எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…
தரிசனங்களைப் பற்றிய சில அடிப்படைப் புரிதல்கள் – 2
[இந்தியாவின் வடகிழக்குப் பயணத்தின் போது]
அதே சமயம் பிற்பாடு சாங்கியத் தரிசனம் புருஷன் என்ற கருத்துருவத்தை உருவகம் செய்து கொண்டது. அவனுடைய பார்வையினாலேயே இயற்கையின் குணமாறுதல்கள் அறியப்படுகின்றன என்றது. சித்த விருத்தியை நிறுத்தி அதிதூய நிலையில் நம் பிரக்ஞையை வைத்திருந்தால் மட்டுமே நம்மால் பிரபஞ்ச உண்மையை அறிய முடியும் என்றது யோகம். நுண்ணணுக்களின் தனித்தன்மைகள் தன்மாத்திரைகள் என்றும் அவற்றை உணர்பவனே அவற்றின் இயல்பினைத் தீர்மானிகின்றான் என்றும் கூறியது வைசேஷிகம். நாம் அறிய விரும்பும் பொருளைத் தருக்கப்பூர்வமாக வகுத்து அறிவதன் மூலமே அப்பொருளுக்கு அர்த்தம் உண்டாகிறது என்கிறது நியாயம். யோகாசார பெளத்த மரபு நாம் அறிவது எல்லாம் நம்முடைய மனத் தோற்றங்களையே என்றும் நாம் அறியும் விதத்தில் ஒரு போதும் இயற்கை இருப்பதில்லை என்றும் கூறியது. நம் அறிதலுக்கு அப்பாற்பட்டவற்றை சூனியம் என்றது. சமணத் தத்துவம் பிரபஞ்சம் எப்படி நிரந்தரமாக இருந்துகொண்டே இருக்கிறதோ அப்படித்தான் ஆத்மாவும் இருந்துகொண்டே இருக்கிறது என்றது.!
ஆக இவை பெளதீக வாத அடிப்படையில் தொடங்கி மெல்ல ஆன்மிகவாத்தையும் இணைத்துக்கொண்டிருப்பதைக் காணலாம். இதைப்போலவே ஆன்மிகவாதச் சிந்தனைகளையும் அராய்ந்து பார்க்கலாம். பிரபஞ்சம் என்பது மந்திரவடிவமானது. பருமையான பிரபஞ்சம் மந்திரத்தின் வெளிப்பாடு மட்டும்தான் என்று நம்பியது பூர்வமீமாம்சம். உரிய முறையில் மந்திரங்களை ஒதுவதன் மூலம் பிரபஞ்சத்தை மாற்றிவிடலாம் என்றது அது. காணும் பிரபஞ்சம் பொய்யானது, பிரம்மமே மெய்யானது என்று கூறியது வேதாந்தம். Continue reading




