கீதை : முரண்பாடுகள்
ஜெயமோகன்.இன் ல் இருந்து
[ஊட்டி இலக்கிய முகாமில்]
சுவாமி சித்பவானந்தரின் கீதை உரை தமிழில் மிகவும் புகழ்பெற்றது. லட்சக்கணக்கான பிரதிகள் விற்கப்பட்ட நூல் அது. அதன் முன்னுரையில் அவர் – ‘கொலை நூலா?’ என்று ஒரு உபதலைப்பில் பகவத்கீதை கொலையை எடுத்துரைக்க்கும் நூலா என்ற வினாவுக்கு விரிவான பதிலைக் கூறுகிறார். தத்துவார்த்தமாகவும் நடைமுறை சார்ந்தும் கூறப்பட்ட கச்சிதமான விளக்கம் அது. கீதைக்கு உரைவகுத்த நவீன காலத்திய ஆன்மிகவாதிகள் அனைவருமே அந்த வினாவுக்கு ஏறக்குறைய அந்த வினாவினை அளித்துள்ளனர். உலகம் முழுக்க சைவ உணவுக்காகவும் கொல்லாமைக்காவும் அமைப்பு ரீதியாகப் பணியாற்றி வரும் ஹரே கிருஷ்ணா கிருஷ்ணபக்தி இயக்கம் (இஸ்கான்) தான் கீதையை உலகளாவ கொண்டு செல்கிறது. அகிம்சையை அரசியல் உள்பட வாழ்வின் அனைத்து மட்டத்திற்குமான செயல் முறையாக முன்வைத்த காந்தியின் மூலநூலாக இருந்ததும் கீதையே.
இருந்தும் இவ்வருடம் (2007) தமிழ்ச் சிற்றிதழ் ஒன்றில் ஒரு மதிப்புரையில் இளம் அறிவுஜீவி ஒருவர் ‘கொலையை வலியுறுத்தும் நூலான கீதை’ என்ற சாதாரணமாக எழுதியிருந்ததைப் படித்து, அமெரிக்க வாசக நண்பர் ஒருவர் தொலைபேசியில் கூப்பிட்டுச் சொன்னார். அவருடைய வியப்பிலும் வருத்தத்திலும் நான் பங்கு கொள்ளவில்லை. வேறு எந்த நுண்ணிய தத்துவ நூலையும் போலவே கீதையும் தவறாகப் புரிந்து கொள்வதற்கு மிகவும் உகந்த ஒன்று.
பிளேட்டோவின் குடியரசோ, நீட்சேயின் ‘இவ்வாறு பேசினான் ஜரதுஷ்ட்ரா’வோ விட்ஜென்ஸ்டீனின் ‘நீல மற்றும் தவிட்டுநிற புத்தகம்’ மோ அவற்றுக்கான ஆய்வுகள் அளவுக்கே தவறான புரிதல்களின் விளைவான எதிர்ப்புகளும் வசைகளும் நமக்குக் கிடைக்கின்றன. தத்துவ நூலான கீதை மத நூலாகவும் வழிபாட்டு நூலாகவும் தவறாக முன்வைக்கப்படுகையில் மதம் சார்ந்தும் வழிபாட்டு முறைகள் சார்ந்தும் தவறாகப் புரிந்து கொண்டு அதைப்பற்றி எழுதுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.
இந்த நூலில் ‘கொலைநூலா?’ என்ற வினாவுக்கு பதில் கூற முற்படவில்லை. இந்த நூல் அத்தகைய எளிய அல்லது அசட்டு வினாக்களின் தளங்களில் நிற்பவர்களுக்கு உரியது அல்ல. தத்துவத்தைக் கற்பதற்கான தர்க்க மனமும் உருவகங்களை கவித்துவ ரீதியாகப் புரிந்து கொள்ளும் குறைந்தபட்சக் கற்பனையும் உடைய நவீன இலக்கிய வாசகர்களுக்கானது. மதக்காழ்ப்போ இனக்காழ்ப்போ கொண்டு கீதையை – அல்லது வேறு எந்தநூலையும் – அடையாளப்படுத்தும் முயற்சிகளுடன் மோதுவது வீண்வேலை. நாம் கீதையின் வாசகர்கள், பாதுகாவலர்கள் அல்ல.
ஆனால் ஆராய்ந்தறியும் நோக்குடன் கீதைக்குள் செல்லும் நவீனமனம் அதில் முரண்பாடுகளைத் தொடர்ந்து கண்டபடியே செல்லும் – இது எந்த ஒரு நுட்பமான தத்துவ நூலிலும் தெரியும் இயல்பும் ஆகும். இந்த முரண்பாடுகளை எப்படி எடுத்துக் கொள்வது என்பதற்கான ஒரு அடிப்படை விளக்கம் முன்னரே நம்மிடம் இருந்தாக வேண்டும். மூன்று வகையில் இம்முரண்பாடுகள் உருவாகின்றன.
1. கீதையின் செய்திக்கும் அது உருவகித்துள்ள நாடகீயத்தளத்திற்கும் இடையே உள்ள முரண்பாடு
2. கீதை தத்துவத்தேடலில் முன்வைக்கும் முரணியக்கம் (dialectics) சார்ந்து உருவாகும் முரண்பாடு
3. கீதையின் வரலாற்றுக்காலகட்டம் சார்ந்த முரண்பாடுகள்.
அமைப்பு சார்ந்த முரண்பாடுகள்
முதல்வகை முரண்பாடுக்கு உதாரணம் ஒன்று பார்ப்போம். கீதையின் பத்தாம் அத்தியாயம் ஐந்தாவது பாடல் இது.
புத்தியும் ஞானமும்
மயக்கங்களின்மையும்
பொறுமையும் உண்மையும்
புலனடக்கமும் அமைதியும்
இன்பதுன்பங்களின் ஊசலும்
இருத்தல் இன்மையின் இருமையும்
அச்சமும் அச்சமின்மையும்
அகிம்சையும் சமநோக்கும்
தன்னிறைவும் தவமும்
கொடையும் புகழும்
இகழ்ச்சியும் இன்னவும்
பிறப்பது என்னிலிருந்தே!
கீதையின் இப்பகுதி விபூதியோகம் என்று பகுக்கப்பட்டுள்ளது. இறைவடிவமாக நின்று கிருஷ்ணன் கூறுவதாக வரும் வரிகள் இவை. அனைத்தும் இறைவனே என்று உணர்ந்து இறைவனில் அனைத்திற்கும் முழுமையைக் காண்பவர் நிறைவாழ்வு வாழ்வர் என்பதே இப்பகுதியின் மையக்கருத்தாகும் .இத்தகைய ஒரு பாடலில் மானுடன் அடைய வேண்டிய உன்னத மதிப்பீடுகளில் ஒன்றாக அகிம்சையை எடுத்துக் கூறியிருக்கிறார் கிருஷ்ணன். ஆனால் அடுத்த அத்தியாத்திலேயே ‘ஆகவே போர் புரிவாயாக’ என்ற அறைகூவல் மீண்டும் எழுந்துவிடுகிறது. கீதையில் உடனடியாக நம் கண்களுக்குத் தெரிவது இந்த முரண்பாடாகவே இருக்கும்.
சாதாரணமாக யோசிப்பவர்களுக்குக் கூட இது ஒரு சிக்கலான ஒன்றாக இராது. போர்களத்தில் எடுத்துரைக்க்கப்பட்ட நூலாக கீதை அமைக்கப்பட்டிருப்பது ஒர் இலக்கிய உத்தி மட்டுமே. மகாபாரதச் தருணத்தில் அது இணைக்கப்பட்டுள்ளது. நூலுக்கு வெளியே அது மகாபாரதப் போரைக் குறிக்கிறது. நூலுக்குள் முற்றிலும் குறியீட்டு ரீதியாகவே போர் குறிப்பிடப்படுகிறது. ‘செயலாற்றுதல்’ என்ற சொல்லுக்கு நிகராகவே போரை எடுத்துக்கொள்ள இயலும். ‘கர்மம் செய்தல்’ என்ற விரிவான தத்துவார்த்தப் பொருளில் கொள்ளவும் முடியும்.
கீதைக்குள் அந்நூல் ஒட்டுமொத்தமாக உருவாக்கும் பேசுதளம் (Context) சார்ந்தே அச்சொல்லை நாம் பொருள் கொள்ளமுடியும். இலக்கியப் படைப்புகள் அனைத்தையும் நாம் அப்படித்தான் படிக்கிறோம். ‘நூல் என ஏதும் இல்லை பேசுதளம் மட்டுமே உள்ளது’ (There is no text – only context) என்றுகூட நவீன இலக்கியக் கோட்பாடுகள் கூறமுற்படுகின்றன.
இந்த முரண்பாடு கீதையில் இத்தனை துலக்கமாகத் தெரிவதற்கு இன்னொரு காரணமும் உண்டு என்பது என் ஊகம். ஏற்கனவே கூறியது போல கீதை வெகுகாலம் முன்னரே வழிவழியாகப் பயிலப்பட்டு வந்த ஒரு பழைய தத்துவநூலாகும். மகாபாரதத்தில் அதைப் பொருத்தும் புனைவுத் தருணம் பிறகே உருவாக்கப்பட்டது. அதற்கேற்ப பல பகுதிகள் சிறிது மாற்றப்பட்டன. அல்லது எழுதிச் சேர்க்கப்பட்டன. ஆகவே கீதையின் தத்துவார்த்தமான பல பகுதிகள் போர்க்கள அறிவுரை என்ற நாடகத்தருணத்திற்கு அப்பால் நிற்கின்றன. இதன் மூலமும் ஒருவித பொருத்தமின்மையும் முரண்பாடும் இப்பிரதியில் காணக்கிடைக்கிறது. கீதையின் நவீன வாசகன் இதைக் கணக்கில் கொண்டு வாசிப்பது நன்று.
தொடரும்..
கர்ம யோகத்தை விவரித்த பின், அதனைக் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயத்தை
உணர்த்தியபின், ஞான யோகத்தைப் பற்றிச் சொல்லவேண்டிய நிலை ஏன் கிருஷ்ணனுக்கு இருந்தது
எனும் கேள்வி கூட , இது போல கீதை ஒரு முரண்பாடுகள் நிறைந்தது தானோ என்ற மனக்கிலேசத்துடன்
தான் கேட்கப்பட்டதாக அறிகிறேன்.
வினா விடுத்தவரோ: ஆங்கிலத்திலும் சம்ஸ்கிருதம் தமிழிலே புலமை வாய்ந்த ஆன்மீக வாதி சத்யமூர்த்தி அவர்கள்.
விடை அளித்தவர்: சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ அபினவவித்யார்த்தி மஹாஸ்வாமிகள். நூல்: குரு கிருபா விலாசம்.
subbu rathinam