குரு சிஷ்ய உறவு – விஷ்ணுபுரத்தை முன் வைத்து – 3 by ஜாஜா

குரு சிஷ்ய உறவு – விஷ்ணுபுரத்தைமுன் வைத்து – 3

[ நிறைவுப் பகுதி]
by
ஜாஜா (எ) ராஜகோபாலன் ஜானகிராமன்

இக்கட்டுரையின் முந்தைய பகுதியை வாசிக்க இங்கே சொடுக்கவும்

குரு சிஷ்ய உறவின் பிரதான அம்சமே இருவரிடையேயும் நிகழும் உரையாடல்களே. இன்றளவிலும் இந்த முறை தொடர்ந்து வருகிறது. குரு முதலில் ஒரு சிறு வினாவை அல்லது கருத்தினை எழுப்பி தனது சீடனின் பதிலை அல்லது கருத்தினை அறிய விழைகிறார். சீடன் தரும் பதிலில் இருந்து அவன் அறிந்த எல்லையை உணர்ந்து அங்கிருந்து அவனறியா எல்லைக்கு அவனை இட்டுச் செல்கிறார். அறியா இடம் நோக்கி குருவின் உரை பற்றி நகரும் சீடன் தெளிவு வேண்டி அவரிடம் மேலும் கேள்விகளைக் கேட்டு அறிகிறான். குரு, சிஷ்ய உறவின் முதற்படியான ஆச்சார்ய, வித்யார்த்தி உறவு இன்றுவரை அப்படித்தான்.

விஷ்ணுபுரத்தில் ஆயுர்வேத ஞானி கணதேவர் தன் சீடர்களுக்கு பவதத்தரின் உடல் நிலை குறித்து விளக்கும் இடம் சிறந்த உதாரணம். மரணத்தை ஆயுர்வேதம் அறிந்து கொண்ட விதம், உடல் தோன்றும் விதம், வளரும் முறை, செயல்படும் விதம், உடல் மீது மரணத்தின் சாயல் படியும் விதம், உடல் விட்டு படிப்படியாக உயிர் பிரியும் விதம், மரணம் உணர்ந்த நொடி மனித மனம் அடையும் மாற்றங்கள் என ஒரு ஆயுர்வேதிக்குத் தேவையான மொத்தத்தையும் அள்ளித்தருகிறார். இந்த இடம் வரை ஆசிரியராக எண்ணப்பட வேண்டியவர் அதனைத் தாண்டிய நிலைக்குப் போவது இந்த விஷயங்களை விளக்கும் விதத்தில் தனது அனுபவங்களை, தனது தடுமாற்றங்களை , தனது புரிதல்களை தன் சீடர்களறியத் தரும் இடத்தில்தான். Continue reading

குரு சிஷ்ய உறவு – விஷ்ணுபுரத்தை முன் வைத்து – 2 by ஜாஜா

குரு சிஷ்ய உறவு – விஷ்ணுபுரத்தைமுன் வைத்து – 2
by
ஜாஜா (எ) ராஜகோபாலன் ஜானகிராமன்

இக்கட்டுரையின் முந்தைய பகுதியை வாசிக்க இங்கே சொடுக்கவும்

குரு நிலை என்பது கை விளக்கோடு கூடிய ஒருவனின் பயணமே. சீடன் கைவிளக்கற்று, குருவின் கால் தடம் பற்றித் தொடர்கிறான். பேரன்புடன் குரு தன் கைவிளக்கின் ஒளியால் பாதையினை அவனுக்கும் காட்டியபடியே தொடர்கிறார். ஞானத்தின் பாதையில் குருவும் சக பயணிதானோ?

கை விளக்கின் ஒளி எல்லை, சிறிது தொலைவை மட்டுமே புலனாக்குவது. எல்லை எது வரை என்பதை கைவிளக்கு காட்டுவதில்லை. இந்திர பதவியின் முயற்சிக்கு இடையே ஊர்வசி, மேனகை, ரம்பை உண்டெனில் ஞானத்தின் பாதையில் குரு பீடம். கை விளக்கின் ஒளி எல்லையை , அறிதலின் எல்லையாக்கி பீடம் ஏறி நிற்கும் குருட்டு குருமார்கள்.

தழலாய் மாறத் துடித்து நிற்கும் கற்பூரக் கட்டி போன்ற சிறுவனை , அவனது அறிவின் வீச்சினைக் கண்டு அசூயை கொள்ளும் குரு பீடம். அவனது தகுதியை , படிப்பினை, அறிவினை, வயதினை நிந்தித்துப் பேசும் ஜம்பம். தேடலின் தாகம் கொண்டு நிற்போரை கானல் நீர் காட்டி விரட்டி விடும் குரூரம். தன் அகந்தையைத் தடவி நிற்பவனைத் தழுவி ஏற்று அவனையும் குருடனாக்கப் போகும் நிர்மூடம். அறிந்ததாய் எண்ணி, அடைந்ததாய்க் காட்டி மரணத்தின் முன் கெஞ்சிக் கதறப் போகும் அவல நிலையில் நிற்கும் விஸ்வகரும் குருவாகவே அறியப்படுகிறார். அவரால் குரு பீடத்தை மட்டுமே உருவாக்க இயலும். குரு, சிஷ்ய உறவு அவருக்கு சாத்தியமே இல்லை.

விளக்கின் ஒளியில் பாதை காண மறந்து, திரியின் ஒளியில் பார்வையை லயிக்க விட்டு வெளிச்சக் குருடுகளாய் திரியும் குரு பீடங்கள் முமுட்சுவாய் நிற்பவனுக்கு நிழல் தருமா என்ன? திரும்பி நடந்து போகும் சிறுவன் சுடுகாட்டுச் சித்தனால் ஆட்கொள்ளப்படுகிறான். சீடனின் தகுதி குருவினை இட்டு வருமோ ? சீடன் சரியாய் இருக்கையில் குருவும் தகுதியானவராகவே வந்து அமைவது தற்செயலா என்ன? Continue reading

குரு சிஷ்ய உறவு – விஷ்ணுபுரத்தை முன் வைத்து by ஜாஜா

குரு சிஷ்ய உறவு – விஷ்ணுபுரத்தைமுன் வைத்து
by
ஜாஜா (எ) ராஜகோபாலன் ஜானகிராமன்

நண்பர்களே ! பணி நிமித்தம் வாசிக்க நேர்ந்த “இந்து வாரிசுரிமைச் சட்டம்” வியப்பான ஒன்று. ஒரு இந்துக் குடும்பத்தின் உறவு முறைகள் எந்தெந்த அடுக்குகளில் அமைகின்றன, அவற்றுள் முதன்மை பெறும் வரிசை எது, அடுத்த வரிசைக்கிரமம் என்பனவற்றை ஒரு நாவல் போல விவரித்துச் செல்லும் சட்டம் அது. எண்ணிறந்த உறவு முறைகளையும், அவற்றுக்கிடையே பாவியிருக்கும் தாய்வழி, தந்தைவழி குறுக்குப் பின்னல்களையும், அவற்றின் சொத்துரிமைக்கான அடுக்கு முறைகளையும் காணும்போது இவ்வளவு உறவுமுறைகளா என்று தோன்றும். ஆனால் , ரத்த உறவாலும், திருமண பந்தத்தாலும் அல்லாது இவ்வகைப்பாட்டைத் தாண்டிய ஒரு உறவு முறை நமது மரபில் தோன்றி இன்று வரை இடையறாது நீடிக்கிறது.

கால ஓட்டத்தின் வேக வாகினியை மீறி துளித் துளியாய் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் மானுட ஞானத்தினை பின்வரும் தலைமுறைக்கென தருவதில் இந்த உறவுமுறையின் பங்கு மகத்தானது. எந்த பந்தத்தின் அடிப்படையிலுமல்லாது , தேடலின் துணை கொண்டு மட்டுமே தேர்வு செய்யப்படும் உறவு இது. புல்லின் வேரென இந்தத் தேசம் முழுதும் பரவி, காலந்தோறும் உருவாகி வரும் குரு சிஷ்ய உறவினாலேயே இன்றைய நமது ஞானம் சாத்தியமாகிறது.

வேறெந்த உறவுமுறையையும் வரையறை செய்து, வகைப்படுத்திவிட முடியும். ஆனால், இந்த குரு சிஷ்ய உறவு எந்த இலக்கணத்திற்கும், எந்த வரையறைக்கும் நாலு விரற்கடை தள்ளியேதான் நிற்கும்.எப்படி உருவாகிறது இந்த உறவு என்பதை ஆண்டவனும் அறிய இயலாது போலும். “வா” என்ற குருவின் ஒற்றைச் சொல்லுக்கு, மறு பேச்சின்றி, திரும்பிப் பாராது எழுந்து அவர் பின்னே செல்லும் சீடனை இயக்குவது எது? மாறாக் காதலுடன் குருவின் பாதத்தை பணிந்து நிற்கும் சீடன் மனம் அடைவதுதான் என்ன? தரிசனம் பெற்ற ஒரு நொடியின் பரவசத்தை, தனக்கேற்ற சீடனைக் கண்டபோதும் அடையும் குருவின் உவகைதான் எப்படிப்பட்டது? மரபின் தொடர்ச்சியாய் நீளும் இவ்வுறவிலிருந்து மானுட ஞானம் பெறும் விழுமியம்தான் எது? Continue reading