இந்திய சிந்தனை மரபில் குறள்.5
ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது
[29 – ஜனவரி 2009 அன்று நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் நிகழ்த்திய தமிழ்நாடு மெர்க்கனைல் வங்கி அறக்கட்டளைச் சொற்பொழிவு நிறைவுப்பகுதி]
உ. குறள் மறுப்பும் மீட்பும் .
சமூகங்கள் கட்டமைக்கப்படும் காலகட்டங்களிலும் மாற்றம் கொள்ளும் காலங்களிலும் நீதிநூல்கள் உருவாகின்றன. நீதிநூல்கள் சமூகக்கட்டமைப்பின் வரைபடங்கள். சமூகத்தின் எதிர்கால வளர்ச்சி பற்றிய கனவுகளும்கூட. குறள் தமிழ்ச்சமூகம் உதிரி இனக்குழுக்கள் ஒன்றாகத்திரண்ட ஒரு காலகட்டத்தின் ஆக்கம். அப்படி அவற்றை திரட்டிய கருத்தியல் விவாதத்தின் திரள்மையம்.
தமிழ்நிலத்தில் சமணமும் பௌத்தமும் மெல்லமெல்ல கைவிடப்பட்டு மறைந்தன. இந்திய அளவிலும் அவை மெல்ல மறைந்து பெயரளவுக்கே எஞ்சுகின்றன. அவற்றின் அழிவுக்கான காரணங்கள் பலவாறாக விவாதிக்கப்பட்டிருக்கின்றன என்றாலும் ஆர்.எஸ்.சர்மா போன்ற மார்க்ஸிய ஆய்வாளார்களின் பொதுக்கருத்தை இங்கே எடுத்துக்கொள்ளலாம். இந்திய நிலப்பரப்பில் உதிரி இனக்குழுக்களையும் அரசுகளையும் வணிகரீதியாக ஒருங்கிணைக்கவும் அதற்கான அடிப்படை அற அடிப்படைகளை உருவாக்கவும் உதவியாக இருந்த இம்மதங்கள் அதற்கு அடுத்தபடியாக உருவாகி வந்த பேரரசுகளின் காலகட்டத்தின் தேவைகளை எதிர்கொள்ள முடியாமையினாலேயே அழிந்தன.
பௌத்த சமண மதங்களின் வீழ்ச்சியுடன் வணிக சமூகங்களின் அதிகாரம் வீழ்ச்சியடைந்ததும் பின்னிப்பிணைந்துள்ளது. சிலப்பதிகார காலத்தில் நாம் காணும் வணிக சமூகத்தின் மாண்பை பின்னர் வந்த காலகட்டங்களில் எப்போதுமே கண்டதில்லை. இந்திய நிலப்பகுதியில் வணிகம் உருவாகி அதன் விளைவாக மூலதனக்குவிப்பு நிகழ்ந்து அதன் அடுத்தபடியாக பேரரசுகள் பிறந்தபோது அதற்கு பெரிதும் உதவக்கூடிய வைதீக மதம் புத்துயிர்கொண்டது.
புத்துயிர்கொண்ட வைதீகமதம் வேள்விமதம் என்ற அடையாளத்தில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு பெருவழிபாட்டுமதமாக தன்னை மறு ஆக்கம் செய்துகொண்டது. ஆலயங்கள், திருவிழாக்கள் என பெருவாரியான மக்கள் பங்கேற்பைக் கொண்ட மதமாக அது உருப்பெற்ற போது மெல்லமெல்ல பெருவாரியான மக்களால் பின்பற்றப்பட்டு வந்த பௌத்த சமண மதங்கள் பின்னகர்ந்தன. Continue reading →