‘குரு’ என்ற கருத்துநிலை by ஜெ

குருஎன்றகருத்துநிலை

by

ஜெயமோகன்

[ஆசிரியர் ஜெயமோகன் குரு நித்யாவுடன்]

ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுக்கப்பட்டது. மூலக் கட்டுரையை வாசிக்க இங்கே சொடுக்கவும்

ஆன்மீகம் சார்ந்த குழப்பங்களுக்குக் காரணமாக அமையும் இன்னொரு தளம் ‘குரு’ என்ற கருத்துநிலை சார்ந்தது. சாதனா என்பது  குரு இன்றி முழுமைகொள்ள முடியாது. குரு என்பவர் நம்மை வழிகாட்டி அழைத்துச்செல்லும் ஒரு மனிதர். நம்முடைய அறியாமையை நாம் அவர்முன் வைக்கிறோம். அவரது ஞானத்தை பெறுவதற்காக நம்மை திறந்துகொள்கிறோம். இதில் ஒரு சுயசமர்ப்பணம் உள்ளது. இந்தச் சுயசமர்ப்பணத்தை பக்தியாக உருமாற்றிக்கொள்கையில் குருவாக நாம் எண்ணும் மனிதரை அதிமானுடராக ஆக்கிக்கொள்கிறோம்.

சில வருடங்களுக்கு முன்னர் நான் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் ஒரு நவீனச் சாமியாரை தன் குரு என்று சொன்னார். குரு தனக்களித்த ‘ஞான’த்தைப் பற்றிச் சொல்லிக்கொண்டே வந்தவர் தனக்கு வந்த கடுமையான வணிக நெருக்கடியை குரு தீர்த்து வைத்தார் என்றார். ‘அது குருவின் வேலையா’ என்று நான் கேட்டேன். ‘நான் எல்லாவற்றையும் குருவிடம் ஒப்படைத்துவிட்டேன். அவர் பார்த்துக்கொள்வார்’ என்றார் அவர்.

இங்கே நிகழும் பிழை என்ன? குருவையும் கடவுளையும் இவர் குழப்பிக்கொள்கிறார். கடவுளின் இடத்தில் குருவை வைக்கிறார். விளைவாக அந்த குரு மானுடக்கடவுளின் இடத்துக்குக் கொண்டுசெல்லப்படுகிறார்.

பக்திவழியையும் ஞானவழியையும் குழப்பிக்கொள்ளும் அறியாமையில் இருந்து இந்தச் சிக்கல் உருவாகிறது. பக்தி என்பது எந்த வினாவும் இல்லாமல் தன்னை முழுமையாக சமர்ப்பணம் செய்துகொள்வது. அந்த வழியில் வினாவற்ற பணிதலுக்கு முதல்மதிப்பு உள்ளது. ஆனால் அந்த சுயசமர்ப்பணம் இப்பிரபஞ்சத்தை உருவாக்கி நடத்தும் சக்தியிடம் மட்டுமே நிகழவேண்டும். அதை அறியமுடியாதென்பதனால் அதற்கு தன்னை ஒப்புக்கொடுத்தல்தான் பக்தி என்பது.

பக்தியின் தளத்திலும் குருநாதர்களுக்கு ஓர் இடமுண்டு. பக்தியை நோக்கி இட்டுச் செல்லக்கூடிய வழிகாட்டிகள் மட்டும்தான் அவர்கள். அவ்வழியில் உருவாகும் சஞ்சலங்களை அகற்றுபவர்கள், பக்தியை உணர்ச்சிகரமாக நிலைநாட்டக்கூடியவர்கள், பக்திக்கான குறியீடுகளை நிறுவக்கூடியவர்கள் அவர்கள். பக்தியில் ஆழ வேரூன்றிய மனம் படைத்த ஒருவர் சஞ்சலம் கொண்ட இன்னொருவரை தன்னுடன் அழைத்துக்கொண்டு ஆழமான பக்திக்குள் செல்ல முடியும். அத்தகைய குருநாதர்கள் பக்திவழியில் எல்லா காலகட்டத்திலும் உண்டு.

அந்தக்குருநாதர் மேல் ஒருவருக்கு இருக்கும் ஈடுபாடும் அர்ப்பணிப்பும் இயல்பானதே. அந்த அர்ப்பணிப்பு அவரை குருநாதரின் வழியை பின்பற்றிச்செல்ல உதவக்கூடியது. ஆனால் இங்கே ஒன்று கவனிக்கவேண்டும், பிரபஞ்சசக்தி ஒன்றை நோக்கி ஆற்றுப்படுத்தும் வழிகாட்டிதான் இங்கே குருநாதர். அவர் அதன் வடிவம் அல்ல, பிரதிநிதி அல்ல. அவர் வழிகாட்டுவதற்கு அப்பால் எதையுமே அளிக்க முடியாது. அவர் ஏழாம் வகுப்பு மாணவனுக்கு வகுப்பெடுக்கும் எட்டாம் வகுப்பு மாணவன் மட்டும்தான்.

ஞானவழியில் உள்ள குருநாதர்கள் நம்மை மெய்ஞானம் நோக்கி இட்டுச்செல்பவர்கள். அவர்களும் வழிகாட்டிகள் மட்டுமே. ஞானவழியில் ஒவ்வொருவரும் அவரவர் பயணத்தை தாங்களேதான் செய்தாகவேண்டும். ஆகவே முழுமையான குரு என்று ஒருவர் அந்த வழியில் இல்லை. மாபெரும் ஞானியரின் வாழ்க்கையைக் கவனித்தால் அவர்களுக்கு பல குருநாதர்கள் இருப்பதைக் காணலாம்.  அவர்கள் ஒரு குருநாதரை விட்டு எழுந்து அடுத்த குருநாதரை நோக்கிச் சென்றிருக்கிறார்கள். ஞானத்தின் பாதையில் ஒவ்வொருவரும் ஒன்றை நமக்களிக்கிறார்கள். நமது பாதையை நாமே அமைக்கிறோம். நாம் சென்றுசேரும் புள்ளியில் நாம் மட்டும் தன்னந்தனியாகவே சென்று சேர்கிறோம்.

இந்த இரு வழிகளிலும் குருவை மனிதக் கடவுளாக ஆக்கும் மனநிலைக்கு இடமே இல்லை.  உண்மையில் அது குருவை அவமதித்து நிராகரிப்பதற்குச் சமம். அவர் ஞானத்தை நமக்களிக்க தயாராக இருக்கிறார், கூடவே என் தொழிலையும் நீ கவனித்துக்கொள் என அவரிடம் நாம் சொல்கிறோம் என்றால் அதற்கு என்ன பொருள்?

குரு ஒரு வழிகாட்டி மட்டுமே. நாம் சென்று சேரும் புள்ளி அல்ல அவர். அவர் வழியாக நாம் சென்றுகொண்டிருக்கிறோம். அவரை நாம் கடந்துசெல்வதும்கூட சாத்தியமே. நாம் தேர்ந்துகொண்ட வழிக்கு ஏற்ப நம்முடைய இயல்புக்கு ஏற்ப நாம் குருநாதர்களை அடைகிறோம். முழுமையான மெய்ஞானிகூட ஒருவனுக்கு அவனது வழியைத்தான் காட்டமுடியும். அவனது ஞானமென்பது அவனே அடைவதாகவே இருக்கும்.

ஒரு குரு-சீட உறவு எப்படி அமையும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். குரு ஏன் தேவைப்படுகிறார்? நூறுநூறாயிரம் புத்தகங்கள் இருக்கின்றனவே, அவற்றில் இல்லாதவற்றையா ஒருவர் சொல்லிவிட முடியும்? நூல்கள் நம்மிடம் பேசக்கூடியவை. நமக்குத்தேவை நம்முடன் உரையாடும் ஒருவர். நம்மை அறிந்து நமக்கு வழிகாட்டும் ஒருவர். ஓர் ஆசிரியர் கற்பிப்பதை நூல்கள் கற்பிக்க முடியாது. இது எல்லா அறிவுத்துறைகளுக்கும் பொருந்துவதுதான்.

ஞானவழியில் ஒருவனை ஒரு குரு ஏற்றுக்கொள்வதென்பது எளிய விஷயம் அல்ல. பற்பல வருடங்கள் அவனைக் கூர்ந்து அவதானித்த பின் அவனது தேடலையும் தகுதியையும் உறுதி செய்தபின்னரே அவர் அவனை ஏற்றுக்கொள்கிறார். அதேபோல ஒருவன் ஒருவரை குருவாக ஏற்றுக்கொள்வதும் எளிய விஷயமல்ல. அவன் அவரை கூர்ந்து கவனித்துக்கொண்டே இருக்கிறான். தொடர்ச்சியாக, நெருக்கமாக. மெல்லமெல்ல அவரை அவன் அகம் குருவாக ஏற்றுக்கொள்கிறது.

பிறகு இருப்பது ‘உபநிஷத்’- உடனமர்தல் – தான். ஒரு குருவுடன் கூடவே இருப்பதுதான் உண்மையான கல்வி. அவரது சிந்தனைகளுடன் சிந்தித்து, அவரது சொற்களை தனக்குள் முளைவிடச் செய்து, அவரை முழுமையாக உள்வாங்கிக்கொள்ளுதல்.  அவருக்கு குறைகள் இருக்குமென்றால் அவற்றையும் அறிந்துகொள்ளுதல். ஏதேனும் ஒரு கட்டத்தில் அவர் போதவில்லை என்றால் மிகச் சாதாரணமாக அவரை தாண்டிச் செல்லுதல்.

ஒரு குரு, அவர் உண்மையான குரு என்றால் சீடன் முன் அம்மணமாக நிற்பார் என்று உணருங்கள். அவரில் உங்களுக்குத் தெரியாத எதுவுமே இருக்காது. நான் முதன்முதலில் நித்ய சைதன்ய யதியைச் சந்தித்தபோது கேட்டேன் ”நீங்கள் உங்கள் மாணவர்களுக்கு என்ன சொல்லிக் கொடுக்கிறீர்கள்?” ”எதுவும் இல்லை. நான் அவர்களை என்னுடன் இருக்க அனுமதிக்கிறேன். எல்லா நேரத்திலும். அவர்கள் எதைக் கற்கிறார்களோ அதுவே அவர்களுக்கு” என்றார். அதுவே குருவின் பாதை.

இங்கே எழும் உண்மையான சிக்கல் ஒன்றை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது. பக்தி,விசுவாசம், வழிபாடு ஆகியவற்றை மட்டுமே முன்வைக்கும் மதங்களில் குரு என்ற ஆளுமைக்கான தேவை இல்லை. அந்த விசுவாசத்தை அமைப்பாக திரட்டிக் கட்டிக்காக்கும் மதகுருக்கள் மட்டுமே போதுமானவர்கள். ஏனென்றால் அங்கே தனித்தனியான ஞானத்தேடல், முழுமை நோக்கிய பயணம் என்பது இல்லை. கூட்டான நம்பிக்கை, கூட்டான வழிபாடு மட்டுமே உள்ளது.

ஆனால் ஞானத்தேடல் கொண்ட ஒவ்வொரு மனிதருக்கும் அவருக்குரிய ஆன்மீக பயணத்தையும் முழுமையையும்  அளிக்க முயலும் பௌத்தம்,சமணம், இந்து மதங்களில் தனிப்பட்ட குரு என்னும் ஆளுமை தவிர்க்க முடியாத ஒன்று. அந்த குரு ஒரு நிறுவனமாக இருக்க முடியாது. அது அந்தரங்கமான தனிமனித உறவாகவே இருக்க முடியும். குரு சீட உறவென்பது கணவன் மனைவி உறவை விட அந்தரங்கமானது என்று சொல்லப்பட்டிருக்கிறது.

அப்படியானால் அத்தனைபேரும் குருவுக்கு எங்கே செல்வது? மிகச்சிக்கலான வினாதான் இது. அதற்கான விடைகள் பல முன்னரே சொல்லப்பட்டிருக்கின்றன. உண்மையான ஞானத்தேடல் கொண்டவர்கள் மிகமிகச் சிலரே. பெரும்பாலானவர்களுக்கு எளிய விடைகளே போதுமானவை. அந்த விடைகளை எங்கோ எவரோ அளித்துவிட முடியும். ஒரு புராணிகர், ஒரு சொற்பொழிவாளர் , ஒரு பூசகர் கூட அவருக்கு குருவாக அமைந்துவிட முடியும்.

‘சிரத்தை’ கொண்ட ஒருவருக்கு அவருக்கான குரு வந்தே தீர்வார் என்று சொல்லப்பட்டிருக்கிறது.  அவ்வாறு வரவில்லை என்றால் அவருக்கு அது விதிக்கப்படவில்லை என்றே பொருள் என்பார்கள். ‘தேடுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கிடைக்கும்’ என்று மெய்ஞானி அதைத்தான் சொன்னார் என்று நினைக்கிறேன். ‘இலக்கை எட்டும் வரை செல்லுங்கள்’ என்றும் அதுதான் சொல்லப்படுகிறது.

இந்த பயணம் முன் தீர்மானிக்கப்பட்ட வழிகள் இல்லாதது. நாம் தேடும் விஷயம் நாம் எவ்வகையிலும் நிர்ணயிக்க முடியாத அளவுக்கு நுண்மையானது. ஆனால் ‘சிரத்தை’யுடன் இருப்பது நம் கையில்தான் உள்ளது. எது நம் ஆழம் அறிந்த உண்மையோ அதில் சமரசமே இல்லாமலிருப்பது. அதைத்தவிர வேறெதையுமே ஏற்காமலிருப்பது. நம்முடைய சொந்த அகங்காரம் அல்லது போலிப்பாவனைகள் நமக்கு தடையாக ஆகாமல் பார்த்துக்கொள்வது. அதைத்தான் இந்த தருணத்தில் அத்தனை நண்பர்களுக்கும் சொல்ல விழைகிறேன்.

நலம் நிகழ்க.

-ஜெயமோகன்

பின்னூட்டம்