சாங்கிய யோகம்:கடிதங்கள்

சாங்கிய யோகம்:கடிதங்கள்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

[தெங்குமராட்டா]

அன்புள்ள ஜெயமோகன்,

பகவத் கீதையை நீங்கள் அணுகியுள்ள விதம் மிகவும் அருமையாக இருக்கிறது. அந்நூலை எப்படி ஒரு முழுமைப்பார்வையில் அணுகவும் அத்துடன் நம் அகத்தேடலுக்கான ஒரு வலிமையான கருவியாக பயன்படுத்தவும் சொல்லிக்கொடுத்துள்ளீர்கள். தங்களுக்கும் தங்கள் குரு நித்ய சைதன்ய யதிக்கும் தனிப்பட்ட முறையிலேயே ஒரு வாசகனாக கடமைப்பட வைத்துள்ள உரை. சாங்கியம் குறித்த தங்கள் கட்டுரைகளை பலமுறை வாசித்தேன் – அது உருவாக்கிய மனக்கிளர்ச்சி அடங்கும் வரை. ஹென்றி பெர்கூஸனின் உயிர்வாதம் மற்றும் அதனை நிராகரிக்கும் எளிய பொருள்முதல்வாதம் ஆகிய இரட்டையில் விழாமல் ஆன்மாவினை அருமையாக விளக்கியுள்ளீர்கள். பொருள்முதல்வாதமும் எளிய இரட்டைநிலைகளைவிட்டு முன்னகர்ந்துள்ளது. Continue reading

செயல்தரும் முழுமை:ஸாங்கிய யோகம்.3 [நிறைவுப்பகுதி]

செயல்தரும் முழுமை:ஸாங்கிய யோகம்.3 [நிறைவுப்பகுதி]

ஜெயமோகன்.இன் ல் இருந்து

[கங்கை]

ஆத்மாவும் பிற மதங்களும்

ஆத்மா குறித்த சாக்ரடீஸ் கூறியவற்றுடன் கீதையை இதற்குள் வாசகர்கள் ஒப்பிட்டிருப்பார்கள். கிரேக்க மரபில் மேலும் பற்பல உருவகங்களும் விவாதங்களும் உள்ளன. இந்து ஞானமரபு போலவே தொன்மையும் ஆழமும் உடைய கிரேக்க மரபில்தான் இவ்வாறு ஒப்பிடத்தக்க கருத்துக்கள் உள்ளன. செமிட்டிக் அல்லது ஆபிரகாமிய மதங்களில் (யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம்) எளிமையான நேரடியான  உருவகமே காணப்படுகிறது. மனித உடலுக்குள் பிரக்ஞை வடிவில் இருப்பது ஆத்மா. இது பாவத்தின் காரணமாக உடலில் குடியேறுகிறது.  இறைவனுக்கு நேர் எதிரான தீய சக்தியான சாத்தானின் தூண்டுதலால் பாவங்கள் செய்கிறது. உடலை நீத்தபின் நியாயத் தீர்ப்பு நாளுக்காக காத்திருந்து அந்த நாளில் தன் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப இறைவனால் நரகமோ சொற்கமோ அளிக்கப்பட்டு அங்கு செல்கிறது என்பது யூத, கிறிஸ்தவ மதத்தின் கருத்து. Continue reading

செயல்தரும் முழுமை:ஸாங்கிய யோகம்.2

செயல்தரும் முழுமை:ஸாங்கிய யோகம்.2

ஜெயமோகன்.இன் ல் இருந்து

[கங்கைக்கரையில் நண்பர்களுடன்]

ஆத்மா எனும் கருத்துருவம்

ஆத்மா என்ற சம்ஸ்கிருதச் சொல்லின் பொருள் என்ன? அது (அத:) என்ற மூலச்சொல்லில் இருந்து கிளைத்தது அச்சொல் என்பது ஏற்கத்தக்க ஒருவாதம். ”அதோ அது” என்று சுட்டிக்காட்டப்படுவது எதுவோ அதுவே ஆத்மா. இன்னொரு அர்த்தம் ‘சாராம்சம்’ என்பது. நாம் காணும் ஒவ்வொன்றிலும் உறையும் மையமான, சாரமான, ஒன்றுதான் ஆத்மா.

இந்து ஞான மரபில் பொருள்முதல்வாதிகளான சாங்கிய, யோக, வைசேஷிக, நியாய தரிசனத்தைச் சேர்ந்தவர்களும் ஏதோ ஒருவகை ஆத்மாவை உருவகம் செய்துள்ளனர். இந்திய ஞானமரபில் இரண்டு எல்லைகள் இதில் காணக்கிடைக்கின்றன. சமணர்கள் சர்வாத்மாவதம் என்ற கோட்பாட்டை முன்வைக்கிறார்கள். அனைத்திற்கும் ஆத்மா உண்டு என்பது இதன் கருத்து. மனிதர்கள் விலங்குகள் புழுப்பூச்சிகள் தாவரங்கள் மட்டுமல்லாது கல் மண் காற்று நீர் போன்ற அனைத்துக்குமே ஆத்மா உண்டு என்கிறார்கள். இவர்கள் கூறும் ஆத்மா என்பது சாராம்சமே. நீருக்கு நீர்த்தன்மையை அளித்து அதை நீராக நிலைநிறுத்துவது எதுவோ அதுவே அதன் ஆத்மா. Continue reading

கீதை வழிகள்

கீதை வழிகள்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

[இந்தியப்பயணத்தில்  நாளந்தா ஓர் அறை]

சில வருடம் முன்பு என் நண்பர் ஒருவரின் குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த போது சென்று பார்த்தேன். குழந்தையின் தலைமாட்டில் ஒரு பழைய மலையாள பகவத்கீதை நூல் வைக்கப்பட்டிருந்தது. நான் ”இதை யார் படிக்கிறார்கள்?” என்று கேட்டேன். நண்பர், அவரது அம்மாதான் குழந்தை கெட்ட கனவுகள் காணாமலிருக்கும் பொருட்டு அதை வைத்திருப்பதாகச் சொன்னார். இது இந்தியாவில் சாதாரணம். கீதையை பூசையறையில் வைத்து தொட்டுக் கும்பிடுபவர்கள், அதில் ஒருசில சமஸ்கிருத சுலோகங்களைப் பொருள் உணராமல் முணுமுணுத்த பிறகு வணங்கி எழுபவர்கள், கீதை வரிகளைத் தாளில் எழுதி மெல்லிய வெண்கலக் குழல்களுக்குள் அடைத்து இடுப்பிலும் கழுத்திலும் தாயத்தாக அணிந்து கொள்பவர்கள், கீதை வரிகளை செம்புத்தகட்டில் பொறித்து வீடு கட்டும்போது பூமியில் புதைத்து விடுபவர்கள் என்று நம்மிடையே நம்பிக்கையின் முகங்கள் பல.

அங்கீகரிக்கப்பட்ட சடங்குகளும் சில உள்ளன. வைணவர்கள் (அதிகமும் ஐயங்கார்கள்) இறக்கும் நிலையில் உள்ளபோது அவர் காதில் கீதையில் உள்ள ‘சகல தர்மங்களையும் துறந்து என்னையே சரணடைக’ என்ற வரிகளை ஓதுவது ஒரு முக்கியமான சடங்காகும். இது ‘சரம சுலோகம்’ என்றே இக்காரணத்தால் கூறப்படுகிறது. மரணத்தறுவாயில் கிடப்பவர்முன் கீதை வாசிக்கும் பழக்கம் கேரளத்தில் சில இடங்களில் உள்ளது. Continue reading

உலகாற்றும் நெறி (ஸாங்கிய யோகம்) – 4 [நிறைவுப்பகுதி]

உலகாற்றும் நெறி (ஸாங்கிய யோகம்) – 4 [நிறைவுப்பகுதி]

ஜெயமோகன்.இன் ல் இருந்து

[கோதை]

சங்கரரும் வைதிகமும்

தமிழ்ச்சூழல் சார்ந்து யோசிப்பவர்கள் சிலருக்கு சங்கரரின் இந்தத் தரப்பு ஒரளவுக்கு அதிர்ச்சியை அளிக்கக் கூடும் என்பதனால் ஒரு சிறு விளக்கம். கி.பி. எட்டாம் நூற்றாண்டில் பிறந்து வட இந்தியாவெங்கும் திக்விஜயம் (திசைவெற்றி) செய்து பெளத்தர்களை வாதத்தில் வென்று வேதாந்தத்தை நிறுவிய ஆதிசங்கரர் இந்து தத்துவமரபின் மறுமலர்ச்சிக்குக் காரணமானவர். சங்கரரின் வெற்றியை முரணியக்க அடிப்படையில் நாம் பார்க்க வேண்டும். சங்கரர் பெளத்த ஞானத்துடன் முரண்பாடு உரையாடி பெளத்த ஞானத்தின் தலைசிறந்த கூறுகளை உள்வாங்கிக் கொண்டு அத்வைத வேதாந்த மரபை தோற்றுவித்தார். Continue reading

உலகாற்றும் நெறி (ஸாங்கிய யோகம்) – 3

உலகாற்றும் நெறி (ஸாங்கிய யோகம்) – 3

ஜெயமோகன்.இன் ல் இருந்து

[கோதை]

கர்மமும் ஞானமும் (சாங்கர – ராமானுஜ விவாதம்)

சாங்கிய யோகம் பற்றிய இவ்விவாதத்தில் கீதையின் இப்பகுதியை முன்வைத்த உரையாசிரியர்களுக்குள் நடந்த ஒரு விவாதத்தைக் குறிப்பிட்டுவிட்டு முன்செல்வது உதவியாக இருக்கும். இது சற்று சிக்கலானது, கீதையின் இப்பகுதியுடன் நேரடி தொடர்பில்லாதது. ஆனாலும் இதை நாம் புரிந்ந்துகொள்வது இந்துமெய்ஞான மரபை அறிய மிக உதவிகரமானது Continue reading

உலகாற்றும் நெறி (ஸாங்கிய யோகம்) – 2

உலகாற்றும் நெறி (ஸாங்கிய யோகம்) – 2

ஜெயமோகன்.இன் ல் இருந்து

[கோதை]

மாணவபாவனை

இதைத் தொடர்ந்து அர்ஜுனன் கூறும் சொற்களை பொதுவாக பல உரையாசிரியர்கள் கூர்ந்து அவதானிக்கும் படி கூறுவதுண்டு. அர்ஜுனன் ஒரு மனத்தடுமாற்றத்தில் இருந்து ஒருவகை உறுதிப்பாட்டை அடைவதை ஏழு எட்டாம் பாடல்களில் காண்கிறோம். தன் தரப்பை வலுவாகக் கூறியவன் அதற்கு மறுதரப்பு ஒன்று கிருஷ்ணனிடம் இருக்கக்கூடும் என்று உணர்கிறான். அதை அறிய ஆவல் கொண்டு தன்னை ஒரு மாணவனின் இடத்தில் வைத்துக் கொள்கிறான். Continue reading

உலகாற்றும் நெறி (ஸாங்கிய யோகம்) – 1

உலகாற்றும் நெறி (ஸாங்கிய யோகம்) – 1

ஜெயமோகன்.இன் ல் இருந்து

[கோதை]

‘அர்ஜுன விஷாத யோகம்’ பகுதியில் வெளிப்பட்ட அர்ஜுனனின் ஆழமான மனத்தடுமாற்றத்திற்கான உடனடி பதிலாக கிருஷ்ணன் கூறும் பகுதி இது. கீதையின் தத்துவ விவாதத்தின் முகப்பு. அதாவது கீதையின் தரிசனத்தில் மிக அதிகமாக ‘மண்ணில்’ தொட்டபடி நிற்பது இதுவே. நடைமுறை யதார்த்தம் சார்ந்த தத்துவ விளக்கம் என்பதே ‘ஸாங்கிய’ என்ற சொல் மூலம் சுட்டப்படுகிறது. இப்பகுதியில் அர்ஜுனன் போர் புரிந்தாக வேண்டும் என்பதற்கான நடைமுறை நியாயங்கள் முதலில் கூறப்படுகின்றன.

இதில் அன்றாட வாழ்வின் கடமைகளை மிக வெற்றிகரமாக ஆற்றுவதற்கு இன்றியமையாத புலனடக்கம் மற்றும் மன ஒருமையை விவரித்த பிறகு கிருஷ்ணன் நம் அன்றாடச் செயலையே யோகமாக ஆக்குவதைப் பற்றிக் குறிப்பிடுகிறார். அதாவது லெளகீகத்திற்குள் வைத்து அர்ஜுனனின் பிரச்சினையை எதிர்கொள்ளும்போது ஒரு தத்துவ ஞானி என்ன கூறுவானோ அதுவே இப்பகுதியில் உள்ளது.

Continue reading

கீதை தத்துவநூலா?:கடிதங்கள்

கீதை தத்துவநூலா?:கடிதங்கள்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

[கும்பமேளா பயணத்தில்]

அன்புள்ள ஜெயமோகன்

ராம் அவர்கள் குறள் மற்றும் கீதைபற்றிய கடிதம்  கீதை கடிதங்கள்,விளக்கங்கள் படித்தேன். வேற்றுமொழிக்காரர் குறள் பற்றி கேட்டபோது நானும் எப்படி அதன் சிறப்பை கூறுவது எனத்தெரியாமல் தவித்தேன். அதன் இலக்கிய அழகை அவருக்கு ஒருவாறு கூறினேன் என்றாலும் அதன் தத்துவ விளக்கத்தை என்னால் கூறமுடியவில்லை. அதற்கான உங்கள் விளக்கத்தை படிக்க நானும் காத்திருக்கிறேன். கீதைக்கான தங்கள் பதிலுரை எனக்கு மிகவும் ஏற்புடையதாக இருந்தது.

கீதை தத்துவநூலா என அவர் வினவியுள்ளார். கலை கலைக்காகவே என்பதைப்போல் தத்துவம் தத்துவதிற்காக மட்டுமே எனக்கூறினால் அது தத்துவ நூலன்றுதான். நடைமுறைப்படுத்தாத தத்துவம் எதற்காக? தத்துவம் அன்றாட வாழ்வில் செய் அல்லது செய்யாதே என வழிகாட்டுதலை கூறக்கூடாது என்றால் தத்துவத்தின் பயன் தான் என்ன? மனிதன் தத்துவத்தின் பக்கம் செல்வதே எதைச் செய்யவேண்டும் எனத்தெரியாமல் போய்விடும் போதுதான். ஒரு நல்ல தத்துவ நூல் நேரடியாக சொல்லாமல் ஒவ்வொரு தருணத்திற்குமான முடிவை அவனே குழப்பமின்றி  எடுக்கும் அளவிற்கு அவனுக்கு மனத்தெளிவை அளிக்கவேண்டும். கீதையில் தன் மனக்குழப்பத்தை விவரமாக விளக்கி அர்ச்சுனன் தான் என்ன செய்யவேண்டும் எனக்கேட்கும்போது கண்ணன் முதலில்  நேரடியாக  போர் செய் என்றுதான் கூறுகிறான். ஆனால் அர்ச்சுனன் அதை ஏற்காமல் போகவே கீதை விளக்கம் தேவைப்படுகிறது.  கீதை ‘பத்து கட்டளைகள்’(Ten commandments) போன்றது அல்ல. ஆனாலும் ஒருவன் தனக்கான ‘கட்டளை களை’ தானே நேரத்திற்கேற்ப அமைத்துக்கொள்ளும் தெளிவையும் தகுதியையும் பெற  கீதை உதவுகிறது. Continue reading

கீதை கடிதங்கள்,விளக்கங்கள்

கீதை கடிதங்கள்,விளக்கங்கள்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

[கும்பமேளா பயணத்தில்]

அன்புள்ள ஜெயமோகன்

வணக்கம்

தங்களுடைய கீதை தொடர்பான கட்டுரைகள் மிகவும் ஆர்வமூட்டுபவை அது மட்டுமல்லாது நகைச்சுவை பகுதி மிகவும் சிறப்பானமுறையில் எழுதபட்டிருக்கிறது. தங்களுடைய கீதை தொடர்பான கட்டுரையில் சுவாமி சித்பாவனந்தர் மற்றும் வினோபாவே அவர்களின் கீதை தொகுதியை படிக்கும்படியும் தாங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள்.

குறிப்பாக இவை இரண்டும் தத்துவ பயிற்சியை பெற விரும்புபவர்களுக்கு பெரிதும் உதவக்கூடியது என்றும் சொல்லி இருந்தீர்கள். அந்த நூல்களோடு ஓரள்வு தொடர்பு இருக்கிறது என்ற முறையில் அவற்றை என்னால்  ஏற்க முடிகிறது என்றாலும் சுவாமி சித்பாவனந்தர் மற்றும் வினோபாவே இருவரின் உரையிலும் குறிப்பாக வினோபாவே அவர்கள் பாவனை பக்தி ஆகியவற்றுக்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கிறார் என்றே நான் கருதுகிறேன் குறிப்பாக புண்டலீகன் பற்றி அவர் அதிகமும் கூறுவதை நீங்கள் கவனித்திருக்கலாம் இரண்டாவதாக பாவனை செய்து தான் பாரேன் என்கிற இந்த வரிகள் திரும்ப திரும்ப வருவதை தாங்கள் கவனித்திருப்பிர்கள்.
Continue reading