கீதை : முரண்பாடுகள் [தொடர்ச்சி]
ஜெயமோகன்.இன் ல் இருந்து
[ஊட்டி இலக்கிய முகாமில்]
முரண்பாடல்ல முரணியக்கம்
அடுத்தவகை முரண்பாடு கீதையின் முரண்பாட்டியக்க அணுகுமுறையின் விளைவாகும். ஒன்றோடொன்று முரண்படும் இருகூறுகள் தங்களுக்குள் மோதி முயங்கி முன்னகர்ந்து புதியதை உருவாக்குதலே முரணியக்க இயக்கவியல். டைலடிக்ஸ் என்று கிரேக்க மெய்யியலில் கூறப்பட்ட இந்த தத்துவ நோக்கு ஹெகல் மூலம் வரலாற்றுக்கு பயன்படுத்தப்பட்டது – அதுவே முரணியக்கப் பொருள் முதல்வாதம். கார்ல் மார்க்ஸ் அதை பொருளியல் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் வளர்த்தெடுத்தார். இன்றுவரை வரலாற்று சக்திகளையும் சமூகவியல் சக்திகளையும் புரிந்து கொள்வதற்கான சிறந்த வழிமுறையாக இது உள்ளது. இது உண்மையா இல்லையா என்ற வினாவே தவறு. இது ஒரு நல்ல கருவி, அவ்வளவுதான்.
இதே முரணியக்க அணுகுமுறையான இந்திய ஞானமரபில் யோக மீமாம்சை அல்லது யோகாத்ம மார்க்கம் என்ற பெயரில் தொல்பழங்காலம் முதல் இருந்து வந்துள்ளது. சத்-சித், பிரகிருதி-புருஷன் போன்ற பல தத்துவார்த முரணியக்கங்களை இந்த நோக்கு உருவகித்துள்ளது. முரண்பாடுகள் வழியாக திரண்டுவரும் உண்மையை அறிய முயல்வது இது. நடராஜகுரு இந்த யோக மீமாம்சை முறை குறித்து விரிவாக எழுதியிருக்கிறார். கீதையை அவர் அந்நோக்கிலேயே ஆராய்கிறார்.
அதாவது பகவத்கீதையை ஒரு ‘உபதேச மஞ்சரி ‘யாக ஒற்றைப்படையாக எடுத்துக்கொள்ளக்கூடாது. இது உபநிடதங்களுக்கும் பொருந்தும். பிரம்மசூத்திரம் போன்ற ‘வரையறை நூல்கள்’தான் தெளிவான கடைசி நோக்குடன் ஒற்றைப்படையாக இயங்குகின்றன. கீதை எல்லாப் புள்ளிகளிலும் யோக மீமாம்சை முறைப்படி, அதாவது முரணியக்க முறைப்படி இயங்குகிறது. கீதை கர்மம், ஞானம் என்று பேசும்போது கர்மத்தையும் ஞானத்தையும் ஒன்றுடன் ஒன்று முரண்படும் விதத்திலேயே அமைக்கிறது. அதே சமயம் அவை ஒன்றையொன்று முழுமை செய்து கொள்பவையும் ஒன்றின் நீட்சியாக இன்னொன்று அமைபவையுமாகும். இதுவே சுருங்கச் சொன்னால் முரணியக்க அணுகுமுறை.
ஆகவே கீதை தர்மத்தைப்பற்றி பேசுகிறதா, இல்லை ஞானத்தைப் பற்றிப் பேசுகிறதா என்று கேட்டால் பதில் கூறுவது கடினமே. கர்மமும் ஞானமும் கொள்ளும் முரணியக்கம் பற்றிப் பேசுகிறது என்று கூறுவதே பொருத்தமாகும். சாங்கியம் பற்றி கூறுகிறதா, இல்லை யோகம் பற்றிக்கூறுகிறதா என்று கேட்டாலும் இதுவே பதிலாகும்.
நடராஜகுரு அவரது கீதை உரையின் நீண்ட முன்னுரையில் கீதையின் இந்த முரணியக்க முறைமையை தெளிவாகவே விளக்குகிறார். கீதையின் ஒவ்வொரு அத்தியாயமும் யோகம் என்றே அழைக்கப்படுகிறது. யோக மீமாம்சை முறையில்தான் கீதையின் நோக்கு அமைந்துள்ளது என்பதற்கான சான்று இதுவேயாகும். இதை இந்நூலின் அணுகுமுறையில் பிற்பாடு விரிவாக வாசகர்கள் காணமுடியும்.
இங்கு ‘யோகம்’ என்ற சொல்லைப்பற்றி சற்று விவரிக்க வேண்டியுள்ளது. யோகம் பொதுவாக மூன்று அர்த்தங்களில் இந்து மரபிலே கூறப்படுகிறது. பொதுவாக அறியப்படும் பொருள் பதஞ்சலி யோக சூத்திரம் மூலம் நிலைநாட்டப்பட்டதாகும். ஞானத்தேடலுக்காக உடலையும் மனதையும் பயிற்றுவிப்பதும் ஞானத்தை படிப்படியாக நம் சுயமாகவும் இருப்பாகவும் மாற்றிக்கொள்ளுதலும் (அதுவே ஆதல்) யோகம் என்று கூறப்படுகிறது. ‘யோகம் என்பது மனச்செயல் தடுத்தல்’ (யோக: சித்தவிருத்தி நிரோத:) என்று முதல் சூத்திரத்திலேயே பதஞ்சலி அதை வரையறை செய்கிறார். இப்போது நாடெங்கும், ஏன் உலகமெங்கும் அறியப்படும் யோகம் பதஞ்சலி யோக சூத்திரம், யோக வாசிஷ்டம் முதலிய நூல்களில் இருந்து உருவானது.
இரண்டாவது அர்த்த தளம் தரிசனம் சார்ந்தது. யோகம் இந்து ஞானமரபின் ஆறு தரிசனங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. சாங்கியத்தின் இணைத் தரிசனம் அது. யோகத்தை ஒரு மதமாக (உறுதியான தரப்பாக) பழைய நூல்கள் கூறுகின்றன. மூலப்பிரகிருதி [ஆதி இயற்கை] குணமற்ற தூய இருப்பு. அதில் சத்வகுணம், ராஜோகுணம், தமோகுணம் என்றும் மூன்று குணநிலைகள் உருவாகியபோது அதன் சமநிலை குலைந்தது. விளைவாக பிரபஞ்ச இயக்கம் தொடங்கியது. இந்த மைய நோக்கு சாங்கியம் யோகம் இரண்டுக்கும் பொதுவானதாகும்.
சாங்கியத்தில் பிற்பாடு புருஷன் என்ற கருத்தாக்கம் இணைந்து கொண்டது. மூலபிரகிருதி என்று ஒன்று இருந்தால் அதன் இருப்பை உணர மூலபுருஷன் என்ற முழுமுதல் பிரக்ஞையும் தேவை. அதை பரம புருஷன் என்று வகுத்தனர் பிற்கால சாங்கியர். இந்நோக்கு ஸேஸ்வர சாங்கியம் (ஸ+ஈஸ்வர சாங்கியம். இறைவன் உள்ள சாங்கியம்) என்று கூறப்பட்டது. முக்குணங்களின் சமநிலையின்மையே பரம புருஷனையும் செயல் வடிவம் கொண்டவனாக, சிதறுண்டவனாக ஆக்குகிறது என்றும் அதை உதறி தன் முழுமையை புருஷன் அடைவதே முக்தி என்றும் யோகதரிசனம் வாதிடுகிறது. அதற்குரிய வழியாக யோகத்தை அது முன்வைக்கிறது.
மூன்றாவது அர்த்ததளம்தான் யோக மீமாம்சை நோக்கு என்பது. இயற்கையை, மனிதமனத்தை, பிரபஞ்ச விதிகளை முரணியக்கம் மூலம் அறிய முயல்வது. யோகம் என்ற சொல்லுக்குரிய சரியான பொருள் ‘இணைதல்’ என்பதே. முரண்படும் இரு போக்குகளை இணைத்து அதன் மூல உருவாகும் ஒரு நோக்கு அது. இது மிக இயல்பானதும், மனித மனதில் பிரபஞ்ச விதியின் ஒரு பகுதியாகவே உருவாகிவருவதும் ஆகும் என்று நடராஜகுரு எண்ணுகிறார். ஏனெனில் இது பிரபஞ்சம் முழுக்க நிறைந்துள்ளது. வெப்பம் – குளிர், இரவு-பகல், வாழ்வு – இறப்பும், ண் – பெண் என்று அதை மனிதன் அனுதினம் பார்த்துக் கொண்டிருக்கிறான். சீனத்து யின்யாங் வட்டமும் சரி, இந்திய சுவஸ்திகாவும் சரி, இந்த முரணியக்கச் சுழற்சியை உருவகமாக்கிக் கொண்டவையே.
கீதையின் அணுகுமுறையை யோகம் என்று விளக்கும் நடராஜகுரு பல திடமான உதாரணங்களை எடுத்துக்காட்டுகிறார். சிலர் யோகம் என்ற சொல்லை முந்தைய இரு பொருள்களில் எடுத்தாள முயல்கிறார்கள். அப்படி நோக்கும்போது முதல்பகுதியே ‘அர்ஜுன விஷாத யோகம்’ என்று கூறப்படுவது பெரிய முரண்பாடாக அமையும். மனக்குழப்பம் (விஷாதம்) எப்படி ஒரு யோகமாக அமையும்? கீதையை சரியான பொருளில் யோக மீமாம்சையாக அணுகியவர்களில் முன்னோடி என அரவிந்தரைச் சொல்லலாம். ‘கீதையின் செய்தி’ [The message of Gita] என்ற நூலில் இதை அரவிந்தர் விளக்கியுள்ளார்.
இந்திய சிந்தனை முறையை தீர ஆராயாமல் மேலோட்டமான முடிவுகளுக்கு வருபவர்களின் மூலம் உருவாகும் சிக்கல்களை நடராஜகுரு முதலியோர் சுட்டிகாட்டியுள்ளனர். இந்து ஞானநூல்களைக் கற்க உயிரோட்டமான குருகுல முறை இன்றும் இருக்கும் போதே வெறுமே ‘நூல் ஆராய்ச்சி’யை மட்டும் நம்பி இயங்கும் ‘நவீன அறிவு ஜீவிகளி’னால்தான் இப்பிழைகள் உருவாகி அவர்களாலேயே அறிவுத்துறையில் நீட்டிக்கவும் படுகின்றன – குறிப்பாக கல்விப்புலத்தில் டி.டி.கோசாம்பி போன்றவர்கள் ஆற்றியுள்ள பலபெரும் பிழைகளை ஆய்வாளன் அல்லாத என்னைப் போன்ற ஒருவனே சுட்டிக்காட்ட இயலும். அதில் இதுவும் ஒன்று. உண்மையில் யோகம் என்ற சொல்லின் முதற்கட்ட அர்த்த தளம்தான் கீதையின் தலைப்புகளில் கூறப்பட்டுள்ளது. அதாவது, முரணியக்க அணுகுமுறை.லதுவே கீதையின் நோக்கு
இரண்டாவது அர்த்த தளம்தான் தரிசனம் சார்ந்தது. மூன்றாவது அர்த்த தளம்தான் தியானப் பயிற்சி சார்ந்தது. முற்காலத்தில் யோகம் என்ற சொல் பொதுவான அறிவார்ந்த ஒர் அணுகுமுறையாக இருந்தது. ஆகவேதான் ஞானயோகம், கர்மயோகம், விபூதியோகம் என்று அனைத்துடனும் யோகத்தை இணைத்து கீதை கூறுகிறது.இவை ஒவ்வொன்றும் எப்படி யோகமாக– இணைப்புநோக்காக — உள்ளன என்பதை நூலுக்குள் செல்லும்போது காணலாம். இரண்டாம் கட்டத்தில்தான் அது தனியான திட்டவட்டமான வரையறைகள் உடைய தரிசனமாக அச்சொல் வழங்கப்பட்டது. மூன்றாம் கட்டத்தில் அது மீண்டும் எல்லா மதங்களுக்கும் எல்லா தரிசனங்களுக்கும் பொதுவான பயிற்சி முறையாக ஆயிற்று. இப்பபோதும் அப்படித்தான் உள்ளது.
இந்த மூன்று அர்த்தங்களும் பலசமயம் ஒன்றாகவே புழங்கிவந்தன. ஒரே நூலில்கூட மூன்று அர்த்தங்களில் கையாளப்பட்டன. ஆயினும் இந்திய சிந்தனையின் மரபான வழிகளின்படி கற்று வந்தவர்கள் இந்த வேறுபாட்டை தெளிவாக அறிந்திருந்தனர். உதாரணமாக நாராயண குரு யோகம் என்ற சொல்லை நுட்பமான இவ்வேறுபாடுகளை கருத்தில் கொண்டே எப்போதும் கையாள்கிறார். நூல்களை மட்டும் வைத்து பொருள் கொண்ட ஆரம்பகால இந்தியவியலாளர்கள் ஆற்றிய பிழைதான் யோகம் போன்ற சொற்களை ஒற்றைப்படையாக வகுத்துக் கொண்டது. குறிப்பாக இந்திய சிந்தனையின் ஆறு அமைப்புகள் (Six systems of Indian thought) என்ற நூலை உருவாக்கிய மாக்ஸ்முல்லர் இதன் தொடக்கப்புள்ளி. இப்பிழை அப்படி இந்தியவியல் கல்விப்புலத்தில் நீடித்து கோசாம்பியைப் போன்றவர்கள் கிருஷ்ணருக்கே யோகம் என்றால் என்ன என்று தெரியாது என்று கூறும் இடத்தில் வந்து நின்றது.
யோகம் என்ற சொல்லை அதன் பின் உள்ள தரிசனதளம் பற்றி அறியாமல் ‘குத்து மதிப்பாக’ கீதை பயன்படுத்தியுள்ளது என்பது கோஸாம்பியின் கூற்று. இதையொட்டி பல மார்க்ஸிய ஆய்வாளர்கள் கீதை யோகம் என்ற சொல்லின் புகழ் மற்றும் கவர்ச்சி காரணமாக அச்சொல்லை திரித்து தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறது என்றும் யோக மரபுக்கும் கீதைக்கும் தொடர்பு இல்லை என்றும் வாதிடுகிறார்கள். இந்திய கீதை விமரிசனங்களில் இந்தக் குற்றச்சாட்டை தொடர்ந்து காணலாம்.
இதே போன்ற இன்னொரு குற்றச்சாட்டும் உள்ளது. அதுவும் இதற்கிணையான தவறான புரிதல் அல்லது போதாத புரிதலின் விளைவு என்பதனால் இங்கேயே அதை விளக்கிவிட்டு மேலே செல்வதே உசிதமானது. கீதையில் ‘சாங்கிய யோகம்’ என்று ஒரு பகுதி உள்ளது – அதில் பேசப்படும் சாங்கியத்திற்கும் ஆறுதரிசனங்களில் ஒன்றாகிய கபிலரிஷி வழிவந்த சாங்கியத்திற்கும் தொடர்பில்லை. கபிலரின் சாங்கியம் முழுமுதல் இயற்கை (மூலப்பிரகிருதி)யில் இருந்து பிரபஞ்சம் உருவாயிற்று என்ற நோக்கை முன்வைப்பது. ஆனால் பகவத் கீதையில் சாங்கியம் என்பது தர்க்க நோக்கு, நடைமுறைநோக்கு, அறிவார்ந்த தத்துவ நோக்கு என்ற பொதுப்பொருளிலேயே கையாளப்பட்டுள்ளது.
இதை விமரிசிக்கும் கோசாம்பி கீதை சாங்கிய தரிசனத்தின் ‘மக்கள் செல்வாக்கை’ பயன்படுத்திக் கொள்ளும் பொருட்டு அப்பெயரைக் கையாள்கிறது என்றும் சாங்கிய தரிசனத்தை தன் தேவைக்கேற்ப திரிக்கிறது என்றும் கூறுகிறார். சில இடங்களில் இன்னும் ஒருபடி மேலே சென்று சாங்கியதரிசனத்தை கீதை சிதைக்க முயல்கிறது என்றும் கூறுகிறார். கீதையில் பேசப்பட்டிருப்பது கபிலரின் சாங்கிய தரிசனம்தான் என்றால் கீதாசாரியனுக்கு சாங்கிய தரிசனம் பற்றிய அறிமுகமே இல்லை என்றுதான் பொருள். அப்படியும் சில மார்க்ஸிய ‘ஆய்வாளர்’கள் கூறுவதை வாசகர்கள் காணலாம்.