அலையறியா கடல்:சாங்கிய யோகம்-1
ஜெயமோகன்.இன் ல் இருந்து
[கவி மழைப்பயணம்]
பாலக்காடு அருகே சாலக்குடியில் பிரம்மானந்த சிவயோகி என்று ஒரு சித்தர் இருந்தார். அவர் தன் மாணவரான சிவானந்தரைச் சந்தித்தபோது நடந்த்து என்று ஒரு கதை சொல்வார்கள். ஞானம் தேடிவந்து வணங்கிய சிவானந்தருக்கு குரு சொன்னார்’’ தூங்காதே’’ பலநாள் தூங்காமலிருக்க முயன்று உடல் மெலிந்து மனம் குலைந்த நிலையில் மீண்டும் குருவிடம் வந்து சிவானந்தர் சொன்னார் ‘’தூங்காமலிருக்க என்னால் முடியவில்லை’’
‘’சரி, எல்லா உயிரும் தூங்கும்போது மட்டும் விழித்திரு, போதும்…’’ என்றார் சித்தர். இரவில் தூங்கலாமே என்ற எண்ணத்துடன் மகிழ்ந்து தன் குடிலுக்குத்திரும்பினார் ஆனால் அப்போதுதான் ஒன்று தெரிந்த்து. அனைத்து உயிரும் தூங்கும் நிலை என்று ஒன்று இல்லை என. இரவில் பல்லாயிரம் உயிர்கள் விழித்துக்கொள்கின்றன. பலகோடி நுண்ணுயிர்கள் தூங்குவதே கிடையாது. அப்படியானால் குரு சொன்ன அந்த இரவு எது?
நாம் காணும் அனைத்தும் ஒரு விழிப்பில் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. இவ்விழிப்புக்கு அடியில் உள்ள இரவையே சித்தர் குறிப்பிட்டார் என்று சிவானந்தர் அறிந்தார். பின்னர் பிற எல்லா உயிர்களைப்போல வாழவும் ஆனால் அக இரவொன்றில் எப்போதும் விழித்திருக்கவும் அவர் கற்றார்.
அந்த அகவிழிப்பு குறித்துபேசும் கீதையின் வரிகள் இவை.
60. குந்தியின் மகனே
முயன்று பார்க்கும்
விவேகம் கொண்டவனின்
உள்ளத்தையும் கூட
கொந்தளிக்கும் புலன்கள்
பற்றியிழுத்துக் கொள்கின்றன
61. உறுதிபூண்டவன்
அவற்றை வென்றடக்கி
என்னை பற்றுகோடாக்கி
இருக்கிறான்
ஏனெனில்
புலன்கள் அடங்கியவனின்
பிரக்ஞையே நிலைப்பேறுடையது.
62. புலனின்பங்களை
எண்ணுபவனுக்கு
பற்றுதல் பிறக்கிறது
பற்றிலிருந்து விழைவும்
விழைவிலிருந்து வெறுப்பும்
பிறக்கின்றன.
63. வெறுப்பினால் மனக்குழப்பம்
குழப்பத்தால் நினைவுச்சிக்கல்
நினைவழிவால் அறிவழிவு
அறிவழிவால் உயிரழிவு.
64. ஆனால்
விழைவையும் வெறுப்பையும்
துறந்து
ஆத்மாவில் ஆழ்ந்துள்ள
புலன்களைக் கருவியாக்கி
புற உலகில் அலையும்
அடங்கிய மனமுடையோன்
அருளை
அடைகிறான்.
65. அருள் கொண்டவனுடைய
துயரங்கள் அழியும்
ஏனெனில்
மனத்தெளிவுடையோன்
அறிவிலும்
உறுதி பெற்றிருப்பான்.
66. மனத்தை அடக்காதவனுக்கு
ஆழ்ந்த அறிவு இல்லை
அவனுக்கு
தன்னிறைவும் இல்லை
தன்னிறைவற்றவனுக்கு
அமைதி இல்லை
அமைதியற்றவனுக்கு
ஏது இன்பம்?
67. ஏனெனில்
அலைபாயும் புலன்களை
பின்பற்றும் மனம்
அவனுடைய
பிரக்ஞையை கைப்பற்றுகிறது
கடல்மீது
கப்பலை
கவரும் காற்றுபோல.
68. தடந்தோள் கொண்டவனே,
எனவே
எவனுடைய புலன்கள்
புலனின்பங்களில் இருந்து
முற்றிலும் தடுக்கப்பட்டிருக்கின்றனவோ
அவனுடைய
பிரக்ஞையே
நிலைபேறுடையது.
69. அனைத்துயிருக்கும்
எது இரவோ
அதில்
புலன் வென்றவன்
விழித்திருக்கிறான்
எப்போது
பூமியில் உள்ளவையெல்லாம்
விழித்திருக்கின்றனவோ
அப்போது
முனிவனுக்கு
இரவு.
70. முற்றிலும் நிறைந்து
அசைவற்று நிலைத்த
பெருங்கடலில்
நீரெல்லாம்
சென்றணைவது போல
செயல்கள் அனைத்தும்
சென்றடையும் முனிவன்
அமைதியை அடைகிறான்
செயல்களை விரும்புபவன்
அமைதியடைவதில்லை
71. எந்த மனிதன்
எல்லா செயல்களையும்
நீத்து
ஆசையற்று
தன்முனைப் பழிந்து
தன்னிலை இழந்து
இருக்கிறானோ
அவனே
அமைதியை அடைகிறான்
72. பார்த்தா,
இதுவே
பிரம்மத்தில் நிலைப்பதாகும்
இதையடைந்தவனுக்கு
ஆசைகளில்லை.
மரண காலத்திலேனும்
இதில் நிலைப்பவன்
பிரம்ம நிர்வாணம்
பெறுகிறான்.
பிரம்ம வித்தையை கற்பிப்பதும்
யோக நூலும்
கிருஷ்ண அர்ஜுன உரையாடலும் ஆன
பகவத்கீதை எனும்
உபநிடதத்தின்
சாங்கிய யோகம் எனும்
இரண்டாம் அத்தியாயம் நிறைவு.
தான் ஆனவன்
இந்தப் பாடல்களில் பல இடங்களின் ‘ஆத்மவான்’ என்ற சொல்லாட்சியைக் காணலாம். கீதை உரைமரபில் ஆழமாக விவாதிக்கப்பட்ட சொல் இது. ஆத்மவான் என்றால் ‘ஆத்மா உடையவன்’ என்று நேர்பொருள். ‘ஆத்மாவாகியவன்’ என்றும் பொருள் கொள்ளலாம். பூமியில் உள்ள அனைத்து உயிர்களும் ஆத்மா உடையவைதான். அவ்வகையில் அனைத்துமே ஆத்மாதான். ஆனால் ஆத்மவான் என்பவன் தன்னுள் உறையும் ஆத்மாவே தான் என்று உணர்ந்தவன். தன் ஆத்மாவே தான் என்ற நிலையில் எப்போதும் உறைபவன்.
இச்சொல்லை மேலும் விரிவாகப் பொருள் தந்து விரித்தபடியே சொல்லலாம். இந்து ஞானமரபுகளின் பொதுவான தரிசனம் என்னவெனில் தன்னிலை என்பது ஒரு உயிர் கருக்கொள்ளும் போதே அதில் குடியேறுவதாகும். இதை சைவ சித்தாந்த விளக்கங்களில் ‘ஆணவ மலம்’ என்ற பேரில் விரிவாகவே விவாதித்திருப்பதைக் கேட்டிருப்போம். தன்னிலையைப்பற்றி மேற்கத்திய சிந்தனைகள் தொடர்ந்து வந்தபடியே உள்ளன. தெகார்த்தே முதல் ழாக் லகான் வரை தன்னிலையை பற்றிக் கூறியவற்றை இத்தருணத்தில் நாம் சேர்த்து சிந்திக்கலாம். பொதுவாக இன்று நமக்கு கிடைக்கும் சில வரையறைகளைக் கீழ்கண்டவாறு தொகுத்துக் கூறலாம்.
1. ‘நான் இருக்கிறேன்’ என்று ஒரு உயிர் கொள்ளும் உணர்வே தன்னிலை.
2. இவவுணர்வை தன்னை பிறிதில் இருந்து பிரித்தறிவதன் மூலமே மனிதமனம் அடைகிறது. நான் எனும்போது நானல்லாத எதுவும் பிறிது என்ற உணர்வே அதற்கு அடிப்படையாக அமைகிறது.
3. தன்னிலை என்பது அடிப்படையில் உடல் மூலமே உருவகிக்கப்படுகிறது. தன்னுடைய உடலையே தான் என்று உணர்தல் முதல்நிலை. தன் உடலை குறியீடாக மாற்றிக்கொண்டு அதன் மூலம் பிரபஞ்சத்தை அறிய முயல்தல் இரண்டாம் நிலை. உயரம், குள்ளம், மென்மை, கருமை போன்ற பலநூறு உருவகங்களை உடலை அளவு கோலாகக் கொண்டு உருவாக்கப்படுவனவே.
4. ஒரு குறியீடாக தன்னிலையே உருவகித்துக் கொண்டு அதை புழக்க தளத்திற்குக் கொண்டு வருவது மொழியின் மூலமே நிகழ்கிறது. தன்னிலை என்ற கருத்துருவம் முற்றிலும் மொழியாலேயே உருவகிக்கப்படுகிறது.
5. நிரந்தரமான, மாறாத, தன்னிலை என்பது ஏதும் இல்லை. தன்னிலை என்பது அந்தந்த மொழிச் சூழலில், பேசுதளத்தில், அவ்வப்போத பொதுவாக உருவகிக்கப்படுவதாகும். இதுமாறிக் கொண்டே இருக்கும். சொற்களன் (discourse) தான் அதை முடிவு செய்கிறது.
6. மொழியின் வழியாகவே தன்னிலை உருவகிக்கப்படுகிறது என்பதனால் மொழி கற்கப்படும் குழந்தைப்பருவம், அதாவது 18 மாதங்களுக்கு உட்பட்ட பருவம்தான் தன்னிலை உருவாகக் கூடிய காலகட்டம். மொழியில் ஒரு ஆடி தன்னைப்பார்க்கும் குழந்தை தான் என உணர்கிறது. இதை ஆடிப்பருவம் (Mirror Stage) எனலாம்.
7. மொழி இருக்கும் வரை தன்னிலை என்பதும் இருக்கும்.
மேலே கூறப்பட்ட கருத்துக்களில் ஐந்து, ஆறு, ஏழாம் கருத்துக்கள் இன்றைய பின் நவீனத்துவ சிந்தனையாளர்களால் முன்வைக்கப்படுபவை. ஆறாம் கருத்து உளவியலாளரான ழாக் லாகான் விரிவாக முன்வைக்கும் அவருக்கே உரிய கருத்து. நான்காவது கருத்து விட்ஜென்ஸ்டீன் போன்ற மொழி சார்ந்த தத்துவ வாதிகளால் முன்வைக்கப்படுவது. இக்கருத்துக்களை எப்படி எடுத்துக்கொள்வது என்பதை வாசகர் மூலநூல்கள் வழியாக படித்து விவாதிக்கலாம். இங்கு இவை தன்னிலை என்பது அன்று முதல் இன்று வரை எப்படி ஒரு மாபெரும் தத்துவப்பிரச்சினையாக உள்ளது என்று சுட்டும் பொருட்டு தொகுத்துத் தரப்பட்டன.
அகங்காரம், மமகாரம், மமதை என்றெல்லாம் பல்வேறு சொற்களில் இந்து ஞான மரபு குறிப்பிடுவது இந்தத் தன்னிலையையே. மனிதனுள் உறையும் தன்னை உணரும் தன்மையை. இது ஒரு மாயை என்பதே வேதாந்தத்தின் தரப்பாகும். அழிவற்றதும் எங்கும் பரந்ததும் அனைத்தும் ஆனதுமான ஆத்மா ஒர் உடலில் இருந்து கொண்டு தன்னை தனித்த இருப்பாக உணரும் நிலை. இது மாயையே. குடத்திற்குள் உள்ள ஆகாயம் தன்னை குடவடிவில் உணர்வது போன்றது இது.
இம்மாயையை உதறி தன் ஆத்மாவின் இயல்பை தானே உணர்ந்தவனே கீதை குறிப்பிடும் ஆத்மவான். அவனுக்கு அகங்காரம் அழிந்து விடுகிறது. தன் உடலை, தன் உறவுகளை, தன் எண்ணங்களை வைத்து அவன் தன்னை உணர்வதில்லை. தன்னை பிரபஞ்சமெங்கும் பரவி விரிந்து என்றுமிருக்கும் ஒன்றின் பிரித்தறிய முடியாத ஒன்றாக அவன் உணர்கிறான். ‘ஆத்ம சாட்சாத்காரம்’ என்று இதை இந்து ஞானமரபு மீண்டும் மீண்டும் குறிப்பிடுகிறது. இதன் பல தளங்கள் மேற்கொண்டு விவாதிக்கப்படும்.
தொடரும்..