புத்தருக்குத் தியானம், எனக்கு எழுத்து.- ஜெயமோகன் – 3
[சந்திப்பு : மணா படங்கள் : ஸ்நேகிதன். நன்றி: தீராநதி ]
நன்றி: அழியாச்சுடர்கள் தளம்
கே : துறவு நிலைக்கான தேடுதல் மனநிலை உங்களுக்கு இருப்பதை முதலில் தெரிவித்திருந்தீர்கள். துறவு நிலைக்கான அந்த தூண்டுதலும், வேகமும் படைப்பு நீதியாக நீங்கள் இயங்க ஆரம்பித்த பிறகு சமப்படுத்தப்பட்டிருக்கிறதா?”
ஜெயமோகன் : விஷ்ணுபுரம், எழுதுகிற நேரத்தில் ரொம்ப காலம் என்னை அலைக்கழித்த அடிப்படையான கேள்விகளையெல்லாம் அந்த நாவல் வழியாகப் பதிவு பண்ணிவிட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு எனக்கு இருந்தது. அதன் கதா பாத்திரங்கள் எல்லாம் என்னுடைய கிளைகள் தான். நான் அலைந்து திரிந்த காலமெல்லாம் அதில் இன்னொரு விதத்தில் பதிவாகியிருக்கிறது. என்னுடைய படைப்புகள் எல்லாமே என்னுடைய விசாரணையும், என்னுடைய துக்கங்களும்தான். ஏதோ இலக்கியம் படைக்க வேண்டும் என்பதெல்லாம் என் நோக்கம் அல்ல. திரும்பத்திரும்ப நான் சொல்வது இதைத்தான். புத்தருக்குத் தியானம் எப்படியோ அப்படி எனக்கு எழுத்து.
கே : ஒரு படைப்பை எழுதி முடித்த பின்பான மனநிலை எப்படி இருக்கும்?
ஜெயமோகன் : பெரும்பாலும் செய்து முடித்த ஒரு வேலை இன்னொரு வேலையைத் துவங்கத் தூண்டதலாக இருக்கிறது அல்லது கட்டாயத்தை ஏற்படுத்துகிறது என்று சொல்லலாம். விஷ்ணுபுரத்தில், விஷ்ணு என்கிற படிமம் பிரமாண்டமான கொந்தளிப்புடன் எனக்குக் கிடைத்த படிமம். அந்த அநுபவத்தை என்னால் மறக்க முடியாது. நான் உணர்ந்த அந்தப் பிரம்மாண்டம் அந்த நாவலில் இருக்கிறது என்றுதான் நினைக்கிறேன். அது ஒரு வகையான பிரபஞ்சத் தரிசனம். ஆனால் நாவல் முடியும்போது நீலியின் பாதங்களுக்குக் கீழே சின்னக் குமிழி மாதிரி கோபுரம் உடைந்து போய்விட்டது. அவ்வளவுதான் விஷ்ணு. நாவல் முழுக்கவும் ராஜகோபுரத்தைப் பார்ப்பவர்கள் அதலபாதாளத்தில் உடைந்து போகிற கோபுரத்தைப் பார்ப்பதில்லை.
இந்த நீலி யார் என்று பார்த்தால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பலநூறு வருஷங்களாக இருக்கிற பழங்குடி தெய்வம். என்னுடைய குழந்தைக்கு உடம்பு சரியில்லை என்றால் நான் பத்மநாப சுவாமி கிட்டே போய் வேண்டிக்கொள்ளமாட்டேன். இந்த மாதிரி மேலாங்கோட்டை அம்மன் கிட்டேதான் வேண்டிக் கொள்ளமுடியும். என்மனது அங்கே தான் இருக்கிறது. அந்த அம்மனைத்தான் என்னால் கடவுளாக ஏற்றுக் கொள்ள முடியும். என்னுடைய தெய்வம் நாக்கில் ரத்தம், கையில் சூலாயுதம், கோவில் பலி என்று தான் இருக்கிறது. என் முன்னோர்கள் போன அந்த வழியை விட்டு நான் வேறு வழியில் போக முடியவில்லை. ஆக விஷ்ணு எனக்கு வெளியிலிருந்து வந்த ஒரு விஷயம் தான். இந்தப் பின்னணியில் விஷ்ணுபுரம் முடிவதைப் பார்க்கும் போது எனக்கு அது ஒரு கண்டுபிடிப்பாகவும் இருக்கிறது.
கே : சிறுதெய்வ வழிபாடுகள் பற்றி சொன்னாலும் கூட, விஷ்ணு என்கிற விஷயம் இந்துமதக் கோட்பாடு சார்ந்து அரசியலாக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பின்னணியில்தான் இந்துமதத்தை நீங்கள் தூக்கிப் பிடிக்கிறீர்கள் என்கிற குற்றச்சாட்டு வருகிறது
ஜெயமோகன் : முதலில் இந்த மாதிரியான விமர்சனம் விஷ்ணுபுரத்தைச் சரியாகப் படிக்காதவர்களிடமிருந்து வருகிற விமர்சனம். நாவலில் `விஷ்ணு’ என்ற ஒன்றே கிடையாது. விஷ்ணுவின் பல்வேறு முகங்களைப் பிரித்துக் காட்டி முடிவில் ஒன்றுமில்லாமல் நீலி மட்டும் மீந்திருக்கிற நிலையில் முடிகிறது நாவல். விஷ்ணுவை ஆதார மூர்த்தியாக்கி மையப்படுத்துவதை இந்த நாவல் செய்யவில்லை. அவரை மையத்திலிருந்து விளிம்புக்கு நகர்த்தி இல்லாமல் பண்ணுகிறது. இது இந்த நாவலைப் படிக்கிற எந்தக் குழந்தைக்கும் கூடத் தெரியும் .
கே: “பின் தொடரும் நிழலின் குரல்” நாவல் குறித்து மார்க்சீயத்திற்கு எதிரான விரோதி என்கிற குற்றச்சாட்டு உங்கள் மீது வைக்கப்படுகிறதே
ஜெயமோகன் : மலையாள எழுத்தாளர் எம். கோவிந்தனின் பிரசித்தி பெற்ற வாக்கியம் ஒன்று உண்டு. “அறிவுக்கு எல்லையுண்டு, எதிர்ப்புமுண்டு, அறிவு இல்லாமைக்கு இரண்டுமே கிடையாது.” இது நமக்குப் பொருந்தும். எந்தவிதமான அறிவுக்கும் நேர்மையாக இருக்கும் பட்சத்தில் அது நம்மைப் பாதிக்கும். தமிழ்ச் சூழலில் எதிர்ப்பு, அல்லது கோபம் அல்லது குறைந்த பட்ச உறுத்தலை ஏற்படுத்தினால் உடனே அதற்கு ஒரு பிம்பம், ஒரு முத்திரை வந்துவிடுகிறது. எந்தத் தீவிரமான படைப்பாளி வாழும் காலத்தில் எதிர்ப்பைச் சம்பாதிக்காமல் இருந்திருக்கிறான்
`பின் தொடரும் நிழலின் குரல்’ நாவலைப் பற்றி உருவாகிற சித்திரமும் நாவலைப் படிக்காதவர்கள் உருவாக்குகிற சித்திரம் தான். நாவலைப் படிக்காமலே அறிவுஜீவித் தனமாகப் பேசும் ஒரு கும்பல் தமிழ்நாட்டில் இருக்கிறது. “முதலில் இது மார்க்சீயத்தைப் பற்றின நாவலே அல்ல. சோவியத் ரஷ்யா பற்றின நாவலும் கிடையாது. லட்சியவாதம் என்பது எப்படித் தவிர்க்க முடியாமல் வன்முறைக்குப் போகிறது கோடிக் கணக்கான அழிவை உண்டாக்குகிறது. சிறிது காலம் கழித்து அந்த லட்சியவாதம் தப்பு என்றால் இந்தக் கோடிக் கணக்கான அழிவுக்கு என்ன பதில் இந்தக் கேள்விகளைத்தான் பக்கம் பக்கமாகப் அந்த நாவல் பேசுகிறது.
இவர்கள் எழுப்புகிற சந்தேகம் எதுவும் வந்துவிடக்கூடாது என்பதால் அந்த நாவலிலேயே எஸ். எம். ராமசாமி என்கிற கதாபாத்திரம் நேரடியாக இதை விரிவாகச் சொல்லி விடுகிறது. பிறகும் இந்த நாவல் சோவியத் ரஷ்யாவைப் பற்றிப் பேசுகிறது என்று சொன்னால் உண்மையில் இந்த நாவலை எழுதுவதற்குத் தூண்டுதலாக இருந்தது சோவியத் ரஷ்யாவே கிடையாது. நாவலின் முழுக் கருவே இலங்கை தான். இந்தக் கேள்விகள் அனைத்தும் இலங்கையிலிருந்தே எழுகின்றன. அதை முன் வைத்துதான் இந்த நாவலை எழுதினேன்.”
கே : தமிழ் இலக்கிய உலகில் வாசகர்கள் என்பது சக எழுத்தாளர்கள்தான். இதை மீறி எழுத்தாளர்கள் அல்லாத ஒரு வாசகர் கூட்டம் உங்களுக்கு கிடைத்திருக்கிறதா.
ஜெயமோகன் : சொன்னால் ஆச்சர்யமாக இருக்கும், இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை ஏதாவது ஒரு விதத்தில் என் நாவல்களால் பாதிக்கப்பட்ட இளைஞர்களை நான் சந்திக்கிறேன், யாரோ எங்கோ இந்தப் படைப்புகளை இயல்பாக, எந்த முன் அபிப்பிராயங்கள் இல்லாமல் படிக்கிறார்கள், கடிதம் எழுதுகிறார்கள். சிறு பத்திரிகை வட்டாரத்திற்கு வெளியேதான் உண்மையில் வாசகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தான் நிஜமாகவே படைப்புகளைப் படிக்கிறார்கள்.
`விஷ்ணுபுரம்’ வந்த பிறகுதான் சிறு பத்திரிகை வட்டாரத்தைத் தாண்டி நான் வெளியே போனேன். அவர்கள் கடிதம் எழுதுகிறார்கள், சொந்த அநுபவத்துடன் எழுதுகிறார்கள். அது ஆரோக்யமாக இருக்கிறது.
கே : உங்களது படைப்புகளில் வெளித் தெரிகிற ஆன்மீகச் சாயல்; அதன் பின்னணி எங்கிருந்து உருவானது
ஜெயமோகன் : எனக்கு ஆன்மீக ரீதியான விசாரணையும், தர்க்கமும் தான் இருக்கிறதே ஒழிய, ஆன்மீக நிலைப்பாடு கிடையாது. ஆன்மீகத்தை எனது படைப்புகளில் ஒரு விடையாகச் சொல்லவில்லை, முடிவும் சொல்லவில்லை. அதற்கான தகுதியும் எனக்குக் கிடையாது.
எனக்கு ஆன்மீக ரீதியாக ஒரு தேடல் சாத்தியப்பட்டிருக்கிறது, போகிற வழியில் ஒன்று மாற்றி ஒன்றாகப் பல வாசல்கள் திறக்கின்றன. ஃபூக்கோ பற்றி, நாராயண குரு பற்றி, கதக்களி பற்றி, விவேகானந்தர் பற்றி, தாந்திரீக மரபு பற்றித் தெரிந்த முழுமையான நபரைப் பற்றின தேடல் என்னிடம் இருந்து கொண்டே இருக்கிறது…”
கே: இருந்தாலும் எந்த விதமான ஆன்மீக நோக்குடன் உங்களால் ஒத்துப் போக முடிகிறது.
ஜெயமோகன் :ஸ்ரீநாராயணகுருவிடம் போகிற மாணவர்களைப் பார்த்தாலே தெரியும், கேரள நாஸ்திக மரபில் வந்த அய்யப்பன். அவருடைய முக்கியமான சீடர். “ஒரு ஜாதி, ஒரு மதம், ஒரு தெய்வம்” என்று நாராயண குரு சொல்லும்போது,“ மதம் வேண்டாம்; சாதி வேண்டாம்; தெய்வம் வேண்டாம்’ என்று அதே மேடையில் சொல்கிறார் சீடர். நாராயண குரு இறப்பதற்கு முன்பு தமது நிறுவனங்களுடைய வாரிசாக நியமிக்க விரும்பியதும் இதே அய்யப்பனைத் தான்; எப்படி முழுக்கத் தன்னை நிராகரிக்கிற ஒருவரைச் சீடராக நாராயண குரு ஏற்றுக் கொள்கிறார். இந்தச் சுதந்திரம் தான் ஆன்மீக விசாரணையின் உலகம்.
இதே மாதிரி நித்யசைதன்ய யதியின் புத்தகத்தில் ஒரு வரி, “அழகு அனுபவம் என்பது ஒருவகையில் அறிவதின் அனுபவம் தான்…” நான் மறுத்தால் அவர் `உண்டு’ என்று சொல்வார். இப்படியே தர்க்கம் போய்க் கொண்டிருக்கும், எப்போதும் சுலபமான பதிலுக்கு உட்காரவிடாதபடி பண்ணி விடுவார், எப்போதும் தொடர்ந்து இயக்கம் இருந்து கொண்டிருக்க வேண்டும், ஒரிடத்தில் சோர்ந்து உட்கார்ந்து விடக் கூடாது என்பார். தொடர்ச்சியாக துருவித்துருவி விசாரித்து அறிகிற இந்த மரபு இந்து மரபு அல்ல, பௌத்த மரபு. எனக்கு இந்த மரபுடன் மிகவும் நெருங்க முடிகிறது. ஆன்மீகம் என்பது மதத்துடனும், கடவுளுடனும் தொடர்புடையது அல்ல. அடிப்படையான கேள்விகளின் விடையாகவே `கடவுள்’ பிறந்தார் அல்லது வெளிப்பட்டார் அடிப்படையான கேள்விகளுக்கான சில விடைகளை நம்பிக்கைகளாகவும், சடங்குகளாகவும் மாற்றும் போதே மதம் பிறந்தது. ஆகவே, ஆன்மீகமும், மதமும் பின்னிப் பிணைந்துள்ளன. ஆன்மீகத் தேடல் உள்ளவன் கடவுளையும். மதத்தையும் கூர்ந்து கவனிப்பான், இருந்தாலும் அவை வேறு வேறு என்றும் அறிந்திருப்பான். எனக்கு ஏன் இப்படி நிகழ்கிறது என்ற இடத்திலிருந்து தான் படைப்பு தொடங்குகிறது. அது விரிவடையும் போது அந்தப் படைப்பும் ஆழமுடையதாகிறது, இப்படித்தான் ஒவ்வொரு படைப்பாளியும் தனக்கென்று ஒரு பிரபஞ்சத் தரிசனத்தை உருவாக்கியிருப்பான்.
கே: பல விஷயங்களில் தன்னை மற்றவர்களிடமிருந்து விலக்கிச் சுருக்கிக் கொள்வது தான் பலருக்கு ஆன்மீகமாக இருக்கையில், உங்கள் செயல் பாட்டைத் தீவிரப் படுத்துவதற்கான உந்துதலை அதிலிருந்து உங்களால் பெறமுடிந்திருக்கிறதா.
ஜெயமோகன் : பிரபஞ்சத்துக்கு அப்பால் இருக்கிற ஒன்றைப் பற்றின தேடல் என்று ஆன்மீகத்தை வியாக்கியானம் செய்யக்கூடியவர்கள் ஒரு புறம் இருக்கிறார்கள். வாழ்க்கையின் உள்ளச் சத்தை, அதன் சாராம்சத்தைத் தேடுகிறவர்களும் இருக்கிறார்கள். நித்ய சைதன்ய யதிக்கு அப்போது எழுபத்தைந்து வயது. ஒரு `ஸ்ட்ரோக்’ ஏற்பட்ட பிறகும் அந்த வயதில் வீணை கற்றுக் கொள்கிறார். ஒரு கை இயங்க முடியாத நிலையிலும் தணியாத வேகத்துடன் இன்னொரு கையால் வீணை வாசிக்கக் கற்றுக் கொள்கிறார். எப்படியும் ஆறு மாதத்தில் அவர் இறந்து விடுவார் என்று டாக்டர்கள் சொல்லியும் இரண்டு கீர்த்தனையாவது அதற்குள் கற்று வாசித்துவிட முடியாதா என்று மனசுக்குள் வேகம். இந்த அளவுக்கு வாழ்க்கையின் மீது இருக்கிற பிரியம் தான் என்னோட ஆன்மீகம், ஒரு வாழ் நாளில் நூறு வாழ் நாட்கள் வாழ்வதற்குச் சமமான இந்தப் பிரியமும், வேட்கையும் தான் முக்கியம்.
`ஜாக்ரதா’ `கிரத்தா’ என்ற இரு சொற்கள் முறையே உபநிடத மரபாலும், பௌத்த மரபாலும் ஆழ்ந்த அகவிழிப்பு நிலைக்குரிய கலைச் சொற்களாக முன் வைக்கப் படுகின்றன. ஆனால் தகவல் ரீதியான அறிதலுக்கு அப்பால் உள்ள அனைத்து அறிதல்களும் அந்த அகவிழிப்பு நிலையிலேயே சாத்தியமாகின்றன. அவற்றை அறிவது ஒரு அறிவுலகப் பயணம்.
என் அநுபவத்தை இதற்குச் சான்றாகக் கூறமுடியும். எப்போதும் படைப்பு இன்னதென்று தெரியாத பதற்றமாகவோ, அமைதியில்லாத தன்மையிலோ தான் தொடங்குகிறது. என்ன என்று திரும்பித் திரும்பிக் கேட்டுக் கொள்கிறோம். தொலை தூரத்தில் கேட்கிற பழைய பாடல், பலவிதமான ஏக்கம், துயரம், நெகிழ்ச்சி, உவகை எல்லாம் கலந்த உணர்வுகளின் கலவையாக மனதை அலைக்கழிப்பது போல ஒரு உணர்வு. இது சில சமயம் ஒரிரு நாட்களுக்கு மேலும் நீடிக்கலாம். பிறகு ஒரு தொடக்கம் கிடைக்கிறது. அந்தத் தொடக்கத்தை மனதில் போட்டு மீட்டி ஒரு கட்டத்தில் மளமளவென்று எழுத ஆரம்பிப்பேன். எழுத எழுத கதை வளர்ந்து முழுமை பெறும், அது ஒரு போதை மாதிரி. ஒரு கனவு நம்மில் பிறப்பது மாதிரி.
ஒரு கதையும் அமைப்பும், முடிவும் முன்னமே நமக்குத் தெரிந்திருந்தால் அது நல்ல கதையே அல்ல. அது நிகழவேண்டும், எழுதி முடித்த பிறகு `நானா எழுதினேன்’ என்றிருக்க வேண்டும். கனவு நம்மிலிருந்து தான் வருகிறது. அது வரும் வரை அதை நாம் அறிவதில்லை. வந்த பிறகு வியப்பும், சில சமயம் அதிர்ச்சியும், பரவசமும் அடைகிறோம். படைப்பு மொழியும். ஒரு வகைக் கனவு தான். படைப்பு ஓர் அகவிழிப்பின் மூலம் பிறக்கும் அக உண்மை என்று உறுதியாகச் சொல்ல முடியும்.
கே: தமிழின் மற்ற எழுத்தாளர்களை விட, எழுதத்துவங்கிய குறுகிய காலத்திற்குள் கதை, நாவல்கள், கட்டுரைகள் என்று அதிகமாக எழுதிவிட்டீர்கள் இந்த வேகத்திற்குக் என்ன காரணம்?
ஜெயமோகன் : நீங்கள் கடலில் விழுந்துவிட்டால் கரை சேரும் வரை சோர்வடைய முடியாதில்லையா? கடலுக்கு நடுவில் தீவில் ஓய்வாக நின்று கொண்டிருக்கிறவர்கள் நின்று கொண்டிருக்கலாம். இது தான் மற்ற எழுத்தாளர்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம். தமிழ் எழுத்தாளர்களில் பெரும்பாலானவர்கள் ஏன் நிறைய எழுதவில்லை என்றால் அவர்களது வாழ்க்கையில் எழுத்துக்குக் கொடுத்திருக்கிற இடம் குறைவு. எவ்வளவோ விஷயங்களுக்கிடையில் அவர்களுக்கு சின்ன ஓய்வு மாதிரி, எப்போதாவது `தண்ணி’ அடிக்கிற மாதிரி கதை, கவிதைகள் எழுதுவார்கள். அவர் அவர்கள் போக முடிகிற தூரம் அவ்வளவுதான்.
என்னுடைய எழுத்து அப்படியல்ல. நான் தூங்குகிற நேரத்தில் கூட எழுத்தைப் பற்றி, எழுதுவதைப் பற்றித்தான் கனவு காண்கிறேன். அதைப் பற்றிதான் யோசிக்கிறேன். எழுதுகிறேன். நண்பர்களுக்கு நாற்பது, ஐம்பது பக்கங்களில் சாதாரணமாகக் கடிதம் எழுதுகிறேன். எந்த நல்ல படைப்பைப் படித்தாலும் உடனடியாக அவர்களுக்கு விரிவான கடிதம் எழுதியிருக்கிறேன். வாசகர்களுக்கு எழுதுகிறேன். இதில் எந்த விதமான அலுப்புமில்லை. உற்சாகம் கூடுகிறது. என்னுடைய காரியம் என்பதால் இதில் என்ன சோர்வு
இப்போது என்னிடம் முழுமை பெறாத நிலையில் நான்கு நாவல்கள் இருக்கின்றன; பின் தொடரும் நிழலின் குரல் வெளிவந்த நான்கு மாதங் களுக்குள் `கன்னியாகுமரி’ நாவல் எழுதிவிட்டேன்.
குறைந்தது மூன்று முறை எழுதாமல் எந்தப் படைப்பையும் பிரசுரித்ததில்லை. விஷ்ணுபுரம் எழுதப்பட்டது நான்கு முறை; பின் தொடரும் நிழலின் குரல் மூன்றாவது முறை எழுதின நாவல். ரப்பர், கன்னியாகுமரி எல்லாமே நான்கு முறை எழுதினவை மலையாளத்தில் எழுதப்பட்ட கட்டுரைகள் ஐந்தாறு முறை திருப்பி திருப்பி எழுதப்பட்டவை. அதில் வருகிற சின்ன சின்ன மாறுதல்கள் கூட முக்கியம். அதில் சலிக்கவே மாட்டேன். எழுத்தில் அலட்சியம் என்பதே இருக்கக்கூடாது. அந்த அளவுக்கு அதன் மீது சிரத்தை உருவாகியிருக்கிறது.
கே : ஆரம்பத்தில் தமிழ் எழுத்தாளராகத்தான் நீங்கள் அறியப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் இப்பொழுது தொடர்ந்து மலையாளத்திலும் எழுதி வருகிறீர்கள்.
ஜெயமோகன் : `பாஷா போஷினி’ என்கிற மலையாளப் பத்திரிக்கையில் தொடர் எழுதுகிறேன். `நோட்டங்கள்’ என்கிற அந்தத் தொடர் பிரமாதமாக அங்கு வாசிக்கப்பட்டது. என் மனசில் படைப்புக்கரு தமிழாகத்தான் இருக்கிறது. அதை மலையாளத்தில் மொழி பெயர்க்கிறேன். அவ்வளவுதான். மலையாளத்தில் நான் எழுதும்போது கூட தவிர்க்கமுடியாமல் தமிழ்வார்த்தைகள் வந்துவிடும்.
கே: உலக இலக்கியச் சூழலுடன் ஒப்பிடும்போது தமிழ் இலக்கியத்திற்கான இடம் குறித்து என்ன அபிப்ராயப்படுகிறீர்கள்.
ஜெயமோகன்: க.நா.சு. விலிருந்து சுந்தர ராமசாமி வரை, பலர் தமிழ் இலக்கியத்தில் ஒன்றுமில்லை, மேலை இலக்கியங்களில் எதைத் தொட்டாலும், `கிளாசிக்’ குகள் என்கிற அபிப்ராயத்தை இங்கு உருவாக்கிவிட்டார்கள். இதை தங்களுக்கேற்ப பார்த்து பயன்படுத்தும் போலிகள் ஒவ்வொரு ஊரிலும் இருக்கிறார்கள். குறைந்த பட்ச ஆர்வத்துடன் தமிழ் இலக்கியம் படிக்க வருகிறவர்களைக் கூட மிரள வைத்துவிடுவார்கள். இந்தத் தமிழ் இலக்கியக் குற்ற உணர்வு வேண்டியதில்லை. உலக இலக்கியத்துடன் ஒப்பிட்டு பார்க்கும் போது தமிழ் இலக்கியத்தைப் பற்றித் தாழ்வுணர்ச்சி கொள்வதில் எந்த விதமான நியாமும் கிடையாது. அமெரிக்காவில் வெளிவந்த முக்கியமான சிறுகதைகளை விட முக்கியமான சிறுகதைகள் தமிழில் இருக்கின்றன; ஆனால் இங்கு அளவு ரொம்ப குறைவு; எழுத்தாளர்கள் குறைவு; வாசிப்புக் குறைவு.
கே: தனி மனித ஒழுக்கத்திலிருந்து உறவுகளுக்கு கொடுக்கப்பட்டு வரும் மதிப்பு வரை எல்லாவற்றையும் உடைத்துக் கலகக்குரல் எழுப்புவதுதான் நவீனத் தமிழ் இலக்கியவாதியின் இயல்பு என்கிற தோற்றம் இருக்கிறது. இதை எப்படி பார்க்கிறீர்கள்?
ஜெயமோகன் : எந்தத் தீவிர மனநிலையிலும் உண்மையான தருணங்களும் உண்டு, பாவனைகளும் உண்டு, தமிழ்சூழலில் `கலகக்காரன்’ என்கிற பாவனை இன்று மிகவும் கவனிக்கப்படுகிற ஓரளவு செல்லுபடியாகக் கூடிய ஒன்று. இன்று அது ஒரு மோஸ்தராக இருக்கிறது.
உண்மையில் ஆன்மீகவாதியும், கலைஞனும், தத்துவ சிந்தனையாளனும் நிரந்தரமான கலகக்காரர்களாகவே இருக்க முடியும், ஏனென்றால் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட எதையும் அவர்களால் முழுக்க ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவே எல்லா தரப்பினராலும் எதிர்க்கப் படுகிறவர்களாலும், புறக்கணிக்கப்படுகிறவர்களாகவும் தான் அவர்கள் இருப்பார்கள். பலமுத்திரைகள் அவர்கள் மீது குத்தப்படலாம். கலகம் படைப்பு மூலம்தான் வெளிப்படுத்தப்பட வேண்டும். சமரசமில்லாமல், சுய நம்பிக்கையிலும் அது வெளிப்படவேண்டும்.
நமது கலகங்களில் பெரும் பகுதி நடிப்பு என்பதற்கு அவர்களின் படைப்புகளில் ஆழமற்ற கூச்சல்கள் நிரம்பியிருப்பதே சான்று. உண்மையான கலகம் அதிகாரத்துக்கு எதிரானது. நமது கலகக்காரர்கள் அரசுடன் அந்தரங்கமாகச் சமரசம் செய்து கொண்டவர்கள்.
இந்தக் காலகட்டத்தில் முற்போக்கு என்று கருதப்படும் ஒரு கருத்தின் மீது ஆழமான சந்தேகம் ஏற்பட்டால் அதை வெளியிட்டு விவாதிக்கும் துணிவு எத்தனை கலகக்காரர்களிடம் உள்ளது. வெளியிட்டால் சக முற்போக்காளர்களிடமிருந்து அவன் தனிமைப் பட நேரும். இதற்கு அஞ்சுகிறவர்கள்தான் இங்கு கலக பாவனை செய்கின்றார்கள்.
“ உண்மையான கலகக்காரன் தனித்தும், பசித்தும் , விழித்தும் இருப்பான்.”