தீராநதி நேர்காணல்- 2006
ஜெயமோகன்.இன் ல் இருந்து
[தெங்குமராட்டா]
தீராநதி:- இக்காப்பியத்தின் தொடக்கம் எப்படி உருவானது?
ஜெயமோகன்:- நான் என்றுமே பெருங்காவியங்களின் வாசகன். ஏற்கனவே மகாபாரதம் குறித்துப் பல கதைகள் எழுதியிருக்கிறேன். சிலப்பதிகாரத்தைப் படிக்கையில் ஒரு வரி என்னைக் கவர்ந்தது. கண்ணகியை ”வண்ணச்சீறடி மண்மகள் அறிந்ததிலள்” என்கிறார். மண்ணில் கால்படாது வாழ்ந்தவள். ஆனால் அவள் மதுரையில் பாண்டியன் அவைக்குச் செல்லும்போது அவளை வாயிற்காவலன் ”கொற்றவை” என்கிறான். இந்த மாற்றம் புகார் மதுரை பயணத்தில் நடந்தது. அது சிலப்பதிகாரத்திலும் ஓரளவு சொல்லப்பட்டுள்ளது. பயணம் தொடங்கும் கண்ணகி ஒரு பேதைப் பெண். முடிக்கும் கண்ணகி அமைதியும் ஆழமும் கொண்டவள். இந்தப் பயணத்தை அவள் ஐந்து நிலங்கள் வழியாகச் செல்கிறாள் என உருவகித்துக் கொண்டு. ஓர் அகவயப் பயணமாக சித்தரித்து நாவலாக எழுதவேண்டுமென எண்ணினேன்.
ஆனால் பல பக்கங்கள் எழுதியபின் தெரிந்தது கண்ணகியை யதார்த்த சித்தரிப்புக்குள் கொண்டுவர இயலாது என. அவள் கருவறைத் தெய்வம் போன்றவள். கடைத்தெருவில் நடமாட முடியாது. ஆகவே ஒரு வகைப் படிம மொழியில் அவள் கதையைச் சொல்ல வேண்டியதாயிற்று. அவ்வடிவிலேயே பலமுறை எழுதியபின் தெரிந்தது. கண்ணகியின் கதையைக் கண்ணகியில் தொடங்க முடியாது என, அவளில் சன்னதம் கொண்ட மூலவல்லமைகளைக் கண்டடைய வேண்டும் என, ஆகவே என் புதுக்காப்பியம் குமரிக்கண்டம் நோக்கிச் சென்றது. நம் மனம் தொட முடியாத ஆழத்திலிருந்து தொடங்கினேன்.
தீராநதி:- மொத்தத் தொகுப்பாக வந்துள்ள உங்கள் சிறுகதைகளை இப்போது சேர்த்து வாசிக்கும் போது, பெரும்பாலானவற்றில், தொடக்கத்தில் ஒரு தர்க்கம் நிறுவப்பட்டு, இறுதியில் அது தகர்க்கப்படுவதைப் பார்க்க முடிகிறது. உங்கள் நாவல்களிலும் இதனைப் பார்க்க முடிகிறது. ஒரு படைப்பு சூத்திரமாக உங்களது அனேக படைப்புகளில் இது இருக்கிறது என்ற விமரிசனத்தை ஏற்றுக்கொள்வீர்களா?
ஜெயமோகன்:- இல்லை. இது மேலோட்டமான ஒரு மனப்பதிவு என்று எண்ணுகிறேன். என் ஆக்கங்கள் பொதுவாக உள்ளுணர்வின் நுண்மையான ஒரு தளம் நோக்கி எழ முனைகின்றன.
தீராநதி:- தர்க்கத்தை எவ்வளவு தூரம் முக்கியமானதாக நினைக்கிறீர்கள்?
ஜெயமோகன்:- கதைகளின் பலமும் பலவீனமுமாக நான் எண்ணுவது அவற்றின் உணர்ச்சிவேகத்தைத்தான். சிலசமயம் அவை கட்டற்றுப் பெருகிவிடுகின்றன. அதற்கு ஒருவகையான கரைகட்டும் முயற்சியாக தர்க்கத்தை நான் கையாள்கிறேன். அதைப்போலவே நுண்ணுணர்வாலான ஆழ்தளத்துக்குச் செல்லும்போது மனம் படிமங்களைக் கட்டற்றுப் பெருக்கிக் கொள்கிறது. அதையும் தர்க்கம் மூலம் எல்லைக்குள் நிறுத்த முயல்கிறேன். ஆக, தர்க்கம் என்னைப் பொறுத்தவரை ஒரு கட்டுப்படுத்தும் கூறு மட்டுமே.
நான் என்ன சொல்கிறேன் என்பது ஓரளவு தியானம் பழகியவர்களுக்குப் புரியும். தியான மரபுகள் தொடர்ந்து ஆழ்தலையும் அமைதலையும்தான் வலியுறுத்துகின்றன. தியானம் மூலம் அடையப்படும் அனைத்துமே தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட தளத்தில்தான் உள்ளன. அவற்றைப் பகிர்வதுகூட இயல்வதல்ல. ஆனால் நெடுங்காலம் முதல் எல்லா தியான மரபுகளிலும் நுண்ணிய தர்க்கமும் தேவைப்பட்டிருக்கிறது. தியானத்தில் அமர்ந்ததுமே மனம் கற்பனைகளில் திசையிழந்து தெறிக்கிறது. எதிர் எதிரே வைக்கப்பட்ட ஆடிகள் போல பிம்பங்களைப் பெருக்கிக் கொள்கிறது. சிலசமயம் பித்துப் பிடிக்கும் அளவுக்கு உணர்ச்சிவேகம் ஏற்படுகிறது. இப்படி ஒரு கொந்தளிப்பு உருவாகும்போது அதை நெறிப்படுத்த தர்க்கம் தேவைப்படுகிறது.
உதாரணமாக ஜெ. கிருஷ்ணமூர்த்தியை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் சொல்வதை ஆழ்ந்து அனுபவபூர்வமாக உள்வாங்காத ஒருவருக்கு, அவர் தர்க்கங்களைக் கட்டமைத்தபடியே செல்வதாகத் தோன்றும். வெற்று தர்க்கமாகக்கூட சிலருக்குப் படலாம். ஆனால் அவர் தொடர்ந்து தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட ஒன்றையே முன்வைக்கிறார். அங்கே செல்லும் பாதையை நமக்கு வகுத்தளிப்பதில்லை. அதை நாமே கண்டடையவேண்டும் என்பதே அவரது எண்ணம். ஆனால் பாதையின் இருபக்கக் கரைகளையும் வகுத்துத் தருகிறார். அதற்குத்தான் தர்க்கத்தைப் பயன்படுத்துகிறார்.
மெய்ஞானத்தின் திண்ணையில் பசித்த காவல்நாய் உள்ளது. நமது போத மனம்தான் அது. அதற்கு சில இறைச்சித்துண்டுகளைப் போட்டுவிட்டு உள்ளே நுழைகிறோம். அந்த இறைச்சித்துண்டுதான் தர்க்கம்.
இலக்கியத்துக்கும் இது பொருந்தும்.தர்க்கபூர்வமான மாபெரும் கட்டமைப்பு கொண்டவையே தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி, தாம்ஸ்மன், நிகாஸ் கசன் சகிஸ் போன்ற பேரிலக்கியவாதிகளின் ஆக்கங்கள். பலசமயம் இவர்களின் நாவல்கள் பலநூறு பக்கங்களுக்குத் தூய தர்க்கங்களாகவே இருப்பதைக் காணலாம். குறிப்பாக ”கரமசோவ் சகோதரர்கள்”. அது முற்றிலும் நேரடியான தர்க்கங்களால் ஆனது. கதாபாத்திரங்களே பக்கம் பக்கமாக விவாதிக்கின்றன. கதாபாத்திரங்கள் கருத்துத் தரப்புகளாகவே வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால் தர்க்கம் மீது ஏறி வேறு ஒன்றை புனைவு தொடுகிறது.
ஆனால் அடிப்படை வினாக்களைக் கையாளாமல் வெறுமே யதார்த்தச் சித்தரிப்பை அளிக்கும் ஆக்கங்களுக்குத் தர்க்கம் தேவையில்லை. காரணம் அவை நுண்ணிய மையம் நோக்கி செல்வதேயில்லை. தமிழில் நாம் எழுதும் படைப்புகளில் மிகப்பெரும்பாலானவை இப்படிப்பட்டவை. இவற்றை வாசித்து நாம் எளியவாசிப்புக்குப் பழகிவிட்டிருக்கிறோம். ஆகவேதான் படைப்பின் தர்க்கம் நம்மில் பலருக்கு சிக்கலாக உள்ளது. உயர்தர்க்கம் செயல்படாத முக்கிய நாவல் ஏதும் இல்லை.
தீராநதி:- உங்கள் படைப்புகளில் தொல்குடி தாய் தெய்வமான நீலியின் படிமமும் தொடர்ந்து வருகிறது. ஏன் அது வருகிறது என்பது குறித்து விளக்க முடியுமா?
ஜெயமோகன்:- உலகம் முழுக்க முக்கிய படைப்பாளிகளின் ஆக்கங்களில் அப்படி சில படிமங்கள் அல்லது சில தொன்மங்கள் மீண்டும் மீண்டும் வருகின்றன. அவை அப்படைப்பாளியின் அகத்துக்குள் செல்லும் வழிக்கான சாவிகள். தஸ்தயேவ்ஸ்கியின் ஆக்கங்களில் பாவத்திலிருந்தும் இழிவிலிருந்தும் மீட்டுச்செல்லும் தூய இளம்பெண் ஒரு முக்கிய கதாபாத்திரம். அதே பெண்ணை அப்படியே நாம் தல்ஸ்தோய் நாவல்களில் காண்கிறோம். அவளை அதற்குமுன் தாந்தேயின் ”டிவைன் காமெடி” காவியத்தில் ஃபீட்ரிஸ் தேவதையாகக் காண்கிறோம். இவை தெளிவாக வரையறை செய்யக்கூடிய விஷயங்கள் அல்ல. ஆழ்மனம் சார்ந்தவை. கலாச்சாரத்தின் ஆழத்திலிருந்து எழுபவை.
நீலி, என் குலதெய்வம்.நீலகேசி அம்மனின் ஒரு வடிவம்.நாங்கள் தாய்தெய்வ வழிபாடு கொண்டவர்கள். பெண்வழிச் சொத்துரிமை கொண்டவர்களாக ஒரு தலைமுறைக்கு முன்புவரை இருந்தோம். என்னுள் உறையும் பழங்குடிமரபுவரை செல்லும் தொன்மம் இது. அதை எழுதும்போது எனக்கு ஓர் அபூர்வ மனக்கிளர்ச்சி ஏற்படுகிறது. அதைத் தொடர்ந்து நான் வெகுதூரம் செல்ல முடிகிறது. அவ்வளவுதான் சொல்ல முடியும்.
தீராநதி:- தொடக்கத்தில் நீங்கள் கவிதைகள் எழுதியுள்ளீர்கள். அதன்பிறகு விட்டுவிட்டீர்கள். ஏன்?
ஜெயமோகன்:- எல்லாரையும்போல நானும் மொழியைத் தீட்டிக் கொள்ளவே கவிதை எழுத ஆரம்பித்தேன். என் வடிவம் நாவல் என என் போக்கில் கண்டுபிடித்தேன். வரலாற்றையும் தத்துவத்தையும் உள்ளிழுத்தபடி. உள்ளுணர்வின் ஆழங்களுக்குள் செல்ல விழைவது என் படைப்பியக்கம். அதற்குரிய வடிவம் நாவலே. அது மட்டுமே இன்று வாழ்க்கையின் முழுமையை அள்ள முனையும் வடிவம். அதற்குள் எல்லா வகையான இலக்கிய வடிவங்களுக்கும் இடமிருக்கிறது. என் நாவல்களில் நான் தூய கவிதையைத் தொட்டிருக்கிறேன் என்று எண்ணுகிறேன். ஆகவே தனியாகக் கவிதை எழுதும் எண்ணம் எழவில்லை.
தீராநதி:- உங்கள் கவிதைகளைத் தொகுத்துப் புத்தகமாகக் கொண்டுவரும் முயற்சியைத் தொடங்கி, பிறகு அதனை வேண்டாம் என்று நிறுத்தியதாக அறிகிறோம். ஏன் கவிதைகள் தொகுப்பாக வருவதைத் தவிர்க்கிறீர்கள்?
ஜெயமோகன்:- அவை என் ஆரம்பகால முயற்சிகள். இன்று அவற்றுக்கு என் இலக்கிய உலகில் இடமில்லை.