நூலகம் எனும் அன்னை

நூலகம் எனும் அன்னை

[24-11-2007 யில் அருமனை அரசு நூலகத்தின் வருட விழாவில் ஆற்றிய சிறப்புரை]

ஜெயமோகன்.இன் ல் இருந்து

arumanai

ருமனை அரசு நூலகத்தின் வருடவிழாவில் சிறப்புரையாற்ற வாய்ப்புக்கிடைத்தமை எனக்கு மிகவும் மனநிறைவூட்டும் அனுபவமாக உள்ளது. அத்துடன் ஆழமான ஒரு ஏக்கமும் இப்போது என்னில் நிறைகிறது. காரணம் இது என் சொந்த ஊர்; இந்த நூலகத்தில்தான் நான் என் இளமைப்பருவத்தை செலவழித்தேன்.

என் அப்பா பாகுலேயன்பிள்ளை இங்கே உதவி பத்திரப்பதிவாளர் அலுவலகத்தில் கிட்டத்தட்ட முப்பது வருடம் பணியாற்றினார். நாங்கள் இங்கிருந்து நான்கு கி.மீ. தொலைவில் உள்ள முழுக்கோடு என்ற ஊரில் தங்கியிருந்தோம். அதன்பின் மறுபக்கம் ஐந்து கி.மீ தூரத்தில் உள்ள திருவரம்புக்கு சொந்த வீடு கட்டி மாறினோம். நான் படித்ததெல்லாம் இங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில்தான். எங்கள் சந்தை அருமனையில் இருந்தது… திரையரங்கு இங்கேதான்- கிருஷ்ணப்பிரியா. ஓலைக்கொட்டகை. மளிகை வாங்குவது ராகவப்பணிக்கர் கடையில். என் இளமைப்பருவம் இந்த ஊரை மையப்படுத்தியது.

இளமையில் நான் உக்கிரமான வாசகனாக இருந்தேன். இப்போதும் தீவிர வாசகன்தான்.ஆனால் இளமைப்பருவத்தில் வாசிப்பதும் ஊர்சுற்றுவதுமல்லாமல் நினைப்பே இல்லை. மண்ணில் கால்படாமல் வாழ்ந்த நாட்கள். மனம் ஜெட் எஞ்சினில் இயங்கிய நாட்கள். அப்போது எனக்கு மூன்று நூலகங்கள் இருந்தன. ஒன்று முழுக்கோடு ஒய்.எம்.சி.ஏ நூலகம். இன்னொன்று இந்த நூலகம். மூன்றாவது திருவட்டார் ஸ்ரீ சித்ரா நூலகம்.

இவற்றில் பிற இரண்டு நூலகங்களும் அழிந்துவிட்டன. குமரி மாவட்டத்தில் மகாராஜாவின் நிதியுதவி பெற்று இயங்கிய பல நல்ல நூலகங்கள் இருந்துள்ளன. திருப்பதிசாரம், பறக்கை, மருங்கூர், பூதப்பாண்டி பத்மநாபபுரம், திருவட்டார் நூலகங்கள் புகழ்பெற்றவை. இவையெல்லாமே கவனிப்பாரில்லாமல் அழிந்துவிட்டன. இந்த நூலகமும் அழிந்து மறைந்திருக்கிறது. முள்மண்டி சிறுநீர் கழிப்பிடமாகி கிடந்திருக்கிறது. அதை மீட்டு அரசு நூலகமாக ஆக்கி வாசகர் வட்டம் உருவாக்கி உயிர் கொடுத்துள்ள நண்பர்கள் அனைவருக்கும் நான் தலை வணங்கி நன்றி சொல்கிறேன். இன்று இந்த நூலகத்தில் ஆயிரம் உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்றும் ஐம்பதுக்கும் மேல் புரவலர்கள் இருக்கிறார்கள் என்றும் குமரிமாவட்ட கிராமப்புற நூலகங்களில் பைங்குளம் நூலகத்துக்கு அடுத்தபடியாக இதுவே முன்னிலைவகிக்கிறது என்றும் சொன்னார்கள். கிராமப்புற நூலகங்கள் தமிழகத்தில் பொதுவாக குமரிமாவட்டத்தில்தான் மிகச் சிறப்பாக உள்ளன என்றார்கள். என் நெஞ்சு நிறைவால் விம்முகிறது

அக்காலகட்டத்தில்நான் வாரம் இருமுறையாவது இங்கு வருவேன். நான்குமணிக்கு இங்குள்ள வயதான ஊழியர் வாசல் திறக்கும்வரை இங்கேயே அமர்ந்திருப்பேன். திருப்பிக்கொடுக்க கொண்டுவந்த நூல்களை மீண்டும் படிப்பேன். நூல் எடுத்தபிறகு வீடுபோக பொறுமையில்லாமல் இந்த பள்ளி மைதானத்துக்கு வந்து அமர்ந்து படிப்பேன். அருகில்தான் என் நண்பர் வர்கீஸின் வீடு. எங்கள் வீடுகள் போல ஒப்புக்கு உறவாக இல்லாமல் அந்த பெரிய குடும்பத்தில் அவன் அம்மா அண்ணா தம்பி அக்கா தங்கைகள் எல்லாரும் மிகவும் பாசமாக இருப்பார்கள். அவன் வீட்டுக்குப் போவதை நான் அப்படி விரும்புவேன். அவன் அக்காக்களிடம் புத்தகங்களைப் பற்றி பேசுவேன்.

பதின்பருவத்தின் பசி போல பிறகு எப்போதுமே பசிப்பதில்லை. உடலின் பசி மட்டுமல்ல மனதின் பசி, ஆத்மாவின் பசி. அப்பசிக்கு அன்னமிட்ட தர்மசாலைகளில் ஒன்று இந்நூலகம்.

அன்று இங்கே ருஷ்ய மொழியாக்க நூல்கள் பல இருந்தன. ஷோலக்கோவின் ‘டான் நதி அமைதியாக ஓடுகிறது’ என்ற நாவல் ‘வெற்றி முரசு’ என்றபேரில் வெளிவந்திருந்தது. மக்ஸீம் கோர்க்கியின் ‘தாய்’. அலெக்ஸி டால்ஸ்டாயின் ‘சக்ரவர்த்தி பீட்டர்’ வெறியாவேசத்துடன் நான் வாசித்துத் தள்ளிய நாள்கள்.

நூலகம் என்பது வெறும் கட்டடம் அல்ல. ஓர் அமைப்பு அல்ல அது. அது பண்பாட்டின் மையம். பண்பாடு என்பது அருவமான ஒரு நிகழ்வு என்பதனால் நூலகமும் அருவமான ஒரு மையமே. இந்நூலகம் என் நினைவில் அகன்ற ஸ்டெப்பி புல்வெளியில் பனிப்பளங்கள் நெரிபட்டு உறும ஓடும் டான் நதி. கிரெம்ளினில் ஒலிக்கும் புரட்சியாளர்களின் கோஷம். பீரங்கிப்புகை. பனிப்பாலைகளின் வெண்மை. இன்னொருவருக்கு நான் அதை விளக்கிவிட முடியாது.

நம் அம்மா ரேஷன் கார்டில் வெறும் ஒரு பெண்தான். நமக்கு அப்படி அல்ல. நமக்கு அவள் முலைப்பாலின் ருசி, அணைப்பின் வெம்மை, காத்திருந்து ஊட்டும் பரிவு. வாசலில் வழிபார்த்திருக்கும் கனிவு. நூலகங்கள் அன்னையர்கள். பால் நினைந்தூட்டும் கருணைகள்.

இந்த ஊரைப்பற்றி நான் இருபது வருடங்களாக எழுதியிருக்கிறேன். என் வாசகர்களில் பலர் குமரி மாவட்டத்துக்கு வந்தபின் என்னைப் பார்த்துவிட்டு அருமனைக்கும் முழுக்கோடுக்கும் திருவரம்புக்கும் சென்று வந்ததை நான் அறிவேன். அந்த அளவுக்கு இந்த மண்ணை நான் எழுதியிருக்கிறேன். ஆனால் இங்கு நான் வந்து பதினாறு வருடங்கள் ஆகின்றன. என் குடும்ப சொத்தை விற்க பதிவலுவலகத்துக்கு வந்தேன் கடைசியாக.

சுந்தர ராமசாமிதான் சொன்னார், இந்த மண் என் நெஞ்சில் ஆழத்தில் உள்ளது என. அது முப்பதுவருடம் முந்திய மண். அப்போதுள்ள மரங்கள், பறவைகள், மனிதர்கள், அப்போது பெய்தபடி இருக்கும் மழை. இங்கு நான் மீண்டும் மீண்டும் வந்தால் அந்தக் கனவு கலைந்துவிடும் என்றார் ராமசாமி. அவர் எஸ்.எல்.பி பள்ளிக்கு வந்து வந்து அதன் பழைய சித்திரம் மனதில் மங்கிவிட்டது, அது பெரிய இழப்பு என்றார். அறுபது வயதுக்குமேல் அவர் அதிகம் எழுதியது அந்த பள்ளியைப்பற்றித்தான்

நான் இந்த மண்ணை என் ஆத்மாவில் நிறைத்துள்ளேன். கற்பனையின் மழை பொழியும்தோறும் அதில் உறங்கும் விதைகள் முளைவிட்டபடியே காடாகியபடியே உள்ளன. இன்னும் பல நாவல்களுக்கு வாழ்க்கை என் கைவசம் உள்ளது.

இங்கே வாசகர்வட்ட தலைவர் கமல செல்வராஜ் சொன்னார், நான் பெரும் புகழ்பெற்ற எழுத்தாளன் என்றும்,இருந்தும் என் ஊரில் அதிகம் பேருக்கு என்னைத் தெரியவில்லை என்றும். அது உண்மைதான். அப்படித்தான் அது நிகழ முடியும். எழுத்தாளன் ஒருபோதும் புகழ்வெள்ளத்தில் நீந்தும் பொதுமனிதன் அல்ல. ஆனால் ஒன்று உண்டு. இந்த மண்ணை இவ்வூருக்கு வெளியே யாராவது அறிந்துள்ளார்கள் என்றால் அது என் எழுத்துக்களின் வழியாகத்தான். அதுவே இலக்கியத்தின் வலிமை.

ஜெயந்தி சங்கர் என்ற சிங்கப்பூர் எழுத்தாளர் ‘பெருஞ்சுவருக்குப் பின்னே’ என்ற நூலை எழுதியிருக்கிறார். சீனப்பெண்களைப் பற்றிய நூல் இது. இதில் ஆர்வமூட்டும் ஒரு தகவல் வருகிறது. நூஷா என்ற மொழி ஒன்று சீனாவில் இருந்தது. இது பெண்கள் தங்களுக்குள் பேசிக்கொள்வதற்காக மட்டும் உருவான மொழி. பெண்கள் அதை தங்கள் மகள்களுக்குச் சொல்லிக் கொடுத்தார்கள். ஆனால் ஒருபோது ஆண்களுடன் அதில் பேசவில்லை. தந்தை, சகோதரன், கணவன்,மகன் எவரிடமும். அப்படி ஒரு மொழி இருப்பதையே ஆண்கள் அறிந்திருக்கவில்லை. நூஷ¥ மொழி சீன லிபியில்தான் எழுதப்பட்டது. ஆகவே ஒரு கடிதமோ கவிதையோ ஆண்கள் கையில் கிடைத்தாலும் ஒன்றும் புரிந்திருக்காது. அம்மொழியில் சீனப்பெண்கள் தங்கள் துயர்களை, எதிர்ப்பை, கனவை பதிவுசெய்தார்கள்.

எனக்குப்படுகிறது, இலக்கியமும் அப்படி மொழிக்குள் செயல்படும் ஒரு மொழிதான் என. அதை பிறர் படிகக்லாம், புரியாது. அது ஒரு சிறுவட்டத்துக்குள் புழங்குவது. அவ்வட்டம் நுண்ணுணர்வும் கவனமும் உடையவர்களால் ஆன ஒன்று. அவர்கள் மிகச்சிறுபான்மையினர். அவர்களே சிந்திக்கிறார்கள், சிந்தனையைப் பகிர்ந்து கொள்கிறார்கள். ஒரு சமூகத்தின் இறந்தகாலத்தை தொகுத்து உருவாக்குபவர்கள் இவர்களே. இவர்கள்தான் நிகழ்காலத்தை வடிவமைக்கிறார்கள். எதிர்காலக் கனவுகளை உருவாக்குகிறார்கள். இவர்களையே அண்டோனியோ கிராம்ஷி என்ற இத்தாலிய மார்க்ஸிய அறிஞர் உயிர்நிலை அறிவுஜீவிகள் என்கிறார். இவர்களே ஒரு சமூகத்தின் உயிர். இலக்கியவாதியின் புகழ் என்பது இந்த உள்வட்டத்துக்கு உள்ளேதான் செல்லுபடியாகும். அதுதான் இயல்பு.

நூலகம் என்பது அப்படிப்பட்ட உயிர்நிலை அறிவுஜீவிகள் உருவாகும் மையம். சமூகத்தின் ஆற்றலின் ஊற்றுமுகம் அது. ஒரு கிராமத்தில் உரக்கிடங்கு எங்கே என்று கேட்டால் சொல்வார்கள். பஞ்சாயத்து அலுவலகத்தைக் கேட்டால் யாரும் வழிகாட்டுவார்கள். நூலகத்தைக் கேட்டால் யாருக்கும் தெரிந்திருக்காது. ஆனால் அதுவே அப்பண்பாட்டின் மையம். அங்குதான் அச்சமூகம் சிந்திக்கிறது; கனவு காண்கிறது. மிக அபூர்வமான ஒரு விதைமையம் அது.

உங்களுக்குத்தெரியும், நகரங்களில் மாபெரும் நூலகங்கள் உள்ளன. கணிப்பொறி, இணைய வசதிகள் உள்ளன. ஆனால் கடந்த ஐம்பதுவருடத் தமிழ் வரலாற்றில் முக்கியமான சிந்தனையாளர்கள், கலைஞர்கள் பெரும்பாலும் கிராமங்களில் இருந்து உருவாகி வந்தவர்கள். இத்தகைய சிறிய நூலகங்கள் அவர்களை உருவாக்குகின்றன. ஓடுவேய்ந்த, சிறிய, மின்வசதிகூட இல்லாத, ஒற்றையறைக் கட்டடங்களில் நாளை தமிழகம் மெல்ல மெல்ல முளைத்து வந்துகொண்டிருக்கிறது

து ஃபு என்ற சீனக்கவிஞர் மிக முக்கியமானவ்ர். லட்சம் கவிதைகள் இவர் எழுதியிருப்பவையாக இன்று கிடைக்கின்றன. து ஃபுவை தேடி ஒரு விழியிழந்தவர் வந்தார். அவர் கிளம்புகையில் து ஃபு சொன்னார். “இரவாகிவிட்டது இந்த விளக்கை எடுத்துக் கொள்ளுங்கள்.”

“எனக்குத்தான் கண்ணில்லையே” என்றார் விழியிழந்தவர்.

“ஆமாம். நீங்கள்பார்க்க முடியாது. ஆனால் பிறர் உங்களைப்பார்க்க விளக்கு வேண்டுமே” என்றார் து ஃபு

விழியிழந்தவர் விளக்குடன் கிளம்பினார். வழியிலேயே ஒருவர் அவர் மேல் முட்டிக் கொண்டார்.

“மூடா, கண்ணில்லையா உனக்கு? கையில் விளக்கிருப்பது தெரியவில்லையா?” என்றார் விழியிழந்தவர்.

“ஐயா மன்னிக்கவும். உங்கள் விளக்கு அணைந்துவிட்டிருக்கிறது” என்றார் வழிப்போக்கர்.

விழியிழந்தவர் மனம் நிறைந்த துயரத்துடன் மறுநாள் து ஃபுவிடம் நடந்ததைச் சொனனர். து ஃபு அவரிடம் சொன்னார். “நீங்கள் உலகைப் பார்க்கவும் உலகம் உங்களைப் பார்க்கவும் உதவக்கூடிய ஒளி ஒன்று உள்ளது. ஒருபோதும் அணையாதது.” அதை அவருக்கு து ஃபு கொடுத்தார். ஞானத்தை அழியாத ஒளியாகிய ஞானத்தை நிறைத்திருக்கும் சக்திமையங்கள் இந்நூலகங்கள். என் கிராம நூலகம் சீரிளமைத்திறத்துடன் நூறாண்டுகள் வாழ்க என வாழ்த்தி வணங்கி விடைபெறுகிறேன். நன்றி.

24-11-2007 யில் அருமனை அரசு நூலகத்தின் வருட விழாவில் ஆற்றிய சிறப்புரை.

பின்னூட்டம்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s