செயலெனும் யோகம் சாங்கிய யோகம்.4 [நிறைவுப்பகுதி]
ஜெயமோகன்.இன் ல் இருந்து
[சிட்னி]
வேதங்களும் கருமங்களும்
இப்பகுதியில் வேதங்களுக்கு கீதை அளிக்கும் மறுப்பு இந்து ஞான மரபில் கடந்த இருபது நூற்றாண்டுகளாக தத்தளிப்பை உருவாக்கிவருவதாகும். நித்ய சைதன்ய யதி ஒர் உரையாடலில் இவ்வண்ணம் குறிப்பிட்டார். ”வாளை அதன் எதிரே வரும் ஒவ்வொன்றும் மழுங்கடிக்க முயல்கின்றன. வேதாந்தத்தை அத்துடன் உரையாடும், அதற்கு உரையளிக்கும், அதை விரித்துப் பேசும் ஒவ்வொரு தரப்பும் ஏதோ ஒருவகையில் மழுங்கடிக்கவே முயல்கின்றன.” நான் ‘சங்கரர் கூடவா?’ என்று கேட்டேன். “ஆம், சங்கரரும் நாராயண குருவும் கூடத்தான்” என்றார் நித்யா. நான் வியப்பில் பேச்சிழந்தேன்.
நித்யா விளக்கினார். வேதாந்தம் என்பது அதிதூய அறிவுவாதம். அறிவின் சமரசமில்லாத தீவிரம்தான் அதன் இயக்கம். அடுத்த படியாக வேதாந்தம் முழுமுற்றான ஒருமைவாதம். ‘இருப்பது ஒன்றே, அதுவே இவையெல்லாம்’ என்ற நிலைபாடு வேதாந்தத்தின் உள்ளே உள்ள சக்திமையம். ஆனால் வேதாந்தத்தை நடைமுறை உலகுக்குள் கொண்டுவர அதை மழுங்கடித்தே ஆகவேண்டியுள்ளது. கூரிய வாளை எடுத்துக் கொண்டு சந்தை நெரிசலில் நடப்பது போன்றது வேதாந்தத்துடன் உலகியலில் ஈடுபடுவது. வேதாந்தத்தை அணுகும் ஒவ்வொருவரும் அதை பயன்படுத்திக் கொள்ள விழைபவர்கள். அந்த நோக்கமே வேதாந்தத்தை மழுங்கடிக்க ஆரம்பித்து விடுகிறது.
வேதாந்தம் வேள்விகள், கோயில்கள், இறைவேதங்கள், புராணங்கள், சடங்குகள், மற்றும் நம்பிக்கைகள் அனைத்திற்கும் முழுமுற்றாக எதிராகத்தான் இருக்க இயலும். ஆனால் சங்கரருக்குக் கூட வேதங்களை முற்றாகக் கைவிட முடியவில்லை. அவர் ஒருங்கிணைக்க முயன்ற பல அறிவுத்தரப்புகள் வேதங்களை ஆதார நூல்களாகக் கொண்டவை. ஆகவே பற்பல விளக்கங்கள் மூலம் அவர் அத்வைத வேதாந்தத்தை வேதங்களையும் ஒரமாகத் தொட்டுக் கொள்ளும் ஒரு அறிவுத்தரப்பாக நிலை நாட்டுகிறார். தேவையானபோது வேதாந்தத்தை வேதங்களிலேயே கண்டடைகிறார்.
அதேபோல நாராயணகுருவுக்கு சமூக நோக்கம் இருந்தது. அதற்கான சமரசங்கள் தேவையாயின. வேதாந்தியான நாராயண குருதான் கோயில்களை நிறுவினார், ‘தெய்வதசகம்’ எழுதினார். ‘தெய்வமே காத்துக் கொள்க’ என்று தொடங்கும் பிரபலமான பிரார்த்தனைப் பாடல் நாராயண குருவின் தத்துவ சமரசத்திற்கு உதாரணம். ‘அறிவும் அறிபடு பொருளும் அறிபவனும் ஒன்றாகும்’ நிலையையே அதன் கடைசிச் சரணங்களில் நாராயண குரு வேண்டுகிறார். ‘அறிவில் தேர’ வேண்டுமென்று பிரார்த்தனை செய்யும் அப்பாடல் ‘ஆழணும் ஆழணும் சுபம்’ என்று முடிகிறது. முற்றிலும் வேதாந்தப்பாடல்! ஆனால் தெய்வத்திடம் வேதாந்தப் பிரார்தனையை நடத்துகிறது அது. எந்த தெய்வம்? அறிவும் அறிபடு பொருளும் அறிபவனும் வேறிலாத ஒரு நிலை! கேரளத்தில் கோடிக்கணக்கான மக்களுக்கு சந்நிதியில் விளக்கேற்றிவைத்து கும்பிட்டு பாடுவதற்கு ஒரு பிரார்த்தனைப் பாடல் வேண்டும் என்று குருவிடம் கேட்கப்பட்ட போது மிக எளிய ‘நாட்டு மலையாள’ மொழியில் இதை அவர் எழுதி அளித்தார்.
ஆனால் இத்தகைய சமரசங்கள் வழியாக வேதாந்தம் பிற அனைத்து சிந்தனைகளிலும் ஊடுருவியது என்பதும் உண்மையே. சபரிமலை ஐயப்பனை, நெய்தீபமும் நிலைபறையும் சூழ அமர்ந்திருக்கும் தூலமான மூர்த்தியை ‘வேதாந்த சொரூபனே’ என்று விளித்து ‘சரணம் அய்யப்பா’ என்று வணங்குகிறோம் அல்லவா? நாராயணகுரு செய்ததும் அதுவே. எளிய இறையுருவகங்கள் மீது வேதாந்தத்தின் முதல் முழுமை (The Absolute) என்ற இறையுருவத்தை ஏற்றிவிடுகிறார். நித்யா கூறி முடித்தார்.
நடைமுறைத்தளத்தில் வேதாந்தத்தை சற்று ‘வீரியம் குறைத்த’ பிறகே பயன்படுத்த முடியும். ஆகவே அத்தகைய முயற்சிகள் இயல்பானவை. நம் கவனத்தை பெரிதும் கவர்பவை வேதம் குறித்த மழுங்கடித்தல்கள்தான். வேதங்கள் இரண்டாக பிரிக்கத்தக்கவை. அதாவது உட்கருத்தின் அடிப்படையில். ஒரு தேவைக்காக நிகழ்த்தப்படும் தர்க்கபூர்வமான பிரிவினை இது. நடைமுறையில் பார்த்தால் ரிக்வேதத்தின் பத்தாவது மண்டலத்தைத் தவிர பிறவற்றை இவ்வாறு ஒரு பொது அமைப்பில் இருந்து பிரித்தெடுக்க இயலாது.
உலகியல் நலன்களுக்காக பிரார்த்தனை செய்வதும், உலகியல் நலன்கள் பொருட்டு வேள்விக் கருமங்களில் ஈடுபடச் செய்வதும், வேள்விக் கருமங்களுக்கு விதிமுறைகளை அளிப்பதுமான வேத வாக்கியங்களை ‘கர்ம காண்டம்’ சார்ந்தவை எனலாம். மெய்ஞானம் சார்ந்த தரிசனங்கள் கொண்ட பகுதிகளை வேதங்களில் உள்ள ‘ஞானகாண்டம்’ எனலாம். இதன் உச்சமே ரிக்வேதத்தில் உள்ள புகழ்பெற்ற ‘சிருஷ்டி கீதம்’ என்ற பாடல். இன்றுவரை இந்து ஞானமரபு எதிர்கொள்வதும் மையமான வினாவும் அதற்கான உச்சகட்டமான பதிலும் இப்பாடலில் உள்ளன.
வேதாந்தம் என்பது வேத இறுதி. (வேத+அந்தம்.) அது ஞானகாண்டத்தில் இருந்து தொடங்கி முன்னகர்கிறது. உபநிடதங்கள், கீதை, பிரம்ம சூத்திரம் மூன்றும் வேதாந்த நூல்கள் என்று கண்டோம். ஆகவே அவற்றின் தொடக்கம் வேதத்தில் உள்ள ஞான காண்டமே. ஆகவே அவை இயல்பாகவே வேதங்களில் உள்ள கர்மகாண்டத்தை நிராகரிக்கின்றன.
கீதை வேதங்களை 42, 43, 44, 45, 46ஆம் பாடல்களில் தெளிவாக எடுத்துக்கூறி நிராகரிக்கிறது. கர்ம காண்டத்தை வேதமாகக் கண்டு அதைப் பின்பற்றுபவர்களை உலகியல் நாட்டம் உடையவர்கள், அதன் நீட்சியாக இறந்த பிறகு சொற்கத்தை விரும்புவார்கள், பிறவிச் சுழலில் உழல்பவர்கள் என்று கிருஷ்ணன் குறிப்பிடுகிறார். உலக இன்பத்தையே ஆளுமை நிறைவாக எண்ணும் இவர்கள் அந்த நிலையின் இழிவை உணர்ந்தவர்கள். ஆதலால் மலர் போல மென்மையான சொற்களைப் பேசி அந்த உலகியல் நாட்டத்திற்கு ஒரு ஆன்மீக முகம் அளிக்க விரும்புவார்கள்.
(இங்கு நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட பக்திமதங்களை வாசகர் கருத்தில் கொள்ளலாம். அவற்றில் மண்ணில் உள்ள போகங்களே எப்போதும் விழையப்படுகின்றன. அதே போகங்கள் தட்டில்லாமல் கிடைக்கும் இடமே அவர்களுக்கு சொர்க்கம். அதாவது அவர்களைப்பொறுத்தவரை ஒரு ஆளுமையானது போகங்கள் மூலமே நிறைவு அடைய முடியும். அந்த போகங்கள் மண்ணில் டஹ்டைசெய்யப்பட்டிருப்பதனால் விண்ணில் தடையில்லாமல் கிடைக்கின்றன. அவர்களின் ஆன்மீகம் என்பது இப்போகங்களுக்காக வேண்டுவதும், அவற்றுக்கான நிபந்தனைகளை நிறைவேற்றுவதும் மட்டும்தான்.)
வேதங்கள் முக்குணங்களைப் பற்றிப் பேசுபவை என்கிறார் கிருஷ்ணன். இங்கு உத்தேசிக்கப்படுவது சத்வ, ராஜோ, தமோ, குணங்களை ஒருவனின் முக்தி என்பது முக்ககுணங்களை வென்று யோகத்தில் நிலைபெற்று ‘ஆத்மவானாக’ இருப்பது. நாராயண குருவின் சொற்களில் ‘தன்னில் தான் முழ்கி தானாக’வே இருப்பது. அதற்கு வேதங்கள் தேவை இல்லை. வேதங்கள் கிணறுகள் போல. ஞானமே பொங்கிப் பெருகி நிலம் மூடி திசை நிறைக்கும் பெருவெள்ளம். அந்தப் பெருவெள்ளத்தைக் கண்டவனுக்கு நீர் நிலைகளால் என்ன பயன்? முதலில், நீர்நிலைகளே இருக்காதே, அவை பெருவெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டிருக்குமே…?
இங்கு கவனிக்க வேண்டிய ஒரு கருத்து உண்டு. இது சில உரையாசிரியர்களால் கூறப்பட்டுள்ளது. நீர்தான் பெருவெள்ளமாக பொங்கிப் பரப்பதும், கிணற்றில் ஊறுவதும். கிணற்றில் ஊறும்போது அது எல்லைக்குட்பட்டது. சிறியது. ஆனால் தாகம் தீர்ப்பது. பெருவெள்ளம் வரும்வரை அதுவே போதுமானது. பெருவெள்ளம் வரும்போது இந்த நீர் இயல்பாகவே பொருளிழந்து போகிறது. பக்தியிலும் கருமங்களிலும் உள்ளதும் ஆன்மிக ஞானமே. ஆனால் அவை எல்லைக்குட்பட்டவை. ஞானம் வரும்வரை பக்தி தேவை, ஞானம் கிடைத்தபின் பக்தி பொருளிழந்துபொகும் என சில உரையாசிரியர் விளக்குகிறார்கள். கிரிதாரி பிரசாத் தன் உரைகளில் இந்த வரிகளைச் சொல்வதுண்டு.
வேதங்களை நிராகரித்த பிறகுதான் அதன் தொடர்ச்சியாக கிருஷ்ணன், செயலாற்றுவதே கடமை, பலனை எதிர்பார்பது அல்ல என்கிறார். ஆகவே இன்னும் ஒரு நுண்ணிய பொருள் இங்கு வருகிறது. மீமாம்சகர்களைப் பொருத்தவரை வேதமும் வேள்வியும் தான் மாறாத உண்மையும் அழியா நெறியும் ஆனவை, வேதங்கள் என்றும் உள்ளவை-அழியாத ஒலிகள். அவற்றை ரிஷிகள் கேட்டு பிறருக்காக அளித்தனர். அவை மீறவோ மறுபரிசீலனை செய்யவோ முடியாத மூலவிதிகள். இந்த தரப்பே பூர்வ மீமாம்சம்.
வேதங்கள் கூறும் வேள்விச்சடங்குகளின் அடிப்படையில் பூர்வமீமாம்சகர்கள் ஒரு கர்ம சித்தாந்தத்தை உருவாக்கியளித்தனர். மானுடர் கருமங்களைச் செய்ய கடமைப்பட்டவர்கள். நான்கு வருணமும் தத்தம் கடமைகளைச் செய்தல்தான் கருமம். பிராமணர் செய்யும் கருமமே வேள்விகள். ஒவ்வொரு செயலுக்கும் அதற்கான விளைவு உள்ளது. விளைவு இல்லாத கருமமே இல்லை. சிறந்த விளைவை நாடியே கருமங்களைச் செய்ய வேண்டும். வேதங்கள் ஒவ்வொரு வேள்விச் சடங்குக்கும் இன்னின்ன பயன்கள் உண்டு என்று கூறுகின்றன. அவை பெரும்பாலும் உலகியல் நலன்களே ஒருவன் ஆற்றும் வேள்விக்கான பயன் என்பது இறைவனால் அல்லது வேதியர்களால் இரங்கி அருளப்படுவதல்ல. அந்த வேள்விக்ககான விளைவு அது என்பது பிரபஞ்ச விதி. அந்த விதிக்கு தேவர்களும் இறைவனும் கூட கட்டுப்பட்டவர்கள்.
இவ்வாறு விளைவை ஒரு முன் நிபந்தனையாகவே செயலுக்கு விதிக்கும் மீமாம்சத்ததைத்தான் கிருஷ்ணன் இங்கு தீவிரமாக நிராகரிக்கிறார். கீதையின் பல பகுதிகள் மிகவும் தொன்மையானவை என்பதற்கு இதையும் சான்றாகக் கூறலாம். மிகவும் தொடக்கால உபநிடதங்களிலேயே இப்படி வேதங்களுக்கு எதிரான வேதாந்தத்தின் நிலைப்பாடு சமரசமற்றதாக உள்ளது. பிற்காலத்தில் உபநிடதங்கள் வேதங்களை தக்க வைத்துக் கொண்டு பேசவேண்டிய நிலைக்கு வந்தன. பலர் கூறுவதுபோல குப்தர் காலத்திய (கி.பி.ஐந்தாம் நூற்றாண்டு) நூலாக கீதை இருக்கும்பட்சத்தில் இத்தகைய நேரடியான வேத எதிர்ப்பை அதில் கண்டிப்பாக காணச் சாத்தியமாகியிருந்திராது. அந்த நூலுக்கு விரிவான அங்கீகாரமும் கிடைத்திருக்காது.
மேலும் கீதையில் சில பாடல்களுக்கு முன்னால்தான் ‘உனக்கு சொர்க்கமும் போகமும் கிடைக்கும்’ என்று கிருஷ்ணர் கூறுகிறார். அப்பகுதி பிற்காலத்தில் கீதை இன்றைய வடிவில் ஆக்கப்பட்ட போது உருவாக்கப்பட்டது. அதைத்தாண்டி வேதங்களையும் பிற பலன்கருதும் செயல்களையும் நிராகரிக்கும் இப்பகுதி தொன்மையானது. கீதையின் முரணியக்க அணுகுமுறை இந்த வரலாறு சார்ந்த முரண்பாட்டை அல்லது வடிவ முரண்பாட்டை சரிசெய்து கொண்டு முன்னால் செல்கிறது.