்போகும் பாவனையில் இருக்கும். விழித்தெழும் கணத்தில் அளவிலா பெரும் சக்தி — அதுவே நந்தி.
சாங்கிய யோகத்தில் கண்ணன் அர்ஜ்ஜுனனிடம் பேசும் லௌகீகவாதம் முழுக்க அவனுள் எழப்போகும் மேலும் ஆழ்ந்த கேள்விகளை உசுப்பும் முகாந்தரம்தானா என்ற எண்ணம் நமக்கு உருவாகும். கீதையின் இப்பகுதியில் பார்த்தன் ஆற்றல் திரண்டெழும் கணத்த்தில் நிறைந்து ததும்பி நிற்கிறான். ஆகவே மிக விரைவிலேயே கண்ணன் சாங்கியத்திலிருந்து முன்னகர்ந்துசென்றுவிடுகிறான்.
39 . பார்த்தா
இதுவரை சொல்லப்பட்டது
சாங்கிய அறிவு.
எதனுடன் இணைந்தால்
செயல்களில் உழல்தலை
நீ துறப்பாயோ
அத்தகைய
யோக அறிவை
இனிக் கேட்ப்பாயாக!
40. இவ்வழியில்
பெறப்பட்டவை
அழிவதேயில்லை.
இதை அடைவதற்குத்
தடைகளுமில்லை.
வாழ்வில் இதை
துளியேனும் கடைப்பிடித்தால்
பெரும் அச்சங்களும்
அகல்கின்றன.
41. குருலம்சத்திற்கு பிரியமானவனே
இதில்
நிலைத்த ஞானம் ஒருமை கொண்டது.
நிலைத்த ஞானம் இல்லாதவர்கள்
அறிவோ
கிளைபிரிந்து
முடிவிலாது விரிகின்றது.
42. பார்த்தனே
வேதங்களுக்காக வாதிட்டு
அதைவிட மேலாக ஏதுமில்லை
என்று கூறும்
மலர்போன்ற சொற்களுக்கு
உரியவர்கள்
43. உலக இன்பங்களில் திளைத்து
விண்ணுலகத்தை விழைந்து
பிறவிச்சுழலில் உழற்றும்
செயல்களில் அமிழ்ந்ததும்
சொற்களையே பேசுவர்.
போகங்களையும் செல்வங்களையும்
மட்டுமே நாடுவர்.
44. இவர்கள்
அறிவை இழந்தவர்கள்
சொற்கத்துக்கும்
போகத்துக்கும் மட்டுமே
ஆசைகொள்கிறார்கள்
இவர்களின் புத்தி
ஒரு நிலைப்பட்டு
அமைதி கொள்வதில்லை
45. அர்ஜுனா
வேதங்கள்
முக்குணங்களைப் பேசுபவை
நீ
முக்குணங்களை வென்று
இருமையறுத்து
யோகத்தையும் சுயநலத்தையும்
பிரித்து நோக்காதவனாக
ஆத்மாவில் நிலைபெற்றவனாக
இருப்பாயாக.
46. எங்கும் நீர் பரந்தொழுகும்போது
கிணறுகளால் என்ன பயன்?
அதுவே
வேதங்களைக் கற்றறிந்த
வைதிகன் நிலையும்.
47. செயலாற்றவே
கடமைப்பட்டுள்ளாய்
விளைவுகளில்
மனம் வைக்காதே
செயலின் விளைவுகளில்
கருத்துன்றி
செயல்பட எண்ணாதே
செயல்படாதிருக்கும்
இச்சையும் கொள்ளாதே.
48. தனஞ்சயனே
நீ
யோகத்திலமர்ந்து
பற்றுகளை விட்டு
வெற்றியிலும் தோல்வியிலும்
சமநிலையுடன்
செயலாற்றுக
சமநிலையே யோகம்
எனப்படும்.
49. தனஞ்சயனே
அறிவுசார் யோகத்தைவிட
செயல்
தாழ்ந்தது.
ஆகவே
அறிவைச் சரணடைக!
பயன் விழைந்து பணியாற்வோர்
இழிந்தோர்.
50. ஞானத்தில் நின்றவன்
நல்வினைகளையும் தீவினைகளையும்
இங்கேயே கைவிடுகிறான்
ஆகவே
யோகத்திற்காக இணைத்தறிக
செயல் திறனே யோகம்.
51. ஏனெனில்
யாருடைய மனம்
யோக அறிவில் உள்ளதோ
அவர்கள்
செயலின் விளைவை உதறி
அறிவர் ஆகி
பிறவிப் பற்றுகள் களைந்து
துயர் அறுத்து
உயர்நிலை அடைகிறார்கள்.
52. எப்போது
உன் அறிவு
விருப்பால் கறைபடுதலை
கடக்குமோ
அப்போது
கேட்டதிலும் கேட்கவேண்டியதிலும்
மேலான உறுதியை
நீ அடைவாய்
53. வேதங்களின்
பொருள்வய நோக்கால்
குழம்பிய
உன் அறிவு
அசைவற்று
ஆழ்ந்த அமைதியில்
நிலைக்கும்போது
நீ
யோகத்தை அடைவாய்.
இந்தப்பகுதியில் செயலாற்றுவதன் மிகச்சிறந்த நடைமுறையே கிருஷ்ணன் கூறுகிறார். சாங்கிய யோகத்தை நடைமுறைத் தத்துவம் என்றால் இதை தத்துவத்தின் நடைமுறை எனலாம். ஏன் செயலாற்ற வேண்டும் என்பது முதல்பகுதி என்றால் எப்படிச் செயலாற்ற வேண்டும் என்பது இப்பகுதி.
தொடரும்…