தியானம்:கடிதங்கள்

தியானம்:கடிதங்கள்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

JJ%2520362

[அந்தியூரில் அருவிக்கு மேலே]

வணக்கம் குரு.,

தியானம் என்ற சொல்லே மிகவும் வசீகரமானது! உங்கள் கட்டுரையில் (கடிதமே தற்போது கட்டுரை வடிவில் தானே அமைகிறது!!) உள்ள விளக்கம் மிகவும் பயனுள்ளது. தியானம், யோகம் சார்ந்து ஏற்படும் இவை போன்ற கேள்விகளுக்கு உங்களின் “பதஞ்சலி யோக சூத்திரத்திற்க்கு ஒரு எளிய விளக்கம்” ஆழ்ந்த புரிதலை ஏற்படுத்தியது. தாங்கள் குறிப்பிட்டது போல் அதன் தொடர்ச்சியை ஆரம்பித்தால் மேலும் இவை போன்ற கேள்விகளுக்கு அதிலேயே பதில் கிடைக்கும். அதன் முன்னுரையில் குறிப்பிட்ட விளக்கமே பெரும் தெளிவை ஏற்படுத்தியது. நீங்கள் அளிக்கும் உரை வரும் தலை முறையினருக்கு நீங்கள் குறிப்பிட்டது போல் “யோகத்தை புரிந்து கொள்வதற்க்கும், யோகத்தை புரிவதற்க்கும்” பெரும் பயனுள்ளதாக அமையும்.
ஆன்மீகம் சார்ந்த எந்த கேள்விகளுக்கும், கலந்துரையாடலுக்கும் நீங்கள் விரிவான பதிலையே ஒவ்வொரு முறையும் அளிப்பது நீங்களும் குருவின் வழிகாட்டலில், முறையான பாதையில் சென்றதற்க்கான சான்று. வேறு ஒரு எந்த இலக்கியவாதிகளுக்கும் இல்லாத ஒரு மேன்மையை நீங்கள் ஆன்மீகத்தில் பெற்றுள்ளது குருவின் அனுக்கிரகம் தான் என்பதில் எந்த ஐயமுமில்லை. நான் புதிதாக சொல்வதற்க்கில்லை தங்களின் நேர்மையான, செயலூக்கமான பணியாலே நீங்களும் குருவின் இடத்தில் இருப்பதனால் தான் மானசீகமாக பலர் உங்களை குருவாக ஏற்றுகொண்டுள்ளார்கள். குருவும் சீடனும் நூலில் உங்களின் முன்னுரை வாசிக்கும் போது கூட அதற்க்கு அனைத்து தகுதியும் உடையவர் தாங்கள் தான் என எண்ணிக்கொண்டேன். தங்களின் தொடர் பணியால் என் போன்ற மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருப்பதற்க்கு மிகவும் நன்றியுடன்., மகிழவன்.

அன்புள்ள மகிழவன்,

தியானத்தைப்பற்றி எழுதுவதில் உள்ள முக்கியமான சிக்கல் என்னவென்றால் தியானத்தின் அடிப்படை விதிகளில் ஒன்று அதைப்பற்றி விவாதிக்கக் கூடாது என்பதே. இதை எல்லா தியான ஆசிரியர்களும் சொல்வார்கள். ஏனென்றால் தியானம் சிந்தனைக்கு நேர் எதிரானது. சிந்தனையே தியானத்தின் பெரிய தடை. எந்த அளவுக்கு தியானத்தைப்பற்றி பேசுகிறோமோ அந்த அளவுக்கு நாம் அதை தருக்கப்படுத்துகிறோம். அந்த அளவுக்கு நாம் தியானத்தில் இருந்து விலகிச் செல்லவும் ஆரம்பிக்கிறோம். இது மிக விபரீதமான ஒரு சுழற்சி. தியானத்தை பற்றி பிறரிடம் சொல்வது , நமக்குநாமே சொல்லிக்கொள்வது எல்லாமே தியானத்துக்கு ஊறு விளைவிப்பவை. இந்த எல்லைக்குள் நின்றபடித்தான் சிலவற்றைச் சொல்ல வேண்டியிருக்கிறது

ஜெ

வணக்கம் குரு.,

தியானத்தை பற்றி நண்பர் கிறிஸ் அவர்களுக்கு நீங்கள் தந்த நீண்ட பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது. நீங்கள் ஒவ்வொரு முறையும் தியானத்தை பற்றி விவாதிக்கும் அனைத்தும் தியானத்தில் வந்து குவியும் என கூறி வருகிறீகள் இருந்த போதும் எவரையும் நிராகரிப்பதில்லை ஒவ்வொருவருக்கும் விரிவான பதிலையே முன்வைக்கிறீர்கள். அது உண்மையில் விபரீதமான சுழற்ச்சி தான் என்பதில் ஐயமில்லை. எனவே தான் நான் தங்களிடம் விளக்கம் கேட்காமல் பதஞ்சலி சூத்திரத்தின் உரையை தொடரலாமே என நினைவுபடுத்தினேன். ஆனால் அதிலும் சில சிக்கல் இருப்பதாகவே இப்போது தெரிகிறது. நீங்கள் அவ்வுரையை தொடர்ந்தால் அதன் கலந்துரையாடல், விவாதம் என அதிலும் தியானத்திற்க்கான விளக்கம் நீங்கள் தரும்படி தான் இருக்கும், எனவே ஒரு குருவாக இதை நீங்கள் பொருத்து கடந்து தான் செல்ல வேண்டும் 🙂 என்பது என் தாழ்மையான கருத்து.

நன்றியுடன்

மகிழவன்.

சிட்னி புகைபடத்தில் உங்கள் தோற்றமே பொலிவுடன் இருப்பதாகபடுகிறது! அதன் விபரங்களை தான் தினமும் ஆவலுடன் உங்கள் வலை தளத்தில் தேடுகிறேன்.

அன்புள்ள மகிழவன்

தியானத்தைப்பற்றிப் பேசுதல் எப்போதுமே சங்கடமானது. அது மிக அந்தரங்கமான ஒன்றாக இருக்கும்போது மட்டுமே அதற்கு மதிப்பிருக்கிறது. அந்த அந்தரங்கத்தன்மையை இழக்கும் தோறும் அது சரிய ஆரம்பிக்கிறது. ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் சுருக்கமாக சில நடைமுறைகளை மட்டும் சொல்லலாம் என நினைக்கிறேன்

ஜெ

அன்புள்ள ஜெ

தியானம் என்னும்போது சங்கீதம் கேட்பது அதிலே வருமா? அப்போது நாம் ஆழமான ஒரு நிலைக்கு போய்விடுகிறோம் அல்லவா?

சங்கீதா

அன்புள்ள சங்கீதா

இல்லை, இசை கேட்பது தியானம் அல்ல. இசை அந்த இசைக்குரிய உணர்ச்சி நிலைகளுக்கு நம்மைக் கொன்டுசெல்கிறது. நம்மை உணர்ச்சிகளுக்கு அப்பால் கொன்டுசெல்லும் தன்மை அதற்கு இல்லை. ஆழ்ந்த கவனம் இசையால் உருவாகும். அன்றாட வாழ்க்கைக்கு மேல் போகும் நிலை உருவாகும். மனதை பிம்பங்களாகவோ ஒலிவடிவமாகவோ காணும் நிலையும் உருவாகும். தியானம் அது அல்ல.

பொதுவாக எதையவாது கூர்ந்து கவனிக்கும்போட்ஜ்கோ ஈடுபட்டு செய்யும்போதோ நமக்கு ஒரு ஆழ்ந்த குவிநிலை உருவாகிறது .அதை கான்டம்ப்ளேட்டிவ் என சொல்லலாம். அது தியான நிலை அல்ல. தியான் நிலை அதைவிட மேலானது. முற்றிலும் மாறுபட்டது அது
ஜெ

எம்.ஏ.சுசீலா.,
புது தில்லி
அன்பு ஜெ. எம்., குரு வணக்கம்.
ஆஸ்திரேலியப் பயணம் முடிந்து நீங்கள் ஊர் திரும்பி விட்டீர்களென்பதை அறிந்தேன்.மகிழ்ச்சி. பயணக் கட்டுரைகளைத் தொடர்ந்து  படித்து வருகிறேன்.சுவாரசியமானதாகவும், பயனுள்ள தகவல்களை உள்ளடக்கி இருப்பதாகவும் அவை உள்ளன.  முன்பு நான் தியானம் பற்றியும் அதில் மனதை ஒருமுகப்படுத்துவதிலுள்ள சிக்கல்களைப்பற்றியும் கேட்டிருந்தேன்.அப்போது என்ன காரணத்தாலோ உங்களிடமிருந்து எனக்கு எந்த பதிலும் இல்லை. ஆனாலும் தங்கள் மௌனத்தையே என் குரு எனக்கு அளித்த பதிலாக -மோன நிலையே தியானம் என்பதாக நான் மனதில் ஏற்றிக் கொண்டேன். தற்பொழுது ஒரு வாசக அன்பருக்கு நீங்கள் எழுதியுள்ள விரிவான பதிலின் மூலம் அது மேலும் உறுதிப்பட்டிருக்கிறது.துல்லியமான சில தெளிவுகளும் அதனால் எனக்கு வாய்த்திருக்கின்றன.மிக்க நன்றி.  தாங்கள் தொடங்கி வைத்த என் வலைப் பூ நன்றாகப் போய்க் கொண்டிருக்கிறது. ஓரளவு மக்கள் வரத் தொடங்கி இருக்கிறார்கள். உற்ச்சாகமாக உணர்கிறேன். இடியட் மற்றொரு புறம் வளர்ந்து கொண்டிருக்கிறது. ஆஸ்திரேலியப் பயணம் அருண் மொழிக்கு மிகவும் பிடித்திருந்திருக்கும் என நினைக்கிறேன். அவர்களுக்கும் குழந்தைகளுக்கும் என் பிரியங்கள்.
அன்புடன்,

எம்.ஏ.சுசீலா,புது தில்லி
(தமிழ்ப்பேராசிரியர்-ஓய்வு,பாத்திமாக்கல்லூரி,மதுரை)
D II 208 KIDWAI NAGAR WEST,NEW DELHI110023

பின்னூட்டம்