செயலெனும் யோகம் சாங்கிய யோகம்.3

செயலெனும் யோகம் சாங்கிய யோகம்.3

ஜெயமோகன்.இன் ல் இருந்து

[போர்நினைவிடம் ,கன்பெரா]

பயன்கருதா செயல்

யோகம் என்பது குவிந்த நிலை, நிலை கொண்ட நிலை, அந்நிலையில் அலைபாய்தல் இல்லை, உளவல்லமை சிதறுவதில்லை என்று கூறும் கிருஷ்ணர் அதை யோகத்தின் பயனாகவும் யோகத்திற்கான வழிமுறையாகவும் கூறுகிறார் என்பதை பிற பாடல்கள் மூலமாக அறியலாம். இது சாங்கிய யோகமாதலால் கிருஷ்ணன் இப்பகுதியில் அன்றாட நடைமுறை வாழ்வின் செயல்களை எப்படி யோகமாக ஆக்குவது என்றுதான் பேசுகிறார்.

47வது பாடல் பெரும்புகழ் பெற்ற ஒன்று. ‘உனக்கு செயல் செய்வதற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. செயலின் விளைவுகளில் உளம் செலுத்தாதே. செயல்களைச் செய்யாமலும் இருக்காதே’ என்ற புகழ்பெற்ற ஆணை இங்குதான் கூறப்படுகிறது. பலதளங்களில் ஒரு மாபெரும் தியான மந்திரமாகக் கொள்ளப்படும் இவ்வரி அதன் சூழலில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டு வேறு பலவாகவும் விவரிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணவேதாந்த்ததை சற்றும் அறியாதவர்கள் இதை மட்டும் தங்கள் போக்கில் விவாதித்து அதிபுத்திசாலித்தனமாக ஏதாவது சொல்ல முனைவதை நாம் எங்கும் காணலாம்

முதலில், கிருஷ்ணன் இவ்வரியை அன்றாட வாழ்வை மிகத்திறமையாகச் செய்து அதை ஒரு யோகமாக ஆக்குவதற்கான வழி முறையாகவே கூறுகிறார். ஒருசெயலின் விளைவைப்பற்றி செயலாற்றும்போதே எண்ணுபவன் ஒருபோதும் அதை சரியாகச்செய்ய முடியது. வெற்றிகரமான செயல் என்பது செய்யும் கணத்தில் அச்செயல் தரும் நிறைவை மட்டுமே கருத்தில் கொண்டு செயலைத்தவிர வேறு நினைப்பே இல்லாமல் முழுமையாக ஒன்றி செய்யக்கூடியதாகும்.

இரண்டாவதாக, மனம் கிளைபிரிதல் என்பது யோகத்திற்கு எதிரானது என்றும் யோகம் ஒருமித்த மனம் கொண்ட செயல் என்றும் கூறி அதற்கான வழியாக இதைக் குறிப்பிடுகிறார். செயலை கிருஷ்ணன் யோகம் என்கிறார். யோகம் என்பது மனம் குவிதல். செயலின் விளைவுகள் என்பவை ஆசைகள் சார்ந்தவை. அங்கே கிளைபிரியும் மனம் செயல் என்ற யோகத்தை இழந்துவிடுகிறது

மூன்றாவதாக 43, 44, 45, 46 ஆம் பாடல்களில் இன்ன வேள்விக்கு இன்ன பயன் என்று வகுத்துக் கூறி வேள்விச் செயலில் ஈடுபடுத்தும் வேதங்களை நிராகரித்து செயலாற்ற தூண்டும் கிருஷ்ணன் அதன் சாரமாகவே இந்த வரியைச் சொல்கிறார். வேதங்களின் கர்ம காண்டம் முழுக்க முழுக்க இதைச்செய் இன்ன பயன் கிடைக்கும் என்று சொல்கிறது. செய்த செயலின் பயன் ஒரு பொருள் போல அழியாகமல் காலவெளியில் நின்று கொண்டிருக்கும் என்று சொல்லி அதை ‘அபூர்வம் ‘ [முன்பு இல்லாதிருந்தது] என்று வகுக்கிறது. அந்த கருத்தை ஒட்டுமொத்தமாகவே நிராகரித்து 51,52,53 ஆம் பாடல்களில் அதை மீண்டும் கூறி வலியுறுத்தி முடிக்கிறார் கிருஷ்ணன். ஆகவே பயன்கருதாமல் செயலாற்று என்பதை ஒரு தொடர் கூற்றாகவே நாம் அணுகவேண்டும்.

முதலில் நாம் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி இது. இதே சாங்கிய யோகத்தில்தான் கிருஷ்ணன் செயலாற்றுக, அச்செல் மூலம் உனக்கு புகழும் விண்ணுலகும் மண்ணின் போகங்களும் கிடைக்கும் என்று கூறினார். இப்பாடலில் விளைவை எதிர்பாராது செயலாற்றுக என்றார். இந்த முரண்பாடு ஏன்?

இதுவே கீதையின் முரணியக்கம். ஒரு நடைமுறை வாதியாக முதலில் பேச ஆரம்பிக்கிறார். கிருஷ்ணன் செயலின் நல்விளைவுகளைக் கூறி ஆசைகாட்டியும் ,தீய விளைவுகளைக் கூறி அச்சுறுத்தியும், செயலாற்றத் தூண்டுகிறார். இது முதல்கட்டம். இப்பகுதியில் இருந்து இன்னும் அடுத்த நுண்தளத்திற்கு நகர்ந்து செயலின் அறிவார்ந்த உட்கிடக்கைகளைப் பற்றிப் பேசுகிறார். ஒரு தளத்தில் நின்று கூறியதை முரணியக்கம் மூலம் தாண்டிச் சென்று அடுத்த தளத்தில் இன்னொரு கோணத்தில் பேச ஆரம்பிப்பது கீதையின் இயல்பாக இறுதி வரை வருவதை வாசகர் கவனிக்க வேண்டும்.

யோகத்தில் ஈடுபட்டு செயலாற்றுபவன் அல்லது செயலையே யோகமாக ஆக்கிக் கொண்டவன், அச்சமின்றி இருக்கிறான். அச்சமின்மை மூலமே அவன் செயலை மேலும் மேலும் திறம்படச் செய்கிறான். யோகத்திலமர்ந்து செயலாற்றுபவன் சிதறாத உள்ளத்துடன் செயலாற்றுகிறான். அவ்வண்ணம் செயலாற்றுவதற்கு அவசியமானதே விளைவுகள் மீதான பற்றை விலக்குதல். செயலில் அச்சத்தை உருவாக்குவது விளைவு நோக்குதான் செயலில் குவிவதைத் தடுப்பதும் அதுதான். எனவே அவ்விரண்டுக்கும் அடுத்தபடியாக கிருஷ்ணன் ‘பயன்கருதா செயல்’ என்பதை முன்வைக்கிறார்.

சுவாமி சித்பவானந்தர் அவரது உரையில் சிறந்த ஒர் உவமையைக் கூறுகிறார். அறுவை சிகிச்சை மேடையில் கிடப்பது தன் ஒரே மகன் என்று கண்ட பிறகு அதைச் செய்து முடிக்க மருத்துவர் துணிவாரா? மாட்டார். அவரது கை நடுங்கும். காரணம் பற்று. பற்றில் இருந்து விளைவுகளைப் பற்றிய எதிர்பார்ப்பு அதில் இருந்த அச்சம். அச்சத்தில் இருந்து மன ஒருமை இல்லாமல் போதல். ஆகவே செயல் சிதறியழிகிறது. கிருஷ்ணன் இங்கு கூறுவது இந்த எளிய, அடிப்படையான விஷயத்தையே.

பற்றில்லாமல் பலன் கருதாமல் செயலை ஏன் செய்ய வேண்டும் என்பதற்கான காரணம் கீதையிலேயே தொடர்ந்து மிகத் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. வெற்றியிலும் தோல்வியிலும் நிலை குலையாத சமநிலைக்காகவே. இங்கே வரும்  ‘விருப்பத்தால் கறைபடிந்த அறிவு’ என்ற சொல்லாட்சி தத்துவார்த்தமாகச் சிந்திக்கும் பழக்கம் உள்ளவர்களை வெகு தொலைவுக்கு இட்டுச் செல்லக் கூடியதாகும். வெறுப்பால் கறைபடிந்த அறிவு இழிந்தது. ஏனெனில் அது ஒரம் சார்ந்தது. நடுநிலை இல்லாததனாலேயே அது அதிதமான உணர்ச்சி வேகத்தையும் தீவிரத்தையும் கொண்டிருக்கும். அது அழிவுச்சக்தி. இதை ஒவ்வொருவரும் அறிவர்.

ஆனால் விருப்புடன் இணைந்த அறிவும் கறை படிந்ததே. அது இன்னும் இழிந்தது. இன்னும் ஒரம் சார்ந்தது. இன்னும் தீவிரமானதும் இன்னும் அழிவு தருவதுமாகும். காரணம் வெறுப்பில் திளைக்கும் அறிவுக்கு உள்ளூர ஒன்று தெரியும். தன்னிடம் வெறுப்பு உள்ளது, வெறுப்பு தீங்கானது, ஆகவே தன் ஞானம் கறைபடிந்தது என்று மாறாக விருப்புடன் கூறிய அறிவு அத்தகைய தன்னுணர்வுக்கு இடமற்றது. விருப்பை அது ஒரு சிறப்பாகவே எண்ணிக் கொள்கிறது.

இங்கு பொதுவாக எழும் வினா ஒன்று உண்டு ‘மோகம்’ என்று கூறப்படுவது ஏன் ஒரு உயர்ந்த விருப்பமாக இருக்கலாகாது? உலகம் மகிழ்வுடன் இருக்க வேண்டும், நாடு செழிக்க வேண்டும் என்பதும் மோகம் தானே? அது ஒருவனுக்குச் செயலாற்றும்போது இருக்கலாகாதா? இங்கு மோகம் என்ற சொல் மிகக் கவனமாகவே கீதையில் போடப்பட்டுள்ளது என்று காணலாம். மோகம் என்றால் ‘விருப்பம்’ என்றல்ல, கச்சிதமாகச் சொன்னால் ‘அடைவதற்கான விருப்பம்’ என்றே பொருள்படும். சரிதுல்லியமான தமிழ்ச் சொல் ‘விழைவு’ என்பதே. மானுட மனதைப் பீடிக்கும் அழுக்குகளாக காமம், குரோதம், மோகம் ஆகிய மூன்றும் குறிப்பிடப்படுகின்றன. இங்குள்ள மோகம் எனும் சொல் இம்மூன்றில் ஒன்றுதான்.

செயலாற்றும் ஒருவனுக்கு உண்மையிலேயே பெரும் இலட்சியங்கள் இருக்குமெனில் அதை அவன் தன்னுடைய நோக்கமாக வரையறுக்காமல் தன்னிலிருந்து வேறுபடுத்திக் கொள்வது சற்றும் சிரமமானதல்ல. ஒருவன்  தன்னுடைய விழைவையே தன்னில் இருந்து வேறுபடுத்த இயலாது ‘நாடு நலம் பெற வேண்டும்’ என்பது ஒரு இலட்சியம். ‘என்னால் என் நாடு நலம் பெற வேண்டும்’ என்பது விழைவு. விழைவில் இருந்து தன்முனைப்பும் அதிலிருந்து இயல்பாகவே விளைவுகளை எண்ணி பதற்றமும் உருவாகி விடுகின்றன. ஆகவேதான் கிருஷ்ணன் மீண்டும் ‘பலனை விழைகிறார்கள் இழிந்தோர்’ என்று கூறுகிறார்.

தொடரும்…

பின்னூட்டம்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s