அம்பேத்கரின் தம்மம்- 4 [நிறைவு]
ஜெயமோகன்.காம் ல் இருந்து
பௌத்த மெய்யியலில் கர்மவினை என்பது முக்கியமான ஞானம். கர்மம் என்ற சொல் இந்திய ஞானப்பரப்பில் பலவாறாக பொருள்கொள்ளப்படும் ஒன்று. ஒவ்வொரு சிந்தனைமுறையும் அதற்கு ஒரு பொருள் அளிக்கிறது. வரலாற்றின் ஒவ்வொரு கட்டத்திலும் அச்சொல் ஒரு பொருளை அளித்துள்ளது. இந்த வேறுபாடுகளை புரிந்துகொள்ளாமல் பொத்தாம்பொதுவான விவாதங்கள் நிகழ்வதும் நம்மூரில் மிக அதிகம். ஆகவேதான் ஏதேனும் ஒரு திட்டவட்டமான குருமரபைச் சேராதவர்களிடம் விவாதிக்கலாகாது என இங்கே விலக்கு இருந்தது.
கர்மம் என்ற சொல்லுக்கு உள்ள முக்கியமான விளக்கங்கள் இவை. பிராமண மதம் எனப்படும் பூர்வமீமாம்ச மரபில் கர்மம் என்பது இங்கே செய்யப்படும் வேள்விச்செயல்கள். எச்செயலுக்கும் அதற்குரிய விளைவுண்டு. வேள்விச்செயல்களுக்கான பயன் இப்பிறவியிலும் எஞ்சியது அடுத்த பிறவியிலும் தொடரும். தீயசெயல்களுக்கான பயன்களும் அப்படியே. நற்செயல்கள் மூலம் புண்ணியத்தை அடைந்து விடுதலை அடைவதே முழுமை
சமண மரபில் கர்மம் என்பது உலகியல் வாழ்க்கையில் ஆன்மாக்களை கட்டிப்போடும் ஒரு மாயச்சுழற்சி. செயல்களும் அவற்றின் விளைவுகளுமாக அது மனிதனைச் சூழ்ந்துகொண்டிருக்கிறது. கர்மத்தை அறுத்து அதன் விளைவுகளையும் அறுத்து விடுபடுதலே முக்தி.
வேதாந்தமரபில் கர்மம் என்பது ஒவ்வொன்றுக்கும் இருக்கும் மறுபக்க விளைவு. தராசின் மறுதட்டு. பிரபஞ்சத்தின் கட்டமைப்பிலேயே உள்ள ஆதார விதிகளின் விளைவு அது. அதாவது பிரபஞ்சத்தின் சமநிலைகளை நிலைநிறுத்துவது. செயல்கள் விளைவுகள் கொண்டவையாதலால் செயலறுத்தலே விளைவுகளையும் வெல்வதற்கான வழி.
பௌத்தம் பேசும் கர்மம் என்பது நுட்பமான ஒரு வேறுபாடுள்ளது. பிரபஞ்ச நிகழ்வுகளின் தொடர்மாறுதல் ஓட்டத்தில் ஒன்றின் அடுத்த நிலை அது. ஒன்று இப்போது இப்படி இருக்கிறது, இக்கணம் நிகழ்வதன் விளைவாக அது அடுத்த நிலையை அடைகிறது. இந்த மாற்றமே கர்மம். வெற்றிலையும் சுண்ணாம்பும் பாக்கும் மெல்லப்பட்டால் சிவப்பான தாம்பூலம் வரும். அதன் கர்ம நீட்சி அது.
கர்ம நீட்சி என்பது பிரபஞ்சத்தில் உள்ள விதிகளின் வெளிப்பாடு. பிரபஞ்ச விதி என்பது மகாதர்மத்தில் நாம் அறியும் ஒரு பகுதி. விதை நட்டால் மரம் வரும். மரம் கனி கொடுக்கும். கனி விதையை உருவாக்கும். இதுதான் கர்மநெறி. இதில் ஓர் ஒழுங்கு உள்ளது. அதை உருவாக்கும் உள்ளடங்கிய விதி உள்ளது
பௌத்தமெய்யியல் இந்த விதியை நியமம் என்கிறது. தமிழில் சரியான சொல்லாட்சி ‘நெறி’ என்பதுதான். அம்பேத்கர் பௌத்தம் ‘நெறி’க்கு இவ்வளவு முக்கியத்துவத்தை ஏன் அளிக்கிறது என்று கேட்டுக்கொண்டு அதற்கு ஒரு விளக்கத்தை அளிக்கிறார்.
இப்பிரபஞ்சம் எவ்வாறு உருவாகி எப்படி நிகழ்கிறது என்ற வினாவுக்கு ‘கடவுளால்’ என்ற எளிமையான விடையை அளித்துவிட்டால் பிரச்சினையே இல்லை. கடவுள் என்பது ஒரு விடை அல்ல. எந்த விடையாகவும் மாற்றிக்கொள்ளக்கூடிய ஒரு சாத்தியக்கூறு மட்டுமே.
கடவுள் இல்லாமல் இந்த பிரபஞ்சத்தின் இயக்கத்தை விளக்கப்போனால் நெறி [நியமம்] பற்றிய ஞானம் தேவையாகிறது. ஆக்ஸிஜனும் ஹைட்ரஜனும் சேர்ந்தால் நீர் என்பது ஒரு நெறிதான். மனிதன் இன்றுவரை கண்டடைந்துள்ள எல்லா அறிவியல்தேற்றங்களும் நெறிகளே. கர்மத்தின் உள்ளுறையாக உள்ள நெறி பற்றிய ஞானமே நாம் பிரபஞ்சத்தில் இருந்து அறிவது. இன்னது இன்னின்ன காரணத்தால் இப்படி மாறி இன்ன விளைவை உருவாக்குகிறது என்கிற புரிதல்தான் அது.
மனிதன் எதற்காக கர்மத்தை அறியவேண்டும்? அந்த மெய்ஞானத்திலிருந்தே அறநெறி உருவாகமுடியும் என்பதற்காகத்தான். [அறம் அறநெறி என்ற சொற்களை இங்கே வேறுபடுத்தி புரிந்துகொள்ள வேண்டுகிறேன். அறம் என்பது தம்மம் என்பதற்கான தமிழ்ச்சொல். அறநெறி என்பது ethics என்பதற்கான தமிழ்ச்சொல்] அறநெறியில் இருந்தே நீதியும் ஒழுக்கமும் உருவாக முடியும். நீதியும் ஒழுக்கமும் சமூகத்தை உருவாக்கும் விதிகள். சமூகமனிதனை தீர்மானிக்கும் அடிப்படைகள்.
கடவுளை முன்வைக்கும் ஒரு சிந்தனை அறநெறியை எளிதில் விளக்கிவிடும். அது கடவுளின் ஆணை அவ்வளவுதான். பத்துகட்டளைகள் போல. குர்ஆன் வாசகங்கள் போல. ஸ்மிருதியின் கட்டளைகளைப்போல. ஆனால் அறிவை முன்வைக்கும் பௌத்தம் அறநெறிகளுக்கான அடிப்படையை பிரபஞ்சத்தின் இயக்கவிதிகளில் இருந்து தர்க்கபூர்வமாக உருவாக்கிக்கொள்ளவேண்டியிருக்கிறது. அதற்காகவே அது கர்மம் பற்றிப் பேசுகிறது.
அம்பேத்கர் இந்த இடத்தில் அறநெறியை கடவிளின் சட்டமாக, புனிதவிதியாக முன்வைப்பதை கடுமையாக நிராகரிக்கிறார். அறநெறியை தர்க்கபூர்வமாக விளக்காமல் கடவுள்நம்பிக்கையுடன் பிணைக்கும் எல்லா தரப்புகளையும் மறுக்கிறார். அம்பேத்கர் அனைத்துமதங்களையும் நிராகரித்தமைக்கான காரணம் இங்கே தெரிகிறது. அறநெறி அறிவார்ந்த முறையில் விளக்கப்படாத நிலையில் அது ஆதிக்கத்தரப்பினரின் ஆயுதமாகவே இருக்கும்.
அறநெறி கடவுளால் முன்வைக்கப்படுவது என்றால் யார் கடவுள் மீதான அதிகாரத்தை கையில் வைத்திருக்கிறார்களோ அவர்களே அறநெறியை தீர்மானிப்பார்கள். இது கடவுளின் புனித ஆணை என்று சொல்லி அவர்கள் அடக்குமுறையையும் சுரண்டலையுமே முன்வைப்பார்கள். அறநெறி என்பதே சுரண்டலுக்கான விதிமுறையாக உருவம் கொண்டுவிடும்.அத்தகைய அடக்குமுறையின் ஒரு நுகத்தில் இருந்து இன்னொரு நுகத்துக்குச் செல்வதில் பொருளே இல்லை.
ஆகவேதான் முற்றிலும் அறிவார்ந்த தர்க்கம் கொண்ட பௌத்தத்தின் வழியை அம்பேத்கர் ஏற்றுக்கொண்டு முன்வைக்கிறார். அங்கே அறநெறிக்கு எந்த புனிதமும் இல்லை. அது முற்றிலும் புறவயமானது. இயற்கையின் விதிகளில் இருந்து ஒவ்வொருவரும் கண்டுகொள்ளத்தக்கது. இங்கே அறநெறியை ஒருகூட்டம் பிழையாக முன்வைத்தால், உள்நோக்குடன் பயன்படுத்திக்கொள்ளமுயன்றால் உடனடியாக மறுக்க முடியும். அந்த நெறி இயற்கையின் கர்மநீட்சியில் இல்லை என்று வாதிட முடியும். இயற்கையில் அதை எடுத்துக்காட்டுங்கள் என அறைகூவ முடியும்.
கடவுள் உலகைப்படைத்தார் என்றால் ஏன் அநீதியை அவர் உருவாக்கினார் என்ற கேள்வி எப்போதுமே உள்ளது என்கிறார் அம்பேத்கர். அதற்கு இறைவாதிகள் கடவுள் இயற்கையைத்தான் படைத்தார், அவரளித்த விதிகளின் படி இயற்கை செயல்படுகிறது, அந்த விதிகளை மனிதன் மீறினால் கடவுள் பொறுப்பல்ல என்று வாதிடுவார்கள் என்கிறார். ஆனால் கடவுளே ஆக்கல் காத்தல் அழித்தல் மூன்றுக்கும் பொறுப்பு என்றால் மனிதனின் மீறல்களுக்கும் அவர் பொறுப்பேற்றாகவேண்டும் என்கிறார்.
மாறாக புத்தர் கடவுளை தவிர்த்துவிட்டு அறநெறி பற்றி பேசமுற்படுகிறார். அதுவே அம்பேத்கருக்கு உவப்பானதாக இருக்கிறது. ‘எப்படி அறநெறி பிரபஞ்சத்தில் திகழ்கிறது?’ என்று கேட்கப்பட்டபோது ‘கர்மநெறியால். கடவுளால் அல்ல’ என்று புத்தர் பதிலிறுத்தார் என்கிறார் அம்பேத்கர்.
புத்தரைப்பொறுத்தவரை அறநெறி என்பது மனிதன் பிரபஞ்சத்தின் இயக்கமுறையில் இருந்து கற்றறிந்து கடைப்பிடிப்பது. அதுவே கர்மநெறி. அதற்கான முழுப்பொறுப்பும் அவனுடையதே. அவன் அதற்கு கடவுளையோ பிற சக்திகளையோ பொறுப்பு சுமத்தவேண்டியதில்லை. வாழவேண்டுமா அழியவேண்டுமா என்பதை அவன்தான் முடிவெடுக்கவேண்டும்.
உதாரணமாக, ஒவ்வொரு உயிர்த்தொகுதியும் ஒன்றுடன் ஒன்று மோதி போட்டியிட்டு தகுதிகொண்டது வாழும் என்ற விதியின்படி தங்கிவாழலாம். அதைவிட பலமுள்ளதும் பலவீனமானதும் ஒருங்கிணைந்து ஒருவரின் இடைவெளியை இன்னொருவர் நிரப்பிக்கொண்டு பெரும் தொகுதிகளாக முழுமைகொண்டு மேலும் சிறந்த வாழ்க்கையை வாழலாம். இரண்டுமே இயற்கையிலிருந்து கிடைக்கும் கர்மநெறிகள். தேர்வு மனிதனின் கையில் உள்ளது
கர்மம் மனிதனின் கையில் உள்ளது. நல்ல கர்மம் நல்விளைவை உருவாக்கும். அதுவே குசல கம்மம் என்கிறது பௌத்தம் . தவறான கர்மம் தவறான விளைவுகளை உருவாக்கும். அதை அகுசல கம்மம் என்கிறது பௌத்தம். நல்ல கர்மம் நல்ல விளைவுகளை உருவாக்கியே தீரும் என்பதே பிரபஞ்சநியமம் என்கிறார் புத்தர்.
புத்தர் கர்மம் என்பதே அறநெறிக்கு ஆதாரம் என்று மட்டும் சொல்லவில்லை. அந்த கர்மத்தின் வகைகளையும் விரிவாகப் பேசுகிறார். தீத்ததம்ம வேதனீய கம்மா [உடனடியான விளைவுகளை உருவாக்கும் செயல்] 2. உபபஜ்ஜ வேதனீய கம்ம [நீண்டகால விளைவுகளை உருவாக்கும் செயல்] 3. அபோரபரிய வேதனிய கம்ம [முடிவின்மை வரை விளைவுகளை உருவாக்கும் செயல்] என மூன்று வகைச் செயல்களை அவர் சுட்டிக்காட்டுகிறார்.
இவ்வாறு உவமை சொல்லலாம். நெல்லை விதைப்பவன் அவனே அறுவடைசெய்கிறான். ஆலமரத்தை நடுபவன் தலைமுறைகளுக்கு நிழல் அளிக்கிறான். ஒரு புதிய வேளாண்மைமுறையை உருவாக்குபவன் மானுடகுலம் உள்ளளவும் நலம் பயக்கிறான். மூன்றுமே கர்மங்கள். விளைவுகள் வெவ்வேறு.
கர்மத்தின் விளைவு செய்பவனுக்கு மட்டுமே வரவேண்டும் என்பதில்லை. மனிதர்கள் வருவார்கள் மறைவார்கள். நற்செயல்களின் விளைவுகள் மானுடகுலம் வழியாக என்றும் வாழும். வளரும். ஏனென்றால் செயலின் விளைவை தீர்மானிக்கும் நியமம் அல்லது நெறி என்பது என்றும் நீளக்கூடியது. அது மகாதர்மத்தின் ஒரு பகுதி.
ஆகவே இப்பிரபஞ்சத்தில் நெறி எப்படி நீடிக்கிறது என்பதற்கு புத்தர் அளித்த பதில்தான் முழுமையானது மறுக்கமுடியாதது என்கிறார் அம்பேத்கர்.
அப்படியென்றால் எது அறச்செயல்? எச்செயல் அதன் இன்றியமையாத கர்மநீட்சியினூடாக நீடித்த நல்விளைவுகளை உருவாக்குகிறதோ அது. எது அறநெறியை நிலைநாட்டுகிறதோ அது. செயல் – அதன் விளைவு என முடிவில்லாமல் நீளும் இந்த நிகழ்வுச்சங்கிலியில் செய்யப்படும் ஒரு செயல் அச்சங்கிலியின் எந்த நிலையிலும் நல்விளைவுகளை அளிக்குமெனில் அதுவே அறச்செயல்.
*
சென்ற சில வருடங்களாக அறம் என்ற ஒரு மையம் சார்ந்தே சிந்தித்து எழுதி வருகிறேன். பல கோணங்களில், பல உணர்ச்சிநிலைகளில். நான் ஒரு தத்துவமாணவனாக இந்த வினாவை முன்னெடுக்கவில்லை. சிந்தனை அமைப்புகளை தெரிந்துகொள்வதில், விவாதிப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. நான் அந்த வயதைக் கடந்துவிட்டேன். நான் தேடுவது என் சொந்த வாழ்க்கையின் அறிதல்களை என் தியானத்தின் வெளிச்சங்களை இணைத்து முழுமைசெய்துகொள்ளும் சிந்தனைமுறைமையை. என் அறிவை ஒளிபெறச்செய்யும் தரிசனத்தை.
ஆகவே நான் வேதாந்தம், கிறித்தவம், பௌத்தம் என எல்லா ஞானமார்க்கங்களினூடாகவும் பயணம் செய்கிறேன். அவற்றிடையே ஓர் உரையாடல் என்னுள் நிகழவேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன். எந்த அமைப்பையும் முழுமையாக ஏற்றுக்கொள்ள நான் முயல்வதில்லை. எல்லாவற்றிலுமிருந்து என்னுடைய சொந்தப்பயணத்துக்கான வழிக்குறிப்புக்ளை பெறவே முயல்கிறேன். விவாதமுறைமைகளுக்கு தத்துவச் சட்டகங்களுக்கு அப்பாலிருக்கும் தூய மெய்ஞானத்தை என்னுடைய அந்தரங்கத்தின் பாத்திரத்தில் அள்ளிவிடலாமா என்று பார்க்கிறேன். அதுவே என் ஆசிரியரின் பாதையாகவும் இருந்தது,
தடுமாற்றங்கள், தத்தளிப்புகள், ஏமாற்றங்கள், பிழைகள் வழியாக என்னை மேம்படுத்திக்கொண்டு முன் செல்கிறேன். கண்டடைதல்கள் , ஒருங்கிணைவுகள், முழுமையாக்கல்களை நிகழ்த்திக்கொள்கிறேன். நான் செய்யும் இப்பயணத்தில் அம்பேத்கரின் இந்த மகத்தான ஞானநூல் ஒரு பெரும் வழிகாட்டியாக இருந்தது. இந்த மேடையில் இதை நான் முன்வைப்பதுகூட நானே இந்நூலை மேலும் அறியும்பொருட்டுதான். அதற்கான உரையாடல் சிலரிடம் திறக்கக்கூடும் என்ற நம்பிக்கையினால்தான்.
எந்த நிலையிலும் மகாதர்மம் மனிதகுலத்தை கைவிடுவதில்லை என்றே உணர்கிறேன். இன்னும் நம் மீதான நம்பிக்கையுடன் அது போதிசத்வர்களை நிகழ்த்திக்கொண்டே இருக்கிறது. அந்நம்பிக்கையாகவே நாம் மகாதர்மத்தின் அளவிலா கருணையை அறிகிறோம். அதற்கு வணக்கம்.
[முழுமை]
[ராஜபாளையம் நாற்று அமைப்பு சார்பில் நவம்பர் 2, 2012 அன்று ஆற்றிய உரை]