அயன் ராண்ட் 2

அயன் ராண்ட் 2

ஜெயமோகன்.இன் ல் இருந்து

அயன் ராண்ட் பற்றி தமிழில் எதுவும் எழுதப்பட்டதில்லை என்றே நினைக்கிறேன். சிற்றிதழ் சார்ந்த இலக்கிய உலகம் அவரைபொருட்படுத்தவில்லை. காரணம் க.நா.சு அவரை இடதுகையால் ஒதுக்கிவிட்டார்.  எங்கோ ஒரு கட்டுரையில் க.நா.சு ‘அரைவேக்காடு எழுத்து’ என்று அயன் ராண்ட் பற்றி சொல்லியிருக்கிறார். நவீன ஐரோப்பிய எழுத்தாளர்களை ஆதர்சமாகக் கொண்ட, அவ்வகையில் எளிய மக்களை அவர்களின் மொழியிலேயே முன்வைக்கும் கலைப்படைப்புகள் உருவாகவேண்டுமென வலியுறுத்திய, க.நா.சுவுக்கு அயன் ராண்ட் கடுப்பைக் கொடுத்ததில் ஆச்சரியமில்லை.

ஆனால் அயன் ராண்ட் சுந்தர ராமசாமியில் ஆழமான பாதிப்பைச் செலுத்தியிருக்கிறார். அயன் ராண்ட் முன்வைக்கும் புறவயவாதத்தை சுந்தர ராமசாமி ஏற்கவில்லை. ஆனால் அவரது ‘அறிவுஜீவிமைய வாதம்’ அவர்க்கு ஏற்புடையதாக இருந்தது. ஆகவே அவருக்குள் ஒரு நுட்பமான முறையில் அயன் ராண்ட் ‘வளர்ச்சி’ அடைந்தார். அவர் ஒருபோதும் அயன் ராண்ட்டைப்பற்றி எழுதியதோ மேற்கோள் காட்டியதோ இல்லை. ஆனால் அயன் ராண்ட்டின் கொள்கைகளை தனக்குரிய முறையில் மாற்றி அதை ‘கலைஞன் மையவாதமாக’ ஆக்கிக்கொண்டார்.

சுந்தர ராமசாமியின் எழுத்துக்களில் நாம் ‘சமூகத்தைக் கட்டி எழுப்புபவனும் அதை நிலைநிறுத்துபவனும் கலைஞனே, அவனே சமூகத்தின் ஆன்மா’ என்ற குரலை அவர்  மீண்டும்  மீண்டும் எழுப்புவதைக் காணலாம். தத்துவமும் அரசியலும் தோற்றுவிட்டன, இனி கலைஞனிடமே உலகின் மீட்பு இருக்கிறது என்று சுந்தர ராமசாமி எழுதினார். இது அயன் ராண்ட்டின் கோட்பாட்டின் மாற்று வடிவமே என்பதை ஊகிப்பது சிரமம் அல்ல.

அயன் ராண்டுக்கு முன்னரே மேலைநாட்டினரில் ஒருசாரார் இதே கலைஞன்மைய வாதத்துக்குச் சென்று சேர்ந்திருக்கிறார்கள். மொத்த ஐரோப்பியப் பண்பாட்டையே கதே, மொஸர்த்,பீத்தோவன்,பாக், ரெம்ப்ராண்ட் ஆகியோரில் இருந்து ஆரம்பிக்கும் சிந்தனையாளர்கள் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஐரோப்பாவில் இருந்தார்கள் — கார்லைல் நவீன ஓவியர்கலை பற்றி எழுதிய புகழ்பெற்ற பெருநூலுக்குப் பின்னால் உருவான சிந்தனை இது. எழுபது எண்பதுகள் வரைக்கூட ஐரோப்பாவில்சிச்சிந்தனை இருந்தது. மெல்ல மெல்ல அது காலாவதியாகியது. அயன் ராண்ட் அச்சிந்தனையையே அறிவுஜீவிமையவாதமாக மாற்றுகிறார். நான் சந்திக்கும்போது [ரமேஷ்] பிரேம் அந்நம்பிக்கையை சுவீகரித்துக்கொண்டவராக இருந்தார். அந்நோக்கில் அவர் எழுதிய ஒரு சிறுகதை நான் நடத்திய ‘சொல்புதிது’ இதழில் வெளியாகியது.

சுந்தர ராமசாமி அயன்ராண்ட் வழியாக கார்லைல் வரை சென்று சேர்ந்தவர். ஆனால்  அச்சிந்தனையுடன் தமிழகத்துக்கு வரும்போது அவர் கம்பனையோ, நம்மாழ்வாரையோ, இங்கிருந்த மாபெரும் சிற்பவெற்றிகளையோ பொருட்படுத்தவே இல்லை என்பதையும் அவற்றை ஒட்டுமொத்தமாக மரபின் பின்பாரம் என்று தவிர்த்துவிட்டார் என்பதையும் காணலாம். அவர் பேசியது ‘நவீன’க் கலைஞனைப்பற்றி மட்டுமே. சொல்லப்போனால் நவீன எழுத்தாளனை மட்டுமே.

எழுத்தாளர் நீலகண்டன் அரவிந்தனின் அப்பா பேரா. என்.எஸ்.பிள்ளை அவர்கள்தான் அயன் ராண்டை தனக்கு அறிமுகம் செய்ததாக ஒருமுறை சுந்தர ராமசாமி சொல்லியிருக்கிறார். நான் அயன் ராண்டை என் வாசிப்பும் நோக்கும் வளர்ச்சி அடைந்தபின்னர் சுந்தர ராமசாமி மூலமாகவே அறிமுகம்செய்துகொண்டேன். நான் அவரது ·பௌண்டன்ஹெட் நாவலை மட்டுமே வாசித்தேன். அயன் ராண்ட்டைப்புரிந்துகொள்ள அந்த நாவலே போதுமானது என்று தோன்றுகிறது. அதற்குமேல் அயன் ராண்ட்டைப்பற்றி ஆய்வு செய்து நான் எதையும் படிக்கவில்லை. பின்னர் அவரைப்பற்றிய விவாதங்களுக்காக சிலவற்றைப் படித்திருக்கிறேன். அயன் ராண்ட் அதற்கு மேல் முக்கியத்துவம் அளிக்க வேண்டிய எழுத்தாளர் அல்ல என்ற எண்ணமே என்னிடம் இருக்கிறது.

**

அயன் ராண்ட்டின் எழுத்துக்களை வைத்து பார்க்கவேண்டிய பின்புலங்களில் அவரது சொந்த வாழ்க்கையும் ஒன்று. அவர் ருஷ்யாவில் ஒரு பணக்கார குடும்பத்தில் 1905 ல் பிறந்தார். செல்வத்தில் வளர்ந்து சிறந்த கல்வி கற்றார். போல்ஷெவிக் புரட்சியால் அவரது பெற்றோர் சொத்துக்கள் பிடுங்கப்பட்டு  உழைப்பாளர்களாக ஆனார்கள். தன் வயது வரை ருஷ்யாவில் வாழ்ந்த அயன் ராண்ட் அங்கிருந்து தப்பி ஓடி கடைசியாக அமெரிக்கா வந்து அந்நாட்டை தன் நாடாக ஏற்றுக்கொண்டார். தன் இயற்பெயரான அலிஸா ரோஸென்பாம் [Alisa Zinovievna Rosenbaum] என்பதை அயன் ராண்ட் என்று மாற்றிக்கொண்டு எழுத ஆரம்பித்தார்.

·பௌண்டன்ஹெட் அவரது புகழ்பெற்ற முதல் நாவல் .இது சினிமாவாகவும் வந்தது. இந்தப் புகழ் வரை வந்து சேர்வதற்கு அவர் பலவகையான சிறுமைகளைச் சந்தித்து கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது.  எழுத்தாளர் ·ப்ராங் ஓ கானர் [ Frank O’Conner ]ஐ அவர் திருமணம் செய்துகொண்டார். அவரை ஒரு ஆதர்ச கணவராக கற்பனைசெய்துகொண்டார். ஆனால் ·பௌண்டன்ஹெட்டின் வெற்றிக்குப் பின்னர் அவருக்கு ஒரு ஆதர்ச வாசகராக அறிமுகமான  நதானேயேல் பிராண்டன் [Nathaniel Branden]  என்பவருடன் கள்ள உறவு உருவானது. இதை அவர் கணவரிடமிருந்து மட்டுமல்ல தன்னிடமிருந்தே மறைத்தார். எல்லா கள்ள உறவுகளையும்போலவே அது கசந்து  முறிந்தது. அவரை மன அழுத்தத்துக்கும் பின்னர் மனக்கோளாறுக்கும் இட்டுச்சென்றது

ஆனால் அயன் ராண்ட் அவரது கணவருடனேயே வாழ்ந்தார். 1979 ல் கணவர் இறந்தார். 1982 ல் முதியவயதில் அயன் ராண்ட் இறந்தார். இறக்கும்போது அவர் ஒரு மதநிறுவனர் போல  ஆகிவிட்டிருந்தார். தீர்க்கதரிசிக்குரிய இடம் அவருக்கு ஒருசாராரால் அளிக்கப்பட்டது. அவர் ·பௌண்டன்ஹெட் முதலிய நாவல்கள் மூலம் முன்வைத்த புறவயவாதத்தை பரப்ப பிராண்டன் கழகம் [ Nathanial Branden Institute]  போன்ற அமைப்புகள் நிறுவப்பட்டிருந்தன. ஆனால் வாழ்க்கையின் கடைசியில் அயன் ராண்ட் தன் கோட்பாடுகள் காலாவதியாவதை கண்டார். அது அவரை மனம் உடையச்செய்தது.

அயன் ராண்டின் வெற்றிக்குப் பின்னால் உள்ள முக்கியமான ஒரு அம்சம், அவர் எழுத ஆரம்பித்த காலகட்டத்தில் அமெரிக்காவில் இருந்த கடுமையான கம்யூனிச எதிர்ப்பு. மெகார்த்தியிசத்தின் உச்சகாலகட்டத்தில் அவரது எழுத்துக்கள் வெளிவந்தன. கம்யூனிசத்தால் துரத்தப்பட்டவர், கம்யூனிச எதிர்ப்பாளர் என்பது அவருக்குச் சாதகமான அம்சமாக இருந்தது. அயன் ராண்ட் மெக்கார்த்தியிசத்தை நேரடியாக ஆதரிக்கவில்லை என்றாலும் அதன் ஆதரவாளராகவே இருந்தார். இடதுசாரிகள் மேல் வைக்கப்படும் நேர்மையான குற்றச்சாட்டுகளை திரிக்கவே மெக்கார்த்தியிசம் என்ற சொல் உருவாக்கப்பட்டதாகவும் செனெட்டர் மெக்கார்த்தி நேர்மையான அரசியல் விமரிசகர் என்றும் அவர் எண்ணினார்.

சமகாலத்தில் தென்னமெரிக்க நாடுகளில்  அமெரிக்காவால் செய்யப்பட்ட அரசியல்சதிகள் அழிவுவேலைகள் அனைத்தையுமே சோவியத் எதிர்ப்பின் மனநிலையில் நின்று அயன் ராண்ட் நியாயப்படுத்துவதைக் காணலாம். இந்த மனநிலை அன்றைய குளிர்ப்போர் சூழலில் அவரை ஒரு கணிசமான தரப்பின் ஆதரவைப்பெறச்செய்தது.

**

ஹிட்லரின் வரலாற்றைப் படிக்கும்போது ஒன்றைக் கவனித்தேன். அவர் கலைகளிலேயே தலையாயது என கட்டிடக்கலையை எண்ணினார். ‘பொருள்வயமாக வடிக்கப்பட்ட இசை’ என்று கட்டிடங்களை ஹிட்லர் வருணித்தார். அவர் சிறுவயதில் படிக்க விரும்பியது கட்டிடக்கலை. அதில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர் மோசமான ஓவியராகவும் கண்பார்வைக்குறைபாடு கொண்டவராகவும் இருந்தார். அந்த நிராகரிப்பால் அவர் மனம் உடைந்திருந்தார்.

பின்னர் நாஸி கட்சியை நிறுவி ·ப்யூரர் ஆனபின்னர் அவர் கட்டிடக்கலை போஷகராக ஆகி அந்த மனக்குறையை தீர்த்துக்கொண்டார். போருக்கு நடுவேகூட கட்டிட நிபுணர்களுடன் மணிக்கணக்காக விவாதிக்க அவர் நேரம் கண்டுபிடித்தார். கடைசியில் போர் உச்சத்துக்குச் சென்று ஜெர்மனி அழியும்போதுகூட அவர் பெர்லின் நகரை முழுமையாக மறுநிர்மாணம் செய்வதைப்பற்றித்தான் சிற்பிகளுடன் விவாதித்துக்கொண்டிருந்தார்.

அவருக்குமுன்னால் கெய்ஸர் வில்லியம் கட்டிடக்கலைப் பித்தராக இருந்தார். ஸ்டாலினுக்கும் ஹிட்லருக்கும் இடையே உள்ள முக்கியமான ஒற்றுமைகளில் ஒன்று கட்டிடக்கலை மீதான பிரியம். ஆம், உலகின் கொடுங்கோலர்கள், சர்வாதிகாரிகள் பெரும்பாலானவர்களின் ஆர்வம் கட்டிடக்கலைமேல் இருந்திருக்கிறது.

ஏன்? கட்டிடத்தை ஒரு கலைப்பொருள் என்று கொண்டால் அதன் தனித்தன்மை என்ன? இருண்டமேதையான ஹிட்லரின் சொற்களுக்கே செல்லவேண்டியிருக்கிறது. அது ‘உறைந்த இசை’. ஹிட்லர் ரோமாபுரியின் செவ்வியல் கட்டிடங்களின் மீது தீராத மோகம் கோண்டிருந்தார். பிரம்மாண்டமான கட்டுமானங்களை உருவாக்கி ஜெர்மனியை நவீன யுகத்தின் ரோமாபுரியாக ஆக்க வேண்டும் என அவர் விரும்பினார். அப்படிப்பார்த்தால் கட்டிடங்களை அவர் ‘உறைந்த கருத்துக்களாகவும்’ கண்டார் எனலாம்.

ஆம், கட்டிடங்களின் மிக முக்கியமான சிறப்பியல்பே அவை நிலையானவை என்பதுதான்.  அவற்றை இசை என்று கொண்டால் நிலைத்துப்போய் அசைவிழந்து நிற்கும் திடமான இசை அவை. கருத்துக்கள் என்று கொண்டால் திட்டவட்டமாக ஒன்றையே காலம்தொறும் சொன்னபடி அவை வானளாவ ஓங்கி நிற்கின்றன. சர்வாதிகாரிகளுக்கு ஏன் கட்டிடக்கலை பிடித்திருக்கிறது என்றால் அதில் உள்ள திடத்தன்மையால்தான். ஒரு கட்டிடத்தின் பாவனை என்பதே ‘என்றென்றுமாக’ என்பதுதானே?

தொடரும்..

பின்னூட்டம்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s