நியாயம் உருவகிக்கும் பிரபஞ்சவியல்
எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…
வைசேஷிகத்தைப் போலவே நியாயமும் பிரபஞ்ச இயக்கத்தைப் பற்றிய தெளிவான புரிதல் இல்லாமையால்தான் மனிதனுக்குத் துக்கங்கள் ஏற்படுகின்றன என்று கருதியது. அறியாமையே துக்கத்தின் ஊற்றுக்கண். அறிவு துக்கத்தை அகற்றுகிறது. சரியானபடி இப்பிரபஞ்சத்தைப் புரிந்துகொண்டு நாம் அடையும் சமனிலையை நிஸ்ரேயஸம் என்று நியாயம் உருவகித்தது.
நிஸ்ரேயஸம் என்பது என்ன? பிரபஞ்சத்தைப் பற்றிய அறிவு இல்லாமையால்தான் நமக்கு வியப்பும் பயமும் மகிழ்ச்சியும் துக்கமும் எல்லாம் உருவாகின்றன. இவை எல்லாமே சமன் குலைவுகள். இவ்வுணர்ச்சிகளால் பாதிக்கப்படாத சமநிலையினை மனிதனுக்கு அறிவு அளிக்கிறது. குழந்தைகள் விளையாட்டுப்பொருட்களைக் கண்டு பலவகையான உணர்ச்சிப்பாதிப்புகளை அடைகின்றன. ஆனால் பெரியவர்கள் அவற்றைத் தாண்டிவிட்டிருப்பார்கள். அதைபோல உலக வாழ்வின் பாதிப்புகளைத் தாண்டிச் சென்ற நிலையை நிஸ்ரேயஸம் என நியாயம் குறிப்பிடுகிறது.
பிரபஞ்சம் அடிப்படை அணுக்களால் ஆனது என்று நியாயமும் நம்பியது. பிரபஞ்சம் திட்டவட்டமான, புறவயமான பொருள்களால் ஆனது என்றே அது கூறியது. அணுக்களே அப்பெருள்களை. அணுக்களின் இணைவு, பிரிவு மூலமே பொருள் வய உலகம் இயங்குகிறது. நிலம், நீர், நெருப்பு, வாயு, வானம் (பிருத்வி, அப்பு, தேஜஸ், வாயு, அகாசம்) என்ற ஐம்பருக்களின் கூட்டலானவையே இப்பிரபஞ்சத்தில் உள்ள ஜடங்கள் அனைத்தும். அவை எவராலும் எப்போதும் உருவாக்கப்பட்டவை அல்ல. அழியக் கூடியவையும் அல்ல.
அதாவது, நியாயத் தரிசனத்தில் பிரபஞ்சத்தை சிருஷ்டிக்கும் ஒரு இறைவனுக்கு இடமில்லை. அதே போல் பொருள் வய உலகைக் கட்டுப்படுத்தக் கூடிய கருத்துலகு என்ற ஊக்கத்திற்கும் இடமில்லை. எனவே இங்கு ஆத்மாவும் கிடையாது. பிற்பாடு பிரஸ்தபாதர், வாத்ஸ்யாயனர், ஸ்ரீதரர், உதயணர் ஆகியோர் நியாய மரபினை வேதாந்ததுடன் பிணைத்து இறைசக்தி அல்லது பிரம்மமும் பிரபஞ்ச அமைப்பில் உண்டு என்று சேர்த்துக் கொண்டார்கள்.
இப்போது கிடைக்கும் பல தத்துவ நூல்களில் நியாயம் வைதிக மரபின் ஒரு பகுதியாகக் கூட குறிப்பிடப்படுகிறது. உதாரணமாக தமிழில் பிரபலமான முன்னோடித்தத்துவ நூலான சாங்கியம், நியாயம், வைசேஷிகம், யோகம் ஆகிய நான்கையும் வைதிகமரபிலேயே சேர்த்துக்குறிப்பிடுகிறது. இது தவறு. ஆய்வாளரான ரிச்சர்ட் கார்பே தன் நுலில் (Philosophy of Ancient India) இதைத் திட்டவட்டமாக மறுக்கிறார். நியாயம் வெகுகாலம் பிந்தியே வைதிகமயமாக்கபட்டது என்றார். மாற்றப்பட்ட வடிவில் கூட நியாயம் இறைசக்தி இல்லாமலேயே இயங்கும் தன்மையுடன் உள்ளது என்பது கார்பேயின் கணிப்பு. நாடராஜ குருவும் இவ்வாறே கருதுகிறார்.
நியாயம் இரு முனைகளை உருவகிக்கிறது. விஷயம் (அறிபடு பொருள்), விஷயி (அறிபவன்), இவ்விரு முனைகளுக்கும் இடையேயுள்ள உறவு எனப்படுகிறது. மிகச் சமீபகாலம்வரை மேற்கத்திய அறிவியங்கியல் (Epistemology) அறிபடுபொருளை அறிபவனுக்கு அப்பாற்பட்ட மாறாத பொருளாக உருவகித்தது என நாம் அறிவோம். ஆனால் நியாயம் இவ்விரு முனைகளுக்கும் இடையே உள்ள எல்லா வகை உறவுகளையும் கணக்கில் கொள்கிறது.
நியாயத்தைப் பொருத்த வரை இப்பிரபஞ்சம் எப்படி உருவானது, எப்படி இயங்குகிறது என்பதை விடவும் இதை எப்படி வகுத்துக் கொள்வது என்பதுதான் பிரச்சினை. பிரபஞ்சம் என்பது ‘அறிபடுபொருள்’ மட்டும்தான். பிற்பாடு, அதை அறிவதன் வழிமுறைகள் என்னென்ன என்று யோசிக்கும் நியாயம், அதன் பல்வேறு படினிலைகளை விரிவாகக் கணக்கில் கொண்டு பேசுகிறது.
அடுத்து வருவது ..”பதார்த்தங்கள்”