காலமே உனக்கு வணக்கம் – 2 by சுனீல் கிருஷ்ணன்

விஷ்ணுபுரம்

காலமே உனக்கு வணக்கம் – 2

by  சுனீல் கிருஷ்ணன்

மகத்தான தனிமை

உனது மகத்தான தனிமையில்

கரிய பறவையெனப் பறந்துவரும்.

நீயேண்ணும் சொற்கடலின் அலைகள்

நக்கியுண்ணும் கரைமணலில் எஞ்சும்

நேற்றைய பாதங்களின் சாயலில் இன்று

எங்கு பதிகின்றன சுவடுகள்?

இந்த நாவலை நான் முதல் முறை வாசித்த போது எனக்கு இதன் இலக்கிய நுட்பங்கள் சரிவர புலப்படவில்லை என்றே சொல்ல வேண்டும். முதல் வாசிப்பின் முடிவில் நான் இதை ஓர் தத்துவ- ஆன்மீக நூலாகவே அணுகினேன். அதுவரை நான் வாசித்திருந்த தத்துவ- ஆன்மீக நூல்கள் வாழ்வை பற்றி முன்வைத்த நம்பிக்கைகள் அத்தனையும் பொசுங்கி சாம்பலாயின. விஷ்ணுபுரம் வாழ்வை பற்றிய மிக அடிப்படையான கேள்விகளை, வறட்டு தத்துவங்களாக இன்றி உயிர்த்துடிப்புள்ள பாத்திரங்கள் மூலம் எழுப்பியதால் அதன் உக்கிரத்தை பன்மடங்கு அதிகமாக உணர முடிந்தது..

இந்த நாவலின் அடிநாதமாக நான் காண்பது தனிமையும் தவிப்பும், ஆன்மீக தகிப்பும் தான். ஒருவகையில் ஜெ வுடைய தனிமையும் தவிப்பும் அதற்கான தேடலுமே இந்த விஷ்ணுபுரத்தின் மூலக் கூரு என்று எண்ணுகிறேன். விஷ்ணுபுரம் எனும் நாவலை ஒட்டுமொத்தமாக பிணைப்பது தனிமை எனும் இழை தான் என்று எனக்கு படுவதுண்டு. ஆன்மீக அகப் பயணம் என்பது கருந்தூளைக்குள் (black hole வழுக்குமரத்தில் ஏறுவதைப்  போலத்தான். ஒளி என்றேனும் நம் மீது விழக்கூடும் எனும் நம்பிக்கை மட்டுமே எஞ்சும், திசைகள் அற்ற இருளும், வெறுமையும் மட்டுமே சூழ்ந்த பயணம் அது.

அக்னிதத்தனின் வழித்தோன்றலாக விஷ்ணுபுரத்தை கட்டுபடுத்தும் மகாவைதிகர்களுக்கு புத்திர சோகம் மட்டுமல்ல தனிமையும் குலசொத்து தான். அதிகாரத்தின் உச்சாணிக் கொம்பில் இருக்கும் மனிதனுக்கு அந்த அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் எனும் முனைப்பு எப்போதும் இருப்பதுதான். அதற்கு அவன் தன்னை பிறர் அணுகமுடியாத தொலைவில், அகந்தையின் கோட்டைக்குள் புதைத்து வைத்திருக்கிறான். அதிகார நாட்டமும் ஆன்மீக தேடலும் ஒருபோதும் இணைந்திட முடியாது. சூரியதத்தரின் தனிமை இத்தகையதே. ஸ்வேததத்தன் சொன்னது போல் சூரியதத்தனின் தனிமைக்கு காரணம் விஷ்ணுபுரம் அல்ல, மாறாக தன்னையே அவன் விஷ்ணுபுரம் என எண்ணுவதால் விளைந்தது. அகந்தையை ஊதி பெருக்கிக் கட்டப்பட்ட அதிகாரத்தின் மீதான ஐயத்தால், அவரால் அவருடைய மகன் ஸ்வேததத்தனை கூட நெருங்கமுடியவில்லை. மலர்மாலைகளை கருகசெய்யும் நெருங்கமுடியாத நெருப்பாகவே அவர் மரணத்திற்கு பின்பும் நினைவுகூரப் படுகிறார். நிலவின் குளுமையில் அனைவரையும் வசீகரிக்கும் பவதத்தர் உணர்ந்த தனிமை தன் குலத்தின் ஆகச்சிறந்த வாரிசு அக்குலத்தின் மரபிற்கு எதிராக, மகாகாலனாய் உருவெடுத்து அதன் அஸ்திவாரங்களை பெயர்க்க தொடங்கியபோது எழுந்தது. சூரியதத்தரின் தனிமை அதிகாரத்திலும் அகங்காரத்திலும் விளைந்தது, அதை மீறி செல்ல அவர் முனையவும் இல்லை விரும்பவும் இல்லை. பவதத்தர் தனிமையை தன் மேல் அழுத்தும் சுமையாக அறிகிறார், விஷ்ணுபுரத்து சர்வஞர் எனும் பட்டம் தன் பாதையில் அகற்றமுடியாத கரும்பாறையாக அடைத்து நிற்பதை எண்ணி வருந்துகிறார். அதிலிருந்து மீண்டு தன் மகனோடு சேர்ந்து காசியபனைப்போல் குதித்தாட  வேண்டும் என துடிக்கிறார். Continue reading

காலமே உனக்கு வணக்கம் – 1 by சுனீல் கிருஷ்ணன்

விஷ்ணுபுரம்

காலமே உனக்கு வணக்கம் – 1

by  சுனீல் கிருஷ்ணன்

”அனந்த கோடி அடையாளங்கள் கொண்ட காலமே

நீ அன்னையாகி வருக.

காலமே உனக்கு வணக்கம்”

வெண் மணல் நிறைந்த வறண்ட பாலைவனத்தில், பவுர்ணமி நிலவொளியில் பிரம்மாண்டமாக விரியும் அந்த சக்கரம். அந்த மண், நதி புரண்ட மண். காலமெனும் நதி சுழிந்தோடி தன் அடையாளங்களை தொலைத்த மண். தன்னுள் பல நூற்றாண்டு ரகசியங்களை, மானுட தேடல்களை, நிராசைகளை, ஏமாற்றங்களை. என உயிர்த்துடிப்புடன் விளங்கிய அனைத்தையும் விழுங்கிய   மலைப்பாம்பை போல, மானுட ஞானத்தை தன்னுள் புதைத்து வைத்திருக்கும் ஆழமான,வெறுமையான, வெதுவெதுப்பான மண். கூரைகள் இல்லாத வெட்டை வெளியில், நிலவொளியில் எதை தேடுகிறேன்? பிங்கலனும்  சங்கர்ஷணனும் உணர்ந்த அந்த தனிமை, ப்ரேசனரும் காசியபனும் உணர்ந்த அந்த தனிமை, பவதத்தரும், சூரிய தத்தரும், ஆரிய தத்தரும் யுகம் யுகமாக கண்டுணர்ந்த அந்த தனிமை, பாவகனும், பத்மனும், யோக விரதரும் அறிந்து தவித்த அந்த மகத்தான தனிமை, அது என்னையும் குளிர செய்கிறது. . ஆம் இந்த பிரபஞ்சத்தில் நான் தனித்து நிற்கிறேன். ஏன் எனும் கேள்வி மட்டுமே என்னுள் எஞ்சி இருக்கிறது..

விஷ்ணுபுரத்தை முதல் முறை வாசித்த சமயம், அதுவே நான் வாசித்த முதல் பெருநாவல். எந்த ஒரு மகத்தான இலக்கிய ஆக்கமும்  அதை அணுகும்  வாசகனை கலைத்து மீண்டும் கட்டி எழுப்பும். அந்த அனுபவத்தை முதன்முதலாக எனக்கு  விஷ்ணுபுரமே அளித்தது. மலை உச்சியை நோக்கி மூச்சிரைக்க, பதைபதைப்புடன் ஓடி, அதன் சிகர நுனியில் ஏறி நின்று கீழே பார்த்தால் புலப்படும் அந்த ஒட்டுமொத்த காட்சி கொடுக்கக் கூடிய வார்த்தைகளில் அடைபடாத அந்த பிரமிப்பு, திகைப்பு, பீறிட்டு கிளம்பும் அர்த்தமற்ற ஆழ்ந்த துக்கம் போன்றவையே முதல் வாசிப்பில் என்னை நிறைத்தது. Continue reading

விஷ்ணுபுரம் வாசிப்பனுபவம் -1

விஷ்ணுபுரம் வாசிப்பனுபவம் -1

By Dr. Suneel Krishnan

எதுவுமே தப்பில்ல

மானுடன் ஞானத்தை நோக்கி பயணம் செய்யும் தருணம் எது ? மானுட வாழ்வின் பொருளென்ன ? பிறப்பதும் மரிப்பதும் ஏன் ? உறவுகளின் பொருளென்ன ? துக்கமும் சுகமும் ஏன் ? காலம் என்பது என்ன ?  புலன்களுக்கு புலப்படாத ஒரு மிக பெரிய பகடை ஆட்டத்தின் காய்களா? வீழ்வதும் ,பிழைத்து இருப்பதும் மட்டுமே சாத்தியமான கோடானகோடி உயிரின் அர்த்தமற்ற சாகரத்தின் ஒரு சிறு துளி மட்டும் தானோ ?

எதன் மீது நிற்கிறோமோ ,எதை சாஸ்வதம் என்கிறோமோ அவை எல்லாம் அடித்து நொறுக்கி விட்டால் ,பின்பு எதன் மீது நிற்பது ,எதை பற்றி கடப்பது ? அப்படி ஏதேனும் ஒன்றை பற்றி தான் ஆகவேண்டுமா ? அக இருட்டில் தொலைந்து விடுவோம் , மனிதன் தனியன் .அவனுக்கு ஆக பெரிய பயம் அவனது மனம் தான் ,ஆம் அதை அவன் நெருங்குவதில்லை ,பாவனைகளால் விளக்கி அதை தர்க்க சட்டகத்தில் அடைத்து சொற்களால் பூசி ஒரு மாய மாளிகையை எழுப்புகிறான் .மனதை சந்திக்கும் திராணி மனிதனுக்கு இருப்பதில்லை ,உண்மைக்காக தேடல்களும் ,விவாதங்களும் ,தரிசனங்களும் ,இலக்கியங்களும் ,காப்பியங்களும் ,காவியங்களும் இன்னும் அனைத்தும்- சொற்களின் பிரவாகங்கள் நிரப்பி தன்னை தானே நம்ப வைக்கும் முயற்சி தானோ ? வாழ்க்கைக்கு பொருள் இருக்கிறது என்று மீண்டும் மீண்டும் உரக்க சொல்வது தன் மனதை நம்ப வைக்கும் வெற்று உத்தியோ ?