ஆழியின் மௌனம்:சாங்கியயோகம்-2
ஜெயமோகன்.இன் இல் இருந்து
[ஊட்டி இலக்கிய முகாமில்]
பரத்தை கண்டறிதல்
புலனடக்கம் பற்றிய கீதையின் விளக்கத்தில் புலன்களை வெல்லும் வழி என்று கூறப்பட்டிருப்பது என்ன? பொதுவாக கீதை உரைகளில் ‘இறைவனை மையமாகக் கொண்டு மனதை குவித்தல்’ என்றே கூறப்படிருக்கும். கீதை பரம்பொருளால் கூறப்பட்ட வேதம் என்ற நம்பிக்கையில் இருந்து தொடங்கினால் அது இயல்பான ஒரு முடிவுதான். ஆனால் வேதாந்த நூலாக கீதையை எடுத்துக் கொணடால் அப்படிக் கூறமுடியாது.
கீதை 45 ஆம் பாடலில் முக்குணமயமான வேதங்களைத் தாண்டி நீ ‘ஆத்மவானாக’ இரு என்று கிருஷ்ணன் குறிப்பிடுகிறார். ஆத்மாவில் நிலைபெற்ற நோக்கு உடையவனை ‘ஸ்ருத பிரதிக்ஞன்’ என்கிறார். நிலைபேறு உடையவன் புலன்களை வெல்கிறான். தன் ‘ஆத்ம ஸ்வரூ ப’த்தை உணர்ந்து அதில் மனதின் நிலைநிறுத்தி அதனூடாக புலன்களை வெல்லுதலைப் பற்றியே கீதை பேசுகிறது என்பது தொடர்ந்துவரும் பாடல்களை கூர்ந்து வாசிப்பவர்களுக்குப் புரியும். கீதை 53ஆம்பாடலில் நேரடியாக இது கூறப்படுகிறது. ‘உன் அறிவு என்று ஆத்மாவில் உறுதி பெறுமோ அன்று நீ யோகம் அடைவாய்’ என்கிறார் கிருஷ்ணன்.
தத்துவார்த்தமாகக் கூறப்போனால் இப்பிரபஞ்சம் முழுக்க நிறைந்துள்ள ஒன்றின் ஒருதுளியினும் துளியான வெளிப்பாடே நாம் என்ற உணர்வு மூலம் உருவாகும் அளவிட முடியாத மனவிரிவையே இங்கு ‘ஆத்மாவான் ஆதல்’ என்கிறார் கிருஷ்ணர். அந்த மன விரிவுடன் நோக்கும் போது நம்முள் ஒரு கணம் கூட நிலைக்காமல் ஓடிக்கொண்டிருக்கும் தன்னை மையப்படுத்திய மன ஓட்டங்களும் அதன் பற்பல விளையாட்டுகளும் மிக அற்பமானவையாக ஆகிவிடும். இவ்வாறு அகங்காரம் அடக்கப்படும்போது அகங்காரத்தால் பூதாகரமாக வளர்க்கப்படும் புலனின்ப நாட்டம் இயல்பாகவே கட்டுப்படுத்தப்படும்.
புலன்களை கட்டுப்படுத்தினாலும் இன்ப விழைவு என்பது ஆத்மாவில் பிறந்தது என்பதனால் அதன் தொடக்க எழுச்சி நம்மில் இருந்து கொண்டே இருக்கும் என்பது கிருஷ்ணன் கூற்று. 59 வது பாடலில் கீதை இதைக்குறிப்பிட்டு ‘பரம் திருஷ்ட்வா’ – அந்த எஞ்சிய எழுச்சியும் அழிகிறது என்கிறது. பரம் திருஷ்ட்வா என்ற சொற்களை ‘பரம்பொருளைக் கண்டபின்’ என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள் கீதை உரைக்காரர் பலரும். அதைத்தொடர்ந்து 61 ஆவது பாடலில் கிருஷ்ணன் ‘என்னையே (மத்பர) பரமாகக் கொள்க!’ என்று கூறியிருப்பதனால் அப்படிப் பொருள் கொள்ளுதல் இயல்பே.
ஆனால் இங்கு பரம் என்பதை பரம்பொருள் என்றும் இறைவன் என்றும் கொண்டாக வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை. பரம் என்பது தமிழில் ‘பிற’ என்றே பொருள். இதம் என்பது ‘இங்குள்ள அனைத்தும்’ என்னும்போது பரம் என்பது இவையனைத்தும் கடந்து அப்பால் உள்ள என்று பொருள்படும். வேதாந்த நோக்கில் ‘முழுமுதல் உண்மையை, உண்மையின் முடிவிலாப் பிரம்மாண்டத்தை’ என்று பொருள் கொள்ளலாம். நாராயண குருவின் வேதாந்த மரபு கொள்ளும் பொருள் அதுவேயாகும்.
ஒருவனின் இச்சைகள் அவன் ஆத்மாவில் இருந்து பிறப்பவை. ஆத்மா தன்னை தனித்ததாக உணரும் இயல்பு கொண்டது. அதுவே மாயை. மாயையில் இருக்கும் போது இவ்வியல்பினை அது அகங்கரமாக வளர்த்து எடுக்கிறது. அகங்காரம் மூலம் தன் இச்சைகளை பூதாகரமாக வளர்த்தெடுத்து, அந்த பூதங்களின் விளையாட்டுப் பொம்மையாக தன்னை ஆக்கிக் கொள்கிறது. தன்னுடைய இயல்பான ஆத்மவடிவினை, பிரபஞ்ச வடிவினை அது உணர்ந்து ஆத்மவானாக நிலைபெறும் போது அகங்காரம் அடங்கி புலன்கள் கட்டுப்படுகின்றன. ஆயினும் அது தன்னை ஆத்மாவாக உணரும் வரை, அது இகத்தில் இருக்கும் வரை, அதில் இச்சைகள் இருக்கும். அந்தத் தனித்துவத்தை உதறி அது பர உண்மையை கண்டடையும் போது அதன் தனித்தன்மை இல்லாமலாகும். அப்போது இச்சைகளும் அழியும். இதுவே இப்பகுதியில் கீதை குறிப்பிடும் கருத்து எனலாம்.
ஐந்து உவமைகள்
சாங்கிய யோகத்தில் இப்பகுதியில் கூறப்பட்டுள்ள ஐந்து உவமைகள் இந்து ஞானமரபில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டவை. நம் மரபில் உள்ள உவகைகளைப்பற்றி நாம் சற்று சிறப்புக்கவனம் கொள்ளவேண்டியிருக்கிறது. நடராஜ குரு அவரது ‘குருவும் சீடனும்: ஞானத்தேடலின் கதை’ என்ற நூலில் மேலைச் சிந்தனையில் உள்ள உதாரணங்கள் அந்த ஆசிரியரால் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை தெளிவுபடுத்தும் பொருட்டு கூறப்படுபவை என்றும், நேர்மாறாக கீழைச்சிந்தனையில் உதாரணங்கள் ஒரு குறிப்பிட்ட கருத்துநிலையின் புறவய வடிவங்களாகவே கருதப்படுகின்றன என்றும் கூறுகிறார். ஆகவே நம் மரபில் அறிஞர் உதாரணங்களை நாம் மாற்றி மாற்றிக் கூறுவதில்லை. பெரும்பாலான உதாரணங்கள் அவற்றின் கருத்தியல் நிலைப்பாடு போலவே நிரந்தரமானவை. அத்வைதத்தில் இருந்து ‘கயிற்றரவு’ உதாரணத்தைப் பிரிக்க முடியாது. அக்கருத்துநிலையை விரிவாக்கவும் மறுக்கவும் அதே உதாரணம் தான் எல்லாதரப்பினராலும் பயன்படுத்தப்படும்.
ஏனெனில் இந்திய ஞானத்தின் பொதுவான தர்க்கவியலான நியாய சாஸ்திரத்தில் கோட்பாடுகளின் படி உதாரணம் என்பதும் ஒரு பிரமாணம் (அறிதல் முறை) ஆகும். உதாரணத்தை தவறான நிரூபித்தால் அக்கோட்பாடும் தவறாக ஆகும். நியாயவியலின் மூலகுருவான கோதமன் ‘தள நியாய சூத்திரம்’ என்ற நூலில் பிரமாணங்கள் நான்கு என்று வகுக்கிறார். பிரத்யட்சம் (தூலமாக தெரியக் கூடியது. புலன் வழியாக அறியக்கூடியது) அனுமானம் (ஊகித்தறிதல்) உபமானம் (உவமை) சப்தம் (முன்னால் இருந்த ஞானம். வழிவழியாக வரும் ஞானம். இயல்பிலேயே மனிதனுக்குள் இருக்கும் ஞானத்தின் விதை) என்பவை அவை.
இவற்றில் உவமை ஒரு முக்கிய இடத்தை வகிப்பதைக் காணலாம். ஒரு பொருளை நாம் காணும்போது இந்நான்கும் இணைந்தே அதை அறியவைக்கின்றன. குடத்தைப் பார்க்கையில் அதைத் தொட்டும் பார்த்தும் அதன் வடிவத்தை அடைகிறோம். அது பொருட்களை போட்டு வைக்க உதவக்கூடும் என ஊகிக்கிறோம். ஒரு பெரிய காய்போன்றது என்று உவமிக்கிறோம். அத்துடன் குடம் குறித்து நாம் அறிந்துள்ள முன் ஞானம் வந்து இணைகிறது. இவ்வாறே அறிதல் நிகழ்கிறது. இப்படி உருவாவதுதான் நம்முடைய குடம் என்னும் அறிதலின் துளி.
தொடரும்..