ஆத்மாவும் அறிவியலும்: ஒரு விவாதம்.1
ஜெயமோகன்.இன்.ல் இருந்து
[அறம் நூல் வெளியீட்டு விழாவின் போது ஓட்டல் அறையில் ஓர் உரையாடல்]
அன்புள்ள ஜெயமோகன்,
கீதை, சாங்கிய யோகம் குறித்த உங்கள் பதிவை படித்தேன். நீங்கள் செவ்வியல் நோக்கில் ஆத்மா குறித்த கேள்வியை அணுகுவதை நான் வரவேற்கிறேன். அந்தக் கட்டுரையில் நீங்கள் ஆத்மாவின் பொருளை விளக்க பல வழிகளை கையாள்கிறீர்கள். ஆனால் அறிவியல் சார்ந்த அணுகுமுறைகளைப்பற்றிய உங்கள் கருத்து முன் தீர்மானம் கொண்டதாக உள்ளது. அறிவியலின் விளக்கங்களை நீங்கள் மேலோட்டமாக விளக்குகிறீர்கள். நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ இந்து மத கோட்பாடுகளை பிற கோட்பாடுகளுக்கு மேலாக ஆதரித்து வாதிடுகிறீர்கள் என்று படுகிறது. உங்கள் கட்டுரை ஒரு விஷயத்தை தெளிவாகவே காட்டுகிறது. உங்களால் தத்துவ, ஆன்மீக கோணத்தில் விஷயங்களை விளக்க முடிகிறது, அறிவியல் சார்ந்து முடியவில்லை.
ஆத்மா குறித்த உங்கள் தத்துவ விளக்கத்தை அளிப்பதற்கு முன்னால் மானுட மனம் என்பதைப்பற்றிய விளக்கம் ஒன்றை அளிக்க உங்களால் முடியுமா? மனித மனத்தின் இயல்புகள் என்ன? மனித இறப்புக்கு பிறகு மனம் என்பது நீடிக்குமா?நம் உடலில் இருந்து மனம் பிரிக்கப்படக்கூடிய ஒன்றா?
நீங்கள் இன்றைய நவீன அறிவியல் ஆய்வுகளை கவனிக்கிறீர்களா என்றெல்லாம் எனக்கு தெரியாது. மனித மனதைப்பற்றிய நவீன அறிவியல் கோட்பாடுகள் மேலும் மேலும் பொருள்முதல்வாத அடிப்படை நோக்கியே செல்கின்றன. மனம் என்பதை பொருள்முதல்வாத அடிப்படையிலேயே தீர்த்துக்கொள்ள முடியும் என்றுதான் நான் நினைக்கிறேன். நீங்கள் அப்படி நினைக்கவில்லை என்றால் அது உங்கள் விருப்பம்– ஆனால் அதுவல்ல உண்மை.
இன்றைய அறிவியலாளர்களும் தத்துவஞானிகளும் மனித மூளையை ஆராய்வதன்வழியாக மனித மனத்தைப்பற்றி அறிந்துவிட முடியும் என்று நம்புகிறார்கள். மூளை இல்லாமல் மனதுக்கு ஒரு தனித்த இருப்பு இல்லை. மனித மனம் என்பது மூளையின் ஒரு வெளிப்பாடு மட்டுமே. இந்த ஊகமானது மீண்டும் மீண்டும் பல்வேறு ஆய்வுகளால் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. நரம்பியல் தொடர்பமைப்புகள் மனம்-உடல் என்ற சிக்கலை சீக்கிரத்திலேயே தீர்த்துவிடும்.
உங்கள் கட்டுரையில் நீங்கள் உங்களை ஒரு அறியமுடியாமைவாதி அல்ல என்றும் உண்மையை தேடுபவன் என்றும் சொல்கிறீர்கள். என்னவகையான ஞானத்தேடல் கொண்டவர் நீங்கள்? ஆன்மீகத்திலும் தத்துவத்திலும் ஆராய்ச்சியை நிகழ்த்தும் நீங்கள் அறிவியலை நிராகரிக்கிறீர்கள்.
கடைசியாக உங்களுக்கு ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்பபுகிறேன். உங்கள் எழுத்து ஆன்மீக தத்துவ ஆய்வுகளுக்குள் நுழையும் ஒருவருக்கு உதவிகரமானதாக இருக்கலாம். இந்தக் கடிதத்தை நான் உங்களுக்கு எழுதுவதற்கான நோக்கம் உங்கள் ஆய்வு இந்து மரபின் ஊகங்களை நோக்கி அதிகம் சாய்ந்துள்ளது என்று காட்டுவது மட்டும் அல்ல. மனம் என்ற கோட்பாடைப்பற்றிய அறிவியலின் பொருள்முதல்வாத நோக்கிலான ஆய்வுகளை உங்கள் கவனத்துக்குக் கொண்டுவருவதற்காகவும் தான். இதைப்பற்றி நாம் விவாதிப்பதாக இருந்தால் விவாதிப்போம்
நானும் ஓர் அறியமுடியாமை வாதி அல்ல. சாத்தியமான எல்லா திசைகளிலும் தேடக்கூடிய ஒருவன். நிகழ்வதைப் புரிந்து கொள்வதற்கும் என் பிரக்ஞையை புரிந்துகொள்வதற்கும் . நான் என் செருப்பின் sole ஐதான் அறிந்திருக்கிறேன் soul எதையும் அறிந்ததில்லை.
அன்புடன்
செந்தில்
*
தங்கள் கடிதத்துக்கு நன்றி.
நான் ஓர் இலக்கியவாதி. தத்துவத்தில் ஆர்வம் உள்ளவன். இந்த தளம் சார்ந்ததே எனது கீதை உரை. நீங்கள் அறிவியல் கற்றவர் என அறிகிறேன். அறிவியல் என்னுடைய தளம் அல்ல. அங்கே ஒரு நிபுணனின் நுட்பத்துடன் நான் செல்ல முடியாது. ஒரு எளிய வாசகனாக மட்டுமே நான் அதைக் கவனிக்க முடியும். அதைச் செய்துகொண்டுதான் இருக்கிறேன். அதன் எல்லைகள் என் சிந்தனைகளில் உண்டு.
என் எழுத்துக்களில் என் சொந்த அனுபவத்தை நான் முன்னிறுத்தக் காரணமே என்னால் சற்றேனும் திட்டவட்டமாகச் சொல்லத்தக்கது அதுவே என்பதனால்தான். சாதகன் என்றால் அதுதான் பொருள். அவன் தன்னை அலகாக்கி பிறிதை அறிபவன்.
ஆனால், ஓர் ஆரம்பகட்ட அறிவியல் வாசகனாக நின்று நான் பார்க்கையில் கூட உங்கள் கடிதம் அறிவியல்சார்ந்த கருத்துக்களை குறுக்கிப் புரிந்துகொண்டிருக்கிறது, நீங்கள் செல்ல வேண்டிய தூரம் அதிகம் என்று என்னால் உணர முடிகிறது என்று சொன்னால் கோபம் கொள்ள மாட்டீர்களே.
விவாதங்களில் ஈடுபடும்போது எதிர்தரப்பில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்று கூர்ந்து கவனித்து அதைச்சார்ந்து வாதங்களை உருவாக்கிக் கொள்வது அறிவியல் முறைமையின் முதல் விதி. நம் வாதங்களை உணர்ச்சி கலவாமல் முன் வைப்பது அடுத்த விதி. அதாவது அறிவியல்பயிற்சி கொண்ட ஒருவரின் விவாதம் முதல் தரப்பினனை ‘நான் என்ன சொல்ல வந்தேன் என்றால்…”என்று பதில் சொல்லும்படி வைக்காது. நீங்கள் என்னை அங்கே தள்ளுகிறீர்கள்.
ஒன்று,சாங்கிய யோகம் உரையில் அது நடைமுறைஞானம் என்று மீண்டும் மீண்டும் சொல்கிறேன். அந்த பகுதியில் கிருஷ்ணன் சொல்லும் சொற்கம் ,ஆத்மா குறித்த கருத்துக்கள் பிற்பாடு வரும் நுண்தள விவாதங்களில் மேலும் பலவாறாக உருமாறுவதை கீதையிலேயே காணலாம் என்கிறேன். நீங்கள் கீதையில் உள்ள அப்பகுதியை இந்து ஞானத்தின் இறுதித் தரப்பாக, அது நிரூபிக்க முயலும் கருத்தாக எடுத்துக்கொண்டு விவாதிக்க ஆரம்பிக்கிறீர்கள்.
இரண்டு, உடம்புக்குள் ஆத்மா என்ற ஒன்று உள்ளது என்றெல்லாம் நான் எங்கும் சொல்லவில்லை. நான் முழுக்க அறியாத எதையும் திடமாகச் சொல்ல விரும்பவில்லை என்றுதான் நான் சொல்கிறேன்.
*
நான் பேசுவது ‘மனம்’ பற்றி அல்ல என்பதை நீங்கள் அப்பகுதியைப் படித்தால் உணர்ந்து கொள்ளலாம். நான் பேசிக்கொண்டிருப்பது ‘தன்னிலை’ பற்றி. [Subjectivity] அதற்கும் மனத்துக்கும் பெரும் வேறுபாடு உண்டு. நான் என் குறுகிய வாசிப்பில் இன்று அறிவியலுக்குள் நான்கு தளங்களில் இது குறித்த விவாதம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்று அறிந்திருக்கிறேன்
ஒன்று, மொழியியல் . நவீன மொழியியல் தனக்குள் சமூகவியலையும் மானுடவியலையும் அடக்கிக் கொண்டு இந்த கேள்வியை மிக விரிவாக எதிர்கொண்டு பல கோட்பாடுகளை உருவாக்கி இருக்கிறது. ரஸ்ஸல், விட்ஜென்ஸ்டைன் தொடங்கி இன்று தெரிதா வரை வளர்ந்து வந்து கொண்டிருக்கும் விவாதம் மிக விரிவானது.
இரண்டு, உளவியல். ·ப்ராய்டு, யுங் முதல் ழாக் லக்கான் வரை தன்னிலை சார்ந்து பலவகையான விளக்கங்களும் கோட்பாடுகளும் உருவாக்கப்பட்டுள்ளன.
மூன்று, நரம்பியல். அதிலும் இரு போக்கு. செயல்முறை நரம்பியல் [கிளினிகல் நியூராலஜி] மற்றும் கோட்பாட்டு நரம்பியல்.
நண்பரே, நீங்கள் பேசும் பொருள்முதல்வாத ஆய்வு என்பதெல்லாம் செயல்முறை நரம்பியல் எண்பதுகளின் இறுதியில் முன்வைத்த நம்பிக்கை மற்றும் உற்சாகத்தைத்தான். அப்போது மனம் என்பதை மட்டுமல்ல; பிரபஞ்சத்தில் உள்ள நிறம், தூரம், பருண்மை ஏன் காலத்தையே கூட மூளை நரம்புகளின் அமைப்பைக்கொண்டு விளக்கிவிடும் உத்வேகம் நிலவியது.
ரிச்சர்ட் ரீஸ்டாக், ஆலிவர் சாக்ஸ், ரோஜர் பென்ரோஸ் போன்ற பொது வாசகர்களுக்காக எழுதும் அறிவியலாளர்களின் நூல்களை வாசிப்பவர்களே கூட இன்றைய நரம்பியல் ‘மனம்’ என்பதையும் ‘தன்னிலை’ என்பதையும் ‘முழுமையாக’ மண்டையோட்டுக்குள் இருக்கும் அந்த புரோட்டீன்காலி·ப்ளவரை மட்டும் கொண்டு விளக்கி விடலாம் என்ற நம்பிக்கையைத் தாண்டி வெகுவாக விரிந்துவிட்டது என்பதைப் புரிந்து கொள்வார்கள். அந்த ஆரம்பகால நம்பிக்கைம்பியல் குறைத்தல்வாதம் [ Neuro Reductionism ] என்று சொல்லப்படுகிறது இன்று. உங்கள் ஒட்டுமொத்தக் கடிதமும் அந்த ஒருசொல்லில் அடங்கும்.
குறைந்த பட்சம் மூளை உருவான பரிணாமத்தை, அப்பரிணாமம் உருவான இயற்கையின் வலைவிரிவை கணக்கில் கொள்ளாமல் மூளையின் செயல்பாட்டை, அதன் விளைவாக உருவாகியிருக்கும் மனம் என்பதை, புரிந்துகொள்ள முடியாது. மூளை ஒவ்வொரு கணமும் இயற்கையுடன் எதிர்வினையாற்றி தன்னை வளர்த்துக்கொண்டு இருக்கிறது.
ஓர் உதாரணம் மூலம் சொல்கிறேனே. ரிச்சர்ட் ரீஸ்டாக் Your Brain Has its own Mind என்ற ஜனரஞ்சக நூலில் எழுதிய உவமை. நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லையும் ஒரு தனி உயிராக எடுத்துக்கொள்ளலாம் . அவை ஒவ்வொன்றுக்கும் உண்ணல்- வளரல்- இனப்பெருக்கம்- மரணம் என்ற வாழ்க்கை, அவ்வாழ்க்கையை நீட்டிக்கும் இச்சை, அதற்கான வழிமுறைகளைச் செய்வதற்கான உடல் அமைப்பு, சேர்ந்து செயல்படும் தன்மை, அச்சம் ஆவல் போன்ற உணர்ச்சிகள் அனைத்தும் உண்டு. அவை சேர்ந்து உருவான நம் உடலுக்கும் அதே உணர்வுகள் உண்டு.
மூளையை மனமாகக் காணும் நீங்கள் அந்த மூளையில் உள்ள ஒவ்வொரு செல்லின் மனதையும் எப்படிப் பார்ப்பீர்கள்? ஒவ்வொரு செல்லின் மனத்தையும் தனித்தனியாக நரம்பியல் நோக்கில் விளக்குவீர்களா என்ன? அம்மனங்களின் ஒட்டுமொத்தமா நமது மனம்? இல்லை நம் மனத்தை வைத்தே அவற்றின் மனத்தை விளக்குவீர்களா? நமது துளிகளா அவை? அவற்றுக்கும் நமக்குமான ஒத்திசைவை உருவாக்குவது எது? அதைப்பொருட்படுத்தாமல் நியூரான்களுக்குள் டோபோமின் என்ன செய்கிறது என்று சொல்லி நீங்கள் மனதையும் தன்னிலையும் புறவயமாக விளக்கி விடுவீர்களா என்ன?
மனிதத் தன்னிலையை அத்தகைய விரிவான தளத்தில் இயற்கையின் பேரமைப்புடன் இணைத்துப் பார்க்கும்போதுதான் எளிய பொருள்முதல்வாதம் போதாமலாகிறது. எளிய பொருள்முதல்வாதத்துக்கு இன்றைய அறிவியலின் எந்த தளத்திலும் இடமில்லை — மோட்டார் மெக்கானிஸம் போன்றவை தவிர.
மொழி என்ற அமைப்பை கிட்டத்தட்ட இயற்கையின் நகல் வடிவமாக, பிரம்மாண்டமாக, உருவகித்து அதற்குள் தன்னிலை எப்படி உருவாகிறது என்று பார்க்கிறது மொழியியல். தமிழிலேயே நாகார்ச்சுனன் போன்றவர்கள் இதைப்பற்றி விரிவாகப் பேசியிருக்கிறார்கள். இயற்கையை உளவியல் நோக்கில் அணுகி அது முடிவிலாத ஒரு குறியீட்டுவெளியாகக் கண்டு அதில் ஒரு தன்னிலை எப்படி உருவகிக்கப்படுகிறது என்று பார்க்கிறது நவீன உளவியல்
மனிதனையே இயற்கையின் ஒரு செல்தான் என்று உருவகிக்கும் நோக்கு தான் கயா போன்ற கோட்பாடுகளை உருவாக்கிக்கொண்டு முன்னகர்கிறது. நரம்பியலை அல்லது வேறு ஓர் அறிவுத்துறையை அதன் செயல்தளத்தில் பிரித்து தனித்து ஆராயலாம். தத்துவார்த்தமாக அப்படி பிரித்துக் கற்கவும் விவாதிக்கவும் முடியாது. என் இணைய தளத்திலேயே முழுமையறிவு பற்றி கென் வில்பர் போன்றவர்கள் பேசிவருவனவற்றின் குறிப்புகளும் நண்பர்கள் எழுதியவற்றின் இணைப்புகளும் உள்ளன.
மனம் என்றால் என்ன என்று சொல்ல முடியுமா என்பது போன்ற சவால்களையெல்லாம் அறிவியல் அல்லது தத்துவ அறிமுகம் கொண்ட ஒருவர் செய்ய மாட்டார். அவை எவையும் புறவயமான பொருட்கள் அல்ல. அவை அக அனுபவம் சார்ந்த உருவகங்கள். எந்த உருவகத்தையும் அல்லது கருத்துநிலையையும் புறவயமாக முழுமையாக வரையறை செய்து விடமுடியாது. அவற்றைப்பற்றி அறிவதற்காக சில கருத்துநிலைகளை உருவாக்கலாம், அவற்றை ஒரு விவாதச் சூழலுக்குள் தற்காலிகமாக வரையறை செய்துகொள்ளலாம். அவ்வளவுதான்.
உங்களுக்கு ஆர்வமிருந்தால் , பொருள்முதல்வாதம் விட்டு கொஞ்சம் நகர உங்கள் empiricist religion அனுமதிக்குமென்றால் மனம் குறித்து மிகவிரிவான கருத்துநிலைகளை பதஞ்சலி யோக சாஸ்திரமும் பௌத்த மெய்ஞானமும் உருவகித்திருப்பதை நீங்கள் கற்கலாம். நவீன மேலை உளவியல் மனம் சார்ந்த அதன் அடிப்படைகளை இவ்விரு மரபுகளில் இருந்துதான் பெற்றுக்கொண்டது. ஐயமிருந்தால் சி.ஜி.யுங்-கை படித்துப்பாருங்கள். ஒரு மனதைப்பற்றி அல்ல மனங்களைப் பற்றி பேசுகிறார் நாகார்ஜுனர். அவரது நோக்கில் மனிதனின் பலவகை அறிதல் [விக்ஞானங்களில்] ஒன்றுதான் மனோ விக்ஞானம். மனிதமனம் அமைந்திருக்கும் மானுட மனதைப்பற்றி, அது அமர்ந்திருக்கும் இயற்கையின் மனதைப்பற்றி, அதன் தன்னுள் கொண்டிருக்கும் பிரபஞ்சத்தின் மனம் பற்றிப் பேசுகிறது பௌத்தம்.
கருத்துருவக தளத்தில் நிகழும் விவாதங்களை நிரூபணவாதத்துக்குக் கொண்டுசென்று புரிந்துகொள்ள முடியும் என்ற நம்பிக்கை அறிவியலில் இன்று இல்லை என்றே நான் புரிந்துகொண்டிருக்கிறேன். என்றுமே மனிதனின் தன்னிலை என்றால் இதுதான் என அறிவியலால் புறவயமாக நிரூபிக்க முடியாது. பெரும்பாலான விஷயங்களை விளக்கும் ஒரு கோட்பாடாக அதை முன்வைக்க முடியும். மனிதன் பிரபஞ்சத்தையும் இயற்கையையும் புரிந்து கொள்ளும்தோறும் அது விரிவாகும்.
தத்துவத்தை இகழும் அறிவியலாளன் ஸ்க்ரூ டிரைவர் திருக லாயக்கானவன். அறிவியலை இகழும் தத்துவவாதி தத்துவத்தை மதமாக ஆக்க முனைபவன். நான் என்றும் அறிவியலை இகழ்பவனோ நிராகரிப்பவனோ அல்ல.
இனி மீண்டும் ஆத்மா பற்றி. பிரபஞ்சம், இயற்கை, தனிமனிதன் மூன்றுக்கும் பொதுவான ஒரு கொள்கையை முன்வைத்து மனிதனின் தன்னிலையை விளக்க முயல்வதே ஆத்மா என்ற கருத்துருவகம். அது ஒரு கருவி மட்டுமே. ஒரு உண்மை அல்ல. இதுவே என் புரிதல். கீதையிலும் அது ஒரு கருவியாக மட்டுமே கையாளப்பட்டுள்ளது. அது ஒரு மதநூல் அல்ல, தத்துவநூல் என நான் சொல்வதற்கான காரணம் இதுவே.
தன்னிலை என்பதை பிரபஞ்சமளாவக் கொண்டு செல்வதனால் ஆத்மா என்ற கருவி பிற கருவிகளை விட மேலும் நுட்பமானதாக உள்ளது என்பதே என் எண்ணம். ஆத்மா என்ற கருத்து — ஒரே வரியில் விளக்க வேண்டுமானால் பிரபஞ்ச உருவாக்கத்தின் பின்னால் உள்ள கருத்து அல்லது ஆற்றல் அல்லது எதுவோ ஒன்று தான் மனிதனுக்குள்ளும் இருக்கிறது என்ற கருத்து அது– நீங்கள் புரிந்து வைத்திருப்பது போல கால்பந்துக்குள் உள்ள காற்று அல்ல.
உங்கள் செருப்பின் அடிப்பகுதியைப்பற்றி அத்தனை திட்டவட்டமாக நீங்கள் அறிந்து விட்டீர்களா என்ன?
ஜெயமோகன்.
தொடரும்.