செயலெனும் யோகம் சாங்கிய யோகம்.2
ஜெயமோகன்.இன் ல் இருந்து
[ஓபரா ஹவுஸ். சிட்னி. ஆஸ்திரேலியா பயணத்தின் போது]
பொதுவாக பல உரைகளில் சாங்கிய யோகம் என்ற தலைப்பு குறித்த ஒரு தடுமாற்றம் இந்த இடத்தில் வரக்காணலாம். கீதையின் தலைப்புகளில் கடைசித் தொகுப்புரையிலும் வரும் ‘யோகம்’ என்பது முரணியக்க அணுகுமுறையை குறிக்கிறது. ஆனால் இங்குள்ள யோகம் என்பது யோகம் என்னும் நடைமுறையைச் சுட்டுகிறது. அதாவது தியானத்தை உள்ளடக்கிய ஒரு யோகசாதனையைக் குறிக்கிறது. இப்பகுதியின் தலைப்பு இருபொருள் சுட்டும்படி இருக்கிறது என்று வேண்டுமானால் கொள்ளலாம்.
யோகத்தில் அமைதல்
சாங்கிய தரிசனத்தின் ஒரு வளர்ச்சி நிலையாகக் கருதப்படும் யோக தரிசனம் பதஞ்சலியின் ‘யோக சூத்திரம்’ என்றும் மூலநூலால் வரையறை செய்யப்பட்டது. பல்வேறு வகையில் பதஞ்சலி யோக சூத்திரம் கூறும் யோகதரிசனம் அதற்கு பலநூற்றாண்டுகளுக்கு முன்னரே உருவாகி படிப்படியாக வளர்ந்து வந்த ஒன்று என்பது அறிஞர் கருத்து.
மிகச் சுருக்கமாக யோகத்தை இவ்வாறு வரையறை செய்யலாம். ஆதி இயற்கை அல்லது மூலப்பிரகிருதி தன் முக்குணங்களும் சமநிலை இழந்து பன்மையாகி இப்போது நாமறியும் பிரபஞ்சமாக உள்ளது. (இப்பிரபஞ்சத்தின் தொடக்கம் பற்றிய சாங்கிய தரிசனம் நவீன பெருவெடிப்புக் கோட்பாட்டை நெருங்கி வரக்கூடிய ஒன்று.) இதை பார்ப்பவனாகிய புருஷனும் இதன் விளைவாக தன் முக்குண சமநிலையை இழந்து பன்மை வடிவமாக இருக்கிறான். அவன் முக்குணங்களின் இணைப்புகளின் விளையாட்டில் அலைக்கழிக்கப்படுகிறான். அவனுக்கு மீட்பு எப்படி வரும்?
அன்றைய தரிசனங்கள் அனைத்திடமும் அன்றைய தத்துவச் சூழல் அவை சொல்லும் முக்திக்கான வழி (விடுதலை நெறி) என்ன என்னும் வினாவை முன்வைக்கும்.மதற்குச் சொல்லும் பதிலை வைத்தே அது முன்வைக்கும் வாதங்களை பரிசீலனை செய்வார்கள். சாங்கியத்தைப் பொருத்தவரை துக்க நிவாரணமே முக்தியாகும். துக்கம் என்பது அறியாமையின் விளைவு. முக்குணங்களின் சமநிலை இழந்த தன்மையே அறியாமையாகும். (இக்கருத்தைப் பிற்பாடு பெளத்தம் விரிவாக எடுத்தாண்டது. கபிலருக்கும் பெளத்ததுக்கும் இடையேயான உறவு ஆழமானது. கபிலர் புத்தரின் ஊரான கபிலவாஸ்துவில்தான் பிறந்தார் என்றும் அப்பெயர் அவரால்தான் அவ்வூருக்கு வந்தது என்றும் கூறப்படுகிறது.) இவ்வாறு அறியாமை அகற்றி முக்திபெற சாங்கியம் உருவாக்கிய நெறியே யோகம். பிற்பாடு யோகம் வேறுசில தனித்த கருதுகோள்களையும் உருவாக்கிக் கொண்டது.
யோகம் புருஷனின் இடைவிடாத முக்குணங்களின் சமநிலைக்கான தத்தளிப்பை இல்லாமல் ஆக்க முயல்கிறது. ‘யோகம் என்பது உளச் செயல் நிறுத்தல்’ என்று தொடங்கும் பதஞ்சலி யோக சூத்திரம் அதற்கான நடைமுறைப் பயிற்சிகளை முன்வைக்கிறது. உளச்செயல் என்ற ஓயாத அலைமூலம் தன்னை பிரகிருதியுடன் இணைத்து பலவாகப் பார்க்கும் புருஷன் உளச்செயல் ஓயும்போது தூயநிலையில் தூய பிரகிருதி¨யுயம் தூய தன்னிலையையும் அறிந்து அதனுடன் ஒன்றாகிறான். இப்படி ஒன்றாகும் நிலையே யோகம் ஆகும். யோகம் என்றால் இணைதல் என்றுதான் சொற்பொருள்.
இங்கு கிருஷ்ணன் பேசும் யோகம் முழுமையான யோகம் அல்ல. படிப்படியாகவே அது விரிவடைகிறது. இது சாங்கிய யோகம் மட்டுமே. அதாவது நடைமுறைத் தளத்தில் உள்ள யோகம் இது. யோகத்தைச் செய்வதன் மூலம் நடைமுறை வாழ்வை எத்தனை சிறப்பாக அமைக்க முடியும் என்பது குறித்த சிந்தனைகள்தான் இங்கே முன் வைக்கப்படுகின்றன. இங்கு கூறப்படும் யோகம் பதஞ்சலி யோக சூத்திரம் முன் வைக்கும் யோகத்துடன் மிக மேலோட்டமாக மட்டுமே ஒத்துப் போகிறது.
பதஞ்சலி முனிவர் யோகத்தை ஒரு குறிப்பிட்ட வகையான செயல்பாடாகக் குறிப்பிடும்போது கிருஷ்ணன் கூறும் யோகம் ஒவ்வொரு செயலிலும் உள்ளுறைந்திருக்கும் ஒரு மனநிலையாக உள்ளது என்பதை தெளிவாக நாம் மனதில் நிறுத்தியாக வேண்டும்.
இதை எடுத்துக் கூறும் டாக்டர் ராதாகிருஷ்ணன் இது முந்தைய சாங்கியம், யோகம் இரண்டையும் நிராகரித்து கீதையால் முன்வைக்கப்படும் ஒரு தனித்த அறிவுத்தரப்பு என்றும், இது ஒரு இறையியல் மதம் (Theistic Religion) என்றும் கூறமுற்படுகிறார். இது மேலோட்டமான ஒரு நோக்கு. கீதை இந்து மதத்திற்குள் தனிமதம் எதையும் உருவாக்கவில்லை. அத்வைதம், விசிஷ்டாத்வைதம் போல தனித்த கருத்து நிலையாகக் கூட எக்காலமும் அது நிலைகொள்ளவில்லை அது வேதாந்தத்தின் தலைநூலாகவும், உபநிடதங்களின் வழி நூலாகாவும், அனைத்து இந்து ஞான வழிகளுக்கும் பொதுவான வழிகாட்டி நூலாகவும் மட்டுமே விளங்கி வந்தது.
மேலும் இறையியல் (Theism) போன்ற மேலைநாட்டு சொற்களை இந்து ஞான மரபில் கையாளும் போது உருவாகும் பொருட்குழப்பம் எளியதல்ல. ஒரு எளிய மேலைநாட்டு வாசகன் — ஏன் நமது கல்விப்புல வாசகனும் அதில் ஒருவனே – இதை அவர்களின் ஒரிறைக் கோட்பாட்டுடன் குழப்பிக் கொள்ளக்கூடும். அப்படிக் குழப்பிக் கொண்டு எழுதப்பட்ட உரைகளையும் நாம் காணலாம்.
உதாரணமாக பல தெய்வ வழிபாட்டில் ஊறிக்கிடந்த இந்து மதத்திற்கு கீதை ஒரிறைக் கோட்பாட்டை உணர்த்த முற்பட்டது என்று பலர் கூறியிருக்கிறார்கள். இது தவறான புரிதல் என்று கூற வேண்டியதில்லை. ‘ஓன்று மட்டுமேயான அதுவே பற்பலவான இவையனைத்தும்’ என்ற ரிக்வேத தரிசனம் இன்றுவரை இந்து ஞானமரபின் எல்லா கிளைகளுக்கும் பொருந்தக்கூடிய ஒரு இறைக்கோட்பாடாகும். அதை கீதை புதிதாகச் சொல்லவில்லை.
அச்சமின்மையும் யோகமும்
யோகத்தின் பயனை விளக்கும் இங்குள்ள தொடக்கப் பாடல்களில் 40ஆவது பாடலைப்பற்றி பொதுவாக விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. யோகத்தின் முதற்பயனாக கிருஷ்ணன் கூறுவது, ‘அது நம்மை அச்சத்தில் இருந்து விடுவிக்கிறது’ என்பதே. சுவாமி. விவேவகானந்தர் அவரது உரைகளில் மிக விரிவாக விவாதித்துள்ள ஒரு விஷயம் இது. மனிதனை அவனுடைய அனைத்து நல்லியல்புகளில் இருந்தும் வழுவச் செய்து, அவன் இயல்புக்கு மாறானவற்றை செய்ய வைத்து, அவனை ஆன்மிகமாக கீழிறக்கும் முக்கியமான காரணம் அச்சமே என்று விவேகானந்தர் குறிப்பிடுகிறார்.
அச்சம் பலவகைப்படுகிறது. உயிர்மேலான அச்சம், எதிர்காலம் குறித்த அச்சம், சமூகம் பற்றிய அச்சம் என்று இவற்றை பலவகையில் குறிப்பிட்டு வருகிறோம். தத்துவார்த்தமாகச் சுருக்கினால் அச்சம் மூன்றுதான். 1. மரணத்திற்கான அச்சம் 2. தன்னிலை அழிவு குறித்த அச்சம் 3. காலத்தின் தற்செயல் தன்மை அல்லது ஊகிக்க முடியாமை குறித்த அச்சம். [மேலைநாட்டு இருத்தலியல் சிந்தனைகளில் இது Angst என்று சொல்லபப்டுகிறது. இருத்தலியலின்படி தீர்வே இல்லாத ஆழ்ந்த மனத்தத்தளிப்பு இது. தமிழில் பறதி என்ற கலைச்சொல்லால் இது சுடப்படுகிறது]
உயிர் தன் உடலில் நீங்காது இருக்கும் விருப்பு கொண்டது. உயிரை இழக்காது இருக்க உடல் கொள்ளும் முயற்சியே உடலின் முழு ஆற்றலும் வெளிப்படும் தருணம் என்னும் போது அதுவே உடலின் முதன்மை விழைவு என்று புரிகிறது. உயிரச்சம் என்பது உயிர்கள் அனைத்திற்கும் இயல்பானது ஆனால் விவேகம் மூலமும் மனப்பயிற்சி மூலமும் உயிர்ச்சத்தை மனிதர்கள் கடக்க முடியும். உயிரச்சத்தைக் கடந்தவனே வீரன் எனப்படுகிறான்.
ஆனால் அவனும் கடக்க முடியாத அச்சம் என்பது தன்னிலை அழிவு குறித்தது. தன் அகங்காரம் அழிவுபடுவதை, இழிபெயர் சூழ்வதை, தீராத அவமானங்களுக்கு ஆளாவதை மரணத்தைவிடக் கொடியதாக எண்ணுவது மனித இயல்பு. கீதையிலேயே அர்ஜுன விஷாத யோகத்தில் அர்ஜுனன் மிக அஞ்சி குறிப்பிடுவது அதையே. அவனுக்கு சாங்கிய யோகத்தில் பதில் கூறும் கிருஷ்ணன் அவன் போரை நடத்தாவிட்டால் அவனுக்கு வரும் தீங்காகக் குறிப்பிடுவதும் அதையே.
மூன்றாவதாக மனிதனை ஆட்கொள்ளும் அச்சம் பிரம்மாண்டமான வடிவில் காலத்தைக் காணும்போது ஏற்படுவது. அவன் இருப்பை துளியினும் துளியாக மாற்றி இன்மை வரை கொண்டு போவது முடிவிலாக் காலவெளி. அதுவோ அவனால் ஒரு போதும் அறிய முடியததாக உள்ளது. அடுத்தக் கணம் என்ன நிகழும் என்று இக்கணம் ஊகிக்க இயலாததாக உள்ளது. அந்த திகைப்பூட்டும் முடிவிலி முன் மனிதன் அஞ்சி நிற்கிறான்.
இன்னும் சுருக்கமாக இம்மூன்று அச்சங்களையும் பார்த்தால் ‘தன்னிலையழிவு’ என்று ஒரே அச்சமாகச் சுருக்கி விட இயலும். நான் இருக்கிறேன், நான் இப்படிப்பட்டவன், இவை என்னவை- இந்த மூன்று நிலைபாடுகளின் அழிவையே மேலே சொன்ன மூன்று அச்சங்களும் குறிக்கின்றன. அச்சத்திற்கு ஆளானவனின் சுயத்துவம் முதலில் அழிகிறது. நீரில் விழுந்தவனின் அசைவுகள் ஒத்திசைவை இழப்பது போல அவன் சிந்தனையில் தர்க்கமும் ஒழுங்கும் இல்லாமலாகின்றன. பிறகு அவன் எதையும் செய்வான்.
உலகின் ஆற்றப்படும் மாபெரும் பாவங்கள், மகத்தான கொடுமைகள் அச்சம் கொண்ட மானுடர்களால் ஆற்றப்படுவனவே. ஹிட்லர், ஸ்டாலின், போல்பாட் என்று நாம் மாபெரும் சர்வாதிகாரிகளின் வரலாற்றை எடுத்துப் பார்க்கும்போது இந்த அச்சத்தையே காண்கிறோம். அச்சம் கொண்ட எளிய மனிதர்கள் தங்கள் ஆளுமைத் தனித்தன்மைகளை உதறி பெரும் கும்பலாகத் திரள்கிறார்கள். அச்சத்தினால் திரட்டப்படும் இந்தக் கும்பல் எதையும் செய்யத் துணிந்தாக மாறிவிடுகிறது.
கீதையின் முக்கியமான இயல்பாக பல இடங்களில் விவேகானந்தர் குறிப்பிடுவது அது அச்சத்தை விரட்டும் என்பதே. மனிதர்களை ஒன்றாகத்திரட்டி பொதுவான மூர்க்கமான நம்பிக்கையை உருவாக்கி அவர்களை வெறிகொண்ட கும்பலாக மாற்றுவதன் மூலம் உருவாக்கப்படும் ஒற்றைப்படையான வேகமல்ல இந்த அச்சமின்மை. தன்னை உணர்ந்தவனிடம் ஏற்படும் நிதானம் மூலம் உருவாகும் அச்சமின்மை இதைக் குறிப்பிடும் இந்த வரியை ஒரு தியான மந்திரமாகவும் குறிக்கிறார்கள்.
நிலைபெறு மனமும் யோகமும்
41வது பாடலை யோகத்தின் முக்கியமான விளைவைச் சுட்டக் கூடிய ஒன்று என்று பொருளாக உரையாசிரியர் கூறுவதுண்டு. யோகத்தில் ஒருங்கிணைபவனுடைய மனம் என்பது ஒரே திசையில் பயணம் செய்வது. ஏனெனில் அது தன் நிலையை அறிந்தது. யோகபுத்தி அற்றவர்களின் மனம் கிளைகளாகப் பிரிந்து முடிவில்லாது பெருகுவது. ஆறு எப்போதெல்லாம் வேகத்தை இழக்கிறதோ அங்கெல்லாம் அது பல கிளைகளாக பிரிந்து பற்பல திசைகள் நோக்கிச் செல்ல ஆரம்பிக்கிறது. ஆற்றின் வேகம் என்பது கடலை நோக்கிய விழைவேயாகும். கடலின் திசையில் இருந்து தயங்கி விலகும் போதுதான் ஆறு வேகமிழந்து கிளை பிரிகிறது. யோக புத்தி என்பது சிந்தனையின் இறுதி நிலையயைக் கண்டு விட்ட ஒன்று. அதற்கு திசைத்தடுமாற்றங்கள் இல்லை.
நாம் அறியும் மனம் என்பது கிளை பிரிதலையே தன் இயல்பாக உடையது. ஒரு நிமிடம் தன் இயல்பில் மனதை ஓடவிட்டு கவனித்தோமெனில் அது அதற்குள் பல நூறு கிளைகளாகப் பிரிந்திருப்பதைக் காணலாம். அப்படி பிரிபயும் கிளைகளை கவனித்தால் அதில் ஒரு வியப்புக்குரிய விஷயம் உள்ளது. ”இன்று அலுவலகத்தைவிட்டு முன்னரே போகவேண்டும். திரைப்படம் ஆறுமணிக்கு, சாப்பிடவில்லை, இட்டிலி உப்புமா பண்ணியிருந்தால் வீட்டில் ரகளைதான் இன்று, பாவம் மனைவிதான் என்ன செய்வாள் அவளுக்கும் வேலை, அவளுக்கு ஐஸ்கிரிம் வாங்கிக் கொடுக்கவேண்டும். சிறுவயதில் ஐஸ்கிரீம் இல்லை குச்சி ஐஸ்தான். குல்லாய் வைத்த ஒரு பாய்தான் ஐஸ் விற்பார். அம்மா ஒரு ஐஸ் வாங்கத்தான் பணம் தருவார்கள், நேரமாகிறது” என்று பாயும் மனதை பதிவு செய்து கூர்ந்து பார்த்தால் அப்படி பிரியும் ஒவ்வொரு கிளையும் ஒர் ஆசையையே தேடிச் செல்கிறது என்று தெரியும்.
வெளிப்படையான ஆசை. மறைத்து வைக்கப்பட்டு ஆசை. நாமே அறியாத ஆசை! எறும்புகள் உணவைத் தேடிச் செல்வது போல ஒவ்வொரு எண்ணமும் நமது ஆசைகளின் ஒரு துணுக்கையே முகர்ந்து துழாவி அலைகின்றன. ஆற்றை தன்னை நோக்கி இழுக்கும் கடல் எனும் பெரும்பள்ளத்தின் ஈர்ப்பு சற்றே வலு குறைகையில் அதைவிட சிறிய பல பள்ளங்களை நோக்கி ஆறு பிரிகிறது. இக்காரணத்தாலேயே பக்தி மரபில் இந்தச் சின்னஞ்சிறு ஆசைகள் அனைத்தையுமே இறைவன் மீதான ஆசையாக உருமாற்றம் கொள்ளச் செய்தனர். ‘உண்ணும் பெற்றிலை உடுக்கும் உடை’ முதல் அனைத்தையும் இறைவனின் சுவையாக மாற்றிக் கொள்ளும் மனநிலையே பக்தி என்கிறோம். நம் ஆலயங்கள் பூசைகள் அனைத்தும் இந்த நோக்கத்தையே உடையவை. சுவை, நறுமணம். அழகிய காட்சிகள், இசை, இனிய சூழல் என அனைத்து பொறிகளுக்கும் இறைவனின் வழிபாடு உகந்ததாக இருக்கச் செய்தனர். இங்கு திசை திரும்புதல் கூட இறைவனை நோக்கி இட்டுச் செல்கிறது.
தொடரும்…
உயர் திரு ஜெ
உங்கள் அருமையான வலை பதிவுக்கு மிகவும் நன்றி. அச்சமும் யோகமும் வாழ்க்கையின் வலையை பற்றிய உங்கள் தரிசனங்களும் மிகவும் அருமை.
நன்றியுடன்
சுரேன்