அயன் ராண்ட் 2 [தொடர்ச்சி]
ஜெயமோகன்.இன் ல் இருந்து
பத்துவருடம் முன்பு உலகின் உயரமான கட்டுமானமாகக் கருதப்பட்ட டொரொண்டோவின் சி.என்.என் கோபுரத்துக்குச் சென்று வந்தபோது அ.முத்துலிங்கத்திடம் சொன்னேன், அது வானத்தை நோக்கி நீட்டப்பட்ட ஒரு முஷ்டி போல இருக்கிறது, அகங்காரமும் சவாலும் மட்டுமே தெரிகிறது, அது என்னை தொந்தரவு செய்கிறது என. ஆம்,கட்டிடங்களில் இருந்து அகங்காரத்தைப் பிரிக்க முடியாது. தஞ்சை பெரிய கோயில் ராஜராஜ சோழனின் அகங்காரம்.ஆகவேதான் அவனது சொந்த மகனுக்கு அதைவிடப்பெரிய கோயில் ஒன்று தனக்கெனத் தேவைப்பட்டது.
·பௌண்டன்ஹெட் நாவலின் கதாநாயகன் ஹோவார்ட் ரோர்க் [Howard Roark] ஒரு கட்டிடநிபுணன் என்பது இந்தப்பின்னணியில் கவனிக்கத்தக்கது. அவன் ஆளுமையையும் அவனுடைய கோட்பாட்டையும் நாம் அவனுடைய கட்டிடக்கலையை வைத்தே புரிந்துகொள்ள வேண்டும். புரிந்துகொள்ளும் வசதிக்காக நாம் ரோமென் ரோலந்தின் ழீன் கிறிஸ்தோ·ப் என்ற புகழ்பெற்ற நாவலின் கதாநாயகன் ழீன் கிறிஸ்தோ·புடன் ·பௌண்டன்ஹெட்டின் கதாநாயகன் ரோர்க்-ஐ ஒப்பிட்டுப்பார்க்கலாம்.
‘ழீன் கிறிஸ்தோ·ப்’ நவீன ஐரோப்பிய மனத்தின் வடிவாக்கத்தில் பெரும்பங்கு வகித்த நாவல். அதற்கிணையான பங்களிப்புள்ள இன்னொரு நாவல் விக்டர் ஹ்யூகோ வின் ‘லெ மிஸரபில்ஸ்’. அனேகமாக உலகின் எல்லா மொழிகளிலும் இவையிரண்டும் மொழியாக்கம்செய்யப்படுள்ளன. நான் இவை இரண்டையுமே செவ்வியல்படைப்புகள் என நினைக்கிறேன். இவ்விரு நாவல்களும் இணைந்து உருவாக்கும் ஒரு உதாரண ஐரோப்பிய மனதின் சித்திரமே நெடுங்காலமாக நீடித்து ஆழ்ந்த பாதிப்புகளை உருவாக்கியது. உணர்ச்சிகரம்,நெகிழ்ந்த தன்மை, கலைகளைச் சார்ந்த நுண்ணுணர்வு, இலட்சியவாதம், சாகஸத்தன்மை ஆகியவற்றின் கலவை என அந்த ஆளுமையை உருவகிக்கலாம்
ழீன் கிறிஸ்தோ·ப் ஓர் இசைக்கலைஞன் என்பது இந்தச் சந்தர்ப்பத்தில் கவனிக்கவேண்டிய விஷயம். இசை நிலைக்காமல் நெகிழ்ந்து வழிந்து ஓடும் ஒரு பிரவாகம். அதற்கு புறவயத்தன்மையே இல்லை. ஆம், அடிப்படையில் இசைக்கு நேர் எதிரான கலை வடிவம் என்றால் அது கட்டிடக்கலையே. ஹிட்லர் என்னும் எதிர்மேதையின் எல்லா அவதானிப்புகளிலும் அத்தகைய ஆழம் இருக்கும். ஒரு பக்கம் ·பாக்னரின் இசையின் ரசிகனாக இருந்தார் அவர். இன்னொரு பக்கம் அதை சிமிண்டிலும் கல்லிலும் இரும்பிலும் வடிக்க நினைத்தார்.
ழீன் கிறிஸ்தோ·ப் ஓர் இசைக்கலைஞனாக, இசைக்குரிய அனைத்து இயல்புகளும் கொண்டவனாக, ரோமென் ரோலந்தால் சித்தரிக்கப்படுகிறார். வாழ்க்கையின் எல்லா உணர்ச்சிகரங்கள் வழியாகவும் உருகி உருகி வழிந்துகொண்டே இருக்கிறான் ழீன் கிறிஸ்தோ·ப். ஓர் இசைக்கலைஞனாக அவனுக்குப் பெண்களுடன் இருக்கும் உறவு அந்நாவலின் சாரத்தை வெளிப்படுத்துகிறது. ஒவ்வொரு காதலியிலும் அவன் தன் ஆளுமையை ஒவ்விருவிதமாக உருமாற்றிக்கொண்டு ஈடுபடுகிறான். அவர்கள் வழியாக அவனும் அவன் இசையும் பரிணாமம் கொள்கிறார்கள். ஆகவே அந்தக்காதலிகள் வெறும் பெண்கள் அல்ல, அவர்கள் வாழ்க்கையின் படித்துறைகள் போல.
ஆனால் ரோர்க் இரும்பால் செய்யப்பட்டு தோலும் சதையும் போர்த்தப்பட்ட மனிதன். அவன் ஒரு கட்டிடம். நாவல் முழுக்க ரோர்க் நெகிழ்வதில்லை. பரிணாம மாற்றம் கொள்வதில்லை. நாம் நாவலின் தொடக்கத்தில் காணும் ரோர்க் கட்டிடக்கலை கல்லூரியில் மாணவனாக இருக்கிறான். அப்போதே திட்டவட்டமாக அவனுடைய கலைக்கோட்பாடு உருவாகி விட்டிருக்கிறது. பிறர் செய்ததை, அதை இன்னொருவர் செய்துவிடார் என்பதனாலேயே, அவன் செய்யப்போவதில்லை. கலையில் அவன் தேடுவது தனக்கு மட்டுமே உரிய ஒரு தனித்தன்மையை மட்டுமே. அதில் பிறரது ரசனை அல்லது அபிப்பிராயம் அவனுக்கு ஒரு பொருட்டே அல்ல. கலை வழியாக அவன் தேடும் உச்சம் என்பது ஏற்கனவே அவனுக்குள் திட்டவட்டமாக உருவாகியிருக்கும் அவனுடைய ஆளுமையை கல்லிலும் இரும்பிலும் சிமிண்டிலும் புறவயமாக வடிப்பதே.
அந்த மாற்றமின்மை நாவல் முழுக்க ரோர்க்கின் ஆளுமையில் இருந்துகொண்டே இருக்கிறது. உண்மையில் இந்த ஒரே ஒரு ‘மனிதக் கட்டிடம்’ மட்டும்தான் இந்நாவல். நாவலில் ஆரம்பம் முதல் அவனுடன் இணைத்து சித்தரிக்கப்படும் அவன் நண்பனான பீட்டர் கீட்டிங் [Peter Keating] உண்மையில் ரோர்க் உடன் ஒப்பிடப்பட்டு காட்டப்படும் ‘பிறர்’தான். சாதாரண மனிதர்களின், பொதுவான மனிதர்களின் பிரதிநிதி அவன். அவனில் இருந்து ரோர்க் கொள்ளும் வேறுபாடுகள்தான் ரோர்க்கின் ஆளுமை.
கீட்டிங் சாதாரணமாக எல்லாரும் செய்வதையே செய்கிறான்.முதலில் ஒழுங்காகப் படித்து வெற்றி பெறுகிறான். பெரிய நிறுவனத்தில் வேலைக்குச் சேர்கிறான். தன்னை நாடி வருபவர்களுக்கு அவர்கள் விரும்பும் வகையில் கட்டிடங்களைக் கட்டிக்கொடுக்கிறான். அவர்களிடம் இருந்து பாராட்டுக்களையும் பணத்தையும் பெற்றுக்கொள்கிறான். அதாவது அவனுடைய கலை அல்லது திறன் என்பது பிறருக்காகவே இருக்கிறது. சமூகம் எதை உருவாக்குகிறதோ அதுவே அவன் வழியாக வெளி வருகிறது. சமூகம் செதுக்கி அளித்துள்ள அச்சில் தன்னை ஊற்றிக்கொண்டு தன்னை வெற்றிகரமாக வார்த்துக்கொள்கிறான் அவன்.
ஆனால் வெற்றியின் உச்சியில் ஆழமான ஏமாற்றத்துக்கு ஆளாகிறான் கீட்டிங். தான் எதையுமே சாதிக்கவில்லை என உணர்கிறான். மறுபக்கம் ரோர்க் தன் சுயத்துவத்தில் மட்டுமே ஊன்றி நிற்கிறான். சமரசத்துக்கு தயாரவதே இல்லை. கட்டிடக்கலை வாய்ப்புகள் இல்லாமலானபோது கூலிவேலைக்குச் செல்லவும் அவன் தயாராகிறான். கீட்டிங்கின் தடுமாற்றத்தை முன்வைத்து ஒருவனின் மகிழ்ச்சி என்பது எதில் உள்ளது என்ற விசாரங்களுக்குச் செல்லும் நாவல் மதங்களால் முன்வைக்கப்படும் சுயநலமின்மை, தியாகம், அர்ப்பணிப்பு போன்றவை உண்மையில் பழங்குடிகள் தங்களை தவிர்த்து தங்கள் இனக்குழுவை முன்னிறுத்தும் பொரூட்டு ஊருவாக்கப்பட்டவையே என்று கூறி ஒருவன் தன் தனித்தன்மையை அடைவதும் வெளிப்படுத்துவதும்தான் மகிழ்ச்சிக்கான அடிப்படைகள் என வலியுறுத்துகிறது. அதுவே புறவயவாத அணுகுமுறை. சுய நிராகரிப்புக்குப் பதிலாக சுயமுழுமையை அடைதல்.
படைப்பூக்கத்தை இழந்துவிட்ட கீட்டிங் அவனுக்கு வந்த ஒரு மிகப்பெரிய வாய்ப்பை வெற்றிகரமாக நிறைவேற்ற முடியாமல் தவிக்கிறான். தன் எதிரியாகவே ஆகிவிட்ட ரோர்க்கிடம் உதவி கோருகிறான். ஒரு நிபந்தனையுடன் ரோர்க் அதற்கு ஒப்புக்கொள்கிறான். தன்ன்னுடைய திட்டப்படி இம்மி கூட விலகாமல் அந்தக் கட்டிடம் கட்டப்படவேண்டும் என்பதுதான் அது. பொது சமூகம் உண்மையான படைப்புத்திறன் கொண்டவர்களை புறக்கணிக்கிறது. ஆனால் முன்னே ஒரு அடி எடுத்து வைக்க வேண்டும் என்று வரும்போது அது அவர்க¨ளையே நாடுகிறது எனப்படுகிறது.
கட்டிடம் கட்டப்பட்டு முடியும்போது அது வெகுஜன ரசனையுடன் சமரசம் செய்துகொண்டிருப்பதை உணர்ந்த ரோர்க் அதை டைனமைட் வைத்து தகர்த்து விடுகிறான் .ரோர்க் விசாரணைக்கு உட்படுத்தப்படுவது ·பௌண்டன்ஹெட் நாவலின் முக்கியமான பகுதி. புறவயவாதத்தின் எல்லா தத்துவக் கூற்றுகளும் நீதிமன்றத்தில் முன்வைக்கப்படுகின்றன. உரிய ஆதாரங்களுடன் தன்னை நிரூபித்து ரோர்க் விடுதலையாகிறான். இன்னொரு கட்டிடம் கட்டும் பணி அவனை தேடிவருகிறது. தன் ஆளுமையை வெளிப்படுத்தும் அச்சவாலை அவன் ஏற்கிறான்
சரியாக இருபது வருடங்கள் கழித்து இந்நாவலை தூசிபடிந்த நூலக அடுக்குக்குள் இருந்து எடுத்துப்பார்த்தபோது இது சுந்தர ராமசாமியின் பிரதி என்பது எனக்கு ஒரு குறியீடு போல தோன்றியது. அங்கங்கே புரட்டி கதையை நினைவுறுத்திக் கொண்டேன். இது ஒரு பெரிய நாவல் .எங்கெங்கோ கதை அலையும். பலவகையான கதாபாத்திரங்கள். ஏராளமான உரையாடல்கள். பொதுவாக தத்துவத்தை விளக்க முனையும் நாவல்கள் கதாபாத்திரங்களை ‘மாதிரி’ வடிவங்களாக அமைத்துக்கொள்ளும். ஒவ்வொரு கதாபாத்திரமும் தத்துவத்தின் ஒரு தரப்பின் மானுட வடிவமாக இருக்கும். அந்த முறையை ·பௌண்டன்ஹெட்டிலும் காணலாம்.
ஒருபோதும் கலைப்படைப்பு இதைச்செய்வதில்லை. கலைப்படைப்பு உண்மையான மனிதர்களை உருவாக்க முயல்கிறது. அவர்கள் எப்போதுமே தன்னிச்சையான வளர்ச்சிப்போக்கு கொண்டவர்களாக, முழுக்க வரையறை செய்துவிட முடியாதவர்களாக இருப்பார்கள். எந்த மனிதனும் எந்த தத்துவத்துக்கும் வெளிவடிவம் அல்ல. அயன் ராண்டே கூட அவர் முன்வைத்த, அவர் தானாகவே காட்டிக்கொண்ட, அவரது கோட்பாட்டின் வடிவம் அல்ல என்பதை அவரது சொந்தவாழ்க்கையின் பிற்கால நிகழ்வுகள் காட்டுகின்றன.
மனித ஆளுமையில் உள்ள இந்த நிலையாமை, மனித வாழ்க்கையில் உள்ள ஊகிக்கமுடியாத தற்செயல்தன்மை, மானுட வாழ்க்கை ஒன்றுடன் ஒன்று பின்னிச்செல்வதன் தீராத விசித்திரம் இவையெல்லாம்தான் நல்ல கலைப்படைப்பின் இயல்புகளாக இருக்கும். ஒரு புரிதலுக்காக தல்ஸ்தோயின் போரும் அமைதியும் நாவலை ·பௌண்டன்ஹெட்நாவலுடன் ஒப்பிட்டு பார்த்தால் அதை உணரலாம். தல்ஸ்தோயின் நாவலில் எந்த கதாபாத்திரமும் மாறாநிலையில் இல்லை. அவர்களுக்கு உள்ளூர ஒரு தனித்தன்மை இருக்கும். ஆனால் வாழ்க்கையினூடாக மாறுவதே தெரியாமல் அவர்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள்.
இந்நாவலை அக்காலத்தில் வாசித்தபோதே ரோர்க்கின் காதலியான டாமினிக் [Dominique Francon] என்ற கதாபாத்திரமே முக்கியமானது என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டிருந்தது. அது ஒன்றில் மட்டுமே உண்மையான படைப்பூக்கம் இருந்தது. ரோர்க் உட்பட இதன் பிற கதாபாத்திரங்கள் எல்லாமே வரைபடத்தை வைத்துக்கொண்டு வடிக்கப்பட்டவை போல செயற்கையான கச்சிதத்துடன் இருந்தன. ஆனால் டாமினிக் விளக்கமுடியாத மன உள்ளோட்டங்களுடன் எப்போதுமே வரைபடம்மீறி பரவுபவளாக இருந்தாள். அவளுக்கு மட்டுமே வளர்ச்சியும் பரிணாமும் இருந்தன. அவளுக்கு ரோர்க்குடன் உள்ள உறவு சிக்கலானது. வழிபாட்டுணர்வும் காதலும் கலந்து கடும்வெறுப்பாகவும் ஆகும் நிலை அது.
காரணம், அயன் ராண்ட் ஓர் எழுத்தாளராக டாமினிக் கதாபாத்திரத்துடன் மட்டுமே தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருந்தார். டாமினிக் மீது மட்டுமே அவரது மனம் உணர்ச்சிகரமாக படிந்தது. பிற எல்லா கதாபாத்திரங்களும் அவரது தர்க்கபுத்தியின் ஆக்கங்களே. ஆணின் உலகில் வெளியே நிறுத்தப்படும் கூரிய பெண்ணின் மனதில் உருவாகும் நுட்பமான விஷத்தை ஓரளவு சித்தரிக்க அயன் ராண்ட்டால் முடிந்திருக்கிறது.
அயன் ராண்டின் கொள்கையைப் பரிசீலனைசெய்ய ஆழமான தத்துவ விவாதங்களுக்குள் செல்லவேண்டிய தேவையேதும் இல்லை. ஒருவன் தன் தனித்தன்மையை வெளிப்படுத்தி தன்னை முழுமையாகவே பூமியில் நிறுவிக்கொண்டான் என்றால் அவன் மகிழ்ச்சியானவனாக ஆகிவிடுவானா, நிறைவானவனாக உணர்வானா என்ற எளிய கேள்வியை நம்மைச்சுற்றியுள்ள வாழ்க்கையில் இருந்து எடுத்து கேட்டுக்கொண்டாலே போதுமானது. அப்படி எதையுமே நிறுவாமல் தங்கள் எளிமையான அன்றாடவாழ்க்கையை மட்டுமே செய்யும் கோடானுகோடிகள் துன்பத்திலும் நிறைவின்மையிலும்தான் உழல்கிறார்களா?
இரண்டாவது கேட்டுக்கொள்ளவேண்டிய கேள்வி, உண்மையில் ஒரு மனிதன் தன்னுடையது மட்டுமே என உணரக்கூடிய தனித்தன்மை என்று உண்டா என்ன? ரோர்க் தன்னுடைய மகத்தான கலைவெற்றியைச் சாத்தியப்படுத்தியிருப்பான் என்றால் அக்கட்டிடம் எப்படிபப்ட்டதாக இருக்கும்? அன்றுவரை மனிதகுலம் வந்தடைந்த கட்டிடக்கலைமரபின் கடைசி நுனியில் நின்றுகொண்டிருக்கும் இல்லையா? அதன் தனித்தன்மைகள் என்பவை அந்த மரபில் இருந்து அது கொள்ளும் சில வேறுபாடுகளாகவே இருக்கும் இல்லையா ?
படைப்பூக்கம் என்பது உண்மையில் அந்தச் சிறிய வேறுபாடு மட்டுமே. உண்மையில் மானுடத்தின் சிந்தனையும் கலையும் தொழில்நுட்பமும் பெருக்கெடுத்துச் செல்லும் போக்கில் தல்ஸ்தோய் அல்லது நீயூட்டன் அல்லது ஐன்ஸ்டீன் அல்லது மார்க்ஸ் அல்லது மொசார்தின் பங்களிப்பென்பதே கூட சிறு துளிகள்தான். இன்றைய நவீன குறியியலும் மொழியியலும் மானுடத்தின் குறியீட்டு அமைப்புகளையும் மொழியமைப்புகளையும் ஆராய்ந்து தனித்தன்மை என்பதே இல்லை என்றுகூட சொல்லும் இடத்துக்குச் சென்றுவிட்டிருக்கின்றன.
நம் கண்முன்னால் எல்லா கலைகளும் எல்லா சிந்தனைகளும் எல்லா தொழில்நுட்பமும் மானுடத்தின் அடுத்த சாத்தியத்தால் மறிகடக்கப்படுவதை கண்டுகொண்டிருக்கிறோம். ரோர்க் கொஞ்சகாலம் உயிர்வாழ்ந்திருந்தால் அவனது ‘தனித்தன்மை’ மிக்க கட்டிடம் அடுத்தவகை கட்டிடங்களால் பின்னுக்குத்தள்ளப்பட்டு மரபின் ஒரு பகுதியாக ஆவதைக் கண்டிருப்பான். ‘நியோ சாக்ஸனிக்’ என்றோ ‘போஸ்ட் மாடர்ன்’ என்றோ அது ஒரு பொது அடையாளத்துக்குள் தள்ளப்பட்டிருப்பதையும் காண்பான். அதுவே அவன் நரகமாக இருக்கும்– அயன் ராண்ட் அந்த நரகத்தில்தான் இறந்தார்.
தொடரும்…