5.தரிசனங்களின் அடிப்படைகள் – தரிசனங்களின் அமைப்பு முறை

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…

தரிசனங்களின் அடிப்படைகள்

தரிசனங்களின் அமைப்பு முறை

ஒரு தரிசனத்தின் பொதுவான அமைப்பு முறை எப்படிப்பட்டது? இந்து மரபின் ஆதி தரிசனங்கள் நன்கு வளர்ந்து மேம்பட்ட நிலையில் உள்ளன. பெரும்பாலான தரிசனங்களை நாம் மதங்களின் ஒரு பகுதி என்ற நிலையிலேயே காணமுடிகிறது. வேறு பல தரிசனங்களைப் பல்வேறு துறைகளில் அவை பிரதிபலிப்பதை வைத்து ஊகித்து அறியவேண்டியுள்ளது. ஆகவே இந்து மரபின் ஆறு தரிசனங்கள் எப்படி உள்ளன என்பதை வைத்து இந்த நிர்ணயத்தினை நடத்துவதே உசிதமானது.

ஒரு தரிசனம் பெரும்பாலும் ஒர் ஆதி குருவின் மொழியிலிருந்து தொடங்குகிறது. உதாரணமாக சாங்கியத் தரிசனம் கபிலரின் கூற்றுகளிலிருந்தே தொடங்குகிறது. ஆகவே கபிலர் சாங்கியக் குரு என்று அழைக்கப்படுகிறார். ஆனால் உண்மையில் அத்தரிசனம் அவரால் சூனியத்தில் இருந்து உருவாக்கப்பட்டது அல்ல. உலகத்தில் இதுகாறும் உருவான எந்த தரிசனமும் அப்படி ஒரு தனி நபரால் திடீரென்று கண்டடையப்பட்டது அல்ல என்று உறுதிபடக் கூறிவிட முடியும்.

தரிசனங்களின் விதைகளை நாம் நம் மொழியில் சாதாரணமாகவே காண முடியும். நாட்டுப்புறப் பாடல்கள், பழமொழிகள்,பழங்கதைகள் முதலியவற்றில் அவை புதைந்து கிடக்கும். அதேபோல புராதனமான சடங்குகள், தெய்வ வடிவங்கள் ஆகியவற்றிலும் அவை உறைந்திருக்கும். அவை மனித மனத்திலிருந்து இயல்பாகவே உருவாகி மொழியிலும் கலையிலும் வெளிப்பட்டவை ஆகும்.

ஒரு விழிப்புற்ற மனம் அந்தத் தரிசனத்தைக் கண்டுபிடிக்கிறது அவ்வளவுதான். விதையை அந்த மனம் பெரிய மரமாக ஆக்குகிறது. உதாரணமாக சாங்கியத் தரிசனத்தின் சாராம்சம் என்ன? Continue reading

வைணவத்தின் மூன்றுநிலை கோட்பாடு

ஜெயமோகன்.இன் தளத்தில் இருந்து

வைணவத்தின் மூன்றுநிலை கோட்பாடு

வணக்கம் ஜெமோ,

விஷ்ணுபுரம் நாவலைப் பற்றிய ரவியின் ஐந்தாவது கேள்விக்கு நீங்கள் பதில் அளிக்கையில், கதை ஐந்தாம் நூற்றாண்டில் நடக்கிறதென்றும், அதனால் அத்வைதம், விசிஷ்டாத்வைதம் மற்றும் த்வைதம் பற்றி அதில் குறிப்பு இல்லை என்று கூறியுள்ளீர்கள். ஆனால் ஒரு கட்டத்தில் பட்டர் (??) அவையில் “தத்வம், ஹிதம், புருஷார்த்தம்” பற்றி பேசுவதாக வருகிறது. எனக்குத் தெரிந்து இம்மூன்றைப் பற்றி வைஷ்ணவ சம்பிரதாயத்தில் மட்டுமே அதிகம் பேசப்படுகிறது. அதுவும் நாதமுனிகள் காலத்திற்கு பின் தான் தொடங்கி இருக்க வேண்டும். ஆழ்வார்கள் அவற்றைப் பற்றி பேசி இருந்தாலும் அதை நாம் உரைகளின் மூலமே உணர முடிகிறது. அப்படி இருக்க ஐந்தாம் நூற்றாண்டில் எப்படி பட்டர் இதுபற்றி பேசி இருக்க முடியும்? என்னுடைய புரிதலில் ஏதேனும் பிழை இருந்தால் தயவு செய்து சுட்டிக் கட்டவும்.

– சீனு

Cheenu Narasimhan Continue reading

3.தரிசனங்களின் அடிப்படைகள் – மெய்ஞானமரபு என்பது என்ன?

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…

தரிசனங்களின் அடிப்படைகள்

மெய்ஞானமரபு என்பது என்ன?

இந்து மெய்ஞான மரபு என்றால் என்ன என்னும் கேள்வியினை மிக விரிவாகவும் தெளிவாகவும் நாம் எழுப்பியாகவேண்டிய தேவை இன்று உள்ளது. இம்மரபின் உள்ளேயுள்ள விஷயங்களைப் புரிந்து கொள்ள இது அவசியம்.

முதலில் இது குறித்து நமக்கிடையே உள்ள பிழையான புரிதல்கள் சிலவற்றைத் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். பொதுவாக இந்து மெய்ஞானமரபு என்று கூறும்போது இந்து மதத்தையே நாம் குறிப்பிட்டுகிறோம். சிலர் பெளத்த மதத்தையும் சமண ( ஜைன ) மதத்தையும் சேர்த்துக்கொள்வார்கள்.

இந்து மதம் என்றால் என்ன? இப்போது நாம் இந்து மதம் என்று குறிப்பிடுவது உண்மையில் சைவம், வைணவம், சாக்தேயம், கெளமாரம், காணபத்யம், செளரம் என ஆறு வழிபாட்டுமுறைகைளின் தொகுப்பு ஆகும். நமது பழைய வழக்கப்படி ஒரு மதம் என்பது ஒரு குறிப்பிட்ட இறைவனை வணங்கும் வழிபாட்டு மறபே.

இந்த பட்டியலில் சேர்க்கப்படாத ஏராளமான சிறு வழிபாட்டு முறைகளும் இந்துமதம் என்ற அமைப்புகுக்குள் காணப்படுகின்றன. பல்வேறு பிராந்திய வழிபாட்டு  முறைகள் படிப்படியாக இந்து மதத்தில் சேர்வது இப்போதும் தொடர்ந்து நடக்கிறது. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு பழங்குடி மக்கள் மற்ற மக்களுடன் தொடர்புகொள்வது அதிகரித்தது. அவர்களுடைய வழிபாட்டு முறைகள் இந்து மதத்தில் சேர்ந்தன. இது சமீப காலத்து உதாரணம். Continue reading

2.தத்துவம் – ஒரு எளிய அறிமுகம்: பழங்கால தத்துவம் இன்றைக்கு எதற்கு?

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…

பழங்கால தத்துவம் இன்றைக்கு எதற்கு?

பரவலாக கேட்கப்படும் கேள்வி இது. ’சரி, புதிய தத்துவம் என்று எதைச் சொல்கிறீர்கள்?’ என்று நான் கேட்பேன். அவர்கள் மார்க்ஸியம் என்றோ, அணுக்கொள்கை என்றோ பதில் கூறுவார்கள். இத்தத்துவங்களின் நடைமுறை சார்ந்த அம்சங்கள், சில தருக்க முறைகள் மட்டுமே புதியவை. அடிப்படைகள் முழுக்க புராதன கிரேக்க சிந்தனையில் இருந்து பெறப்பட்டவை என்று நான் விளக்குவேன்.

தத்துவம் என்பது தொழில்நுட்பம் அல்ல. புதியது வந்ததும் பழையது போய்விடாது. ஒவ்வொன்றும் பிறிதின் தொடர்ச்சியாகவே எழமுடியும். தத்துவம் என்பது தருக்கங்களின் தொகுப்பு என்றேன். அத்தருக்கங்கள் எங்கிருந்து வருகின்றன? மனித மூளை செயல்படும் விதங்களில் இருந்து அல்லவா? மனித மூளை அன்றும் இன்றும் ஒன்றுதான். புறச் சூழல்தான் மாறிக் கொண்டே இருக்கிறது.

ஆகவே கலையிலும் தத்துவத்திலும் அடிப்படைகள் மாறுவதே இல்லை. அவற்றை எடுத்துரைக்கும் முறையும், புரிந்து கொள்ளப்படும் சூழலும் மட்டும் மாறியபடியே இருக்கும். மிகப்புராதனமான தத்துவ சிந்தனையின் அடிப்படைகள் இன்றைய நவீனச் சிந்தனைகளில் தொடர்வதைக் காணலாம்.

ஆகவேதான் அதி நவீன சிந்தனைகள் பெருகி வந்தபடியே இருக்கும் மேற்கத்திய அறிவுச் சூழலில் கூட அதிபுரான கிரேக்க சிந்தனையாளர்கள் முதற்கொண்டு எவருமே புறக்கணிக்கப்படுவதில்லை. ஒவ்வொருவரும் திரும்பத் திரும்ப வேறு வேறு கோணங்களில் வாசிக்கப்படுகிறார்கள். மறுகண்டுபிடிப்புச் செய்யப்படுகிறார்கள். Continue reading

1.தத்துவம் – ஒரு எளிய அறிமுகம், “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்”

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…

தத்துவம் – ஒரு எளிய அறிமுகம்

தத்துவம் எதற்காக ?

 சிந்திக்கும் பழக்கம் உடையவர்களில் கூட ஒரு சாரார் தத்துவத்தில் தங்களுக்கு ஆர்வமில்லை என்று கூறுவது வழக்கம்.

தத்துவ பழக்கமற்றவர்களின் சிந்தனை தெளிவற்றதாகவும், அகவய அபிப்ராயமாகவும் இருப்பதை காணலாம்.

தத்துவத்தின் மீதான இந்த வெறுப்புக்கு என்ன காரணம்? தத்துவம் வெறும் தருக்கங்களில் போட்டி ஆட்டம்தான் என்ற மனச்சித்திரம் உருவாவது தான்.

எளிமையாக கூறப்போனால் தத்துவம் என்பது அனைத்து அறிவுத் துறைகளிலும் உள்ள தருக்கங்களின் தொகுப்பு. இத்தருக்க நிலைகளை அந்தந்தத் துறைகளை சார்ந்த நிதரிசனக்களுடன் பொருத்திப் பார்த்து விரித்தெடுத்துக்கொள்வது தத்துவ மாணவனின் வேலை. அப்படி விரித்து எடுக்காமல் தருக்கங்களை வெறும் சதுரங்கக்காய்களாக மட்டும் பார்க்கும் போதுதான் மேற்குறிப்பிட்ட சலிப்பு ஏற்படுகிறது.

Continue reading

வேதங்கள் எவ்வகை நூல்கள்?

ஜெயமோகன்.இன் தளத்தில் மே 20 2012 அன்று வெளியான “வேதங்களின் முக்கியத்துவம் ஒரு பொதுப்பிரமையா?” என்ற எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் கட்டுரையிலிருந்து ஒரு பகுதி. முழு கட்டுரையையும் வாசிக்க இங்கே சொடுக்கவும். – ”விஷ்ணுபுரம்” தள நிர்வாகம்

***

வேதங்கள் எவ்வகை நூல்கள்? ஏன் அந்த முக்கியத்துவம் அவற்றுக்கு வந்தது? அந்த முக்கியத்துவத்துக்கான அடிப்படை அவற்றில் உண்டா?

 படம்: விக்கிபீடியா

சுருக்கமாகச் சொன்னால் என்னுடைய விளக்கமாக இப்படிச் சொல்வேன். வேதங்கள் இந்து ஞானமரபின் வைதீகத்தரப்புகளுக்கு சுருதிகள். சுருதி என்ற சொல்லை மூலநூல் canon பொருளில் பயன்படுத்துவதே உகந்தது. ஆனால் செவ்விலக்கியம் classic என்ற பொருளிலும் பயன்படுத்தலாம்.

செவ்விலக்கியம் என்பது அந்தப்பண்பாட்டில் பின்னர் உருவான அனைத்து சிந்தனைகளுக்கும் அழகியலுக்கும் தொடக்கப்புள்ளிகள் கொண்ட ஒரு தொன்மையான இலக்கியத்தொகை. அது அந்தப்பண்பாட்டின் விதைநிலம்.

தமிழில் சங்க இலக்கியங்களை செவ்விலக்கியம் என்று சொல்லலாம். இன்றுவரை தமிழில் உருவான எல்லா இலக்கிய எழுச்சிகளுக்கும் அதில் தொடக்கத்தைக் காணமுடியும். தமிழ்ப்புதுக்கவிதைக்குக்கூட சங்க இலக்கியமே தொடக்கம் என்று பிரமிள் எழுத்யிருக்கிறார்.

Continue reading