ஆழியின் மௌனம்:சாங்கியயோகம்-1
ஜெயமோகன்.இன் இல் இருந்து
[ நாராயணகுரு சிலை. ஊட்டி நாராயண குருகுலம் ]
நடராஜகுருவும் நித்யசைதன்ய யதியும் சேர்ந்து பயணம் செய்யும்போது ஒரு குருத்வாராவுக்குள் செல்கிறார்கள். அங்கே இருக்கும் கியானிகள் நடராஜகுருவுக்கு குரு கிரந்த சாஹிபை வாசித்துக்காண்பிக்கிறார்கள். நடராஜ குரு அந்த நூலை அதற்கு முன்னதாக கேடதில்லை. அது குர்முகி மொழியில் இருக்கிறது. ஆனால் கேட்கக் கேட்க நடராஜகுரு அந்நூலின் வரிகளுக்கு பொருள்சொல்லிக்கோண்டே இருக்கிறார். நித்யாவுக்கு ஆச்சரியம். ‘இதில் ஒன்றுமில்லை. இந்நூலின் அடிப்படைக் கலைச்சொற்கள் எல்லாமே சம்ஸ்கிருத மூல்த்தின் சிறிய உச்சரிப்புவேறுபாடுகள் மட்டுமே ‘ என்று நடராஜகுரு சொல்கிறார்.
வாசித்துமுடிந்ததும் நித்யாவுக்கு நடராஜகுரு ”இது ஒரு சுருதிதான்…”என்று சொல்கிறார். இந்த நிகழ்ச்சி நித்யா எழுதிய குருவும் சீடனும் என்ற நூலில் வருகிறது.ஒரு நூலைப்பற்றிச் சொல்லும்போது அது ஒரு சுருதி என்று சொல்வது மிக முக்கியமான ஒரு மதிப்பீடாகும். சாதாரணமாக நம் வைதீக மத விவாதங்களில் சுருதி என்று வேதங்களை மட்டுமே சொல்வது வழக்கம். சில சமயம் ஆகமங்கள் போன்ற , முனிவர்களால் எழுதப்பட்ட, அதிபுராதனமான நூல்களை அவ்வாறு சொல்வதுண்டு. சுருதி என்றால் ‘எவராலும் இயற்றப்படாமல் அந்தரவெளியில் எப்போதும் இருப்பது, ரிஷிகளால் இறைவசனமாக ஆத்மாவால் கேட்கப்படது’ என்று மீமாம்சகர்களான வைதிகர் சொல்வதுண்டு.
அதேபோல அறிதலின் மூன்று அடிப்படைகளில் பிரத்யட்சம் [புலனறிதல்] அனுமானம் [ஊகம்] ஆகிய இரண்டுக்கும் பிறகு ‘முன்னோர் ஞானம்’ என்ற பொருளிலும் ‘முன்நறிவு’ என்ற பொருளிலும் சுருதி என்ற சொல் வழங்கப்படுவதும் உண்டு. ஆனால் அதிகம் தொன்மை இல்லாததும் ஒரு தனிமனிதரால் எழுதப்பட்டதுமான ஒரு நூலை சுருதி என்று சொல்வது என்னை ஆச்சரியப்படுத்தியது. ஆனால் சுருதி ஸ்மிருதி என்ற பகுப்பைப்பற்றிப் புரிந்துகொண்டபின் அந்த ஐயம் இல்லாமல் ஆகியது. சுருதி என்பது மானுட ஆதிஞானத்தின் இயல்பான வெளிப்பாடு ஆகும்
ஸ்மிருதியா ஸ்ருதியா?
அடிப்படை நூல்களைப்பற்றி மதிப்பிடுவதற்கு அதை முதலில் ஒரு பகுப்புக்கு ஆளாக்க வேண்டும் என்று நடராஜகுரு தன் நூல்களில் கூறுகிறார். ஒரு நூல் ஸ்மிருதியா இல்லை ஸ்ருதியா என்று பகுப்பதுதான் அது. ஸ்ருதி என்பது அடிப்படையான தரிசனங்கள் மட்டும் அடங்கிய மூலநூல். ஒரு சமூகம் இயல்பிலேயே திரட்டிக் கொண்ட ஞானத்தின் தொகுப்பு அது. ‘கூறக்கேட்டது’ என்ற பொருளில் அது ‘ஸ்ருதி’ என்று கூறப்படுகிறது. வேதங்கள், உபநிடதங்கள், தம்மபதம் முதலியவை ஸ்ருதிகளே. அவற்றில் உலகியல் சட்டதிட்டங்கள் ஏதும் பேசப்படவில்லை.
அன்றாட வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய நெறிகளையும் சட்ட திட்டங்களையும் முன்வைக்கும் நூலே ஸ்மிருதி. ‘நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டியது’ என்ற பொருளில் அப்பெயர் பெற்றது. மனுஸ்மிருதி நாம் அறிந்ததே. மோசேயின் பத்துக்கட்டளைகள் ஸ்மிருதிதான். குருகிரந்த சாகிப் ஒரு ஸ்ருதி என்று பகுக்க்கும் நடராஜ குரு குர் ஆன் ஒரு ஸ்மிருதி மட்டும்தான் என்கிறார்.
கீதை ஒரு ஸ்ருதியா இல்லை ஸ்மிருதியா? கீதையில் அர்ஜுனனிடம் கிருஷ்ணன் உலகியல் சார்ந்து சில விஷயங்களை அறிவுறுத்தும் வரிகள் பல வருகின்றன. அவ்வரிகளை மட்டும் பெயர்த்தெடுத்து சிலர் கீதை ஒரு ஸ்மிருதிதான் என்று காட்ட முயல்வதுண்டு. கீதையை ஒரு சமூக — மதச் சட்டம் மட்டுமாக காட்டும் உள்நோக்கம் அவர்களுக்கு உண்டு. அவர்கள் கீதைவரிகளைப் பெயர்த்தெடுத்து மதக்கட்டளைகளாக அவற்றை ஆக்கவும்செய்கிறார்கள். கீதையை எதிர்ப்பவர்களும் பெரும்பாலும் அதை ஒரு மதச்சட்டநூலாக எண்ணியே எதிர்க்கிறார்கள்
கீதையில் ஒரு கட்டளையிடும் தொனி இருப்பதைவைத்து அது நெறிகளைப்பற்றி அறிவுறுத்தும், ஆணையிடும் நூல் என்று மேலோட்டமாகச் சொல்லிவிடலாம்தான். ஆனால் கீதையின் அந்தத்தொனி அதன் நாடகீயத்தன்மையின் ஒரு அம்சம் மட்டுமே. கீதை நாடகீயத்தன்மையுடன், கவித்துவத்துடன் தத்துவவிவாதம்செய்யும் நூல்மட்டுமே. அறிவுறுத்தும் நீதிநூல் அல்ல. கட்டளையிடும் சட்டநூலும் அல்ல. ஆகவே கீதை ஒரு ஸ்ருதியே என்று கூறும் நடடராஜகுரு அதற்கு ஆதாரமாகக் காட்டும் இடங்களில் ஒன்று சாங்கிய யோகத்தின் இந்த இறுதிப்பகுதி.
இங்கு ஒழுக்கத்தைப்பற்றி கிருஷ்ணன் பேச முற்படவில்லை. செய்யத்தக்கது இது, தகாதது இது என்று கூட முற்படவில்லை. மாறாக பிரச்சினை என்ன என்று மட்டுமே கூறிவிளக்குகிறார். நடைமுறை வாழ்வில் பிரிந்து பலவாகி நம்மைச் சுற்றி இயங்கிக் கொண்டிருக்கும் பிரபஞ்ச வெளியில் ஒரு ஒருமையையும் அழியாமையையும் கண்டடைவது சாங்கியஞானம். அந்த ஞானத்தில் கருத்தூன்றி, செயலின் விளைவுகளில் மனம் சஞ்சலம் கொள்ளாமல், முழுமையான ஒன்றுதலுடன், சமநிலையுடன் செயலாற்றுதல் சாங்கிய யோகம்.
அந்த யோகத்தை ஆற்றுவதற்கு தடையாக இருப்பது பரந்து சிதறியபடியே இருக்கும் மனம். அந்த மனதைக் கட்டுக்குள் வைப்பதற்கு மனதின் வாயில்களான புலன்களை கட்டுப்படுத்த வேண்டும். இதுதான் இந்த அத்தியாயத்தில் புலனடக்கம் குறித்து கீதை கூறும் கருத்தாகும். அதாவது இங்கே புலனடக்கம் வலியுறுத்தப்படவில்லை, ஆணையிடப்படவும் இல்லை. இந்த விவாதத்தில் அதன் இடம் சொல்லப்படுகிறது, அவ்வளவுதான்
கீதையின் 62 ஆம் பாடல் முதல் படிப்படியாக புலனடக்கம் குறித்து கூறப்படுவதை வாசகர்கள் தனியாக எடுத்துப் படித்து இதை ஆராயலாம். புறவய உலகை நாம் எண்ணும் தோறும் பற்றும் மேலும் மேலும் வலுக்கிறது. அது ஆசையாகிறது. ஆசை நிறைவேற்றம் நம் கையில் இல்லை. பலநூறு நிபந்தனைகள் அதற்கு. ஆகவே ஆசை இயல்பாகவே சினமாக உருவெடுக்கிறது. சினத்திலிருந்து மனக்குழப்பம். அதிலிருந்து ஆளுமைச் சிதைவு.
ஆகவே புற உலகில் சென்றுபடியும் நம் புலன்களை கட்டுப்படுத்துவதே ஒரே வழியாகும். புலன்களை அப்புலன்கள் அறியும் இன்பங்களிலிருந்து விலக்கி நிறுத்துவதே அதற்கான வழி. உயிர்கள் அனைத்தும் எங்கு சென்று இன்பம் நுகரத்துடிக்கின்றனவோ அங்கு தன்னை விலக்கிக் கொள்கிறவனே யோகி. ஆசைகளை அறுத்து தன்னகங்காரத்தைத் துறந்து செயலாற்றுபவனுக்கு மனச்சஞ்சலம் இல்லை. அவனுக்கு அமைதி உள்ளது.
இவ்வாறு கீதை ஒர் ஆய்வுக்கருத்துக்குரிய நிதானத்துடன் இதை முன்வைக்கிறது. இந்த நிதானம் கீதை முழுக்க உள்ளது. ஆகவேதான் நடராஜகுரு ‘கீதையை பாடலாகப் பாடப்பட்ட அறிவியல்’ என்று கூறுகிறார். (‘அறிவியலைப் பாட முடியுமா?’ என்ற கட்டுரை. ‘wisdom’ என்ற நூல்)
நாம் பிற நீதிநூல்களுடன் இதை ஒப்பிட்டு உணரலாம். ஒழுக்க நூல்கள் இவ்வாறு புலனடக்கம் பற்றிப் பேசும் போது அதை மனிதனை விட மேலான ஒரு சக்தியால் மனிதனுக்கு விடப்பட்ட கட்டளை அது என்றே முன்வைக்கும். மனிதனால் மீறமுடியாத விதி என்றே சொல்லும். கீதையில் அந்தப் பேச்சே இல்லை. அதை தத்துவக்கருத்தாக மட்டுமே அது சொல்கிறது ஆகவேதான் கீதை ஒரு ஸ்ருதிதான் என்று குறிப்பிடப்படுகிறது.
தொடரும்..