அயன் ரான்ட்,ஒருகடிதமும் சில சிந்தனைகளும் [தொடர்ச்சி]

அயன் ரான்ட்,ஒருகடிதமும் சில சிந்தனைகளும் [தொடர்ச்சி]

ஜெயமோகன்.இன் ல் இருந்து

அயன் ராண்ட் பற்றிய என் கட்டுரையை தொடர்பு படுத்தி இக்கடிதத்தை வாசிக்கலாம். கோபத்துடன் இக்கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. அது முழுக்க முழுக்க நியாயமானதே. அயன் ராண்ட் குறித்து நம் சூழலில் இருக்கும் வழிபாட்டுணர்வுக்கு இப்படி ஒரு கோபம் எழாமல் இருந்தால்தான் ஆச்சரியம். மேலும் என்னைப்பொறுத்தவரை தத்துவத்தை தன் தளமாகக் கொண்ட ஓர் எழுத்தாளர் மீது இருக்கும் பிடிப்பு என்பது ஒரு தொடக்கம் என்ற நிலையில் மிக ஆரோக்கியமான ஒன்றே.

ஆனால் அயன் ராண்ட்டுக்காக இக்கடிதம் வாதாடும் விதம் எனக்கு ஏற்படுத்திய ஏமாற்றம் சாதாரணமல்ல. ஒரு விவாதத்தை எப்படி நிகழ்த்தக்கூடாதென்பதற்கு சான்றாக அமைகிறது இது. ஆரம்பநிலையிலேயே எதையும் விவாதித்து வளராத மனம் இதில் தெரிகிறது. இதை நம் கல்விமுறையின் சிக்கலாகவே நான் காண்கிறேன். நம் கல்விமுறை பற்றி நாம் இதன் அடிபப்டையில் யோசித்தாகவேண்டியிருக்கிறது.

கடிதத்துக்கு வருகிறேன். இதன் முக்கியமான சிக்கல் என் கட்டுரையில் நான் பேசிய எந்த தத்துவார்த்தமான விஷயத்தையும் புரிந்துகொள்ள இதை எழுதியவரால் முடியவில்லை என்பதே.  கட்டிடங்கள் நிலைத்த கருத்துக்கள் என்ற எண்ணமே பேரரசுகள் மற்றும் சர்வாதிகாரிகளுக்கும் கட்டிடக்கலைக்கும் இடையேயான உறவை உருவாக்கியது என ஆரம்பிக்கும் என் வாதம் ஏன் ரோர்க்கை ஒரு கட்டிடக்கலைஞனாக அயன் ராண்ட் அமைக்கிறார் என்பது வரை செல்லும் இடமே என் கட்டுரையின் சாரம். அதிலிருந்து இதேவகையான மானுட உருவகமே அயன் ரான்ட் முற்றாக எதிர்த்த மார்க்ஸிய சமூகக் கற்பனையிலும் இருந்தது என்று அது விளக்கப்புகுகிறது. இப்பகுதி நோக்கிச் செல்லவே இவ்வாசகரால் முடியவில்லை.

ஆனால் அது ஒரு குறை அல்ல. தத்துவார்த்தமாக யோசிப்பதற்கும் அதற்கு உருவகங்களை கையாள்வதற்கும் ஓர் அடிப்படைப் பயிற்சியும் மனநிலையும் தேவை. ஆகவே இந்த மையக்குறையை நான் பொருட்படுத்தவில்லை. ஆனால் மற்ற குறைகள் என்னை உண்மையாகவே அதிரச்செய்கின்றன. கட்டுரையின் எளிமையான வாதங்களை எத்தனை முதிர்ச்சியின்மையுடன் இவர் புரிந்துகொண்டிருக்கிறார் என்பது  அடுத்ததாக கவனிக்கத்தக்கது.

அயன் ரான்ட் ஒரு ‘கல்ட் ·பிகர்’ போல இந்திய உயர்கல்வித்துறையில் இருப்பது ஏன் என்று இக்கட்டுரை ஆராய்கிறது. அதற்கான சமூக உளவியல் காரணங்களை ஆராய முற்படுகிறது. கண்டிப்பாக அது ஊகமே, அது தவறாகவும் இருக்கலாம். அயன் ராண்டுக்கும் நம் உயர்கல்விக்கும் சம்பந்தமே இல்லை என்பதனால்தான் இந்த ஆச்சரியமும் ஆராய்ச்சியும் எழுகிறது. ஆனால் அயன் ராண்ட் உயர்கல்வித்துறை கல்வித்திட்டத்தில் உள்ளது என நான் எண்ணியிருப்பதாகவும் அப்படி இல்லை என்றும் மறுக்கிறார் இதை எழுதியவர்!

பிறநூல்களை வாசிக்காத வாசகர்கள் அயன் ராண்ட் அவரது நாயகர்களைப்போல சுயமான, தனித்துவம் மிக்க ஒரு சிந்தனையாக அவரது புறவயவாதத்தை எடுத்துக்கொள்ளக்கூடும் என்று சொல்லி மேலைதத்துவ அறிமுக நூல்களில் எதையாவது ஒன்றை வாசித்தால்கூட அது உண்மையல்ல என்றும் மேலைச்சிந்ந்தனையின் பரிணாமத்தில் ஒரு சிறிய தரப்புதான் அயன் ராண்டின் புறவயவாதம் என்றும் தெரியும் என்று நான் சொல்கிறேன். அதுவும் மிகத்தெளிவாக. அத்தகைய வாசகர்களுக்கு மேலைச்சிந்தனையை மிக எளிமையாக அறிமுகம் செய்யும் நூலாக புகழ்பெற்ற இரு நூல்களை பரிந்துரை செய்கிறேன். வில் டுரண்டின் ஸ்டோரி ஆ·ப் பிலாச·பி, சோ·பீஸ் வேர்ல்ட்.

இந்த இடத்தை  எப்படி புரிந்துகொண்டிருக்கிறார் பாருங்கள். ·பௌண்டெய்ன் ஹெட் நாவலுக்கு ‘ பதிலாக’ வில் டுரண்டின் தத்துவ அறிமுக நூலை நான் வாசிக்கலாம் எனநான் சொல்வதாக! வில் துரண்டின் நூல் தத்துவ நூல் என எனக்கு ஒரு விளக்கம் அளித்து அதை ரஸ்ஸல் நூலுடன் ஒப்பிடலாம் என்கிறார்.

என்னுடைய கட்டுரையில் தல்ஸ்தோய், ஐன்ஸ்டீன்,மொசார்த்,மார்க்ஸ் போன்றவர்களின் பங்களிப்பேகூட காலவெள்ளத்தில் மானுட சாதனையின் ஒரு துளியாகவே எஞ்சும் என்ற வரி உள்ளது. அது ஒரு விவேகம். அதை ஒருவர் மறுக்கலாம். ஆனால் ஒருவர் அவ்வரியில் நான் சொல்பவர்கள் அனைவருமே அவரவர் துறைகளில் மாபெரும்மேதைகளாக, அத்துறைகளின் ஆதாரக்கற்களாக ,அறியபப்டுபவர்கள் என எளிதில் அறியலாம். இந்தக் கடிதத்தை  எழுதியவருக்கு நியூட்டனும் ஐன்ஸ்டீனும் எதுவுமே சாதிக்கவில்லை என்று நான் சொல்வதாகவும் அதற்கு என்னுடைய அறிவியல் அறிவிலித்தனம் காரணம் என்றும் படுகிறது.

இப்படியே இவரது ஒவ்வொரு புரிதலும் அமைந்திருக்கிறது. ஒரு கட்டுரையை வாசித்து எதிர்வினையாற்றும்போது அதன் மையக்கருத்துக்குள் செல்லவே முடியவில்லை. அதன் வாதங்களின் அமைப்பை புரிந்துகொள்ள முடியவில்லை. அவற்றை தன் போக்கில் எப்படியோ புரிந்துகொண்டு  எதிர்வினையாற்றுகிறார்.

இந்நிலையில் நம் சூழலில் எப்போதும் நிகழும் ஒன்று உண்டு. தகவல்பிழைகளைக் கண்டடைந்து அதன் அடிப்படையில் விவாதத்தை முன்னெடுப்பது. ஒரு கட்டுரையை கூர்ந்து கவ,னித்து தகவல்பிழை ஒன்றை கண்டுபிடித்து ‘இதைக்கூட தெரியாமல் எழுதிய இவனெல்லாம் பேசலாமா’ என்ற தோரணையில் எழுதப்படும் கட்டுரைகளை நாம் சர்வசாதாரணமாக தமிழில் காணலாம். சமயங்களில் அது தட்டச்சுப்பிழையாகவோ அல்லது வாசகரின் புரிதல்பிழையாகவோ இருக்கும். ஒரு கட்டுரையின் தகவல்பிழை ஒருபோதும் அதன் மையமான வாதத்தை நிராகரிக்க காரணமாகாது என்பது எல்லா விவாதங்களிலும் உள்ள அடிப்படைவிதி – அந்த தகவல் அந்தவாதத்துக்கு ஆதாரமாக அமையாத வரை

இந்த வாசகர் தகவல்பிழைகளைக் கண்டடைகிறார். முதல் பிழை அயன் ராண்ட் மனநல விடுதியில் இறந்தார் என்று நான் கூறுவதாக. அந்தச் சொற்றொடரை நான் கவனித்தேன். மனநல விடுதியில் இருந்து இறந்தார் என்றிருக்கிறது. இருந்து என்பதற்குப் பின் ஒரு கமா வந்திருக்கவேண்டும். அதை அவர் மனநலமருத்துவமனையில் இருக்கும்போது இறந்தார் என பொருள்கொள்ள ஒரு வாய்ப்பு உள்ளதுதான்.அவசரமான எழுத்தின் விளைவாக வந்த இந்த பொருள்மயக்கத்துக்கு நான் பொறுப்பேற்கிறேன். ஆனால் இதை வைத்து இக்கடிதத்தை எழுதும் முன் அடுத்த கட்டுரையிலேயே அயன் ராண்டின் சுருக்கமான வரலாறும் முதிய வயதில் அவர் இறந்ததும் தெளிவாகவே அளிக்கப்பட்டிருப்பதை ஒரு நல்ல வாசகர் கவனிப்பார்

லண்டன் விமானத்தில் எழுதிய கட்டுரையில் சோ·பீஸ் வேர்ல்ட் என்பது சோ·பீஸ் சாய்ஸ் ஆக  என் நினைவில் வந்து பதிவாகியிருக்கிறது. ஆனால்  கடிதம் எழுதிய வாசகருக்கு கொஞ்சம் தத்துவ அறிமுகம் இருந்தால் அது  ஜோஸ்டீன் கார்டர் எழுதிய  சோபீஸ் வேர்ல்ட் என்றும் பெயர் மாறிவிட்டது என்றும் புரிந்துகொள்ளமுடிந்திர்க்கும். அதை ஒரு கட்டுரையை மறுக்கும் ஆயுதமாக கொள்ள முடியாது என்றும் தெரிந்திருக்கும்

கடைசியாக குத்துமதிப்பான தகவல்கள். பிராண்டனுடன் அயன் ராண்டுக்கு உறவு இருந்தபோது அது எவருக்கும் தெரியாத ரகசியமாகவே இருந்தது. பிராண்டன் தன்னை பொருளியல் ரீதியாக சுரண்டுகிறார் என அயன் ராண்ட்  குற்றம் சாட்டியபின்புதான் பிராண்டனால் அந்த உறவு வெளிப்படுத்தப்பட்டது. அந்த கசப்பே அயன் ராந்ட்டை மனநிலம் குன்றச் செய்தது. இதெல்லாம் சும்மா இணையத்தை தட்டினாலே கிடைக்கும் தகவல்கள்.

அந்தத் தகவல் ஏன் அங்கே சொல்லபப்டுகிறது? எனக்கு அயன் ராண்ட் அல்ல எவரது அந்தரங்க வாழ்க்கையைப்பற்றியும் எந்த அக்கறையும் இல்லை. ஆனால் திரள்வாதத்தால் முன்வைக்கப்படும் தியாகம் ,கருணை போன்ற விழுமியங்களை நம்புகிறவர்கள் திரிந்து இரட்டைவாழ்க்கை வாழ்ந்து சிதைவுறுவார்கள் என வாதிட்டு அதற்கு எதிராக சமநிலையையும் வெற்றியையும் அளிக்கும் கொள்கையாக புறவய வாதத்தை முன்வைத்த அயன் ராண்டின் இரட்டை வாழ்க்கையும் மனமுறிவும் முக்கியமான ஒரு தத்துவப்பிரச்சினை. அதற்காகவே அந்த விஷயம் பேசப்படுகிறது அங்கே.  அயன் ராண்டின் உறவுச்சிக்கல்களில்  எனக்கு ஆர்வம் இல்லை.

நான் அயன் ராண்ட் வாழ்க்கை, தத்துவம் ஆகியவற்றின் நிபுணன் அல்ல. நான் ஒரு தமிழ் எழுத்தாளனாக, விமரிசகனாக என் கருத்தை முன்வைத்தேன். அவரது வாழ்க்கையை ஆராயும் நிபுணர்கள் நுண்தகவல்களை கொட்டக்கூடும். பிழைகளை கண்டடையவும் கூடும். அது என் வாதங்களை மறுப்பதில்லை

மூன்றாவதாக இந்தக் கடிதத்தில் உள்ள  அற்பத்தனமான சில கருத்துக்கள். உலகில் இந்திய மாணவர்கள் அல்லாமல் ,எவராவது இதைச் சொல்வார்களா என்று ஆச்சரியமாக இருக்கிறது. தனக்கு ஆங்கிலம் தெரியும் என்பதை ஒரு அறிவார்ந்த தகுதியாக எண்ணி பிறருக்கு ஆங்கிலம் தெரியாதென்று குற்றம் சாட்டுவதை எத்தனை காலம்தான் செய்துகொண்டிருக்கப் போகிறோம்?

‘அயன் ராண்ட் லட்சக்கணக்கானவர்களால் வாசிக்கப்படுகிறார், கநாசுவை யாருக்கும் தெரியாது’ இதுதான் நம் அளவுகோலா?  அயன் ராண்ட் வாழ்ந்த அதே காலத்தில் அவரது நியூயார்க்கில் புறநகரில் முந்நூறு பிரதிகள் அச்சிடப்பட்ட இட்டிஷ் மொழி சிற்றிதழில் ஐசக் பாஷவிஸ் ஸிங்கர் என்ற மேதை எழுதிகொண்டிருந்தார். அவரைத்தான் அமெரிக்காவின் இலக்கிய சிகரம் என விமரிசகர் பலர் எண்ணுகிறார்கள். இந்த அடிபப்டை புரிதலை  நமது மாணவரக்ளுக்கு எப்போது சொல்லிக்கொடுக்கப்போகிறோம்?

தமிழில் எழுதும் ஒரு எழுத்தாளரை தனக்கு தெரியவில்லை என்று சொல்வதன்மூலம் வரும் ‘தகுதி’ப் பிரகடனம் ஒரு பக்கம் இருக்கட்டும். ஒர் அமெரிக்க மாணவர் ஓர் எழுத்தாளருக்கு கடிதம் எழுதுவதற்கு முன்னால் அவர் யார் என்று புரட்டிப்பார்த்த்தாவது தெரிந்துகொண்டிருப்பார். அபப்டிப் பார்த்திருந்தால் இந்த இணைய தளத்தீலேயே  தமிழக வரலாறு பற்றி எத்தனை பக்கங்கள் எழுதபட்டிருக்கிறது என்று தெரிந்திருக்கும். அதைப்பார்த்தபின் செவிவழிச்செய்தியாக கிடைத்த ராஜேந்திரசோழன் குறித்த செய்தியை சொல்லி astound ஆகியிருக்க மாட்டார். தமிழில்   ராஜேந்திர சோழனுக்கும் ராஜராஜசோழனுக்கும் இடையேயான முரண்பாடுகள் மற்றும் உரிமைமோதல்களைப் பற்றி பக்கம்பக்கமாக எழுதப்பட்டிருக்கிறது. கங்கைகொண்ட சோழபுரம் கோயில்  பிரகதீஸ்வரர் கோயிலைவிட மிகப் ‘பெரிய’ கோயிலாகவே இருந்திருக்கிறது.  உயரமானதாக அமையாமைக்கு அதன் சிற்ப அமைப்புதான் காரணம்.

தனித்த படைப்பூக்கம் என்ற ஒன்று அறவே இல்லை என்று சொல்லும் ழாக் தெரிதா போன்ற மொழியியலாளர்கள் இந்நூற்றாண்டின் மாபெரும் சிந்தனையாளர்கள். பின் நவீனத்துவ சிந்தனையின் பிதாமகர்கள். அவர்களைப்பற்றிய ஒரு குறிப்பு– நான் ஏற்கனவே பேசிய பலவற்றின் நீட்சி– இக்கட்டுரையில் வருகிறது. அச்சிந்தனைகளில் அறிமுகமே இந்த வாசகருக்கு இல்லை என்பது தெரிகிறது. தான் அறியாத ஒன்று சொல்லப்படும்போது அதை அவர் எதிர்கொள்ளும் விதத்தைக் கவனியுங்கள். இப்படித்தான் நாம் வாசிகிறோமா?

இத்தனை அபத்தமான ஒரு கடிதத்தை ஒரு எழுத்தாளனுக்கு எழுதியபீன் அவனது அறிவார்ந்த நேர்மையைச்  சந்தேகித்து ஒரு குறிப்பு.  இந்தக்கடிதத்தை நான் பிரசுரிக்க மாட்டேன் என்று இதை எழுதிய்வர் நம்புகிறார். ஏனென்றால் இந்தக் கடிதம் அச்சானவுடன் நான் ‘காணாமல்’ போய்விடுவேன் அல்லவா? என்ன ஒரு தன்னம்பிக்கை. இந்த தன்னம்பிக்கையுடனா நம்  மாணவர்கள் மேலைநாடுகளுக்கு படிக்கப்போகிறார்கள்?

காலில் விழும் தமிழ்க்குணத்தைப் பற்றிய நக்கல்  அயன் ராண்டின்  ரசிகருக்கு உகந்ததே.  காலில் விழுவதென்பது இந்தியப்பண்பாட்டின் மிக மிக உயர்ந்த ஒரு ஆசாரம். பெற்றோர் காலிலும் குருநாதர் காலிலும் சிரம் பணியாத இந்தியன் ஒருபோதும் அவனது முன்னோர் தேடி வைத்த சிந்தனைமரபின் ஆழங்களுக்குள் செல்லப்போவதில்லை. ஞானத்துக்கு முன் பணிவுகொள்வதே மெய்ஞானம் என்பது

**

நம் கல்விமுறையின் மிகப்பெரிய குறையே நாம் கருத்துக்களை எப்படி அணூகச் சொல்லிக்கொடுக்கிறோம் என்பதே. நித்ய சைதன்ய யதி என் குரு. ஆனால் அவரது கருத்தை முற்றாக மறுக்க எனக்கு தயக்கமில்லை. ஏன் என்றால் அவர் தன்குருவான நடராஜகுருவை பல தருணங்களில் முழுமையாக நிராகரிக்கிறார்.  இப்படி ஒரு குருநிராகரிப்பை நிகழ்த்தாத அறிஞனே இந்தியாவில் இல்லை. அது விவேகானந்தராக இருந்தாலும் சரி, ராமானுஜராக இருந்தாலும் சரி

ஆனால் நம்பிக்கை சார்ந்த மேலை மதம் அளிக்கும் கல்வியை முன்னுதாரணமாகக் கொண்ட நம் கல்விமுறை கருத்துக்களை நம்பச் சொல்கிறது. ஒரு கருத்து எனக்கு முற்றிலும் உண்மை என்று தோன்றுகிறது. அதை நான் நம்புகிறேன். ஆனால் அதற்கு ஏன் மாற்றுக்கருத்து இருக்கக் கூடாது? அதை ஏன் என்னைப்போன்றே அறிவும் பக்குவமும் கொண்ட ஒருவர்  நம்பக்கூடாது? எனக்கு மாற்றுக்கருத்து கொண்ட ஒருவர் முட்டாளாகவும் படிப்பறிவில்லாதவனாகவும் மட்டும்தான் இருக்க முடியும் என ஏன் நான் நம்பவேண்டும்?

நம் விவாதங்களில் எப்போதுமே நாம் எதிராளியை மட்டம் தட்ட முயல்கிறோம். அவரது அறிவுத்திறனை, கல்வியை குறைத்துக் காட்ட முயல்கிறோம். எள்ளி நகையாடுகிறோம். வசைபாடுகிறோம். நமக்கு விவாதம் மூலம் முன்னகரும் அடிப்படைப் பயிற்சியே இல்லை. நம் கல்விமுறை அதை அளிக்கவில்லை

எள்ளலும் வசையும் இல்லாத எந்த ஒரு கருத்துடனும் எதிவினையாற்றவே நான் எப்போதும் முயன்று வருகிறேன். பலசமயம் அது சோர்வூட்டக்கூடியதாக இருந்தாலும். விவாதத்தின் சில அடிப்படை விதிகள் உண்டு. ஒன்று எதிர்தரப்பின் ஆகச்சிறந்த கருத்துடன் மோதுவது. இரண்டு எதிர்தரப்பின் வாதங்களை நமக்கேற்ப திரிக்காமல் அந்த வாதகதிகளுக்குள் சென்று எதிர்கொள்வது. முன்று எதிர்தரப்பின் சொற்கள் எதிரியால் எந்த பொருளில் கையாளப்படுகிறதோ அதே பொருளில் விவாதத்தில் நாமும் கையாள்வது.

அத்தகைய ஒரு விவாதம் ஒருபோதும் நம்மை பலவீனப்படுத்தாது. நம் தரப்பை பலப்படுத்தவே செய்யும்.

**

அயன் ராண்டுக்கு ஆதரவாக நான் விவாதித்திருந்தால் நான் புறவய வாதத்தில் இருந்து ஆரம்பித்திருப்பேன். தியாகம் போன்ற கருத்துமுதல்வாத உருவகங்கள் புறவயத்தன்மை இல்லாதவை. ஆகவே அவை வெறும் உணர்ச்சிகளாக எஞ்சுகின்றன. அவற்றை மிக எளிதாக மோசடியாக பயன்படுத்தலாம். இன்றைய உலகின் மாபெரும் வன்முறைகள் அழிவுகள் பெரும்பாலும் தியாகம், அறம் போன்ற கருத்துநிலைகளால் உருவாக்கப்படுவனவே. மததால், இனத்தால் முன்வைக்கப்படும் திரள்வாதம் உலகின் மூன்றில் ஒருபங்கை ரத்தத்தால் மூழ்கடித்துக்கொண்டிருக்கும் வரலாற்றுத்தருணம் இது. இச்சூழலில் உண்மைகளை தெரிந்துகொள்ளவும் பயன்படுத்தவும் சமநிலையை பேணவும் புறவயவாதம் ஒரு மகத்தான ஆயுதம்.

புறவயவாதம் தகுதி என்பது வெறும் எண்ணிக்கை அல்ல என்று சொல்கிறது. அதன்மூலம் ஜனநாயக அமைப்பில் உள்ள அடிபப்டையான பிழைகளை திருத்த முயல்கிறது. தகுதியற்ற மனிதரக்ள் திரண்டு நின்று வெல்லமுயல்வதற்கான வாய்ப்புகளை ரத்துசெய்து ஒவ்வொரு மனிதனும் தன் தகுதியை மேம்படுத்திக்கொண்டு முன்னகரும் அறைகூவலை விடுக்கிறது. ஒரு ஒட்டுமொத்த நோக்கில் மானுட இனத்துக்கு இது நன்மையையே விளைவிக்கும்

ஒரு தனிமனிதன் ஒருவேளை தனித்த இருப்பாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அப்படி அவன் தன்னை தனித்து உணரும்போதே அவனால் தன் ஆற்றலை உணர்ந்துகொண்டு தனக்கான பங்களிப்பை ஆற்ற முடியும். ஆகவே ஒரு மனிதனில் அவனது முழுச்சாத்தியங்களும் திரள்வதற்கு புறவயவாதம் வழியமைக்கிறது

சென்ற நூற்றாண்டின் போர்களும் அழிவுகளும் தேசியம், மதம் போன்ற திரள்வாத நோக்குகளால் நிகழ்ந்தன.  ஆனால் புறவய அணுகுமுறை கொண்ட முதலாளித்துவம் மூலம் இருபதாம் நூற்றாண்டில் உருவான வணிகநோக்கும் போட்டியும் மனிதனின் தொழில்நுட்பத்தையும் அதன்மூலம் வாழ்க்கைத்தரத்தையும் மேம்படுத்தியுள்ளன.

– இவ்வாறெல்லாம் அயன் ராண்டின் தனிமனிதவாதத்தை வைத்து விரிவாகவே என் நோக்கை மறுக்கலாம். அவை அவ்வளவு எளிதாக தள்ளிவிடக்கூடியவையும் அல்ல.

நான் இவற்றை மறுக்க மாட்டேன். ஆனால் மனிதகுலம் பெரும் இலட்சியக்கனவுகளால் விழுமியங்களால் தான் உருவாக்கப்பட்டது, மேலும் முன்னகர்கிறது என்று பதில் சொல்வேன். தியாகம், அறம் போன்ற கருத்துக்கள் உருவாகவில்லை என்றால் வெறும் பொருளியல் விசைகளால் மானுடம் இந்த இடத்துக்கு வந்திருக்காது என்பேன்

அது முடிவுக்கு வரமுடியாத ஒருவாதமாக இருக்கும். இரு இணையான கருத்துக்கள் நடுவே உள்ள சமநிலைப்புள்ளியைத்தேடி அந்த விவாதம் சென்றிருக்கும்.

One thought on “அயன் ரான்ட்,ஒருகடிதமும் சில சிந்தனைகளும் [தொடர்ச்சி]

  1. ஒருவர் என்ன சொல்கிறார் என்பதைப் புரிந்து அதற்கு மாறான கருத்துக்கள் இருப்பின் அவற்றினை தருவதே ஒரு ஆரோக்கியமான‌
    கருத்துப் பறிமாறல் ஆகும். அதை விடுத்து சொல்பவர் யார், அவரது பின்புலம் என்ன? ஏன் அவர் அப்படிச் சொன்னார்? எனச்சொல்வதெல்லாம் ஒரு தனி ஆய்விற்கு நமை இழுத்துச் சென்று விடும் என்பது மட்டுமல்லாது, சொல்லப்படும் பொருளிலேயே நிலைத்து இருக்க உதவி செய்யாது.

    ஆயின் ராண்ட் தனது நூல்களில் சொல்லும் பொதுக்கருத்து என்ன ? அதைத் தெளிவாகச் சொல்கையில் எண்ணங்கள் பிரதிபலிக்கும்
    வார்த்தைகள் அழகுக்காக வேண்டி சொலிப்பதைத் தவிர்த்து, கூடியவரை எல்லோருக்கும் புரியக்கூடிய வகையில் டெக்னிகல் டெர்ம்ஸ் இல்லாது ( அப்படி இருக்கும் பொழுது அவற்றின் உட்பொருளை யும் கீழே தந்து ) சொல்தல் தேவை.

    எந்த ஒரு விமரிசகருமே ஒரு தூதுவர் தான் . தன் எண்ணங்களின் தூதுவராம். தாம் எண்ணுவதை, எண்ணியது போலவே , அதைக் கேட்பவரும்
    படிப்பவரும் புரிந்துகொள்ள் வேண்டும். இல்லையெனின் அது ஒரு தொடர்பு அறுந்த நிலை ( கம்யூனிகேஷன் கேப் ) ஆகிவிடுகிறது.

    தொகச் சொல்லி, தூவாத நீக்கி நகச்சொல்லி
    நன்றி பயப்பதாம் தது.

    எனச்சொல்லப்படும் தூதுவனைப்பற்றிய குறள் , எண்ணங்களைப் பிரதிபலிக்கும் தூதுவனாக, ஒருவரது கட்டுரை இருப்பதால்,
    இங்கே சுட்டிக்காண்பிக்கிறேன்.

    மற்றும் வாதங்களிடையே நீயா, நானா, எனும் ஈகோ ப்ரச்னைகள், தமிழனா ,அன்னியனா என்ற இனப்பிரச்சினைகள், அந்தக் கல்வி முறையா, இந்தக் கல்வி முறை சிறந்ததா என்பதெல்லாம் எக்ஸ்டர்னல் ( தமிழ்ச்சொல் சரிவரத்தெரியவில்லை)

    ஒரு ஆய்வுக்கட்டுரையில்,
    முதலிலே எடுத்துக்கொண்ட தலைப்பு.
    இரண்டாவது எடுத்து பேசப்போகும் கருத்துக்கள்.
    மூன்றாவது அதற்கான அடிப்படை ஆதாரங்கள்.
    அடுத்து, இதுவரை இக்கருத்துக்களிடையே ஏற்பட்டு இருக்கும் எண்ணப்பறிமாற்றங்கள்.
    அந்தக் கருத்துக்களிலே காணப்படும் நிறைகள், குறைகள்.
    முடிவாக, ஆசிரியரின் முடிவுகள். பட்டியல் இடப்படுவது தேவை.

    இவ்வாறு இருப்பின் ஓரளவுக்கு வாதங்கள் அப்ஜெக்டிவ ஆக இருக்கலாம்.

    முடிவாக,
    புகை பெரிதாக காணப்படும்பொழுது, உள்ளிருக்கும் நெருப்பு கண்களுக்குத் தெரிவதில்லை.

    சுப்பு தாத்தா.

பின்னூட்டம்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s