அறிமுகம்

விஷ்ணுபுரம் பற்றிய என்னுடைய அழுத்தமான எண்ணம் ஒன்றுண்டு. அதை ஒரு இலக்கியப்படைப்பாக மட்டுமே வாசிப்பதிலும் விவாதிப்பதிலும் அதன் ஆசிரியனாக எனக்கு எதிர்ப்புண்டு. அதை இலக்கிய அனுபவம் என்ற நிலையில் நின்று பேசுபவர்களுடன் நான் மேலதிகமாக உரையாடுவதில்லை. ஆம் அது இலக்கியம்தான், ஆனால் இலக்கியம் மட்டுமல்ல. அடிப்படையில் அது ஆன்மீகத்தேடலையும் கண்டடைதலையும் பற்றிய நூல். இலக்கியத்தைவிடப் பெரிய, இலக்கியத்தால் தொட முடியாத ஒன்றைச் சொல்லமுயல்கிறது.

அதற்கு நெடுங்காலமாக இந்த மண்ணில் ஆன்மீகத்தேடலைப் புறவயமாகச் சொல்ல முயன்ற ஞானவழிகள் கையாண்ட படிமங்களையும், தத்துவங்களையும் அது பயன்படுத்துகிறது. விஷ்ணுபுரத்தின் கட்டுமானப்பொருட்கள் என்றால் தர்க்கமும் கனவும் என்று சொல்லலாம். தத்துவங்கள் கனவாக உருமாறி உள்ளன அதில். நீங்கள் நினைப்பதுபோலத்தான் அது ஒரு பெரும் கனவு.. முப்பத்தைந்து வருடங்களாக நான் இந்திய ஞானமரபின் அடிப்படைகளைத் தொடர்ந்து கற்று வருகிறேன். தியானித்து வருகிறேன். அந்நாவலில் என் கல்வியும் கனவும் உள்ளது.

ஓர் இளமை உத்வேகமே அந்நாவலை எழுதச்செய்தது. மனநிலைப்பிறழ்வின் விளிம்பில் நின்று எழுதிய நாவல்.. இன்று வாசிக்கையில் அந்தப் பிறழ்வின் கணங்கள் எனக்கே பீதியூட்டுகின்றன. அதை எழுதியிராவிட்டால் என் தியானச்சோதனைகளின் விளைவான உளச்சிக்கல்களில் இருந்து வெளியே வந்திருக்க மாட்டேன். பசி,காமம் போன்ற எந்த ஆதார உணர்ச்சியை விடவும் உக்கிரமாக ஆன்மீகமான வினாவின் தவிப்பை நான் உணர்ந்த நாட்களின் விளைவு அது.

அந்நாவலின் உத்தேசவாசகன் ஆன்மீகமான அடிப்படை வினாக்களைத் தானும் கொண்டவன் என்றே நான் நினைத்திருக்கிறேன். இந்திய ஞானமரபின் படிமங்களையும் கருத்துக்களையும் தொடர்ந்து கற்று வருபவனாகவே அவன் இருக்கவேண்டும். இந்த இரு இயல்புகளும் இல்லாமல் விஷ்ணுபுரத்தை ஒரு கதையாகவோ கருத்துக்கட்டமைப்பாகவோ வாசிப்பவர்களை நான் அதற்கான வாசகர்களாக நினைத்ததில்லை.

இந்திய ஞானமரபின் படிமங்களும் கருத்துக்களும் பதினைந்தாம் நூற்றாண்டுக்குப்பின் தொடர்ச்சியற்றுப்போனவை. பின்னர் ஐரோப்பிய அறிஞர்களால் அரைகுறையாக மீட்கப்பட்டு ஆங்கிலம் வழியாக நம்மவர்களால் கற்கப்பட்டவை. அதிலும் தாந்த்ரீக மரபு நெடுங்காலம் முன்னரே தமிழில் வழக்கொழிந்து விட்ட ஒன்று. கேரளத்தில் அது ஓரளவு வாழ்கிறது. விஷ்ணுபுரம் பெருமளவு கேரள தாந்த்ரீக மரபுகளுடன் சம்பந்தப்பட்டது..

ஆகவே ஒரு சாதாரண தமிழ் வாசகன் எளிதில் விஷ்ணுபுரத்தின் குறியீட்டுத்தளங்களுக்குள் செல்ல முடிவதில்லை. அவன் அதுவரைக்கும் எழுதப்பட்ட இந்திய – தமிழ் நாவல்கள் உருவாக்கிய வாசிப்புத்தளத்தில் நின்றுகொண்டு விஷ்ணுபுரத்தை வாசிப்பானென்றால் அவனால் அதனுள் புக முடியாது. புகுந்தாலும் மிக மேலோட்டமான சில இலக்கியப்படிமங்களை மட்டுமே அடைவான். இன்னும் கீழ்ப்படிநிலையில் உள்ள எளிய வாசகர்கள் அவர்கள் சார்புக்கு ஏற்ப ஒரு அரசியல் கருத்தை உருவிக்கொள்வார்கள்.

விஷ்ணுபுரம் அளவுக்குப் பாராட்டப்பட்ட, பிரமிக்கப்பட்ட, கூர்ந்து வாசிக்கப்பட்ட இன்னொரு நாவல் தமிழில் இல்லை. அந்நாவலின் அமைப்பும் மொழியும் மட்டும் அல்ல அது பேசும் விஷயமும் அதற்கான காரணம். ஒவ்வொரு ஊரிலும் தலைக்குமேல் எழுந்து நிற்கின்றன கோயில்கள். நம் சென்றகாலம். அதன் முடிவில்லாத மர்மம். விஷ்ணுபுரம் அந்த ஆழத்துக்குள், அந்தக் கனவுக்குள் கொண்டுசெல்லும் நாவல். மேலும் மேலும் வாசகர்களைப் பெற்றுக்கொண்டே செல்லும் நாவல்.ஒவ்வொரு வருடமும் அதற்கு முந்தைய வருடங்களை விட அதிகம் பேர் வாசித்து அதிகம் விவாதிக்கிறார்கள் அந்நாவலைப்பற்றி. தமிழிலக்கியத்தில் எந்நாவலும் அப்படி வெளிவந்த நாள் முதல் எப்போதும் மையமாக இருந்ததில்லை. என்னுடைய பிறகுவந்த நாவல்களும் அந்த அலையை உருவாக்க முடியவில்லை. கொற்றவைகூட.

ஆனாலும் விஷ்ணுபுரம் இன்றும்கூடப் பெரும்பாலான பக்கங்கள் வாசிக்கப்படாத ஒரு ஆக்கமாகவே இருக்கிறது. வந்தபடியே இருக்கும் விமர்சனங்களைப் பார்க்கப்பார்க்க அவ்வெண்ணம் உறுதியாகிறது. அது இயல்புதான் என்றே நினைக்கிறேன். விஷ்ணுபுரம் வாசகனை நோக்கி வரக்கூடிய ஆக்கமல்ல. வாசகன் தன்னை நோக்கி வரவேண்டுமெனக் கட்டாயப்படுத்தும் ஆக்கம்.

பொதுவாக பெரிய, சிக்கலான நாவல்கள் அனைத்துக்கும் இயல்பாக முழுமையான வாசிப்பு நிகழ்வதில்லை. தொடர்ச்சியான கூட்டுவிவாதங்கள் வழியாகவே உலகமெங்கும் இத்தகைய நாவல்கள் முழுமையாக உள்வாங்கப்படுகின்றன. வெவ்வேறு கோணங்களில் வாசிப்புகள் முன்வைக்கப்படும்தோறும் நாவலின் அர்த்த தளங்கள் திறந்துகொள்கின்றன.

விஷ்ணுபுரத்தை முழுமையாக உள்வாங்க விரிவான கூட்டுவிவாதங்கள் இல்லாமல் சாத்தியமே இல்லை. கிட்டத்தட்ட பதினைந்தாண்டுக்காலம் நான் தேடித்தேடி அறிந்த, குருமுகத்திலிருந்து உணர்ந்த விஷயங்கள் அதில் உள்ளன. இந்திய மரபின் சிற்பம், கட்டிடக்கலை, தொன்மங்கள், ஆசாரங்கள் சார்ந்த தகவல்கள் அதிலுள்ளன. அத்தகவல்கள் எல்லாமே குறியீடுகளாக ஆகி ஒரு பெரிய வலையாகப் பின்னிப்பரவியிருக்கின்றன. பௌத்த இந்து தத்துவங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன.

இவை நம் சூழலில் சாதாரணமாக வாசிக்கக் கிடைக்காதவை. கேட்கவும் கிடைக்காதவை. விஷ்ணுபுரத்தைப் புரிந்துகொள்ள நான் ஓரிரு நூல்களைப் பரிந்துரைக்க முடியாது. ஓர் ஒட்டுமொத்த ஞானப்பரப்பையே பரிந்துரைக்க முடியும். பல நூல்களை, பல சிந்தனைமரபுகளை. அவற்றைக் கற்பது மட்டும் உதவாது, கற்றவற்றை விரிவாகத் தொடுத்துத் தொடுத்துப் பின்னிக்கொள்ள வேண்டும். அதற்குப் பலமுனைகளிலான விவாதங்கள் இல்லாமல் சாத்தியமில்லை.

ஜெயமோகன்