சங்ககாலமும் இந்திய சிந்தனை மரபும்-1

சங்ககாலமும் இந்திய சிந்தனை மரபும்-1

[ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது]

ஆசிரியர் ஜெயமோகன் 10-3-2009 அன்று நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் ஆற்றிய உரையின் முதல் பகுதி. 

[திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோயில் மரச்சிற்பங்கள். புகைப்படம் உதவி:  வாசகர் ராஜன் சடகோபன் ]

பதினைந்து வருடங்களுக்கு முன்னர் நானும் மலையாளச் சிந்தனையாளரும் நாவலாசிரியருமான பி.கெ.பாலகிருஷ்ணனும் திருவனந்தபுரத்தில் அவரது வீட்டில் இருந்து சற்று தள்ளி இருந்த மதுக்கடை நோக்கி ஆட்டோ ரிக்ஷாவில் சென்றுகொண்டிருந்தோம். ஆட்டோக்காரர் தமிழர். ஆட்டோவில் ஒலிநாஆவை ஓடவிட்டுக்கோண்டிருந்தார். ஏதோ ஒரு தமிழ் நாட்டுப்புறப்பாடல் ஒலித்தது. அக்காலத்தில் சொந்தமாகவே பாடி பதிவுசெய்து ஒலிநாடாவெளியிடும் மோகம் பரவலாக இருந்தது.

நல்ல கரடுமுரடான குரல், உரத்த உச்சகதிக்குரல். தப்பு அல்லது முழவு போன்ற ஏதோ வாத்தியத்தின் தோழமை. நாஞ்சில்வட்டாரவழக்கில் அமைந்த பாடல். அந்த ஓட்டுநர் குமரிமாவட்டத்தின் ஏதேனும் பகுதியைச் சேர்ந்தவராக இருக்கலாம். அவருக்கு அந்தப்பாடல் வழியாக அவரது நிலமும் மனிதர்களும் மீண்டுவருகிறார்கள் என்று எண்ணிக்கொண்டேன். Continue reading

21. சாங்கியம் : புருஷன் – பரிபூர்ண சாட்சி

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…

புருஷன் – பரிபூர்ண சாட்சி

[அருகர்களின் பாதை நெடும் இந்தியப்பயணத்தின் போது நண்பர்களுடன். ”சாம் மணல் திட்டு”. ஜெய்சாலமர் அருகில். தார் பாலைவனம். ராஜஸ்தான்]

புருஷன் என்று சாங்கியமரபு கூறுவதை இப்படிப்புரிந்து கொள்ளலாம். பிரபஞ்சத்தை அறிவது யார்? நான்! நான்கள் கூடினால் நாம். நான் என்றால் ‘அறியும் மனம்’ இல்லையா? பிரபஞ்சத்தில் உள்ள அத்தனை அறியும் மனங்களையும் ஒன்றாகச் சேர்த்தால் வரும் ஒற்றை மனம் எதுவோ அதுவே புருஷன். இதைப் ‘பிரபஞ்ச மனம்’ என்று கூறலாம்.

புருஷன் பிறப்பும் இறப்பும் இல்லாதவன். எல்லா இடத்திலும் இருப்பவன். வடிவம் இல்லாதவன். ஆதி இயற்கையைப் போலவே அவனும் முழுமுதல் பொருள் போன்றவன். ஆதி இயற்கையும் ஆதி புருஷனும்தான் முதலில் இருந்தார்கள். இயற்கையின் எல்லா மாற்றங்களும் இந்த புருஷனின் பார்வையின்தான் நிகழ்கின்றன. இயற்கையின் இயல்புகள் எல்லாமே புருஷனின் இயல்புகளுடன் ஒப்பீட்டளவில் உருவாவதே. அதாவது சத்வகுணம் என்றால் அது புருஷனில் சத்வ விளைவுகளை உருவாக்குவது என்று பொருள். Continue reading

20. சாங்கியம் – முக்குணங்களின் அலகிலா விளையாட்டு

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…

சாங்கியம்

முக்குணங்களின் அலகிலா விளையாட்டு

[கவி, கேரளா. மழைப்பயணத்தின் போது]

ஆதி இயற்கை முக்குணங்களின் சம நிலையை மீட்க முயன்று அதன் மூலம் பிரபஞ்சம் பிறக்கிறது என்று சாங்கியம் கூறுகிறது என்பது முன்பே விளக்கப்பட்டது. சத்துவம், தமஸ், ரஜஸ் என்ற மூன்று குணங்களைப் பற்றியும் சாங்கிய காரிகை மிக விரிவாகவே பேசுகிறது.

சத்துவகுணம் சுககரமானது அழகும் ஒளியும் உடையது. ஞானம், சிரத்தை, செயலூக்கம் முதலிய இயல்புகள் கொண்டது. நல்ல விளைவுகளை உண்டுபண்னுவது. மேற்கத்திய தத்துவ உருவகத்தைப் பயன்படுத்திக் கூறினால் இது நேர் நிலை இயக்கம் (Positive Movement)  எனலாம். Continue reading

இலக்கியத்தையும் தத்துவத்தையும் இணைப்பது பற்றி

இலக்கியத்தையும் தத்துவத்தையும் இணைப்பது பற்றி

[சொல்புதிது குழுமவிவாதத்தில் இருந்து ஜெயமோகன்.இன் ல் வெளியானது]

அன்புள்ள ஜெ,

நீண்ட நாட்களாய் எனக்குள் இருந்த ஒரு சந்தேகத்தைக் கேட்கிறேன்.நீங்கள் அடிக்கடி இலக்கியத்தையும் தத்துவத்தையும் இணைப்பது பற்றிப் பேசுகிறீர்கள்.இது எவ்விதம் சாத்தியம் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.நாரயண குருவும் அரவிந்தரும் கென் வில்பரும் இது பற்றி எழுதியதைப் படித்திருக்கிறேன்.ஆனாலும் இதை நேர்வாழ்வில் பாவிப்பதன் சாத்தியங்கள் பற்றி எனக்குச் சந்தேகம் இருந்துகொண்டேதான் உள்ளது.

இலக்கியமும்,தத்துவமும் இரண்டு எதிர்நிலைகள் அல்லவா..ஒன்று எல்லாவற்றையும் தொலைவிலிருந்து பார்க்கும் பருந்துப் பார்வை எனில் இன்னொன்று எல்லாவற்றையும் மிக நெருங்கி உருப்பெருக்கி மூலம் கூர்ந்து பார்ப்பது அல்லவா.ஒன்று எல்லாவற்றையும் மிகு உணர்ச்சியுடன் அணுகுவது.ஒன்று மிகு தர்க்கத்துடன் அணுகுவது.ஒருவரால் எப்படி இரண்டு பார்வைகளையும் ஒரே நேரத்தில் வைத்துக் கொள்ளமுடியும்..நான் படித்த வரையில் இலக்கியவாதிகளின் தத்துவமோ தத்துவவாதிகளின் இலக்கியமோ அத்துணை பூரணமாய் இல்லை.[அரவிந்தரின் சாவித்திரி போல.].

என்னால்இந்த இருமைகளைத் தாண்டிப் போக முடிந்ததே இல்லை.ஒன்றை நோக்கி நான் இழுக்கப் படும்போது மற்றது சுமையாக என்னைப் பின்னோக்கி இழுப்பதை உணர்ந்திருக்கிறேன்.நீங்கள் கூட உங்கள் திரிதல் பருவத்தில் ஒரு மடத்தில் ‘எழுதுவதே உன் அறம்”என்று ஒருவர் மடை மாற்றியதைப் பற்றி சொல்லி இருந்தீர்கள்.இப்போது இந்தப் பிளவு உங்களைத் தொந்தரவு செய்வதில்லையா?இரண்டும் ஒன்றை ஒன்று நிறைவு செய்யும் என நீங்கள் சொல்வீர்கள் என நினைக்கிறேன்.எதிரெதிர்த் திசைகளில் செல்லும் இரண்டு பாதைகள் எங்கே எவ்விதம் சேர்கின்றன?

போகன்

***

போகன்:

விஷ்ணுபுரத்திலேயே இந்த விவாதம் ஆரம்பம் முதல் இருந்தது. மானுட அறிதல்,மானுட அனுபவம் ஒன்றே. புலன்களும் அறிதல்முறையுமே அதைப் பலவாக்குகின்றன.

நடராஜகுரு ‘அறிவியலைப் பாடலாமா?’ என ஒரு நல்ல கட்டுரை எழுதியிருகிறார்.Can a science be sung? அவரது விஸ்டம் என்ற தொகைநூலில் உள்ள இக்கட்டுரை சொல்புதிதில் என்னால் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளிவந்தது.

[நடராஜகுரு]

நடராஜ குரு இவ்விஷயத்தில் ஹென்றி பெர்க்ஸன், ஏ என் வைட்ஹெட், ரஸல் , விட்கென்ஸ்டைன்ஆகியோரை எடுத்துக்கொண்டு மேலே சிந்தித்துச்செல்கிறார். Continue reading

19. சத்காரியவாதமும், வேதாந்தமும் – தொடர்ச்சி

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…

சாங்கியம் – சத்காரியவாதமும், வேதாந்தமும் – தொடர்ச்சி

[மேகமலை பயணத்தின் போது]

சாங்கிய தரிசனத்தை புரிந்துகொள்வதில் இடறல் ஏற்படக்கூடிய இடம் இது. அது குணபேதங்கள் இல்லாத பருப்பொருளையே முதலில் ஆதி இயற்கை என்கிறது. முக்குணங்களின் சமன் குலைந்ததும் உருவாகும்’மகத்’ என்பது ஒரு கருத்து நிலை அல்லது ஓர் இயல்பு! அதாவது , பருப்பொருள் திடீரென்று கருத்து வடிவமாக, பிரக்ஞை வடிவமாக மாறுகிறது.

தத்துவ விவாதத்தில் எப்போதுமுள்ள பிரச்சினை உயிரற்ற ஜடப்பொருட்களில் இருந்து தான் உயிரும் பிரக்ஞையும் எப்படி உருவாயின என்பதுதான். இதை மேற்குறிப்பிட்ட விதத்தில் சாங்கியம் எதிர் கொண்டது. இந்தப் புள்ளிக்குப் பிறகு சாங்கியத்தின் தருக்கம் கருத்து முதல்வாதத்தை நோக்கி (அதாவது தலைகீழாகத்) திரும்பியிருப்பதைக் காணலாம். மகத் என்ற பிரக்ஞை விதையில் இருந்து தன்னுணர்வு உருவாகிறது. இதுவும் ஒரு கருத்து வடிவமே. அதிலிருந்து அனுபவங்கள். அனுபவத்திலிருந்து புலன்கள். புலங்களிலிருந்து உருப்புகள். இவற்றின் விளைவாக ஐந்து பரு வடிவங்கள் உருவாயினவாம். அதாவது பஞ்ச பூதங்கள் என்பவை நம் ஐந்து புலன்களின் விளைவாக வெளியே தெரிபவை மட்டுமே! Continue reading

மனிதாபிமானமும் தத்துவமும்

மனிதாபிமானமும் தத்துவமும்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

[நண்பர்களுடன். இலக்கிய முகாம், ஊட்டி நாராயண குருகுலம்]

அன்புள்ள ஜெ

மீண்டும் ஒரு கேள்வி. இதெல்லாமே என்னுடைய மன உறுத்தல்கள்தானே ஒழிய உங்களை சீண்டுவதற்காகவோ வெட்டி சர்ச்சைக்காகவோ கேட்கவில்லை. இந்தமாதிரி பிரபஞ்ச உண்மைகளைப்பற்றி பேசுவதனால் மனிதனுக்கு என்ன பயன்? மனித வாழ்க்கையை அது மேம்படுத்துகிறதா என்ன? இந்தப் பேச்சுகள் மூலம் கண்ணெதிரே உள்ள வாழ்க்கையை நாம் நிராகரிக்க நேரும் அல்லவா? இது நம்மை மனிதாபிமானம் இல்லாதவர்களாக ஆக்கும் என்று எனக்கு தோன்றுகிறது. உங்கள் கருத்தை கோருகிறேன்.

சிவகுமார் பொன்னம்பலம்

அன்புள்ள சிவக்குமார்,

கார்ல் சகனின் ’புரோக்காவின் மூளை’ [ [Broca’s Brain, Carl Sagan] என்ற நூலை வாசித்துக்கொண்டிருக்கும்போது ஒருவரி மனதில் தடுக்கியது. ’பிரபஞ்சவெளியின் முடிவில்லாத தூசிப்பரப்பில் அதன் ஒரு பருக்கையில் ஒட்டிக்கொண்டிருக்கும் ஒரு தற்காலிக நிகழ்வுதான் உயிர் என்பது. அதில் ஒரு சிறுகூறுதான் மானுடம். மனிதனுக்கு சிறப்புக்கவனம் கொடுக்கும் படைப்புசக்தியோ காக்கும்சக்தியோ ஏதுமில்லை. அது மனிதவாழ்வில் தலையிடுவதும் இல்லை.நவீன அறிவியல் மானுடமைய ஆன்மீகத்தை முழுமையாகவே ரத்து செய்துவிட்டது’ Continue reading

18. சாங்கியம் – சத்காரியவாதமும், வேதாந்தமும்

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…

ஆறு தரிசனங்கள்

சாங்கியம் – சத்காரியவாதமும், வேதாந்தமும்

[மழைப்பயணம்.கவி, கேரளா]

சத்காரிய வாதத்தை சாங்கிய அறிஞர்கள் எப்படிப் பயன்படுத்தினார்கள் என்று அறிய அவர்கள் எப்படித் தங்கள் முக்கிய எதிர்த்தரப்பான வேதாந்தததை எதிர்கொண்டனர் என்று பார்ப்பது உதவிகரமானதாகும்.

பிரம்மம் மட்டுமே ‘சத்’ அல்லது ‘இருப்பு உடையது’ என்கிறது வேதாந்தம்.பிரபஞ்சம் ‘அசத்’ அதாவது ‘இருப்பு அற்றது’ (அல்லது மாயத்தோற்றம் அல்லது மனமயக்க நிலை); சத் வடிவமான பிரம்மதிலிருந்தே அசத் வடிவமான பிரபஞ்சத்தோற்றம் உருவாயிற்று என்று அது கூறியது. Continue reading