பூவிடைப்படுதல்-1
ஜெயமோகன்.இன் ல் இருந்து
[”அறம்” நூல் வெளியீட்டுவிழா. ஈரோடு]
தமிழிலக்கியத்தை நான் இரண்டு வகையில் கற்றுக்கொண்டேன். ஒன்று, பள்ளிக்கூடத்தில் பாடத்திட்டத்தில் அடங்கிய வடிவத்தில். அது பேச்சிப்பாறையில் இருந்து அளந்து திறந்துவிடப்படும் நீர் ஓடும் கால்வாய் போல இருபக்கமும் சிமிண்ட்டால் கட்டிய கரைகளும் கச்சிதமான படிகள் கட்டப்பட்ட துறைகளும் கொண்டது. தேவையான இடங்களில் பாறைகள். எங்கும் எப்போதும் ஒரே வேகம், ஒரே ஆழம்.
இன்னொன்று, பள்ளிக்கு வெளியே மரபான முறையில் தமிழறிந்த ஆசிரியரிடம் சென்று கற்றுக்கொண்டது. அது முத்துக்குளிவயலில் சிற்றோடைகளாக ஊறி, கன்னியின் கூந்தலிழைகள் போல ஒன்றாகி, முப்பிரிப் பின்னலாக முறுகி, நீல நீர்ப்பெருக்காகி மலையிறங்கி மண் மணக்க ஊருக்குள் வரும் கோதையாறு போன்றது.
அதன் திசைகள் மழைக்கேற்ப மாறும். அதன் எல்லைகள் அடிக்கடி உடைந்து மீறும். தென்னையும் மூங்கிலும் தாழையும் நாணலுமாக இருபக்கமும் உயிரின் பசுமை காவல்காப்பது அந்தப் பெருக்கு. கொக்குகளும் மீன்கொத்திகளும் மடையான்களும் பறந்து பறந்து முத்தமிடுவது. மீன்களும் முதலைகளும் ஆமைகளும் நீர்க்கோலிகளும் நீந்தித் திளைப்பது. தென்றல் காற்றில் புல்லரிப்பது. தமிழ் என்றால் என்ன என்று நான் கண்டது அங்கேதான். அறியா வயதில் எனக்குத் தமிழ் கற்றுத்தந்தவர்களை இப்போது வணங்குகிறேன்
பள்ளியில் எனக்கு வந்த தமிழாசிரியர் சொன்னார். ‘தமிழ்ப்பாடல்களை அசை பிரித்துப் புரிந்துகொள்ளவேண்டும்’ என்று. அன்று மாலை என் தமிழய்யா சொன்னார் ‘முட்டாக்கூமுட்டைக அப்டித்தான் சொல்லுவானுக… தமிழ்ப் பாட்ட அசைபோட்டுப் புரிஞ்சுகிடணும்லே’ Continue reading →