இந்திய ஞானமரபும் காந்தியும் [தொடர்ச்சி]
[08-09-10 அன்று பினாங்கு [மலேசியா] தண்ணீர் மலை காந்தி மண்டபத்தில் ஆற்றிய உரை]
ஜெயமோகன்.இன் ல் இருந்து
[ஒரு புத்தகக்கடையில். ஹார்வர்ட் பல்கலைக்கழகம் அருகில்]
காந்தி அவரது சாத்வீகப்போராட்டமுறையை சமண முனிவர்களிடமிருந்தே கற்றுக்கொண்டார். அவரது ஆயுதம் தியாகம். அவரது அதிகாரம் அறத்தாலானது. தான் நம்பும் ஒன்றுக்காக உயிர்துறக்க எப்போதும் அவர் தயாராக இருந்தார். அந்த தியாகமே அவரை வெல்ல முடியாதவராக ஆக்கியது. அவரது உண்ணாநோன்பும் சத்யாக்கிரகமும் சமணத்தின் வடக்கிருத்தல் அன்றி வேறல்ல என்பதை நாம் உணரலாம். காந்தியின் தோற்றம் கூட வெள்ளுடை அணிந்த ஒரு ஸ்வேதாம்பர சமணமுனிவரின் தோற்றமேயாகும்.காந்தியின் தத்துவப்பார்வையின் இன்னொரு தளம் வைணவம். கிபி பதினான்காம் நூற்றாண்டில் ஆந்திர மாநிலத்தில் பிறந்த ஸ்ரீவல்லபர் உருவாக்கிய வைணவப்பிரிவே புஷ்டிமார்க்கம் எனப்படுகிறது. வல்லபர் தன் மதத்தை சுத்தாத்வைதம் என்றார். பரம்பொருள் மட்டுமே உள்ளது ஜீவாத்மாக்கள் அதன் லீலைகளே என அது வாதிட்டது. பரம்பொருளை கிருஷ்ணனாகவும் ஜீவாத்மாக்களை கோபிகைகளாகவும் வல்லபர் உருவகித்தார். ஆடி பாடி கிருஷ்ணலீலைகளை வழிபடுவதே புஷ்டிமார்க்கத்தின் வழிமுறை. வாழ்நாளெல்லாம் பிருந்தாவனத்தில் வாழ்ந்த வல்லபரின் புஷ்டிமார்க்கம் குஜராத் ராஜஸ்தான் உட்பட வடநாட்டில் பெரும்செல்வாக்கு பெற்றது. காந்தியின் குடும்பத்தினர் கிருஷ்ண பக்தர்களானார்கள்.
இதில் ஒரு சுவாரசியமான முரண் உள்ளது. புலன் ஒறுப்பையே முதன்மை நெறியாக முன்வைத்த சமண மதத்தில் இருந்து புலன்வழி களியாட்டத்தை இறைவழிபாடாக ஆக்கிக்கொண்ட புஷ்டி மார்க்கம் நோக்கி ஏன் ஒரு மாற்றம் நிகழ்ந்தது? எளிய விடைதான், ஒன்றின் உச்சம் அதற்கு எதிரான ஒன்றின் தேவையை உருவாக்குகிறது. நாணயம் திரும்பி விழுந்தது
காந்தி வைணவ மார்க்கத்தில் இருந்து பெற்றுக்கொண்டது என்ன? இரு விஷயங்களைச் சொல்லலாம் என்று படுகிறது. ஒன்று பூரண சமர்ப்பணம். அவர் கீதையின் செய்தியாக பெற்றுக்கொண்டது அதையே. விளைவுகளை இறைவனின் இச்சைக்கு விட்டுவிட்டு பரிபூரணமாக அவனை சரண் அடைதல். ஆகவே செய்யும்செயல்களில் பற்றுகொள்ளாமல் இருத்தல். இதையே காந்தி தன் கீதை உரைகளில் விளக்குகிறார். அதற்கு அனாசக்தியோகம் என்று அவர் பெயரிட்டார். வைணவத்தின் ஆதார தரிசனமான பூர்ண சமர்ப்பணம் அவரது ஆன்மீகத்தின் மையமாக எப்போதும் இருந்து வந்தது
வைணவத்தில் இருந்து காந்தி பெற்றுக்கொண்ட இன்னொரு முக்கியமான கருத்து என்பது, கைங்கரியம் எனலாம். பியாரிலாலுடன் காந்தி நிகழ்த்தும் உரையாடலில் பியாரிலால் மார்க்ஸியம் பற்றிச் சொல்கிறார். மிக எளிய விஷயங்களை செயற்கையான் ஒரு நடையில் சிக்கலாகச் சொல்கிறார் மார்க்ஸ் என்று காந்தி எண்ணுகிறார்.
காந்தி மார்க்ஸ் மீது விமர்சனமாக முக்கியமாகச் சொல்லும் ஒரு கருத்து கவனிக்கத்தக்கது. மார்க்ஸின் நோக்கில் உழைப்பு என்பது எப்போதும் எதிர்மறையான ஒன்றாகவே உள்ளது. உழைப்பில் இருந்து எந்த அளவுக்கு மக்களை விடுதலைசெய்கிறதோ அந்த அளவுக்கு அது மேலான சமூக அமைப்பு என அவர் நம்புகிறார். சுரண்டல் குறையக்குறைய உழைப்பாளிகள் வேலையில் இருந்து விடுபட்டு கேளிக்கைகள் மற்றும் பண்பாட்டு நடவடிக்கைகளை நோக்கிச் செல்லவேண்டுமென அவர் நினைக்கிரார். அது மார்க்சின் பிரபுகுலம் சார்ந்த நோக்கு.
ஆனால் காந்தியை பொறுத்தவரை அவர் உழைப்பை முற்றிலும் வேறு கோணத்திலேயே பார்க்கிறார். ஒருவன் ஒரு பொருளை உருவாக்குவதென்பது புறவயமான நிகழ்வு மட்டும் அல்ல. அப்போது அவன் தன் அகத்தையும் சேர்த்தே உருவாக்குகிறான். கூடை ஒன்றை முடைபவன் தன் அகத்தையும் சேர்த்தே முடைகிறான். உழைப்பு அளிக்கும் ஆன்மீக விடுதலை குறித்த பிரக்ஞை மார்க்ஸ¤கு இருக்கவில்லை என காந்தி நினைத்தார். கேளிக்கை மனிதனுக்கு தேவையில்லை, தன் அகம் மலரும் உழைப்பே அவனை நிறைவுள்ள மகிழ்ச்சியான மனிதனாக ஆக்கும் என்று சொன்னார்.
மார்க்ஸ் உழைப்பு என்னும்போது ஆலைத்தொழிலாளியை மட்டுமே கணக்கில் கொண்டார். ஆலைசார்ந்த உழைப்பே முதலாளித்துவ சமூகத்தில் இருக்கும் என்றும் கைத்தொழில் என்பது நிலப்பிரபுத்துவ யுகத்துடன் காலாவதியாகிவிட்டது என்றும் நினைத்தார். ஆலையுழைப்பு என்பது அகம் மலர வாய்ப்பற்றது. கட்டாய உழைப்பு அது. மனிதனை உழைப்பில் இருந்து அன்னியமாக்குவது. மார்க்ஸ் அந்த அன்னியமாதலில் இருந்தே ஆரம்பிக்கிறார் எனலாம்.
ஆனால் ஆலையுழைப்பில் இருந்து தனிப்பட்ட படைப்பூக்கம் கொண்ட அந்தரங்க உழைப்பு நோக்கிச் செல்ல காந்தி அறைகூவினார். ஆலை என்ற கருதுகோளே காந்திக்கு உகந்தது அல்ல. உழைப்பில் சேவையும் படைப்பும் இருக்கவேண்டும் என்பார். அதற்கு அவர் சொல்வது சிறிய அளவிலான உழைப்பே. ஆனால் காந்தியின் அந்த அறைகூவலை சாத்தியமற்ற கனவு என்ரே மார்க்ஸ் சொல்வார். வரலாற்றில் பின்னால்செல்வது சாத்தியம் அல்ல என்பார் மார்க்ஸ்.
காந்தியின் உழைப்பு பற்றிய பார்வையில் இருப்பது கைங்கரியம் என்ற கருதுகோள்தான். அது வைணவத்தில் இருந்து அவர் பெற்றுக்கொண்டது. கைங்கரியம் என்பது தன் கைகளால் ஆற்றப்படும் உழைப்பு. கருணையையும் சேவையையும் படைப்பூக்கத்தையும் பின்னணியாகக் கொண்டது. அந்த உழைப்பு ஒருவனை அகவிடுதலை நோக்கிக் கொண்டுசெல்லும் என்றார் காந்தி. ஒவ்வொருவரும் தன் கைகளால் உழைத்தாகவேண்டும், இல்லையேல் சிந்தனைச்சுதந்திரம்கூட சாத்தியமல்ல என்றார். கைங்கரியத்தின் சின்னமே ராட்டை. அது தன் கைகளால் ஒன்றை படைக்கும் இன்பத்தையும் நிறைவையும் அளிப்பது என்றார் காந்தி. அது வெறும் ஒரு பொருளியல் செயல்பாடு மட்டும் அல்ல, அது ஒரு வழிபாடு, ஒரு தியானம்.
ஏற்கனவே சொன்னதுபோல காந்தியின் சமணமும் காந்தியின் புஷ்டிமார்க்க வைணவமும் ஒன்றுக்கொன்று முரணானவை. ஒன்று புலன்களை ஒறுக்கச் சொன்னது. இன்னொன்று வெளிப்படுத்திக் கொண்டாடச் சொன்னது. காந்தி அவரது தரிசனங்களில் சமணத்தையே சார்ந்திருந்தார். அவர் ராதாமாதவ வழிபாடு செய்ததில்லை. கோயில்களுக்குச் சென்றதில்லை. புலன்களை அடக்கச் சொன்ன காந்தி கஜுராஹோ சிற்பங்களை களிமண் வைத்து மூடிவிடவேண்டும் என்றார்.
ஆனால் அவருக்குள் வைணவதரிசனம் வாழ்ந்தது. ஆனால் அவரது பஜனைகளில் புஷ்டிமார்க்க முறையின் வலுவான பாதிப்பு இருந்தது. குறிப்பாக வைஷ்ணவ ஜனதோ என்ற புகழ்பெற்ற பாடலைச் சொல்லலாம். சமணம் வைணவம் என இரு ஞான அமைப்புகளும் அவருள் இருந்தன. அவை கொண்ட முரண்பாட்டை நாம் காந்தியின் ஆளுமை முரண்பாடாக காணலாம். பலதளங்களில் காந்தி அந்த முரண்பாட்டை வெளிப்படுத்தினார்.
தன் கடைசிக்காலத்தில் காந்தி செய்த பிரம்மசரிய சோதனைகள் புஷ்டிமார்க்க வைணவத்தில் உள்ள சஹசயனம் என்ற கேளி யோக முறையைச் சேர்ந்தவை. ஆனால் வைணவத்தின் அந்த ரகசிய வழிமுறையை அவர் வெட்டவெளியில் நிர்வாணமாக தங்கும் சமண துறவிக்குரிய மனநிலையில் அப்பட்டமாக வெளிப்படையாகச் செய்தார். அது அவருக்கு உரிய பயனளிக்கவில்லை, மனத்துன்பங்களையே அளித்தது. வாழ்நாள் முழுக்க வைணவமும் சமணமும் காந்திக்குள் போராடியபடியேதான் இருந்தன.
காந்தியை நான் ஒரு ஊடகமாக கருதுகிறேன். ஏரியின் மடை போல. மரபின் இரு பெரும் வெள்ளங்கள் அவர் வழியாகக் கொப்பளித்துப் பெருகி நம் நவீன காலத்தை அடைந்தன. அவர் மரபும் நவீனமும் சந்திக்கும் ஒரு புள்ளி. அத்தகைய மையங்களில் எப்போதும் இருக்கும் குழப்பங்களும் முரண்பாடுகளும் காந்தியின் ஆன்மீகத்திலும் இருந்தன. ஆனால் பிரம்மாண்டமான நம் மரபை நவீன யுகத்தில் நின்றுகொண்டு நேர்மையுடன், நடைமுறை நோக்குடன் அணுகும் ஒவ்வொருவரும் காந்தி சந்தித்த சிக்கல்கள் மற்றும் முரண்பாடுகள் வழியாகவே செல்ல வேண்டியிருக்கும்
தத்துவத்துறையில் காந்தியின் பங்களிப்பு என்ன? அவர் எந்த தத்துவநூலையும் எழுதவில்லை. கோட்பாடுகளை உருவாக்கவில்லை. அவரது நூல்கள் அவ்வகையில் முக்கியமானவையும் அல்ல. ஆனால் தத்துவத்தை நடைமுறைப்படுத்துபவர் என்ற முறையில் அவர் முதன்மையானவர்.பல்லாயிரம் வருடத்தொன்மை கொண்ட நம் தத்துவ மரபுகளுக்கு இன்றுள்ள பங்களிப்பு என்ன என்பதை அவர்தான் நவீன உலகுக்குக் காட்டினார்.
காந்தி ஞானி அல்ல கர்மயோகி. தரிசனங்களில் அவருக்கு ஆர்வமில்லை. அவருக்கு செயலில் மட்டுமே ஈடுபாடு. அவர் எழுதியதும் பேசியதும் செயல்பாட்டைப்பற்றி மட்டுமே. மேலும் மேலும் வாசிப்பதைப்பற்றி அவர் அக்கறை கொள்ளவில்லை. கற்றவற்றை செயலில் கொன்டுவருவதையே அவர் இலக்காகக் கொண்டார். அவரை ஒரு practicing philosopher என்று சொல்லலாம். பல ஆயிரம் வருடம் சிந்தனைகளில் மறுசிந்தனைகளில் காலங்களைச் செலவிட்ட ஒரு மரபின் நுனியில் ஒரு செயல்வீரர் வந்துசேர்ந்ததும் நல்லூழ்தான்..
நன்றி