கீதை : முரண்பாடுகள் [தொடர்ச்சி]
ஜெயமோகன்.இன் ல் இருந்து
[நூலகம். நாரயணகுருகுலம்]
மிக எளிமையான வினா ஒன்றை நாம் எழுப்பிக் கொள்ளலாம். கீதை இந்து ஞானமரபின் மூன்று தத்துவங்களில் (பிரஸ்தான த்ரயம்) ஒன்று. சாங்கியமும் யோகமும் இந்து ஞானமரபின் ஆறுதரிசனங்களில் அடங்கியவை. ஆறுமதம், ஆறுதரிசனம், மூன்று தத்துவம் அடங்கியதே இந்து ஞானம் என்பது ஒப்புக்கொள்ளப்பட்ட மரபு. இத்தனை நூற்றாண்டுக்காலம் இம்மரபு பயிலப்பட்டுள்ளது, விவாதிக்கப்பட்டுள்ளது. இரண்டு தரிசனங்கள் பிரஸ்தானத்திரயத்தில் ஒன்றாக உள்ள ஒரு மூலநூலில் முட்டாள்தனமாகச் சிதைக்கப்பட்டிருப்பதை உணரமுடியாதவர்களாகவோ உணர்ந்தாலும் நியாயப்படுத்துபவர்களாகவோ இருந்தார்களா நம் முன்னோர்? ஒருவர் இருவரல்ல, சங்கரர், ராமானுஜர் முதல் இன்று நித்ய சைதன்ய யதி வரை உள்ள அத்தனைபேரும்? இந்த மார்க்ஸிய ஆய்வாளர்கள் வந்துதான் அதைச் சுட்டிக்காட்ட வேண்டுமா?
சாங்கிய தரிசனத்திற்கு அப்பெயர் எப்படி வந்தது என்ற வினாவுக்கு தேவி பிரசாத் சட்டோபாத்யாயவிடமோ கெ.தாமோதரனிடமோ நாம் பதில்களை எதிர்பார்க்க முடியாது, ஊகங்களையே எதிர்பார்க்க இயலும். அதில் ஒன்று சங்கியா (எண்) என்ற சொல்லில் இருந்து அந்த வார்த்தை வந்திருக்கலாம் என்பது. கீதையில் சாங்கியம் என்ற சொல் ‘புறவயமான நடைமுறைத்தத்துவ நோக்கு’ என்ற பொருளில் மட்டுமே கையாளப்படுகிறது என்று புரிந்து கொண்டவர்களுக்கு இதில் எவ்விதமான குழப்பமும் இருக்காது. மரபார்ந்த முறையில் இந்து ஞான மரபைக்கற்றவர்கள் ‘புறவய நடைமுறை நோக்கு’ என்ற பொருளில் சாங்கிய என்ற சொல்லைக் கையாள்வதில் தயக்கமில்லாது இருக்கிறார்கள். சைவசித்தாந்த விவாதங்களில் சமீப காலங்களில் கூட இச்சொல் இப்படித்தான் கையாளப்பட்டது. ஏன், நம் நடைமுறை மொழியில் ‘சடங்கு சாங்கிய’ங்கள் என்ற சொல்லாட்சி இன்றும் உள்ளது. Customs and practices என்றுதான் அதற்குப் பொருள்.
சாங்கிய தரிசனத்திற்கு அப்பெயர் காலப்போக்கில் உருவாகி பிற்காலத்தில் நிலைத்தது. அதாவது அப்பெயர் அந்த நோக்குக்குப் பிறரால் அளிக்கப்பட்ட காரணப்பெயர் மட்டுமே. கபிலரின் பிரகிருதிவாதம் மீண்டும் மீண்டும் தன் ஆய்வுக்கு புறவயநோக்கை முதன்மைப்படுத்தி நடைமுறைத்தளத்தில் நின்று வாதிட்டதனால் அப்பெயர் அதற்கு போடப்பட்டது. அச்சொல் குறிப்பது போலவே சங்கியா என்ற சொல்லில் இருந்து உருவாகிவந்ததுதான் அது. எண்ணிக்கை என்பது புறவயமானது, கறாரானது. அகவயமான கருத்துக்களுக்கு இடமளிக்க மறுப்பது. ஆகவே கபிலரின் பிரகிருதிவாதம் சாங்கியம் எனப்பட்டது. தர்க்கம் எனும்போது அகவயமான ஒழுங்குமுறைகளும் உள்ளே வருகின்றன. நியாயம் எனும்போதும் அகவயமான காரணங்கள் பொருட்படுத்தப்படுகின்றன. ஆகவே உண்மையை மதிப்பிடும் வழிமுறைகளையே அதிகமாகப் பேசும் நியாய தரிசனம் அப்பெயர் பெற்றது. அது தார்க்கீகன் மதம் என்று சைவர்களால் குறிப்பிடப்படுகிறது. ஹேது சாஸ்திரம் என்றும் கூறப்படுகிறது.
கபில தரிசனத்திற்கு சாங்கியம் என்ற பெயர் உறுதிப்படுவதற்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்தது கீதை என்று எளிதில் ஊகிக்கலாம். அதேபோல யோக தரிசனத்திற்கு யோகம் என்ற பெயர் உறுதிப்படுவதற்கு முந்தையது அது. இவ்விரு சொற்களையும் அவற்றுக்குரிய மூலப் பொருளிலேயே கீதை பயன்படுத்துகிறது. சாங்கியமும் யோகமும் அந்தந்த தரிசனங்களுக்கு உரிய சொற்களாக ஆனபிறகும்கூட தொடர்ந்து ஞான விவாதங்களில் முற்காலகட்டப் பொருளிலும் கையாளப்பட்டு வந்தன. ஏன், சமீபகாலங்களில்கூட அப்படித்தான் கையாளப்பட்டுள்ளன. சைவ சித்தாந்த விவாதங்களில் இதைக் காணலாம். கேரள வேதாந்திகளான சட்டம்பி சுவாமிகள், நாராயணகுரு ஆகியோரின் நூல்களிலும் காணலாம். உயிருடன் இயங்கும் ஒரு மரபை செத்துப்போன தொல்பொருளாகவும் பாறைப்படிவமாகவும் எண்ணி ஆராய்ந்த கல்வியாளர் இழைத்த பிழைகளைப் பற்றியே நாம் இங்கு பேசுகிறோம்.
யோக மீமாம்சை சார்ந்த அணுகுமுறைக்கு வருவோம். நடராஜகுரு கீதை ஞானத்தேடலை நான்கு தளங்களில் நின்று அணுகுவதாக வரையறை செய்கிறார். 1.மூதாதையரின் பாதை (பித்ருயானம்) மற்றும் தெய்வங்களின் பாதை (தெய்வயானம்) 2.புறவயத் தருக்கத்தின் பாதை (சாங்கியம்) மற்றும் சுயபரிசீலனையின் பாதை (யோகம்) 3.வேள்வியின் பாதை (யக்ஞம்) 4.துறவின் பாதை (சன்யாசம்). இப்பிரிவினையில் மூதாதையரும் கடவுள்களும் ஒரு பகுதியாகவும் சாங்கியமும் யோகமும் ஒரு பகுதியாகவும் தொகுக்கப்பட்டுள்ளமை கவனத்திற்குரியது. இந்த நான்கு பாதைகளையும் ஒன்றையொன்று தொடர்பவையாக கீதை காட்டவில்லை. ஒன்றோடொன்று முரண்படுவையாகவே கீதை காட்டுகிறது. அம்முரண்பாடு மூலமே அவை இயங்குகின்றன.
இந்த முரணியக்கத்தை முன்னுக்குப்பின் முரணாக போகிற போக்கில் வாசிப்பவர்கள் எண்ணிவிடக்கூடும். கீதை கர்மத்தைப் பற்றி பேசுகிறது என்று ஓரிரு செய்யுட்களை மேடையில் எடுத்துக்காட்டி வாதிடலாம். அதை மறுத்து அது சன்னியாசத்தையே முன்வைக்கிறது என்றும் சில செய்யுட்களைக்காட்டலாம். வேதங்களை ஏற்றும் மறுத்தும் கீதையில் செய்யுட்களைக் காட்டலாம்.இந்த அம்சத்தைப் புரிந்து கொள்ளாமல்தான் டி.டி.கோசாம்பி போன்ற மார்க்ஸிய ய்வாளர்கள் கீதையை ‘மகத்தான இலக்கியத்திரட்டு’ என்றும் ‘முரண்பாடுகளின் மூட்டை’ என்றும் கூறுகிறார்கள். அதாவது பற்பல நூல்களில் இருந்து எடுக்கப்பட்ட கோட்பாடுகளும் கருத்துக்களும் தெளிவாக பிணைக்கப்படாமல் குவிக்கப்பட்ட ஒரு நூலே கீதை என்ற எண்ணமே அவர்களிடம் உள்ளது – கெ.தாமோதரனைத் தவிர. அவரும் முரண்பாடுகளைக் காண்கிறார். ஆனால் அவை தர்க்கத்தாலும் கவித்துவத்தாலும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன என்று கருதுகிறார்.
கீதைக்குள் நுழையும் இன்றைய வாசகன் கீதையை ஒற்றைப்படையாக விளக்கும் பல நூல்களுக்குள் புகுந்து மீண்டு வந்து குழம்பி நிற்பதற்கான வாய்ப்புகள் அதிகம். கீதையின் முரண்பாடுகளை அவனும் தன் நோக்கில் அடையாளம் கண்டிருப்பான். முரண்பாடுகளல்ல, முரணியக்க நோக்கே என்று அவன் எண்ணினால் பிறகு அக்குழப்பம் தொடராது.
வரலாற்று முரண்பாடுகள்
ஏற்கனவே இந்த நூலில் கீதையின் வரலாற்றுக் காலகட்டம் குறித்த ஒர் ஊகத்தை முன்வைத்திருந்தேன். ரிச்சர்ட் கார்பே, லாக்கோம்ப், ஜெ.எல்.·பார்குஹார் போன்று பற்பல இந்தியவியலாளர் பல கோணங்களில் முன்வைத்த ஊகம்தான் அது. அதாவது கீதை, ‘தொல்காலத்து தத்துவ நூல் ஒன்று பிற்காலத்தில் மறு ஆக்கம் செய்யப்பட்டது’ என்ற ஊகம். என் கணிப்பில் மகாபாரதம் உருவாகும் காலகட்டத்திற்கும் முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்தது கீதை. ஒருவேளை அது வரலாற்று நாயகராகிய கிருஷ்ணனின் புகழ்பெற்ற தத்துவநூல். மகாபாரதம் பிரபலமடைந்தபோது கிருஷ்ணனின் கூற்றாக அது மகாபாரதத்தில் இணைக்கப்பட்டது.
இவ்வாறு கீதை இருவரலாற்றுக் காலகட்டங்களில் காலூன்றி நிற்பதனால்தான் சாங்கியம், யோகம் பற்றி கீதை கூறும் சொற்களில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. கீதை யோகம் என்ற சொல்லை இரு அர்த்த தளங்களில் பயன்படுத்துகிறது. முரணியக்கம் என்ற பொருளில் ‘விஷாதயோகம்’ ‘சாங்கியயோகம்’ என்று வரிசையாக கூறிச் செல்கிறது. நூலுக்குள் ‘யோகம்புரிதல்’ என்ற பொருளில் யோகத்தை தொன்மையான தியான வழிமுறையாகவும் கூறுகிறது. அதேபோல் சாங்கியம் என்ற சொல்லையும் பழைய, பொதுப்படையான பொருளில் பயன்படுத்துகிறது. கீதை மகாபாரதத்தில் சேர்க்கப்பட்டபோது சாங்கியம் தனிப்பெரும் தரிசனமாக வேரூன்றிவிட்டது. இவ்வாறாக மாறுபட்ட வரலாற்றுக் காலகட்டங்களில் காலூன்றியதாக இருப்பதன் மூலம் சொல்லாட்சிகளில் வரும் முரண்பாடுகளையும் வாசகர் கருத்தில் கொண்டாகவேண்டும்
சரி, கீதையில் முரண்பாடுகளே இல்லையா? இருக்க வாய்ப்பில்லையா? இருந்தாலும் நாம் அதை நியாயப்படுத்த வேண்டுமா? பிறருக்கு எப்படியோ, எனக்கு கீதையையோ அல்லது வேறு எந்த நூலையோ நியாயப்படுத்தும் சுமை ஏதும் இல்லை. என்னுடையது தேடல் மட்டுமே, பிரச்சாரம் அல்ல. என் புரிதலில் கீதை ஒரு மனிதனால் எழுதப்பட்டது. எனக்கு இறக்கியருளப்பட்ட நூல்களிலோ இறைவாக்குகளிலோ அவதாரங்களிலோ இறைத்தூதர்களிலோ தீர்க்க தரிசிகளிலோ நம்பிக்கை இல்லை. எல்லா நூல்களும் ஆராய்ச்சிக்கு உரியவை. மானுடப் பிழைகளும் காலகட்டத்துச் சிந்தனை வரையறைகளும் கொண்டவை. வழிபாட்டுக்கு அல்ல, பயன்பாட்டுக்கு உரியவை.