கீதை: மகத்தான மனத் தடுமாற்றம் – 2
ஜெயமோகன்.இன் ல் இருந்து
[திருச்செந்தூர் கோயில் ஓவியம்]
இரண்டாவதாக இப்புனைவில் நாம் கவனிக்கவேண்டியது துரியோதனனை. ‘களத்தில் என்ன நடக்கிறது?’ என்ற வினாவுக்கு பதிலாக சஞ்சயன் முதலில் துரியோதனனைப் பற்றி கூறியது இயல்பே. காரணம் கேட்டது துரியோதனனின் தந்தை. அதைவிட முக்கியமானது இந்த சுருக்கமான விவரணையில் வெளியாகும் துரியோதனனின் ஆளுமை.
தன் ஆசிரியரை நெருங்கி பேச ஆரம்பிக்கும் துரியோதனன் முதலில் காண்பது எதிரிப்படையைத்தான். அங்குள்ள வீரர்களை அவன் பட்டியலிடுகிறான். அவர்கள் வலிமையை எடுத்துரைத்தபின் தன் தரப்புக்கு வருகிறான். மிகச் சுருக்கமாக அதைக் கூறிவிட்டு பாண்டவப்படை போதுமானது, நமது படை போதுமானதல்ல என்று தன் அச்சத்தைக் குறிப்பிடுகிறான்.
தெளிவாகவே அர்ஜுனனுக்கு நேர்மாறான ஒரு குணாதிசயத்தைக் காட்டும் பொருட்டு இக்காட்சி அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். கிட்டத்தட்ட அர்ஜுனன் கண்ட அதே காட்சிதான் இதுவும். ஆனால் முற்றிலும் வேறுவித மன ஓட்டங்களினால் ஆனதாக உள்ளது துரியோதனனின் அகம். நமது படை எதிரிப்படை என்று பிரித்து பார்த்து ஒப்பிட்டு நோக்குதல், போரின் முடிவு குறித்த அச்சம். அந்தப் போர்க்களத்தில் அப்போது ஆயுதங்களுடன் வந்து நின்ற ஒவ்வொருவரும் அதே மனநிலையில்தான் இருந்திருப்பார்கள். அதுவே இயல்பு. அம்மனநிலைக்கு அப்பால் சென்று ஓர் அபூர்வமான விவேகத்தை அடைந்தவன், அதன் மூலம் ஆழமான உள நெருக்கடிக்கு ஆளானவன், அர்ஜுனன் ஒருவனே. ஆகவேதான் அவனுக்கு கீதை கூறப்பட்டது. Continue reading









