ஆழியின் மௌனம்:சாங்கியயோகம் [ நிறைவுப்பகுதி]
ஜெயமோகன்.இன் ல் இருந்து
[ஊட்டி இலக்கிய முகாம்]
இக்காரணத்தால் இந்து ஞானமரபில் உவமைகளை உவமிக்கப்படும் அக்கருத்தின் புற வடிவங்களாகவே கண்டு விவாதிக்கிறோம். இங்கு கீதை அளிக்கும் நான்கு உவமைகளையும் அவ்வாறே வாசகர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். கற்பனை மூலம் உவமையை விரித்து எடுக்கவேண்டும். கீதை 22 ஆம் பாடலில் ஆத்மா தன் உடல்களை கிழிந்த உடைகளை மாற்றுவது போல மாற்றிக் கொள்கிறது என்று கூறப்படுகிறது. மறுபிறப்புக் கோட்பாட்டின் அடிப்படை உவமையாக இன்றுவரை இது திகழ்ந்து வருகிறது.
இந்த உவமை பல தளங்களில் விரிவாக்கம் செய்யத்தக்கது. ஒரு சட்டையின் வடிவம் என்பது என்ன? அதை அணியும் உடல்தான் அதை தீர்மானிக்கிறது. சட்டைக்கென எவ்விதமான தனித்தன்மையும் இல்லை. அந்த உடல் ஆற்றும் பணிகளை சட்டை ஆற்றுகிறது. உடலுக்கு ஏற்படக் கூடிய வெப்பத்தையும் குளிரையும் தான் ஏற்று பழுதுபடுகிறது. இந்த உவமையை இன்றும் விரிவுபடுத்தினால் லெளகீக உலகில் ஆடையை வைத்தே உடல் மதிப்பிடப்படுகிறது என்பதைக் காணலாம். உயர்தர உடை, உழைப்பாளியின் உடை, பிச்சைக்காரனின் உடை என உடைகள் உடலை அடையாளப்படுத்தி பாகுபடுத்துகின்றன.
உடல் உடைகளை களைவதுபோல உடலை ஆத்மா களைகிறது எனும் போது ஆடையில் உள்ள இவ்வியல்புகள் அனைத்துமே உடல்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. ந்த்ம்வாஇ உடல் பாதுக்காக்கிறது. ஆத்மாவுக்கு அணிகலாக ஆகிறது. ஆத்மா உடலை வைத்து லௌகீகமாக மதிப்பிடப்படுகிறது. அடையாளப்படுத்தப்படுகிறது.
இரண்டாவது உவமை ( கீதை 46) கிணற்று நீரையும் பெருவெள்ளத்தையும் பற்றியது. அந்த உவமையையும் நாம் பலவாறாக விரித்தெடுக்கலாம். நீர் என்று கிணற்றை மட்டுமே அறிந்த ஒருவனுக்கு பெருவெள்ளம் என்ன உணர்வைத்தரும்? அதைக் கண்டபின் அவன் கிணற்று நீரின் தேங்கிய தன்மையை எப்படி மதிப்பிடுவான்? மகத்தான ஒன்று நிகழ்கையில் அன்றாடம் நாம் அறிபவை அற்பமானவையாகிவிடும் என்று கூற பெருவெள்ளம் – கிணறு என்ற உவமை கூறப்பட்டதில் ஆழ்ந்த பொருள் இருக்கிறது.
மேலும் சொல்லலாம். பெருவெள்ளம் அபூர்வமாக நிகழ்வது. உடனே வற்றிவிடுவது. பெருவெள்ளத்தில் வெள்ளம் தவிர வேறெதையும் சிந்திக்க இயலாது. அது நம் தாகத்திற்கு நீர் அல்ல. நம்மை சுழற்றி அடித்துச் செல்லும் பெரும் பிரவாகம் அது. மெய்ஞானம் என்பது பெருவெள்ளம். ஆனால் உலகியல் செயல்பாடுகள் கிணறு போன்றவை. நீரற்ற நிலத்தில் நம் உழைப்பால் தோண்டித் தோண்டி ஆழத்தில் இருந்து நாம் மொண்டு எடுப்பவை அவை. ஒவ்வொரு நாளும் நம் தாகம் தீர்ப்பவை. ஒரு கிணற்றுக்குள் குனிந்து பார்க்கையில் ஆழத்தில் கண்ணிமைக்கும் அந்த வட்டவடிவ நீர் ஒரு தருணத்தில் பெருவெள்ளமாக மாறி பூமியை மூழ்கடித்து விடக்கூடியது என்று நாம் நினைவு கூ ரவேண்டும் என்கிறதா கீதை?
கீதையின் இவ்வரிக்கு நேர் எதிரான ஒரு பழமொழி நம்மிடம் புழங்குகிறது- ‘கிணற்று நீரை வெள்ளம் கொண்டு போகுமா?’ அதன் உட்பொருள் என்ன என்றும் நாம் யோசிக்கலாம்.
மூன்றாவது உவமை, ஆமை தன் உறுப்புகளை உள்ளடக்கி கொள்வது போன்றது. புலனடக்கம் பயில்வதைப் பற்றியது இந்த உவமை. (கீதை 58.) புலனடக்கத்திற்கு ஆமையை உதாரணம் காட்டுவது பல மூலநூல்களில் உள்ளது. திருகுறளில் கூட அதைக் காணலாம். ஆமை தன் கைகால்களையும் கைகளையும் தன்னுள் இழுத்துக் கொள்வது போல ஐம்புலன்களையும் உள்ளிழுத்தல் யோகப் பயிற்சியின் ஒரு படிநிலை. இவ்வுவமையும் பலவாறான நுண்ணிய பொருள்கள் உடையது. ஆமை தன் உறுப்புகளை எப்போதும் தனக்குள் ஒடுக்கி வைத்திருப்பதில்லை. அது நடமாடுவதும் இரைதேடுவதும் எல்லாம் அவ்வுறுப்புகளின் மூலம்தான். ஆபத்து என்று உணரும்போது மட்டுமே புலன்களை உள்ளே இழுத்துக்கொள்கிறது. அதுபோல புலனடக்கம் என்பது புலன் மறுத்தல் அல்ல. புலன்கள் மீதான கூரிய கண்காணிப்பு மட்டுமே.
அதேபோல புலன்களால் ஒரு மனம் அலைக்கழிவதற்குக் கூறப்படும் உவமையும் குறிப்பிடத்தக்கது (கீதை 67.) கடல்மீது செல்லும் கப்பலை காற்று அலைக்கழிப்பதுபோல புலன்கள் மனதை அலைக்கழிக்கின்றன. இங்கு கப்பலுக்கு மனித மனம் உவமை. புலன்சார்ந்த அறிதல்கள்தான் காற்று. கடல் என்பதை உலகமாகக் கொள்ளலாம். கடலில் உருவாகும் காற்று கடலை கொந்தளிக்கச் செய்கிறது. அக்கொந்தளிப்பின் மீது கப்பலை தூக்கி சுழற்றி அலைக்கழிக்கிறது. புயலடிக்கும் போது அதை எதிர்கொள்வதற்கு கப்பலுக்கு இருக்கும் ஒரே வழி பாய்களை அவிழ்த்து விட்டு கடலின் ஆழம் நோக்கி நங்கூரத்தை பாய்ச்சுவதே . அப்படி பலவகையான கற்பனைகள் மூலம் இத்தரிசனத்தை நாம் விரிவாக்கலாம்.
இதைத் தொடர்ந்து வரும் உவமை ஆத்மவானின் இலக்கணத்தைக் கூறவதாகும். (கீதை 70.) கடலில் நதிகள் கலப்பதுபோல ஆத்மவானின் ஆழத்தில் அனைத்து காமங்களும் சென்று ஒடுங்க வேண்டும். காமம் மண் மீதான ஆசை, உடல் தொடர்புகள் மீதான ஆசை, செல்வம் மீதான ஆசை. இவ்வாசைகள்தான் மனிதனை அலைக்கழிக்கின்றன. இங்கு கீதை இவ்வாசைகளில் இருந்து நம்மை நாம் எப்படி துண்டித்துக் கொள்வது என்று பேசவில்லை. துண்டித்துக் கொள்ள இயலாது. ஏனெனில் அவை நம்முள் இருந்தே பிறந்தவை. நாம் அவற்றை நம்முள் இழுத்துக் கொள்ள வேண்டும். ஆறுகள் ஒடைகள் நதிகள் என எல்லா நீரும் கடலில் இருந்து பிறந்தவைதான். அவை மீண்டும் கடலுக்கே சென்று சேர்கின்றன. லட்சோப லட்சம் நீர் வழிகள் சென்று சேர்ந்தாலும் கடல் நிரம்பிவிடுவதில்லை. அதேபோல நம்மில் உதித்த காமங்கள் நம்முள் அடங்கும்போது அவை நம்மை நிரப்பிவிடுவதில்லை.
இந்த உவமையில் இரு விஷயங்கள் கவனப்படுத்தப்பட வேண்டும். ஒன்று, ‘முழுமுற்றாக நிறைந்ததும்’ என்ற கீதை வரி. அலைகடலின் ஆழத்தில் நாம் உணரக்கூடிய ஆழியை இங்கு இப்பாடல் சுட்டுகிறது. அதுதான் அசைவற்று, நிரந்தரமாக நிரம்பி, அப்படியே நின்று கொண்டிருப்பது. கடல் முழுக்க நிரம்பியுள்ளது. அதிலிருந்து எத்தனை நதிகள் பிறந்தாலும் அது குறைவதில்லை. எத்தனை நதிகள் இணைந்தாலும் அது கூடுவதில்லை. இது புகழ்பெற்ற வேத சூக்தமான ‘ஓம் அது முழுமை: ஓம், இது முழுமை, முமுமையிலிருந்து முழுமை பிறக்கிறது. முழுமையிலிருந்து முழுமை பிறந்தபிறகும் முழுமையே எஞ்சியுள்ளது’ என்ற வரிகளுக்கு உதாரணமாக அமைகிறது.
இன்னொன்று கடலில் பிறந்த எல்லா நீருக்கும் கடலைச் சென்றடையும் அவா அதன் இயல்பிலேயே உள்ளது. மண்ணில் உள்ள ஒவ்வொரு நீர்துளியும் கடலுக்குப் போய்சேரும் துடிப்புடன் உள்ளன . அதே போல புலனிச்சைகள் அனைத்தும் மீண்டும் ஆத்மாவில் சென்று கரையும் விழைவுடன் உள்ளன. புலன்சார் இன்பங்களுக்கான விழைவு ஒவ்வொரு கணமும் நம்மில் இருந்து முளைவிட்டபடியே உள்ளது என்று நாம் அறிவோம். ஆனால் சற்று முக்கியமான ஒரு விஷயத்தை நாம் செய்ய ஆரம்பித்த கணமே அத்தனை விழைவுகளும் திரும்ப நமக்குள்ளேயே சென்று ஒடுங்கி விடுகின்றன. அதை அந்தச் செயலில் இருந்து வெளியே வந்த பிறகுதான் நாம் உணர்கிறோம். அந்த சென்றொடுங்கும் இயல்பானது புலனறிதல்களின் அடிப்படைப்பண்பாகும்.
ஆகவே கீதையின் உதாரணங்களை அந்தக் கருத்தை விளக்குபவையாக மட்டுமே எடுத்துக் கொள்ளலாகாது. அது இரு வழிப்பாதை. கீதையுடன் விவாதிப்பதற்கே அந்த உதாரணங்களை நாம் பயன்படுத்தவேண்டும்.
கடைசிமுனை
சாங்கிய யோகத்தை முழுமை செய்யும்போது ‘மரண காலத்திலேனும்’ என்று கிருஷ்ணன் சொல்வதை பல விரிவுரையாளர்கள் பலவாறாக விவாதித்திருக்கிறார்கள். சாங்கியம் என்பது நடைமுறை யோகம். நடைமுறை யோகத்துக்கு ஆகப்பெரிய தடையாக இருப்பது புலனிச்சைகளே என்று சொல்லும் கிருஷ்ணன் அதன்பொருட்டே ‘மரணகாலத்திலேனும்’ என்கிறார். புலனிச்சைகள் அவற்றின் மிகமிகப்பலவீனமான தருணத்தில் இருப்பது மரணகாலத்திலேயே. நோயினாலோ மூப்பினாலோ உடல் தன் வலிமையை இழந்து தன் கடைசி ஆற்றலை பயன்படுத்தி வாழ்ந்துகொண்டிருக்கும்போதே. சாங்கிய யோகம் கூறும் நடைமுறை யோகத்துக்கு ஒருவனுக்கு இருக்கும் கடைசி வாய்ப்பு அதுவே.
ஆனால் அந்த நடைமுறை யோகத்தைத்தாண்டி ஒருவனுடைய தேடல் செல்லுமென்றால் என்ன என்னும் வினாவுக்கான விடையாகவே கீதையின் அடுத்த அத்தியாயம் நீள்கிறது.