கடவுள்நம்பிக்கை உண்டா?

கடவுள்நம்பிக்கை உண்டா?

ஜெயமோகன்.இன் ல் இருந்து

[பூடான். வடகிழக்கு பயணத்தின் போது]

அன்புள்ள ஜெ,

இந்து ஞான மரபு, தத்துவங்கள், பகவத் கீதை, உபநிடதங்கள் மற்றும் பல இதர நூல்களை விரிவாக, ஆழமாகக் கற்று உணர்ந்த நீங்கள், கோயில்களின் சூட்சுமங்களைப் பற்றிப் பேசும் நீங்கள், கடவுள் நம்பிக்கை அறவே இல்லாமல் இருப்பது பெரும் ஆச்சரியம் அளிக்கிறது.

மாபெரும் கோயில்களை, நூல்களை உருவாக்கியவர்களைச் செலுத்தியது கடவுள் நம்பிக்கை தான். கோயில்களில் பல மிக நுட்பமான, எளிதில் புரிந்து கொள்ள முடியாத சூட்சமங்கள் நிறைய உள்ளன. மூலவர் சிவலிங்கதிற்கு அடியில் சில ‘எந்திரங்களை’ப் (மந்திரிக்கப்பட்ட தகடுகள்) புதைத்திருக்கும் சூட்சமம் உள்ளது. ஆத்மார்த்தமாக வழிபடுபவர்களுக்கு ஏதோ ஒன்று கிடைக்கிறது.

எனது வாழ்வில், சில நம்ப முடியாத miracle like திருப்பங்களை, மாற்றங்களை பக்தியின் மூலம், கோயில்கள் மூலம் அடைந்திருக்கிறேன். ஜோதிடம் கற்றதும் இந்தப் பின்னணியில் தான். அசைவ உணவை அறவே விட்டு விட்டேன்.ராமாயணத்தின் ஒரு பகுதியான சுந்தர காண்ட பாராயணம் செய்து, பெரும்நற்பலனை அடைந்திருக்கிறேன். Medical miracle என்ற வகையில் !ஒரு பெரியாரிய குடும்பத்தில் பிறந்து, நாத்திகனாக வளர்ந்து, இன்று இப்படிமாற்றம் !

இந்த மரபை, தத்துவத்தை, பேராசான்களைக் கற்றுணர்ந்து, தொடர்ந்து அவை பற்றி விரிவாக எழுதும் நீங்கள், நாத்திகராக இருப்பதன் காரணத்தைப் பற்றி ஒரு கட்டுரை எழுத முடியுமா ? முரணியக்கம் என்பது உங்கள் favourite term ! இதிலும் அது இருக்கிறதே !!


Regards / அன்புடன்

K.R.Athiyaman  / K.R.அதியமான்
Chennai – 96

http://nellikkani.blogspot.com
http://athiyamaan.blogspot.com
http://athiyaman.blogspot.com (english)

அன்புள்ள அதியமான்,

இதைப்பற்றிய என் நிலைப்பாட்டை மிகவிரிவாகவே விளக்க முடியும். பொதுவாகவே தமிழ்ச்சூழலில் இந்தியமெய்ஞ்ஞானம் சார்ந்த விவாதங்கள் மிக அருகிப்போய் விட்டிருப்பதனால் இந்த விஷயங்களைக் குத்துமதிப்பான சொற்களைக்கொண்டே நாம் அணுகிவருகிறோம். தமிழில் வழக்கமாகக் கேட்கப்படும் வினாக்கள் நீங்கள் ஆத்திகரா, நாத்திகரா என்பதும்,உங்களுக்குக் கடவுள்நம்பிக்கை உண்டா என்றும்தான். தத்துவார்த்தமாக மிகவும் பொதுப்படையான வினாக்கள் இவை.

முதல்கேள்விக்குப் பதிலாக அந்த இருநிலைகள் அல்லாமல் வேறு நிலைப்பாடுகள் இல்லையா என்றுதான் கேட்கவேண்டும். இரண்டாம் கேள்விக்குக் ’கடவுள் என நீங்கள் சொல்வது எதை?’ என்றுதான் கேட்கவேண்டும்.

சோழர்காலகட்டம் முதல்,தமிழகத்தில் பெருமதங்கள் வேரூன்றிவிட்டிருக்கின்றன. அவற்றை ஒட்டி உருவான பிரம்மாண்டமான பக்தி இயக்கம்,தமிழகத்தின் இன்றைய கலைகள்,சிந்தனைகள், வாழ்க்கைமுறைகள் எல்லாவற்றையும் தீர்மானித்தது. இன்றும் அதுவே வல்லமைவாய்ந்ததாக நீடிக்கிறது. பக்தி இயக்கம் பக்தியையே ஆன்மீகத்தின் ஒரே முகமாகக் காட்டியது. அந்தப்பக்தியும் பெருமதங்களுக்குள் நிற்கக்கூடியதாக வடிவமைத்தது.

இந்து மெய்ஞ்ஞான மரபின் தொடக்கத்திலேயே ஞானம் x கர்மம் என்ற எதிரீட்டைக் காணலாம். ரிக்வேதமே ஞானகாண்டம் கர்மகாண்டம் என்ற பிரிவினை உடையதுதான். அனுஷ்டானங்கள்,நம்பிக்கைகள் அடங்கியது கர்ம காண்டம். பக்தி அதன் உணர்வு நிலைதான். ஞான மார்க்கம் என்பது தர்க்கமும் உள்ளுணர்வும் முயங்கி அதனூடாக மெய்மையை நோக்கிச் செல்வது. கீதையில்  மீண்டும் மீண்டும் இதைப்பற்றிய விவாதங்களைக் காணலாம்.

இந்து மதத்தின் எல்லாப் பிரிவுகளிலும் பக்தி அளவுக்கே அல்லது பக்தியை விட மேலானதாகவே ஞானமார்க்கம் சொல்லப்பட்டிருக்கிறது.ஆனால் மெல்லமெல்ல பக்தியே முக்கியம் என்ற நிலை உருவானது. நம் பக்தி இயக்கம் உருவாக்கிய நூற்றுக்கணக்கான கதைகளில் ஞானத்தை எளிய முரட்டுபக்தி எளிதில் வென்று சென்றிருப்பதைக் காண்கிறோம் -கண்ணப்ப நாயனாரின் கதை உதாரணம்.

இவ்வாறு ஞானம் என்பதும் பக்தியின் ஒரு பகுதியே என்ற ஒரு நிலை இங்கே உருவானது. தூய ஞானமார்க்கத்தை முன்வைத்த சங்கரரின் பேரில் அமைந்த மடங்களே,சடங்குகளையும் அனுஷ்டானங்களையும் முன்வைப்பவையாக மாறின.

ஆகவே இங்கே கடவுள் நம்பிக்கை என்று சொல்பவர்கள் சொல்லும் கடவுள் என்பது பெருமதங்கள் [சைவம், வைணவம், சாக்தம், இஸ்லாம், கிறித்தவம் போன்றவை] முன்வைக்கும் கடவுள் உருவகம்தான். படைத்தல் காத்தல் அழித்தல் என்ற முத்தொழிலையும் செய்யக்கூடிய, பிரபஞ்சத்தின் நாயகனாக இருக்கக்கூடிய, அனைத்தும் அறிந்த, கருணை நிறைந்த ஒரு மையவடிவம். அந்த சக்திமேல் உனக்கு நம்பிக்கை உண்டா என்பதே அக்கேள்விக்கான அர்த்தமாக இருக்கிறது.

உண்மையில் கடவுள் என்ற கருத்துரு,இந்த வடிவம் மட்டும் கொண்டதல்ல. இன்னும் நுட்பமான,இன்னும் பிரம்மாண்டமான பல வடிவங்கள் அந்தக் கருத்துருவத்திற்கு உண்டு. இந்து மெய்ஞ்ஞான மரபின் ஆதி கடவுளுருவகமான பிரம்மம் என்பது,இதைவிட இன்னும் பிரம்மாண்டமான ஒரு தரிசனம். அதன் பல்வேறு விளக்கங்கள் நம் மரபில் நிறைந்து கிடக்கின்றன. நாம் அவற்றை அறிவதேயில்லை.

இந்தப் பெருந்தெய்வங்களையே பிரம்ம ஸ்வரூபம் என்று சொல்லி அந்த மூல தரிசனத்துடன் பிணைத்துத்தான் பக்தி இயக்கத்தின் ஞானிகள் சிறப்பிக்கிறார்கள். அதாவது பிரம்மம் என்ற பிரம்மாண்டமான தரிசனத்தில் இருந்து கைக்குச் சிக்கும்படி அள்ளப்பட்ட சிறிய தரிசனங்களே சிவன் விஷ்ணு முருகன் போன்ற நம் தெய்வ உருவகங்கள்.

ஞானமார்க்கம், நம்பிக்கையின் அடிப்படையில் இயங்குவதல்ல. தேடலின் அடிப்படையில் இயங்குவது. கடவுள் நம்பிக்கை உண்டா என ஒரு ஞானமார்க்கியிடம் கேட்கக்கூடாது. நம்பிக்கை இருந்ததென்றால் அவரது ஞானமார்க்கம் முடிவுற்றது, அவர் விடைகளை அடைந்துவிட்டார் என்பதே அர்த்தமாக இருக்கும். அவர் தேடுவது கடவுள் என்ற நம்பிக்கையை அல்ல, கடவுள் என்ற சுய அறிதலை. அல்லது சுய அனுபவத்தை.

இந்து மரபில் பக்தி இயக்கம் உருவாக்கும் கடவுள் நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட விரிவான அறிவியக்கம் ஒன்று உண்டு. அதன் மையமாக உள்ளது வேதாந்தம். அதன் அடுத்த படி அத்வைதம் . நாராயணகுரு அத்வைதி. நித்ய சைதன்ய யதி அத்வைதி. நான் அவரது மாணவன். நித்யாவும்,அவரது ஆசிரியர் நடராஜ குருவும்  எந்தக் கோயிலுக்கும் சென்றவர்களல்ல. எந்தச் சடங்குகளிலும் நம்பிக்கை கொண்டவர்கள் அல்ல. அவர்களிடம் நீங்கள் கடவுள்மேல் பக்தி கொண்டவரா என்று கேட்டிருந்தால் இல்லை என்றே சொல்லியிருப்பார்கள்.

வேதாந்தமும் அத்வைதமும் உருவகிக்கும் கடவுள்,பிரபஞ்சத்துக்கு வெளியே நின்று பிரபஞ்சத்தைப் படைத்துக் காத்து அழிக்கும் ஒரு புறச்சக்தி அல்ல. எந்த அலகிலா ஆற்றல் பிரபஞ்சமாகவும் நாமாகவும் இங்குள்ள அனைத்துமாகவும் தன்னை வெளிப்படுத்தியிருக்கிறதோ அதுதான். அதைத்தான் ஈஸாவாஸ்யம் இதம் சர்வம் [இங்குள்ளதெல்லாம் இறையே] என்றும் அது நீயே [தத்வமசி]  என்றும் அகம் பிரம்மாஸ்மி [நானே இறை] என்றும் உபநிடதங்கள் சொல்கின்றன

நான் அதில் நம்பிக்கை கொண்டவன். என்னுடைய இறைவனை நான் வழிபட வேண்டும் என்றில்லை. பிரார்த்தனை செய்யவேண்டுமென்பதில்லை. அந்த  அலகிலா காலவெளியாற்றலை என் முற்றத்தில் துளிர்க்கும் புல்நுனியில் என்னால் உணர முடிந்தால் போதும். அந்த இரண்டின்மை உணர்வையே வேதாந்தம் மெய்ஞ்ஞானம் என்கிறது.

வேதாந்த்ததின் மெய்ஞ்ஞானத்தின் இன்னொரு முகமே பௌத்தம் முன்வைப்பது. அதன் கடவுள் என்பது மகாதர்மம். நீர் ஓடுவதும் பாறை அங்கேயே இருப்பதும் அவற்றின் தர்மங்கள். அத்தகைய கோடானுகோடி தர்மங்களால் ஆனது இப்பிரபஞ்சம். அந்த ஒட்டுமொத்த தர்மங்களின் கூட்டையே மகாதர்மம் என்கிறார்கள். பிரபஞ்சநெறி அது. அது பிரபஞ்சத்திற்கு வெளியே இல்லை. பிரபஞ்சம் இருப்பதனால் அது இருக்கிறது. அது இருப்பதனால் பிரபஞ்சம் இருக்கிறது.

இந்த இறையுருவகங்களுக்கும் மதங்களின் இறையுருவகங்களுக்கும் பெரிய வேறுபாடு உண்டு என்பதைச் சொல்லாமலேயே புரிந்துகொள்வீர்கள். மதங்களின் நோக்கில் இது நாத்திகமே. நாத்திக நோக்கில் இது ஆத்திகம். ஆனால் நவீன அறிவியலுடன் எந்த மோதலும் இல்லாத பிரபஞ்ச தரிசனம் இது. இந்திய மெய்ஞ்ஞான தரிசனங்களில் முதலில் உருவானதும் இதுவே. மையமானதும் இதுவே. இதை உள்வாங்க முடியாதவர்களுக்காக, லௌகீகத்தில் இதை பொருத்த முடியாதவர்களுக்காகவே பிற இறைத்தரிசனங்கள் உருவாயின.

எந்த இந்துக் கடவுளையும் இந்த இருமை நிலையில் வைத்தே வழிபடுகிறார்கள். அறியமுடியாத அலகிலா ஆற்றலாகவும் உருவம் கொண்ட இறைவடிவமாகவும் அதை ஒரே சமயம் வணங்குகிறார்கள்.

ஆத்திகம் நாத்திகம் என்ற எளிய பிரிவினை,ஆபிரகாமிய மதங்களுக்கு மட்டுமே பொதுவாகப் பொருந்தக்கூடியது . பிரபஞ்சத்தைப் படைக்கும் காக்கும் அழிக்கும் ஒரு புறச்சக்தியாக, ஒரு இருப்பாக, ஓர் ஆளுமையாக அவர்கள் கடவுளை நினைக்கிறார்கள். அந்தக்கடவுள் இருக்கிறார் என நம்புகிறவன் ஆத்திகன். நம்பாதவன் நாத்திகன். [அஸ்தி என்றால் இருப்பு. இருப்பை நம்புகிறவன்,இருப்பை மறுப்பவன் என்று இச்சொற்கள் பொருள்படுகின்றன]

வேதாந்தம் பௌத்தம் போன்ற மரபுகளின் இறையுருவகங்கள் இந்த இருமையைக்கடந்தவை. இப்படிச்சொல்லலாம். நீங்கள் அந்தப்பக்கத்தில் நின்று பார்க்கும் அதை நான் இந்தப்பக்கத்தில் நின்று பார்க்கிறேன். நமக்குள் முரணியக்கம் உண்டு, முரண்பாடே இல்லை.

ஜெ

பின்னூட்டம்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s