புத்தருக்குத் தியானம், எனக்கு எழுத்து.- ஜெயமோகன் – 2
[சந்திப்பு : மணா படங்கள் : ஸ்நேகிதன். நன்றி: தீராநதி ]
நன்றி: அழியாச்சுடர்கள் தளம்
கே : அப்போதிருந்த உங்களது மனநிலைக்கு நாவல் ஒத்திருந்ததா.
ஜெயமோகன் : ஆமாம். உதாரணமாக, `குடிக்கிறேன்-அதுவும் தற்காலிகத் தற்கொலைதான்’ என்று அந்த நாவலில் வரும் வாக்கியம் என்னை உலுக்கியெடுத்துவிட்டது. நான் உணர்கிற உலகத்திற்கு நெருக்கமானதாக அந்த நாவல் இருந்தது. சுந்தர ராமசாமியை நேரடியாகச் சந்தித்துப் பேசினேன். ரொம்பவும் சகிப்புத் தன்மையுடன் இருந்தார் அவர். நான்தான் அதிகம் பேசுவேன். “உங்களிடம் ஒரு கலை இருக்கிறது. நீங்கள் எழுதவேண்டும். `ஆர்டிவெய்ங்’ என்கிற சைக்கியாட்ரிஸ்ட் “வேலை செய்வதுதான் மனநெருக்கடிக்குப் பெரிய சிகிச்சை’ன்னு சொல்றார். அதனால் எழுதுங்கள்” என்று சொன்னார். உடனே அவருக்குக் கத்தை கத்தையாகக் கடிதங்கள், சிறு கதைகள், குறுநாவல்கள் எழுதி அனுப்பினேன். இதில் ஒரு கவிதை அப்போது வெளிவந்து கொண்டிருந்த `கொல்லிப்பாவை’ என்கிற சிறு பத்திரிகையில் வெளியானது. மறுபடியும் எழுத்துலக பிரவேசம் ஆரம்பித்துவிட்டது.”
கே : படைப்பு ரீதியாக இயங்க உந்து சக்தியாக வேறு யார் அப்போது இருந்தார்கள்.
ஜெயமோகன் : நான் எழுத்தாளர்களைச் சந்திப்பதில் ரொம்பவும் கூச்சம் உள்ள ஆள். சந்தித்த முதல் எழுத்தாளர் சுந்தர ராமசாமிதான். அவருக்கு மேற்கத்திய மனம் உண்டு. அவர் அதைச் சொல்ல மாட்டார். எனக்கும் அவருக்கும் குரு சிஷ்ய உறவு என்று சொல்லிக் கொள்வதில் எனக்குத் தயக்கம் கிடையாது. புத்தகங்கள் நூலகங்களில் இருக்கலாம்; கருத்துக்கள் இருக்கலாம்; ஆனால் சிந்திப்பதற்கான வழிமுறையை ஒரு தனி நபர்தான் உருவாக்கிக் கொடுக்க முடியும். அவர் வாழ்ந்து காண்பித்தால்தான் அவரது லட்சியம் இன்னொருவரை வந்து சேர முடியும். அவர் அந்த மாதிரி அவரைக் குருவாக கண்டெடுத்த விஷயத்தில் நான் கொடுத்து வைத்தவன்தான்.
கே : மலையாளச் சாயல் படிந்த மொழி நடை உங்களுடையது, இந்த மொழியைக் கூர்மைப் படுத்தியதில் யாருக்குப் பங்கிருக்கிறது.
ஜெயமோகன் : என்னுடைய சமகால எழுத்தாளர்களை விடக் குறைவான சமஸ்கிருத வார்த்தைகள் கலந்த நடையைத்தான் நான் உபயோகப் படுத்துகிறேன். கோணங்கி, எஸ். ராமகிருஷ்ணன், பிரேம் போன்றவர்களின் படைப்புகளைவிட என்னுடைய படைப்புகளில் சமஸ்கிருதப் பிரயோகம் குறைவுதான்.
கே : ஆனால் உங்கள் நாவல்களில் விஷ்ணுபுரத்தில் அதன் பிரயோகம் அதிகமாக இருக்கிறதே.
ஜெயமோகன் : விஷ்ணுபுரத்தைப் பொறுத்த வரை அது சமஸ்கிருதத்தைப் பற்றின நாவல். அந்தச் சூழலையும், சிந்தனைகளையும் முன்வைக்கிற நாவல். அதற்கேற்றபடி உணர்வு பூர்வமாக சமஸ்கிருதம் அதில் கையாளப்பட்டிருக்கிறது. என்னுடைய படைப்பிலக்கியத்திலும், சிந்தனையிலும் நான் சார்ந்திருக்கிற மொழி சுந்தர ராமசாமியின் மொழி. இப்போது அதன் தாக்கம் சற்றுக் குறைந்திருந்தாலும், இன்றும் அவரது தாக்கம் என் படைப்பு மொழியில் உண்Êடு. எப்படி சுந்தர ராமசாமியிடம் புதுமைப் பித்தன் இருக்கிறாரோ, அது போல ஜெயமோகனிடம் சுந்தர ராமசாமி இருக்கிறார். அடுத்து என் மொழியைப் பாதித்தவர்கள் அசோகமித்திரனும், சுஜாதாவும்.
மொழியைக் கனகச்சிதமாகப் பயன் படுத்தியிருப்பவர் சுஜாதா. அவரைப் பற்றித் தமிழில் உருவாகியிருக்கிற சித்திரம் வேறுமாதிரியானது. வெறும் கணேஷ்-வசந்த் எழுத்தாளராக ஒரு கும்பல் பார்த்துக்கொண்டிருக்கிறது. அவர்களுக்கும் அவர் தீனி போடுகிறார். சர்வதேசத் தரம் வாய்ந்த இருபது கதைகளுக்கு மேல் அவருடைய கதைகளிலிருந்து தேர்ந்தெடுத்துக் கொடுக்க முடியும். அந்த அளவுக்கு நல்ல சிறுகதைகளை எழுதின கதாசிரியர்கள் தமிழில் அதிகபட்சம் பத்து, பதினைந்து பேர் தான் இருக்கிறார்கள். இதை சிறுகதையின் வரலாறு தெரிந்த யாரும் மறுக்க முடியாது. சுஜாதாவால் பெரிய அளவில் ஆழ்ந்த கேள்விகளையும், தேடலையும் உருவாக்க முடியாது. அந்த மாதிரியான விசாரணை அவரிடத்தில் இல்லை. ஆனால் வாழ்க்கையின் சூட்சமங்களை உணர்ந்து உள்ளே போகிற நல்ல எழுத்தாளர் அவர். `கமர்ஷியல்’ எழுத்தாளர் என்று அவரைப் புறக்கணித்துவிடமுடியாது.
சுஜாதாவின் மொழி தமிழின் மிக முக்கியமான மொழி, இருபத்தொன்றாம் நூற்றாண்டின் குணாம்சங்களைக் கொண்ட மொழி அது. அதில் குறிப்பிட்ட ஒழுங்கு உண்டு. நுட்பம் உண்டு. நளினம் உண்டு. நான் கூர்ந்து படிக்கிற எழுத்தாளர் அவர்.
அவருடைய தொடர்கதை ஒன்று, கணேஷ்-வசந்த் கதைதான். போக்குவரத்து நெருக்கடி. இவர்கள் காரில் உட்கார்ந்திருக்கிறார்கள். “அப்போது சோகையாய் ஒரு ஊர்வலம் கடந்து போயிற்று” என்று எழுதியிருப்பார். அது மனதில் ஏற்படுத்தக்கூடிய சித்திரம் எப்படிப்பட்டது ஆக்ரோஷமில்லாமல் ஒப்புக்கு ஒரு ஊர்வலம் போவதை `சோகை’ என்கிற ஒரு நுட்பமான வார்த்தை உணர்த்தி விடுகிறது. இதுதான் அவருடைய பாணி.
சமகாலத்தில் சட்டத்தில், விளம்பரத்தில், சினிமாவில், சினிமாப் பாட்டில் ஒரு விதத் தமிழில், இன்றைய `போஸ்ட் மாடர்னிச’ சூல்நிலையில் இந்த விதமான எல்லா மொழிநடையையும் படைப்புக்குள் கொண்டு வருவது என்பது ஒரு சவால். இதை சுஜாதாவால் எழுதமுடியும். அதற்கடுத்து என்னாலும் எழுத முடியும்.
கே : மொழி சம்பந்தமான கவனம் எப்போதும் உங்களிடம் இருந்து கொண்டிருக்கிறதா. மொழி நடையை முன்பே தீர்மானித்து விடுகிறீர்களா.
ஜெயமோகன் : அப்படி இல்லை. எழுதும்போது தான் அதற்கான திறமைகள் நம்மிடம் இருப்பது தெரியவருகிறது. நாய் துரத்தும் போதுதான் நம்மால் இவ்வளவு தூரம் தாண்டமுடியும் என்பது தெரிகிற மாதிரி. ஆனால் எப்போதும் ஒருவிதக் கவனம் இருந்து கொண்டிருக்கிறது. நான் சாலையில் போகும்போதுகூட எல்லா போஸ்டர்களையும், கண்ணீர் அஞ்சலி, காதனிவிழா போஸ்டர்கள், அதில் தெரிகிற வித்தியாசம் என்று எவ்வளவோ விஷயங்கள் உன்னிப்பான கவனத்துடன் பதிவாகிக்கொண்டே இருக்கின்றன.
இந்த அவதானிப்பையும், மொழியின் பிரயோகத்தையும் ஒன்றிணைக்க வேண்டும். என்னுடைய `பின் தொடரும் நிழல்’ நாவலைப் பார்த்தால் அதில் பனிரெண்டு வகையான மொழிநடை இருக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துண்டுப் பிரசுர மொழி நடை இருக்கிறது.
கே : பொதுவாக இப்போது சிறு பத்திரிகைகளில் எழுதுபவர்களிடம் இறுக்கமான மொழிநடை இருக்கிறது. இந்த மொழிநடைச் சிக்கலை நீங்கள் எப்படி எதிர்கொள்கிறீர்கள்.
ஜெயமோகன் : எனக்கும் மற்ற எழுத்தாளர்களுக்கும் உள்ள முக்கியமான வித்தியாசம் என்னவென்றால் எனக்குப் புதுவகையான படைப்பை உண்டாக்க வேண்டும் என்கிற எண்ணம் எப்போதும் கிடையாது. அப்படி நான் எழுதவும் மாட்டேன். மரபிலிருந்து புதிது புதிதாக எழுகிற கேள்விகள்தான் என்னை எழுத வைக்கின்றன. அதற்கேற்ற வடிவம்தான் முக்கியம். என்னைப் பொறுத்தவரை படைப்பு ஒரு விசாரணைதான்.”
ஒரு புதுவகை நாவலை எழுதிவிடலாம் என்கிற எண்ணம் அல்ல `பின் தொடரும் நிழலில்’ நாவலை நான் எழுதக் காரணம். ஒரு தத்துவத்துக்கும் வன்முறைக்கும் உள்ள தொடர்பு, லட்சக்கனக்கானவர்கள் சாகிற அவலம், வரலாறு என்பதுதான் என்ன என்கிற கேள்விகள் தான் அந்த நாவலை எழுதக் காரணம்.
தொடரும்…